Me too அமெரிக்காவில் தொடங்கியது. அங்கு தொடங்கி சில வருடங்களுக்குப் பின்னர்தான் இந்தியாவில் சில சினிமா பிரபலங்களால் தங்களுக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகள் வெளிச்சத்துக்கு வந்தன. அதிலும் உயர்பதவிகளில், செலபிரட்டிகளாகக் கொண்டாடப்படும் சிலரின் பாலியல் துன்புறுத்தல்களை வெளியே சொல்ல முடியாத நிலையில் இருந்த பெண்கள் பலரும் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை, அதை நிகழ்த்திய மக்கள் கொண்டாடும் விஐபிகளைப் பற்றி மீடியாக்களில் பேசத் தொடங்கினர். நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின.

பாலியல் துன்புறுத்தல்கள் பற்றிய தங்கள் துன்பங்களை வெளிக்கொண்டு வரும் ஓர் இயக்கமாக, தீவிரமாக முன்னெடுக்கப்பட வேண்டியதை, சிலர் தெரிந்தும் தெரியாமல் செய்த தவறுகளால் நீர்த்துப் போய், பலரால் கிண்டல் செய்யப்படும் விஷயமாக மாற்றிவிட்டனர். உண்மையில் மீ டூ என்பது என்ன? ஒரு பெண்ணைத் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி உடல் ரீதியாகப் பாலியல் அத்துமீறலை நடத்துவதுடன், அவளை உளவியல் ரீதியாகச் சிதைப்பதும் மீ டூ வின் கீழ் வரும்.

இந்தப் பாலியல் துன்புறுத்தல்களில் பெண்கள் நேரடியாகவே பாதிக்கப்பட்டிருந்தாலும், இதனால் தற்கொலை என்கிற எல்லைக்குச் சென்றாலும், இந்தக் குற்றங்கள் பாலியல் குற்றங்களாகப் பதிவு செய்யப்படுவதில்லை. காரணம் இதனை வெளியே கூறினால், குடும்பமும் உறவுகளும் சமூகமும் தம்மைத் தப்பாகப் பார்க்கும் எனத் தனக்குள்ளாகவே புதைத்துக்கொண்டு, மன அழுத்தத்துடன்தான் வலம் வருகின்றனர்.

பாலியல் அத்துமீறலை, பாலியல் சுரண்டலைக் கடக்காத மனிதர்கள் இல்லை என்றே சொல்லும் அளவுக்குதான் நிலைமை இன்றளவும் இருந்து வருகிறது. ஆனால், அதை வெளியே சொல்ல முடியாத அளவுக்கு அடக்குமுறையும் இருப்பதால்தான் இன்றும் பலர் நல்லவர்களாக, சமூகத்தில் அந்தஸ்தானவர்களாக வலம் வந்துகொண்டிருக்கின்றனர். அதிலும் பெண்களுக்கு, பெண் குழந்தைகளுக்குக் கலாச்சாரம், பண்பாடு என ஓவர் டோஸாகக் கொடுத்து வளர்க்கப்படுவதால் சிறுவயதில் அவர்களுக்கு நடக்கும் பாலியல் சீண்டல்கள், அச்சுறுத்தல்கள், பாலியல் அத்துமீறல்கள் அவர்களை எத்தகைய மன உளைச்சலுக்கும், பயத்துக்கும் ஆளாக்கும், பின்னாளில் அவர்கள் திருமண வாழ்கையை எவ்வளவு சிக்கலுக்குள்ளாக்கும் என்பது பற்றிய புரிதல் பலருக்கு இருப்பதில்லை. இந்தக் குழந்தைப் பருவ பாலியல் சீண்டல் பெண் குழந்தைகளுக்கு மட்டுமல்ல ஆண் குழந்தைகளுக்கும் நடக்கிறது. ஆனால், சமூகத்தில் பெரிதான கற்பு சார்ந்த கற்பிதங்கள் ஆண்களுக்கு வரையறுக்கப்படாததால், அவர்கள் உணர்வுப்பூர்வமாகப் பெருஞ்சிக்கல்களைச் சந்திப்பதில்லை. சந்தித்தாலும் ஒப்பீட்டளவில் குறைவாகதான் இருக்கும். ஆனால், Emotional instability இருக்கும் ஆண் குழந்தைகளும் அதிகளவில் இந்தப் பாலியல் சீண்டலில் பாதிப்படையதான் செய்வார்கள்.

தனக்கு நேர்ந்த பாலியல் சீண்டல், சுரண்டல்களை வெளியே சொல்ல முடியாமல் வருடக்கணக்கில் தனக்குள்ளாகச் சுமந்து, குமைந்து தனக்கு மட்டும் ஏன் இப்படி எனக் கழிவிரக்கத்தில் உழன்று தாம்பத்ய வாழ்க்கையைச் சரிவர எதிர்கொள்ள முடியாமல், தான் செய்யாத தவறுக்குக் குற்ற உணர்வில் உழன்று, மன உளைச்சலுக்குள் நம்மைத் தள்ளிய நபர், எதுவும் நடக்காதது போல சமூகத்தில் மிக நல்லவனாக நம் கண்முன் உலவ, அவர்களை எதுவும் செய்ய இயலாத இயலாமையைச் சுமந்து கொண்டு விரக்தியிலும் அழுகையிலும் மூழ்கித் தங்கள் உளச்சிக்கலில் வெளிவர ஏதுவாக உங்களுக்கு மட்டுமில்லை, எங்களுக்கும் இது நடந்திருக்கிறது என்பதை உலகுக்குத் தெரியப்படுத்தவும், அப்படிச் செய்துவிட்டு எதுவும் நடக்காதது போல சமூகத்தில் நல்லவராக வலம் வருபவர்களை அடையாளம் காட்டும் இயக்கமாகத்தான் மீ டூ தொடங்கியது.

பாலியல் சீண்டலில் பாதிக்கப்பட்ட பலரும் தங்களுக்கு நேர்ந்த அத்துமீறல்களை வெளியே கூறத் தொடங்கும் போது, நம்மைப் போன்றுதான் பலருக்கும் நடந்திருக்கிறது, இதில் பயப்படவோ குற்ற உணர்வு அடையவோ கவலை கொள்ளவோ தேவையில்லை எனத் தங்களை அமுக்கி வைத்திருக்கும் துயரங்களில் இருந்து எளிதில் வெளிவர இந்த மீ டூ உதவியாக இருக்கும் என்கிற அளவிலும் இது தீவிரமாக முன்னெடுக்கப்பட வேண்டிய ஒன்றுதான்.

நெருங்கிய உறவுகளால் பாலியல் சீண்டல் எதிர்கொள்ளும் பெண்கள் முதலில் இதை யாரிடம் சொல்வது எனத் தெரியாமல், சம்மந்தப்பட்டவரைப் பற்றி வெளியே கூறினால், உறவில் சிக்கல்கள் எழுமோ, தன்னால் குடும்பத்தில் சண்டை ஏற்பட்டு குடும்பம் பிரிந்து விடுமோ எனப் பெரும் குழப்பத்துக்குள் விழுகின்றனர். குற்ற உணர்வில்தான் பெண்ணாகப் பிறந்ததே தவறோ, தான் சரியான பெண் இல்லையோ எனக் குமைந்து இந்தச் சிக்கலை எதிர்கொள்ளத் தெரியாமல் தற்கொலைக்கு முயன்று அதிலும் தோற்று, பல நாட்கள் தூக்கமின்றி, மனநிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்குச் சென்றால் அங்குதான் உண்மையை உடைத்து கூறுகிறார்கள். அங்கும் கூற முடியாத நிலையில் இருக்கும் பெண்களும், மனநிலை சிகிச்சைக்கே செல்லாத பெண்களும் உண்டு.

மிகப் பாதுகாப்பான இடம் குடும்பம்தான், உறவுகளும் தெரிந்தவர்களிடம்தான் குழந்தைகள் பாதுகாப்பாக இருப்பார்கள் என்பதான நம்பிக்கை நம்மிடம் உண்டு. ஆனால், பல பாலியல் சீண்டல்களும் அத்துமீறல்களும் உறவினர்களாலும், அதிகம் தெரிந்தவர்களாலும்தான் நடக்கின்றன என்பது அதிரச் செய்யும் உண்மை.

ஒரு பெண் தனக்கு நேர்ந்த பாலியல் சீண்டல்கள், பாலியல் துன்புறுத்தல்கள் பற்றி வெளியே சொல்ல முடியாமல் போகக் காரணம் என்ன என்றால், முதலில் ஒரு பெண் குழந்தைக்கு அவளது உடல் அவளுக்கு மட்டுமே உரித்தானது என்று எந்த வயதிலும் சொல்லிக் கொடுக்கப்படுவதே இல்லை. அடுத்து குழந்தைகளாக, விவரம் தெரியாத பதின்பருவத்தினராக இருக்கும்போது, அவர்கள் மீது பாலியல் துன்புறுத்தல்களைக் கட்டவிழ்த்து விடுபவர்கள் நெருங்கியவர்களாக, சமூகத்தில் குடும்பத்தில் செல்வாக்குடையவர்களாக இருந்துவிட்டால், அவர்கள் குழம்பித்தான் போவார்கள். தனக்கு நடந்தது பாலியல் அத்துமீறல் என்பதை உணரவே அவர்களுக்கு நீண்ட நாட்கள் பிடிக்கும். அந்த அத்துமீறல் நிகழ்த்தியவர்களிடம் இருந்து தப்பிக்க என்னென்ன செய்யலாம் என்கிற அளவுதான் சிந்திக்க முடியுமே தவிர, அதை யாரிடமும் சொல்லும் தைரியம் வருவது குறைவு. காரணம் பயம்.

குழந்தைப் பருவத்தில் இத்தகைய அத்துமீறலை எதிர்கொள்ளத் தெரியாமல் பயந்து ஒடுங்கியே பழக்கப்பட்ட குழந்தை, வளர்ந்த பின்னும் என்ன செய்வது என்று தெரியாமல்தான் ஒடுங்குகிறாள். யானையை அங்குசத்தைக் கொண்டு பயமுறுத்தி உளவியலாக ஒடுக்குவது போலதான் பெண் ஒடுக்கப்படுகிறாள்.

இதனால்தான் பெரும்பாலான பெண்கள் தங்களுக்கு அத்துமீறல் நடக்கும்போது அதைப் பற்றி வெளியே கூறாமல், யாராவது தைரியம் பெற்று வெளியே கூறும்போது, தனக்கு நேர்ந்ததைச் சொல்ல முற்படுகிறார்கள். உடனே அறசீற்றவாதிகள் சம்பவம் நடந்த போதே ஏன் சொல்லவில்லை? அது நடந்த பிறகும் அவர்களோடு பேசிக் கொண்டுதானே இருந்தே என அவர்கள் குரல்வளையை நெறிக்கும் வேலையைத்தான் செய்கின்றனர். பாலியல் வல்லுறவு செய்தவனுக்கே திருமணம் செய்து கொடுப்பதை, அவனைத் திருமணம் செய்து கொள்வதே புரட்சி என்பதாக மண்டையில் ஏற்றப்பட்டிருக்கும் ஒரு சமூகத்தில் ஒரு பெண் தனக்கு நேர்ந்ததை எப்படி வெளியே சொல்வாள்?

குழந்தைப் பருவம், பதின்பருவம் தாண்டிய பின்னரும், கல்லூரிக் காலத்தில் சில சைக்கோ பேராசிரியர்கள், வேலைக்குப் போகும் இடத்தில் உயரதிகாரிகள், பேருந்தில் செல்லும் போது சக பயணிகள் எனப் பல இடங்களில் பெண்கள் பாலியல் அத்துமீறல்களை எதிர்கொண்டாலும், இன்றளவும் பெரும்பான்மையான பெண்கள் குமுறல்களோடு, தனக்குள்ளாக விழுங்கிக் கொண்டு கடந்துதான் செல்கின்றனர். ஏனென்றால் ஒரு பெண் தனக்கு நேர்ந்த பாலியல் தொந்தரவுகளை வெளியே கூறினால், அலட்சியமும் அந்தப் பெண்ணையே குற்றப்படுத்துகிற வசவுகளும் அந்தப் பெண்ணுக்குப் புத்திமதிகளும் கடைசியாக அவளைச் சந்தேகிக்கும் வார்த்தைகளும்தாம் வரும் என்பதை அனுபவபூர்வமாக உணர்ந்தவர்களாக இருப்பார்கள், அல்லது புகார் கொடுக்கும் பெண்களுக்கு இந்தச் சமூகம் கொடுக்கும் மரியாதையைப் பார்த்தவர்களாக இருப்பார்கள்.

மீ டூ பரபரப்பாகப் பேசப்பட்ட போது இங்கு அதுதான் நடந்தது. தனிப்பட்ட தங்கள் சொந்த காழ்ப்புணர்ச்சியைத் தீர்த்துக் கொள்ளவும், ஒருவரின் பெயரை அசிங்கப்படுத்தவும் இதனைப் பயன்படுத்தி, இதனை நீர்க்கச் செய்த ஆண், பெண் செயல்களின் வேகத்தில், நிஜமாகப் பாதிக்கப்பட்டு புகார் கொடுக்க முனைந்தவர்கள் குரலைத் தேயச் செய்துவிட்டனர். சமூக அந்தஸ்தில் உயர்ந்த இடத்தில் இருக்கும் பெண்களின் குரல்வளையே நெறிக்கப்பட்டு, சம்மந்தப்பட்ட பெண் அசிங்கப்படுவதைப் பார்க்கும் போது, அதனைப் பார்க்கும் சாமானிய பெண்களில் எத்தனை பேர் தனக்கு நேர்ந்ததைச் சொல்ல முன்வருவார்கள்?

ஒரு காலத்தில் தாய்வழி சமூகமாக வாழ்ந்த மனித இனம், சாதி, மதம் கலாச்சாரம் என்கிற பெயரில் பெண்களைப் பூட்டி வைக்கத் தொடங்கிய போதே பாலியல் சார்ந்த பிரச்னைகளுக்கு விதை போடப்பட்டுவிட்டது. ஆணாதிக்க சமூக அமைப்பும் மதங்களும் மதக்கட்டுப்பாடுகளும் அதனைச் செழித்து வளரச் செய்துவிட்டது. பிற உயிர்களை மதிக்க வேண்டும், பிற உயிர்களைக் காயப்படுத்தாமல் வாழும் அடிப்படை நேர்மை கைக்கொள்ளப்பட்டாலே பாலியல் குற்றங்கள் மறையத் தொடங்கிவிடும்.

படைப்பாளர்:

கமலி பன்னீர்செல்வம். எழுத்தாளர். ‘கேட் சோபின் சிறுகதைகள்’ என்ற நூல் இவர் மொழிபெயர்ப்பில் வெளிவந்து, பாராட்டுகளைப் பெற்று வருகிறது.