பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும் என்பது பழமொழி.
பாம்பைக் கண்டால் படம் பிடிப்போம் என்பது எங்கள் மொழி!

நாங்கள் சிறு வயதில் எங்கள் தோட்டத்திலிருந்த ஓட்டு வீட்டில் குடியிருந்தோம். சுவருக்கும் கூரைக்கும் இடையிலிருந்த சந்துகள் வழியாக இரவு நேரத்தில் வீட்டினுள் எலிகள் புகுந்துவிடும். அவற்றைப் பிடிக்கப் பாம்புகளும் உள்ளே வந்ததுண்டு.

காலையும் மாலையும் சில கிலோ மீட்டர் தொலைவு நடந்து பள்ளிக்குச் சென்று வந்த களைப்பில் நன்றாகத் தூங்கிக் கொண்டிருப்போம். அதைக் கெடுப்பதுபோல் இரவில் எலிகள் வீட்டினுள் புகுந்து எதையாவது உருட்டும். பெரியவர்கள் எழுந்து கையில் கோலுடன் அவற்றை அடிக்கத் துரத்துவர். அதனால் பல இரவுகள் தூக்கம் கெட்டு அவை மேலே ஏறிவிடுமோ என்கிற அச்சத்தில் நாங்களும் எழுந்து கொள்வோம். ஓரிரு முறை எலி பிடிக்க வரும் பாம்பு கூரையிலிருந்து படுக்கையருகில் விழுந்ததும் உண்டு. அதனால் நாங்கள் 2002ஆம் ஆண்டு காடு வளர்க்கத் தொடங்கும் வரை பாம்புகளைக் கண்டு அஞ்சியதே அதிகம்.

ஆனால், பாம்புகள் இன்றேல் எலிகளால் மிகப் பெருமளவில் உணவுப் பொருள்கள் வீணாகும் எனப் பின்னர் படித்துத் தெரிந்துகொண்டோம். தற்போது மயில்களால் பெருமளவில் பாம்புகள் குறைந்துவிட்டன. மனிதர்கள் பாம்பைக் கண்டதும் கொன்றுவிடுவதும் பாம்புகள் குறைய ஒரு காரணம்.

வீட்டுக்குள் பாம்பு வர இயலாவண்ணம் கதவுகளுக்கும் பலகணிகளுக்கும் வலைகளைப் பொருத்திவிட்டால் போதும்; காட்டிலுள்ள பாம்புகள் நாம் மிதித்தால் தவிர, கடிப்பதில்லை. எந்த ஓர் உயிரினமும் நாம் அதைத் தாக்காத வரை அதுவும் நம்மைத் தீண்டுவதில்லை என்பதே எங்கள் புரிதல். எனவே தோட்ட வேலையின் போது நாம் கவனமாக இருக்க வேண்டியது மிக முக்கியமானது.

இப்போது நாங்கள் வளர்க்கும் காட்டில் பதினொரு வகையான பாம்புகளைப் பார்த்திருக்கிறோம். அவை, நாகப் பாம்பு, கட்டு விரியன், கண்ணாடி விரியன், சுருட்டை விரியன், கொம்பேறி மூக்கன், பச்சைப் பாம்பு, மண்ணுளிப் பாம்பு (இருதலை மணியன்), எண்ணெய்ப் பனையன், வெள்ளிக்கோல் வரையன் (ஓநாய்ப் பாம்பு), சாரைப் பாம்பு, மோதிர வளையன்.


இவற்றில் முதல் நான்கும் நஞ்சுடையன. மற்றவை நஞ்சற்றவை. கொம்பேறிப் பாம்பு கடித்துவிட்டு, கடிபட்டவர் இறந்து சுடுகாடு செல்லும் வரை பார்த்துக் கொண்டிருக்கும் என்றொரு கதை வேறு நிலவுகிறது. ஆனால், அது நஞ்சற்ற பாம்பு. நாங்கள் அதைப் பலமுறை வீட்டருகில் பார்த்தாயிற்று.

தேசிய நூல்கள் அறக்கட்டளை (National Book Trust) வெளியிட்ட இந்தியப் பாம்புகள் என்கிற நூல் மூலம் பாம்புகள் குறித்த அச்சம் அகன்றது.

பாம்புகளைக் காணும் போது படம்பிடித்து அதை எங்கள் பறவையியல் நண்பர் முனைவர் செகந்நாதனுக்கு அனுப்புவோம். அவர் தம் நண்பரான ஊரிகளியல் அறிஞர் (herpetologist) முனைவர் ரமேஷ்வரனிடம் காட்டி என்ன வகைப் பாம்பு என்பதை உறுதிப்படுத்துவார். புதிதாகப் பார்க்கும் பாம்புகளின் பெயர்களை இவ்வாறே அறிந்து கொள்கிறோம்.

எங்கள் பெயர்த்தி சிறு குழந்தையாக இருந்தபோது ஒரு சிறு குன்றருகில் நல்ல இடம் தேடி இருவரும் அமர்ந்தோம். அருகிலிருந்த சிறு மரங்களில் சரசரவென ஒலி கேட்கத் திரும்பிப் பார்த்தோம். கொம்பேறி ஒன்று விரைவாக இறங்கிக் கொண்டிருந்தது. இது போல் வீட்டருகிலும் ஒருமுறை சாரைப் பாம்பைப் பார்த்தோம். குழந்தை அஞ்சியதால் வீட்டிற்குள் வந்துவிட்டோம்.

காட்டிற்குள் வீடிருப்பதாலும், வீட்டில் நிறைய நூல்கள் இருப்பதாலும் கதவுகள், பலகணிகள் வழியாக எலிகளும் அணில்களும் வருவதைத் தடுக்கும் பொருட்டு எல்லா இடங்களிலும் வலை பொருத்தியுள்ளோம். ஆனால், அவற்றையும் தாண்டி எப்படியோ ஒரு கொம்பேறி 2007ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வீட்டினுள் புகுந்துவிட்டது. அது எப்போது எவ்வழியில் வந்ததோ ஒருநாள் அம்மாவின் கண்ணில் பட்டது.

(இன்னும் வரும்)

படைப்பாளர்:

அர. செல்வமணி. சத்தியமங்கலத்திற்கு அருகிலுள்ள சிற்றூரில் காடு வளர்ப்பும் சிறு அளவில் இயற்கை வேளாண்மையும் செய்கிறார். அவருடைய அறிவியல் ஆசிரியர் பல்லடத்தில் தொடங்கிய தாய்த்தமிழ்ப் பள்ளி மூலம் புதுவைப் பேராசிரியர்கள் திருமுருகன், ம. இலெ. தங்கப்பா இருவரும் இவருக்கு அறிமுகமாயினர். தமிழார்வத்தை அவர்கள் ஊக்கினர். அதன் பின்னர் மரபுப் பாடல்களை எழுத ஆரம்பித்தார். காட்டில் நிறையப் பறவைகள் வரத் தொடங்கியதால் பறவை ஆர்வலரும் ஆனார். பறவையியல் முனைவரான நண்பர் உதவியுடன் இங்கு இதுவரை நூறு வகைப் பறவைகளுக்கு மேல் கண்டு பதிவு செய்திருக்கிறார்.