கீதா பக்கங்கள் – 16

பெண்கள் அரசியலுக்கு வர வேண்டும். இதற்கு, தொடர்ந்து உரத்த குரல் எழுப்பிக் கொண்டே இருக்க வேண்டும். “என்னோட வீட்டையும், குழந்தைகளையும், கணவனையும், குடும்பத்தையும் நல்லா பாத்துக்கிட்டா  போதும். வீடு நல்லா இருந்தா நாடு நல்லா இருக்கும். தனியா அரசியலுக்குப் போய் செய்ய என்ன இருக்கு?” என்பது தான் பெரும்பாலான பெண்களின் டயலாக்காக இருக்கிறது.

இதை பெண்களைவிட அதிகமாக, ஆண்களும், ஊடகங்களும், ஆணாதிக்க பொதுப்புத்தியும் சொல்லிக் கொண்டே இருக்கின்றன. ஏனென்றால் பெண்கள் அரசியலுக்கு வந்தால் வீட்டு வேலைகளை யார் செய்வது? குடும்பத்தை யார் கவனிப்பது? இதற்கெல்லாம் மேலாக அரசியல் தளத்தில் பெண்கள் செய்யும் மாற்றங்கள், பெண்களுக்கு சாதகமாகவும், ஆண்களுக்கு பாதகமாகவும் இருந்தால் என்ன செய்வது? இந்த அச்சத்தால், “வீடு நன்றாக இருந்தால் நாடு நன்றாக இருக்கும். வீடு நன்றாக இருப்பது பெண்கள் கையில் தான் இருக்கிறது” என்கிற பாட்டையே காலங்காலமாக ஆணாதிக்க சமூகம் பாடிக் கொண்டிருக்கிறது.  தொடர்ச்சியான மூளைச்சலவையால், பெரும்பான்மை பெண்களும் இதை ஒப்புக் கொள்கிறார்கள்.  

நாடு என்பதன் அடையாளம் இங்கு என்னவாக இருக்கிறது? தாய்நாடு என்று பெண்பாலாக உருவகம் செய்யப்படும் நாட்டின் அடையாளமாக ஆண்கள்தான் இருக்கிறார்கள். இங்குள்ள பெரும்பான்மை தலைவர்களும், கொள்கை வகுப்பாளர்களும் ஆண்களாகத்தானே இருக்கிறார்கள். அவர்கள் சிந்தனையும், செயல்பாடும் ஆண்மயமாகவே இருக்கிறது. ஆண்கள், பெண்கள் மீது அக்கறை கொண்டு சில பணிகளை செய்கிறார்கள் என்றே வைத்துக் கொள்வோம்.

People vector created by upklyak – www.freepik.com

ஆனால், பெண் மீது காட்டும் அக்கறை என்பது வேறு, பெண் பார்வை என்பது வேறு.

சமுதாயத்தில் ஒரு விசயத்தைப் பற்றி ஆணுக்கு ஒரு பார்வை இருந்தால், பெண்ணுக்கு வேறொரு பார்வை இருக்கும். அதற்கேற்றவாறு இருவரின் செயல்பாடுகளும் மாறுபடும். சமுதாயத்தின், நாட்டின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு இந்த இரண்டு பார்வைகளும் தேவை. மக்கள் தொகையின் சரிபாதியாக இருக்கும் பெண்களின் சமமான பங்கேற்பு இல்லாமல் எடுக்கும் முடிவுகள், எப்படி எல்லா நேரங்களிலும், பெண்களுக்கு சாதகமானதாக இருக்க முடியும்? குறைந்தபட்சம், பெண்கள் தொடர்பான விசயங்களிலாவது, முதலில் அவர்களை முடிவெடுக்கச் செய்ய வேண்டாமா? இதற்கு, அரசியல் தளத்தில் பெண்கள் ஐம்பது சதவீதம் பங்களிக்க வேண்டும்.

உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33 சதவிகிதம் இட ஒதுக்கீடு அளித்த 73ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டம்,1992-க்குப் பிறகு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில், தமிழ்நாட்டில் உள்ள கிட்டத்தட்ட பன்னிரெண்டாயிரம் கிராமப் பஞ்சாயத்துக்களில் சுமார் 4,000 பஞ்சாயத்துகளுக்கு பெண்கள் தலைவர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதிகம் வெளிச்சத்துக்கு வராத பல தலைவிகள் மிகச்சிறப்பாகப் பணியாற்றினர். ஆனால், அவர்களைப் பற்றி ஊடகங்களில் வந்த செய்திகளைவிட, பஞ்சாயத்துத் தலைவிகள் தமது குடும்பத்து ஆண்களின் கைப்பாவையாக செயல்படுவதாக வந்த செய்திகளே அதிகம்.

இதற்குப் பின்னால் இருப்பது, பெண் அதிகாரத்துக்கு வருவதை விரும்பாத ஆணாதிக்க பொதுப்புத்தியின் எதிர்ப்புணர்வே. அதே சமயத்தில், சில பஞ்சாயத்து தலைவிகள் குடும்பத்து ஆண்களின் ஆதிக்கத்திற்கு அடிபணிந்தார்கள் என்பதை மறுக்க முடியாது. வீட்டில் கூட தலைவியாக உரிமையளிக்கப்படாத எளிய பெண்கள், இடஒதுக்கீட்டின் காரணமாக பெண்ணுக்கு ஒதுக்கப்பட்ட பஞ்சாயத்துக்கு தலைவியாகத் தேர்ந்தெடுக்கப்படும் போது, அவர்களுக்கு ஏற்படும் திணறலும், போதிய பயிற்சியின்மையும், சமுதாயத்தின் மறைமுக எதிர்ப்பும் சேர்ந்து குடும்பத்து ஆண்களின் ஆதிக்கத்திற்கு வழிவகுத்தது. அவர்கள் திறமையான பஞ்சாயத்து தலைவிகளாக செயல்படுவதற்கு ஆதரவாக, அவர்களை ஆற்றுப்படுத்தி பயிற்சியளித்தது, காந்திகிராம் பல்கலைக்கழகம் போன்ற ஒரு சில கல்வி நிறுவனங்களும், அமைப்புகளும் தான்; பெரும்பாலும் எதிர்ப்புதான் அதிகம்.

சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் பெண்களுக்கு 33 சதவிகித இட ஒதுக்கீட்டுக்காக போராடி வரும் நிலையில், “உள்ளாட்சி அமைப்புகளில் தலைவிகளாக உள்ள பெண்கள் ஆண்களின் ஆதிக்கத்தில் உள்ளனர்”  என்ற பொதுப்பார்வை சமுதாயத்தில் பதிந்துள்ளது வருத்தத்திற்குரியது.

“பார்த்தீர்களா, இதற்குத்தான் பெண்களுக்கு இட ஒதுக்கீடு கொடுக்கக் கூடாது, அவர்கள் தம் குடும்பத்து ஆண்களின் கைப்பாவையாக மாறிவிடுவார்கள்”  என்ற தவறான பிரச்சாரத்தை ஆணாதிக்க பொதுப்புத்தியும், அவர்களின் ஊடகங்களும் செய்து வருகின்றன. இதை மாற்றுவதற்கு, சுயமாக செயல்படும் தலைவிகளின், அரசியல்வாதியாக உள்ள பெண்களின் செயல்பாடுகளையும், முன்னோடிப் பணிகளையும் உயர்த்திப் பிடிக்க வேண்டும். அனைவரும் அறியச் செய்ய வேண்டும்.

இத்தகைய பஞ்சாயத்து தலைவிகள் சிலரை சந்தித்து அவர்கள் செய்த அருமையான பணிகளைப் பற்றி, 2005ல் தொடர் கட்டுரை எழுதினேன். அப்போதுதான், தனது கிராமத்தின் வளர்ச்சி என்பதை பெண்கள் எப்படிப் பார்க்கிறார்கள் என்பதை அறிந்து கொண்டேன்.

ஒரு தலைவி “எங்க கிராமத்துல பொண்ணுங்க வேலைக்குப் போய் சம்பாரிக்கணும்னா, அவங்க குழந்தைகளை யாராச்சும் பொறுப்பா பாத்துக்கணும், அதுக்கு பால்வாடி, அங்கன்வாடி மையம் வேணும்னு அதிகாரிகளைப் போய் பார்த்து, கொண்டு வந்தேன். பொண்ணுங்க தண்ணிக்காக கஷ்டப்படறாங்கன்னு, ஊர் முழுக்க குழாய் போட்டு, தெருவுக்கு தெரு தண்ணி வரமாதிரி பண்ணினேன். எங்க ஊர் பொண்ணுங்க வெளியூர் போயிட்டு வந்து இறங்குனாங்கன்னா, பஸ் ஸ்டாண்ட்டுல கக்கூஸ் வேணும். கட்டிக் குடுத்தோம். ஆரம்ப சுகாதர நிலையத்துக்கு எல்லா வசதிகளும் செய்யணும்னு கலெக்டரைப் போய் பார்த்தேன்”  என்று சொல்லிக் கொண்டே போனார்.

இன்னொரு தலைவி “எங்க ஊர்ல இருக்குற சின்னக் குழந்தைகள் படிக்க பள்ளிக்கூடம், வெளியூர் போய் படிக்க பஸ் வசதி கொண்டு வந்தேன்”  என்றார். இந்தத் தலைவிகள், தமது கிராமத்தை தம் வீட்டின் நீட்சியாகத்தான் பார்க்கிறார்கள். அதற்கேற்றவாறு பணிசெய்கிறார்கள். பஞ்சாயத்துத் தலைவராக இருக்கும் ஆண்களிடம் கேட்டால், ரோடு போட்டேன், மேம்பாலம் கட்டினேன் என்று வளர்ச்சிப் பணிகளை கோடிக் கணக்கான ரூபாய் மதிப்பில் அடுக்குவார். ஆனால், தலைவிகள் தம்மைப் போன்ற சக பெண்களின் சிரமங்களைப் பார்த்து, அவற்றைத் தீர்க்கும் எண்ணத்துடன் பணிபுரிகிறார்கள். இந்தத் தோழமைப் பார்வை மிக முக்கியம். அதே போல் வளர்ச்சிப் பணிகளை மதிப்பிடும் போது, ஆண் தலைவர்கள் செய்யும் பணிகளையும், அவற்றின் செலவுத் தொகையையும் அளவுகோல்களாகக் கொண்டு தலைவிகளின் பணிகளை மதிப்பிடுகிறார்கள். இது சரியல்ல. ஆணின் வளர்ச்சி அளவுகோல் வேறு. பெண் கருதும் வளர்ச்சி அளவுகோல் வேறு.

Woman vector created by pch.vector – www.freepik.com

கிராமப் பஞ்சாயத்து முதல் நாட்டின் தலைமைப் பொறுப்பு வரை அனைத்து அரசியல் தளங்களுக்கும் பெண்கள் வருவதற்கு ஊக்கமளிக்க வேண்டும். ஓரிரு அரசியல் ஆளுமைகளை வைத்து பெண்கள் தலைமைப் பொறுப்புக்கு வந்தாலே பிரச்சனைதான்; அவர்களும் ஆணாதிக்க சிந்தனையுடன் செயல்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டை சிலர் முன்வைக்கிறார்கள். இதில் உண்மையில்லாமல் இல்லை. போட்டிகள் நிறைந்த அரசியல் அரங்கில், பெண்ணியம் பேசினால் தோற்றுவிடுவோமோ என்ற பயத்தில் அவர்கள் செயல்படுகிறார்கள்; அவர்களின் செயல்பாடு நியாயமில்லை என்றாலும் ஓரிருவரை மட்டுமே வைத்து ஒட்டுமொத்தமாக எல்லாப் பெண்களையும் எடைபோடக் கூடாது. சொல்லப்போனால், எல்லா தலைமைப் பொறுப்புகளிலும் பாதியை பெண்களிடம் கொடுத்துவிட்டுத்தான், அவர்களின் செயல்பாடுகளை மதிப்பிட வேண்டும்.

ஒரு நாட்டின் நிலைமையை நிர்ணயிப்பது ஆண்கள் முன்னெடுக்கும் அரசியல்தான். இதில் பெண்களுக்கு எந்தப்பங்கும் இல்லாதது மட்டுமல்ல, அவர்களின் அரசியலால் அதிகம் பாதிக்கப்படுவதும் பெண்கள்தான். இன்று ஆப்கானிஸ்தானில் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் பெண்கள்தான். ஒரே நாளில், வேலை போய், கல்வி மறுக்கப்பட்டு, வீட்டுக்குள் முடக்கப்பட்டு எதிர்காலமே இருண்டுவிட்டது. என்ன கொடுமை இது !

தோழர்களே, அரசியலுக்கு வரும் பெண்களுக்கு ஊக்கமளிப்போம். நம்மைச் சுற்றியிருக்கும் பெண்கள், படிக்கவும், வேலைக்குப் போகவும் ஆதரவு தருவது எத்தனை இயல்பானதோ அதே போல அவர்கள் அரசியலுக்குப் போவதையும் இயல்பாக்க வேண்டும். அரசியல் அரங்கில் ஐம்பது சதவீதம் பெண்கள் இருந்தால்தான், அடுத்த தலைமுறை பெண்களுக்கு தோழமையான சமுதாயத்தைக் கட்டமைக்க முடியும். பெண்களின் சமூகப் பங்களிப்பால் ஆண்களின் சுமையும் குறையும்.

***

தொடரின் முந்தைய பகுதியை வாசிக்க:

படைப்பு:

கீதா இளங்கோவன்

‘மாதவிடாய்’, ‘ஜாதிகள் இருக்கேடி பாப்பா’ போன்ற பெண்களின் களத்தில் ஆழ அகலத்தை வெளிக்கொணரும் ஆவணப் படங்களை இயக்கியிருக்கிறார். சமூக செயற்பாட்டாளர்; சிறந்த பெண்ணிய சிந்தனையாளர். அரசுப் பணியிலிருக்கும் தோழர் கீதா, சமூக வலைதளங்களிலும் தன் காத்திரமான ஆக்கப்பூர்வமான எழுத்தால் சீர்திருத்த சிந்தனைகளை தொடர்ந்து விதைத்து வருகிறார்.