மகளிர் கட்டணமில்லா பேருந்துப் பயணம் 2021ஆம் ஆண்டு திமுகவின் தேர்தல் அறிக்கையில் பெண்களின் கவனத்தை ஈர்த்த திட்டம். குறிப்பாகப் பொது போக்குவரத்தில் பேருந்துப் பயணத்தை மேற்கொள்பவர்கள் மத்தியில் இத்திட்டம் மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது. தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் பதவியேற்றவுடன் கையெழுத்திட்ட 5 கோப்புகளில் இந்தத் திட்டமும் ஒன்று.
சுதந்திர தின விழாவில் ’பெண்களுக்கான கட்டணமில்லா பயணத் திட்டம் இனி ‘விடியல் பயணத் திட்டம்’ என அழைக்கப்படும் என்று முதல்வர் அறிவித்தார். ‘இலவச’ பயணம் என்று அழைக்கப்படுவதைத் தவிர்த்து ‘கட்டணமில்லா பயணம்’ என்று அழைக்கப்பட்டது. இப்பொழுது ‘விடியல் பயணமாக’ மாற்றம் பெற்றிருக்கிறது. ஏனெனில் பிழைப்புவாதிகளால் ‘இலவசம்’ குறித்துத் தவறான கருத்தைத் தொடர்ந்து மக்கள் மனங்களில் புகுத்தப்பட்டு வருகிறது.
எனது தொடக்கக் கல்வி முடிந்து, உயர்நிலைப் பள்ளிக்குச் செல்லும் போது தொடங்கிய எனது பேருந்துப் பயணம் இந்நாள்வரை தொடர்கிறது. நான் வசிக்கும் பகுதியிலிருந்து பள்ளிக்குச் செல்லும் 5 கிலோ மீட்டருக்கு அப்போது 2 ரூபாய். வெள்ளை, மஞ்சள், பச்சை போர்டு போட்ட பேருந்துகள் இருந்தன. மணலி டிப்போவிலிருந்து பேருந்து ஏறினால் 2 ரூபாய் 50 பைசா. இரண்டு பெண் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப எங்கள் அம்மாவுக்கு ஒரு நாளைக்கு 10 ரூபாய் ஆகும். 10 ரூபாயில் 2 ரூபாய் கையில் நிற்கும் நாட்களில், பேருந்து நிறுத்தத்தில் தள்ளுவண்டி அக்கா போட்டிருக்கும் போண்டா இரண்டு எங்களுக்குக் கிடைக்கும். பள்ளியில் சேர்ந்து பஸ்பாஸ் கையில் வரும் வரை இதே சுழற்சிதான்.
பஸ்பாஸுக்கு போட்டோ எடுக்கும் நாள்தான் எங்களுக்கு ‘freshers day’. பள்ளியில் படிக்கும் 3000 மாணவர்களில் எப்படியும் 1000 பேராவது பஸ்பாஸுக்கு எழுதிப் போட்டிருப்பார்கள். அத்தனைப் பேரையும் ஒரே நாளில் போட்டோ எடுக்கும் அந்த போட்டோ கிராபரின் நிலை பரிதாபம். அதனாலதான் அந்தக் காலத்து பஸ்பாஸ் எல்லாம் நமக்கே நம்மை அடையாளம் தெரியாத அளவுக்கு இருக்கும். பாஸ் கையில் வந்தவுடன் அம்மாவின் முதல் நடவடிக்கை, அதை லாமினேஷன் செய்வதுதான். அசலை வீட்டில் வைத்துவிட்டு லாமினேஷன் செய்த பஸ்பாஸைதான் கொண்டு செல்வோம்.
உயர்நிலைப் பள்ளிக்குச் சென்றது முதல் பழகிக்கொண்ட இரண்டு விஷயங்கள் ஒன்று பஸ் பயணம் மற்றொன்று ஹிஜாப் (தலைவரைக்கும் போடும் முக்காடு) இஸ்லாத்தைப் பின்பற்றும் தமிழ் முஸ்லிம் குடும்பத்தைச் சேர்ந்தவள் நான். பஸ்பாஸ் இருந்தும் எங்களுக்கு சமூகம் கொடுக்கும் பெயர் ’ஓசி’யில் போகிறவர்கள். இப்படிப் பேருந்தில் இருப்பவர்கள் யாராவது சொல்வதைக் கேட்டால் சுருக்கென்று கோபம் வரும். பேருந்தில் மாணவர்களாகிய எங்களை சக பயணிகள் நடத்தும் விதம் அப்படி. பள்ளி மாணவர்கள் அதிகம் இருக்கும் பேருந்து நிறுத்தத்தைக் கண்டால் பேருந்து 100 மீட்டர் தள்ளிப்போய் நிற்கும். .
பள்ளிப் படிப்பை வடசென்னையில் முடித்துக்கொண்டு. கல்லூரிப் படிப்புக்கு தென் சென்னையை நோக்கி நகர்ந்தேன். அங்கு இருந்த பேருந்தும், சாலை வசதிகளும் நான் அதுவரை பார்த்த பேருந்துக்கும், சாலைக்கும் நேர் எதிராக இருந்தது. அங்கு ஓட்டை ஒடைச்சலான மேற்கூரைகொண்ட தடதடக்கும் பேருந்தையோ, அல்லது குண்டு குழியுமாக இருக்கும் சாலைகளையோ இன்றுவரை பார்த்ததில்லை.
விடுமுறை நாளில் வெளியில் சென்று இரவு பேருந்தில் வந்துகொண்டிருந்தபோது. கூட்டத்தில் டிக்கெட்டும் மீதி சில்லறையும் வாங்கி ஒருவர் கை மாறி ஒருவர் என உரியவரிடம் சென்று சேர்வதற்குள் கொடுத்த சில்லறை தவறி விழுந்துவிட்டது. அந்தப் பெண்மணி பேருந்திலிருந்து இறங்குவதற்குள் அந்த 5 ரூபாய்க்கு 500 முறை புலம்பித் தள்ளிவிட்டார்.
நடத்துநர் நமக்கென்ன டிக்கெட் கொடுத்தாச்சு, கடமை முடிந்தது என்று இருக்க, பேருந்தில் இருந்த சக பயணிகள் அந்தப் பெண்ணைத் திட்டித் தீர்த்தனர். ”சின்னபசங்க, தெரியாம கீழ போட்டுடாங்க அதக்கு இப்படியா?” என அந்தப் பெண்ணை நோக்கி வசைபாட ஆரம்பித்துவிட்டனர். சக பயணிகளின் உதவி கிடைத்த தெம்பில் நாங்களும் அந்தப் பெண்ணை ”5 ரூபாய்க்கு என்னவெல்லாம் வாங்கலாம் தெரியுமா”? என்று கேலி கிண்டல் செய்ய ஆரம்பித்துவிட்டோம். ஆனால், அது மிகவும் தவறான செயல் என்று பின்னர்தான் புரிந்தது. எனக்கு. அந்த 5 ரூபாய் இருந்தால் ஒருநாள் பயணச் செலவுக்காகவாவது உதவி இருக்கும் என்பதுதான் அந்தப் பெண்ணின் குமுறலாக இருந்தது. அதை அந்தப் பேருந்திலிருந்த நான் உள்பட யாருமே புரிந்து கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.
2011க்கு முன்பிருந்த திமுக ஆட்சியில் பேருந்துக் கட்டணம் உயர்த்தப்பட்டது. இது பேருந்தில் இருந்த பயணிகளிடம் மிகுந்த சலசலப்பை ஏற்படுத்தியது. அடுத்து அதிமுக ஆட்சியைக் கைபற்றியது, பேருந்து கட்டணத்தில் எந்த மாற்றமும் இல்லை, அதிமுக இரண்டாவது முறையாக ஆட்சியை கைப்பற்றியிருந்தது. 2018இல் தபால் பெட்டி முதல் பிராட்வே செல்வதற்கு 6 ரூபாயாக இருந்த பயணச்சீட்டின் விலை 12 ரூபாயாக உயர்ந்தது. அடுத்த இரண்டு நாளில் 1 ரூபாய் மட்டுமே குறைக்கப்பட்டது. இது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அப்போது பல்கலைக்கழகத்தில் முதுகலை முடித்து, ஆய்வு உதவியாளராகச் சென்ற எனக்கு பஸ்பாஸும் கிடையாது. மாதம் 1000 ரூபாய் பஸ்பாஸ் இருந்தது. இந்த பாஸ் இருந்தால் வெள்ளை போர்டு அல்லது சொகுசு பேருந்து என எதில் வேண்டுமென்றாலும் பயணிக்கலாம் ஏசி பேருந்தைத் தவிர்த்து. பேருந்துக்கென மாதம் 1000 ரூபாய் எடுத்து வைக்கும் அளவிற்கு வீட்டின் பொருளாதாரச் சூழல் இல்லை. இதனால் உளவியல் ரீதியான சிக்கல்களுக்கும் ஆளாகி இருந்தேன்.
இன்று பெண்களின் பாதுகாப்பிற்கென சிசிடிவி கேமராக்கள் பேருந்துகளில் பொருந்தி இருப்பதைப் பார்க்கும் பொழுது சிறப்பான நடவடிக்கை என்று மெச்சிக்கொள்வதா? அல்லது தன்மீது நடக்கும் பாலியல்
சீண்டல்கள் குறித்து தைரியமாகப் பேசும் எதிர்த்துக் கேள்வி கேட்கும் பெண்ணை (அப்படியான பெண்களை நான் அரிதாக்கத்தான் பார்த்திருக்கிறேன்) இன்னும் “victim blaming” செய்யும் பொதுச்சமூகத்தை நினைத்துக் கடிந்துகொள்வதா என்று தெரியவில்லை.
2021 க்கு பிறகான திமுக ஆட்சியில் முதலில் அமல்படுத்தப்பட்ட திட்டம் ”மகளிருக்கான கட்டணமில்ல பேருந்து திட்டம்”. அதை எப்படி நடைமுறைப்படுத்த போகிறார்கள் என்பதுதான் எதிர்பார்ப்பாக இருந்தது. இத்திட்டம் நடைமுறைக்கு வந்த நள்ளிரவிலேயே பேருந்துகளில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தன. அடுத்த நாள் பேருந்தில் ஏறும்போது பயணச்சீட்டை எப்படிக் கேட்டுப் பெறுவது என்பதில் எனக்குத் தயக்கம் இருந்தது.
பள்ளிக் காலத்தில் எங்களை ஓசி என்று சொல்பவர்களில் பெண்களும் இருக்க. இன்று பெண்களை நோக்கி ”ஓசி டிக்கெட்” எனும் எள்ளல் ஆண்களிடம் இருந்து வருவது எனக்கு ஆச்சரியமாக இல்லை. மகளிர் பேருந்து என்றாலே, லேடிஸ் ஸ்பெஷல் ரயில் என்றாலே எரிச்சல் படும் ஆண்களையும். அது குறித்து அவர்கள் கொச்சையாகப் பேசுவதையும் நேரில் பார்த்திருக்கிறேன்.
இத்தகைய சிறந்த திட்டத்திற்கு எதிராக ”வெறுப்புணர்வு” கருத்தியல்கள் பொதுச் சமூகத்தில் உருவாக்கப்பட்டு. மக்களையே இத்தகைய திட்டத்திற்கு எதிராகப் பேசவைக்கும் வேலை நடந்துவருகிறது. இத்திட்டத்தில் உள்ள நடைமுறை சிக்கல்களை அடையாளம் கண்டு அவற்றைக் களைய முயற்சிகள் அரசிடமிருந்தும், போக்குவரத்துத் துறையிடமிருந்தும் மேற்கொள்ளப்பட வேண்டும்.
உழைக்கும் பெண்களுக்குப் பேருந்து பயணச் செலவு அவர்களது சம்பளத்தில் ஒரு பகுதியைப் பயன்படுத்திக்கொள்கிறது. இத்தகைய திட்டங்களினால் அந்தத் தொகை குடும்பச் செலவுக்கோ, குழந்தைகளின் கல்வி, மருத்துவம் அல்லது சேமிப்பு ஆகியவற்றிற்கு பயன்படுகிறது. இதைத்தான் பல ஆய்வுகளும் எடுத்துக் காட்டுகின்றன. பெண்களுக்கு வழங்கப்படும் இத்திட்டத்திற்குப் பின் குடும்ப நலன், குழந்தைகள் நலன் அல்லது பெண்ணின் உடல் நலன் கவனப்படுத்தப்படுகிறது.
பேருந்துப் பயணமென்பது பெண்களின் பொருளாதாரம் சம்மந்தப்பட்டது மட்டுமல்ல பெண்களின் நகர்வு (women’s mobility) இங்கு முக்கியமாகப் பார்க்கப்படுகிறது. வேலைக்குச் செல்லும், வியாபாரத்திற்குச் செல்லும், இயக்கப் பணிகளுக்குச் செல்லும் பெண்களுக்கு இத்தகைய திட்டங்கள் ஓர் உந்துதலை, பிடிப்பைக் கொடுக்கிறது. வளர்ச்சி என்பது மேலிருந்து கீழாக இல்லாமல். விளிம்புநிலை மக்களை மேம்படுத்தும் வேலையைத்தான் அரசு செய்ய வேண்டும்.
பெண்கள் அடைந்துள்ள முன்னேற்றத்தின் அளவைக் கொண்டே ஒரு சமூகத்தின் முன்னேற்றத்தை அளவிடுகிறேன் என்று அம்பேத்கர் பேசினார். பெண்கள் சமூக, பொருளாதாரரீதியான மாற்றங்களுக்கு அரசியல் ரீதியாக முன்னெடுக்கப்படும் திட்டங்களுக்குப் பொதுச்சமூகத்தின் சம்மதத்தைப் பெறா அவர்களின் மனங்களில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். ஏனெனில் பொதுச் சமூகத்தின் ஒப்புதலைப் பெறாத எந்தவொரு திட்டமும் முழுமையடையாது. சட்டரீதியான அங்கீகாரத்தை விடவும் சமூக அங்கீகாரம் மிகவும் வலிமையானது.
குழந்தைத் திருமணம், வரதட்சணை ஒழிப்பு, பெண்களுக்குச் சொத்தில் சம உரிமைகளுக்கு சட்டரீதியான தீர்வுகள் இருந்தாலும் ஆண்மையச் பொதுச் சமூகத்தால் இவை இன்னும் சமூகரீதியான சம்மதத்தைப் பெற முடியவில்லை. எனவே சமூக சீர்திருத்தத்திற்காக முன்னெடுக்கப்படும் திட்டங்களில் சமூக ஒப்புதலைப் பெறுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்.அப்போதே முழுமையான மேம்பட்ட சமூகத்தை உருவாக்க முடியும்.
படைப்பாளர்:
மை. மாபூபீ
சென்னைப் பல்கலைக்கழகம் இதழியல் மற்றும் தொடர்பில் துறையில் முனைவர்பட்ட மாணவி. அரசியல், சமூகம் பெண்ணியம் சார்ந்த கட்டுரைகளை எழுதிவருகிறார். தீக்கதிர் நாளிதழ், கீற்று, Thenewslite போன்ற இணையதளங்களில் கட்டுரைகள் வெளிவந்திருக்கின்றன.