இந்தியாவின் முதல் இஸ்லாமிய அரசி – ரசியா சுல்தான்

நிவேதிதா லூயிஸ்

'வலிமையான அமைப்போடு, ஆண்மகனைப்போல குதிரையேறி, முகத்தை பர்தாவினால் மூடாமல், கைகளில் வில்லும் அம்பும் ஏந்திய அவளைக் கண்டேன்' என்கிறார் பயணி இபின் பதூதா.
அவள்... கி.பி 1236-ல் டெல்லி அரியணை ஏறிய முதலும் இறுதியுமான பெண்... மலிகா ஹிந்துஸ்தான்-ரசியா பின் இல்துமிஷ்!

அடிமையாக இருந்து, தன் வீரத்தாலும், புத்தி சாதுர்யத்தாலும் டெல்லி சுல்தான் ஆன குத்புதின் ஐபக்கின் மகன் இல்துமிஷின் மகளான ரசியா சுல்தான், அரியணை ஏறியதே ஒரு சுவாரஸ்யமான கதைதான். `இல்து மிஷின் வழித்தோன்றல்களில் சிறந்தவர் ரசியா. அவர் இருபது மகன்களுக்குச் சமம் என்று எண்ணினார் இல்துமிஷ்’ என்கிறார் பாரசீக வரலாற்றாளர் ஃபிரிஷ்தா. தந்தை இல்துமிஷின் மரணத்துக்குப் பின் ரசியாவின் சிற்றன்னை மகனான ஃபிரூஸ் தன் அன்னையின் உதவியுடன் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தான். சுல்தானின் ஆசை அவர் மகளை ஆட்சியில் அமர்த்துவதே என்பதை அறிந்தும், ஃபிரூஸுக்குத் தங்கள் ஆதரவை அளித்தனர் அமீர்கள். காரணம், ரசியா ஒரு பெண் என்பது மட்டுமே!

புத்திசாலியான ரசியா, முறையிடுவதற்காக மக்கள் அணியும் சிவப்புநிற அங்கியை அணிந்துகொண்டு, நேராக மக்களிடமே சென்றாள். படைகளிடமும் மக்களிடமும் வீர உரை ஒன்றை நிகழ்த்தினாள். அவளது பேச்சினால் வசீகரிக்கப்பட்ட டெல்லி படைகள், அரண்மனையை முற்றுகையிட்டு, ஃபிரூஸைத் தோற்கடித்து, அவனையும் அவன் தாயையும் கொன்றன. கம்பீரமாக, அதே சிவப்பு உடையோடு அரியணை ஏறினாள் ரசியா. `பர்தா முறையைப் பின்பற்றி, முகத்தை யாருக்கும் காட்டாமல் ஆட்சி செய்வார், நாம் குள்ளநரித்தனமாக ஆட்சியைப் பிடித்துக்கொள்ளலாம்’ என்று எண்ணிய அமீர்களுக்குக் கடும் அதிர்ச்சி தந்தார் ரசியா. பர்தா முறையைப் பின்பற்றாமல், ஆண்களுடன் அரசவையில் வாதம்செய்து, ஆணைகள் பிறப்பித்து, சிங்கம்போல வலம் வந்தாள். படைகளை வழிநடத்தினாள். நஸ்ரியா பல்கலைக்கழகத்தில் கலை, அறிவியல், வானியல், கணிதம் என பல பிரிவுகளை நிறுவினாள். ‘வல்லமைமிக்க சுல்தான்’ என்று அச்சிடப்பட்ட செப்பு மற்றும் வெள்ளி நாணயங்களை வெளியிட்டாள்.

ரசியா சுல்தான்

ஓர் அடிமையின் வம்சத்தினள், அதிலும் பெண், தங்களை ஆள்வதா என்று பொருமிய அமைச்சர்களும், தளபதிகளும், மதவாதிகளும், பதிந்தாவின் ஆளுநரும் ரசியாவின் சிறுவயது நண்பனுமான மாலிக் அல் துனியாவுக்கு, ‘அரசிக்கும் அவளது குதிரைகளைப் பராமரித்துவந்த அடிமையான யாக்கூத்துக்கும் இடையே காதல்’ என்றொரு கதையைச் சொல்லியனுப்பினர். அவள்மீது காதல்கொண்டிருந்த அல் துனியா, கலகம் செய்தான். கலகத்தை அடக்க சிறுபடையுடன் ரசியா, பதிந்தாவை நோக்கிக் கிளம்பியதும், யாக்கூத் கொல்லப்பட்டான். துரதிர்ஷ்டவசமாக, அல் துனியாவிடம் தோற்று, அவனால் கிலா முபாரக் கோட்டையில் சிறை வைக்கப்பட்டாள் ரசியா. டெல்லி, அவளது சிற்றன்னை மகன் பஹ்ரம் வசம் வந்தது.

அல் துனியாவிட மிருந்து தப்பிக்க வேறு வழி இல்லாததால், அவனை மணக்கச் சம்மதித்தாள் ரசியா. இருவரும் 1240-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டு, டெல்லியைக் கைப்பற்ற படை நடத்திச் சென்றனர். வழியில், கொள்ளையருக்கு அஞ்சி படைகள் சிதறியதால், கைத்தல் என்ற இடத்தில், இருவரும் கொள்ளையரிடம் சிக்கி மரணம் அடைந்தனர். ரசியாவுக்கு அப்போது வயது 35.  ரசியா பேகத்தின் கல்லறைகள் கைத்தல், டோங்க் மற்றும் பழைய டெல்லியின் புல்புலிகானா என மூன்று இடங்களில் உள்ளன (உடல் அடிக்கடி மாற்றப்பட்டிருக்க வேண்டும்).

நான்கே ஆண்டுகள் ஆட்சி புரிந்தாலும், ‘டெல்லியின் தலை சிறந்த பெண் ஆட்சியாளர்’ என்று தன்னை நிரூபித்துச்சென்றார் ரசியா. பெண் வெற்றி பெற மதமோ, உடையோ தடை இல்லை என்பதை 800 ஆண்டுகளுக்கு முன்பே நமக்கு வழிகாட்டிச் சென்றிருக்கிறார் இந்த முதல் பேகம்.

கட்டுரையாளர்:

நிவேதிதா லூயிஸ்

நிவேதிதா லூயிஸ் – ஹெர் ஸ்டோரிஸ் இணை நிறுவனர் மற்றும் ஹெர் ஸ்டோரிஸ் இணைய இதழின் ஆசிரியர்.

இவர் சென்னையைச் சேர்ந்த வரலாற்றாளர், எழுத்தாளர், சமூக ஆர்வலர், தொல்லியல் ஆர்வலர், பயணக் காதலர். அனைத்து மத வழிபாட்டுத் தலங்கள், வாழ்விடங்கள், தொல்லியல் தளங்கள், பண்பாட்டுத் தளங்களின் வரலாறு குறித்து ஆர்வத்துடன் எழுதிவருபவர். காலத்தில் கரைந்தும் மறைந்தும் போன சாதனைப் பெண்களின் வாழ்க்கையைச் சொல்லும், அவள் விகடனில் தொடராக வந்த ‘முதல் பெண்கள்’ என்னும் நூலையும், நம் நீண்ட தமிழ்ப் பண்பாட்டு மரபைச் சொல்லும் ‘ஆதிச்சநல்லூர் முதல் கீழடி வரை’ என்ற தொல்லியலை எளிமையாகப் புரிந்துகொள்ள உதவும் நூலையும் எழுதியுள்ளார். இவை தவிர சிந்து வெளி நாகரிகம், மகிழ்ச்சியின் தேசம் ஆகிய இரு மின் நூல்களை எழுதியுள்ளார். வடசென்னையின் அறிந்துகொள்ளப்படாத வரலாற்று சின்னங்களையும், அங்குள்ள மக்களின் வாழ்வியலையும் சொல்லும் வடசென்னை- வரலாறும் வாழ்வியலும் என்ற நூலை சமீபத்தில்  வெளியிட்டுள்ளார்.  

சென்னை வரலாற்றின் சொல்லப்படாத பக்கங்களை மரபு நடைகள் மூலமும், தன் எழுத்து மூலமும் தொடர்ந்து ஆவணப்படுத்திக்கொண்டு வருகிறார். இவரின் பூட்டான் பயணக் கட்டுரைத் தொடரும், சென்னை பற்றிய காணொலிகளும் மின்னம்பலம்.காம் இணைய இதழில் வெளிவந்து வாசகர்களின் வரவேற்பைப் பெற்றன. முதல் பெண்கள் தொடரின் இரண்டாவது பகுதியை தற்போது மின்னம்பலம் இணைய இதழில் எழுதிவருகிறார். குழந்தைகளுக்கு தொல்லியலை அறிமுகம் செய்யும் ‘தொல்லியல் தெரிஞ்சிக்கலாமா?’ தொடரை துளிர் இதழிலும், தமிழக தாவரங்கள் குறித்த ‘தாவரம் அறிவோம்’ தொடரை யாதும் இதழிலும் எழுதிவருகிறார். சிங்கப்பூரிலிருந்து வெளிவரும் இணைய இதழான சிராங்கூன் டைம்ஸ் இதழிலும் சிங்கப்பூர் வரலாற்றுக் கட்டுரைகள், பண்டைய தமிழ் சிற்றிலக்கிய நூல்கள் வழி சிங்கையை புரிந்து கொள்ள உதவும் கட்டுரைகளை எழுதி வருகிறார்.