‘ஹாப்பி பர்த்டே டு யூ நித்தி குட்டி.’
என் மகள் கேக்கை வெட்ட என் நண்பர்கள் ஆரவாரமாகக் கைதட்டி பிறந்த நாள் பாடலைப் பாடினார்கள்.
கேக் வெட்டியதும் உணவு பரிமாறுவதில் மும்மூரமாக இருந்தேன்.
“இந்தாங்க இன்னும் கொஞ்சம் பிரியாணி வெச்சுக்கோங்க. இந்த மஷ்ரூம் கட்லெட் சாப்பிடுங்க”
என்று நண்பர்களுக்குப் போதும் போதும் என்று சொல்லும் வரை உணவை பரிமாறினேன். ஐஸ்கிரீம் கேரட் ஹல்வாவுடன் இனிதே நிறைவுற்றது.
“சூப்பர் டா! சாப்பாடெல்லாம் கலக்கிட்ட! பார்ட்டி செமையா இருந்துச்சி, அடுத்து எப்போ எல்லாரையும் பார்க்கலாம்ன்னு இருக்கு” என்றாள் தோழி.
கலகலப்பாக இருந்தது என் மகளின் பிறந்த நாள் கொண்டாட்டம். விழா முடிந்து ஒவ்வொருவராகக் கிளம்ப ஆரம்பித்தனர். கடைசியாக இருந்த ஒரு நண்பரும் விடைபெற்றுச் சென்றார்.
மழை ஜோராகப் பெய்து ஓய்ந்தது போல வீடே அமைதியாக இருந்தது. எல்லாரும் அசதியில் படுக்கச் சென்றோம்.
அடுத்த நாள் காலை நான் கண்விழித்த போது எனது நாள் வழக்கமான ஒரு நாள் போல் இருந்தது. முந்தைய நாள் இருந்த கலகலப்பு எங்கே போயிருந்தது என்று தெரியாமல் போனது.
நேற்று போல் இன்றில்லையே என்று மனம் ஏங்கியது.
அந்த மகிழ்ச்சியான நாள் தொடர்ந்திருக்கக் கூடாதா என்று மனம் ஏங்கியது.
‘மகிழ்ச்சி’ என்கிற வார்த்தை எப்போதும் விவாதத்திற்குரிய ஒரு வார்த்தையாகவே இருக்கிறதே அது ஏன் என்று தோன்றியது.
பல பொருள் கொண்ட ஒரு சொல் என்று தமிழில் ஒன்றைக் கூறுவார்கள். மகிழ்ச்சி என்கிற வார்த்தையும் அப்படிப் பட்டதுதான் என்று என் மனம் யோசிக்கத் தொடங்கியது.
மகிழ்ச்சி என்பது ஒரு தற்காலிக உணர்ச்சியின் வெளிப்பாடா, அல்லது வெற்றிகரமான நம் முழு வாழ்க்கைக்கான அர்த்தமா?
யாசகம் கேட்கும் ஒருவருக்குக் கிடைக்கும் ஒரு வேளை உணவு அவருக்கு மகிழ்ச்சியளிக்கிறது! ஒரு குழந்தைக்கு தான் மிகவும் எதிர்பார்த்த ஒரு பொம்மை பரிசாகக் கிடைக்கும்போது மகிழ்ச்சியளிக்கிறது! காதலை வெளிப்படுத்திய அந்தக் கணம், கழுத்தில் தாலி ஏறிய அந்தக் கணம், குழந்தை பிறந்த அந்தக் கணம், மகிழ்ச்சி உச்சக்கட்டத்தில் இருக்கிறது.
உங்களுக்கு மிகவும் பிடித்தமான காரை வாங்கும் போது அது உங்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது! நிலவில் சில ஏக்கர்களை வாங்கும் போது அது மகிழ்ச்சியளிக்கிறது!
உலகின் மிகப் பெரிய பணக்காரராக உங்களை அறிவிக்கும் அந்த நொடி உங்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது!
இவையெல்லாம் மகிழ்ச்சியின் நிகழ்வுகளாக மட்டுமே இருக்கின்றன. அடுத்த நாள் அவர்கள் அனைவரிடமும் போய், ‘இன்று நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா?’ என்று கேட்டால், ஆம் என்று உண்மையைச் சொல்வதற்குத் தடுமாறுவார்கள். இதுவே நிதர்சனம்.
ப்ரூக்கிங்ஸ் இன்ஸ்டிடியூட் நடத்திய ஓர் ஆய்வில், 18 முதல் 21 வயது வரை உள்ளவர்களுக்கு மகிழ்ச்சி அதிகமாக இருந்ததாக விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். பின்னர் சீராகக் குறைந்து போய்விடுகிறது. ஆனால், நடுத்தர வயதைக் கடந்ததும், மீண்டும் மகிழ்ச்சி அதிகரித்துவிடுகிறது. 98 வயதில் மிக உயர்ந்த நிலைக்கு மகிழ்ச்சி சென்றடைந்தது. இந்த ஆய்வுகளைப் பார்க்கும் போது என் மூளைக்கு எட்டிய வரைக்கும் நம் வாழ்க்கையில் மகிழ்ச்சி என்பது ஒரு குறிப்பிட்ட நேர இடைவெளியில் நடக்கும் நிகழ்ச்சியாக மட்டுமே கருதப்படுகிறது.
ஆனால், மகிழ்ச்சி என்பது இனி மேல் ஓர் உணர்ச்சியாக, நிகழ்வாகக் கருதப்படாமல், நம் வாழ்வின் ஒட்டுமொத்த மதிப்பீடாக இருந்தால் எவ்வளவு அருமையாக இருக்கும்!
மகிழ்ச்சி என்பது தற்செயலாக நடப்பது அல்ல, நம் விருப்பத்தாலேயே நடப்பது.
சிரித்த முகம் மகிழ்ச்சியின் அடையாளமாக இருப்பதைவிட, உள்ளே இருக்கும் மனம் நிறைவாக இருப்பதே மகிழ்ச்சியின் அடையாளமாக இருக்க வேண்டும். அதை நோக்கியே நம் பயணமும் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்!
‘நீங்கள் என்ன நினைக்கிறீர்கள், என்ன சொல்கிறீர்கள், என்ன செய்கிறீர்கள் என்பது இணக்கமாக இருந்தால் அதுவே மகிழ்ச்சி.’ காந்தியின் அழகான வார்த்தைகளை நினைவில் நிறுத்திக் கொண்டு,
நாம் எப்போதும்
நல்ல மனநிலையுடன் இருப்போம்
நேர்மறையாகப் பேசிப் பழகுவோம்
விரைவாக புன்னகைப்போம்
நிதானமாகக் கோபப்படுவோம்
அமைதியைப் பழகுவோம்
நம்பிக்கையுடன் செயல்படுவோம்
ஈடுபாட்டுடனும் சுறுசுறுப்புடனும்
தன்னிறைவான வாழ்க்கையுடன்
பயணிப்போம்!
(தொடரும்)
படைப்பாளர்:
சித்ரா ரங்கராஜன்
கட்டிடக் கலை மற்றும் உட்புற வடிவமைப்பாளராக சென்னையில் தன் கணவருடன் நிறுவனத்தை நடத்திவருகிறார். ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதுவதை ஆர்வமாகக் கொண்டுள்ளவர். புத்தகங்களுக்குப் படங்கள் வரைவதிலும் நாட்டம் கொண்டவர். பெண்ணியச் சிந்தனையில் மிகுந்த ஆர்வமுள்ளவர். ஒருவரின் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவதில் ஓர் எழுத்தாளருக்கு முக்கியப் பங்குண்டு என்பது இவருடைய வலுவான கருத்து. ஹெர் ஸ்டோரிஸில் ‘மேதினியின் தேவதைகள்’ என்கிற தலைப்பில் தொடர் எழுதிக் கொண்டிருக்கிறார். இது இவருடைய இரண்டாவது தொடர்.