திருமணத்திற்கு முன் சுயமாகச் சம்பாதித்த பெண்களில் பலர், திருமணத்திற்குப் பிறகு சம்பாதிப்பதில் அவ்வளவு ஆர்வம் காட்டுவதில்லை என்றெல்லாம் அவ்வளவு எளிதாகக் கூறி விட முடியாது.

வீட்டின் கடமைகள் என்கிற பெயரில் பெண்களுக்காகவே பிரத்யோகமாக ஒதுக்கப்பட்ட வீட்டின் பணிச்சுமைகள் அடுத்தடுத்து வரிசைகட்டி நின்று கொண்டிருக்கும் பட்சத்தில் மேலும் அலுவல் சுமையைs சுமக்க முடியாதுப்பா சாமி என்று சோர்ந்து களைத்திருக்கக்கூட வாய்ப்பிருக்கிறது.

வீட்டின் இணையர் உறுதுணையாக இருந்தால் ஓரளவு சமாளிக்கலாம். இணையரின் உதவி கிடைக்காத பட்சத்தில் வேலைக்கும் சென்று, வீட்டு வேலை முழுவதும் பார்க்க வேண்டுமென்றால் அவளால் எவ்வளவு தூரம் சமாளிக்க முடியும்?

இருந்தபோதிலும் சில வைராக்கிய குணம் படைத்த பெண்கள் இணையரின் உதவியையெல்லாம்  பெரிதாகப் பொருட்படுத்தாமல் குடும்ப நலனை கருத்தில் கொண்டு தன்னால் முடிந்தளவு முட்டி மோதி உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் ஒரு சிலரோ, ஆணாதிக்கச் சமூகத்திற்குக் கட்டுப்பட்டு தன் சுயவிருப்பத்தை தொலைத்து, தற்போதைய நிலையை எண்ணி, காலமெல்லாம் ஒருவருக்கு அடிமையாக வாழ்வதே பெண்களின் விதி என்று நினைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

மகப்பேறு காலம் மற்றும் மருத்துவத் தேவைக்காக வேண்டுமானால் தற்காலிகமாகப் பணியிலிருந்து சிறிது காலம் ஓய்வு பெறுவதில் தவறில்லை. ஆனால் சுய சம்பாத்தியம் இனி அவசியமில்லை என்கிற தவறான முடிவிற்கு மட்டும் ஒரு போதும் வந்து விடாதீர்கள்!

ஆரம்பத்தில் இல்லற வாழ்க்கையில் புதியதாக நுழையும் பெண்களில் சிலர், தங்களுடைய அறியாமையினால் “பணமா முக்கியம்? பந்தம்தான் முக்கியம்” என்று நினைத்து, பின்னர் அதிலிருந்து மீள வழி தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றனர்.

உங்களுடைய பிறந்த வீட்டாருக்கோ, நண்பர்களுக்கோ அவசர உதவி என்று வரும்போது உங்களால்  எந்தவித உதவியும் செய்ய முடியாத நிலை வரும் போதுதான்  தெரியும், “நாலு காசு சம்பாதிச்சிருந்தா  நாமளும் உதவியிருக்கலாமே” என்று.

வாழ்வின் ஒரு கட்டத்தில் அனைவருக்கும் பண நெருக்கடியைச் சந்திக்கும் நிலை உருவாகும். அப்போது வருந்துவதைவிட வருமுன் விழிப்போடு இருத்தலே நல்லது.

ஆணும் – பெண்ணும் திருமணத்திற்கு முன்பும் சரி, பின்பும் சரி நிச்சயமாக வேலைக்குச் சென்று சுயமாக சம்பாதிப்பது அவரவர் கடமை என்ற கற்பிதங்கள் புகுத்தப்பட வேண்டும்.

சுயசம்பாத்தியம் பெண்களுக்குக் கற்றுத் தரும் பாடங்கள் பல.

பெண்களுக்குத் தன்னம்பிக்கை பிறப்பிக்கும்.

எதையும் துணிச்சலுடன் செய்யும் ஆளுமைத் திறன் உருவாகும்.

இந்த உலகைக் குறித்த கண்ணோட்டம் மாறும்.

புதிய விஷயங்களைக் கற்றுத் தெரிந்து கொள்வதற்கான வாய்ப்புகள் பல வழிகளில் உருவாகும்.

வேலை பார்க்கும் இடத்தில் கிடைக்கும் அனுபவங்கள் வாழ்வியல் யதார்த்தை உணர்த்தும்.

உங்களைக் குறித்த மற்றவர்களின் பார்வை மாறும்.

குறிப்பாக அவசரத் தேவை என்று வரும்போது, பொருளாதார ரீதியாக யாரையும் சார்ந்திருக்க வேண்டிய அவசியம் இருக்காது.

உங்கள் விருப்பம் போல பலருக்கு உதவி செய்ய முடியும்.

சுயமாக முடிவுகளை எடுக்கும் பண்பு நலன்கள் உருவாகும்.

குடும்ப நிர்வாகத்தில் உங்களுடைய ஆலோசனைக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

 பெண்கள் சுயமாகச் சம்பாதிக்கும் போது, வீட்டின் வேலைகளைப் பகிர்ந்து கொள்ள மட்டுமல்லாது உங்களுடைய உரிமைகளையும், ஆலோசனைகளையும் தயக்கமின்றி கேட்கவும் சொல்லவும் முடியும்.

உங்கள் இணையருக்குத் திடீரென அலுவல் அல்லது  தொழிலில் பொருளாதார ரீதியாகப் பணம் தேவைப்படும் போது, உங்களால் முடிந்தளவு உதவி செய்ய முடியும். அக்கணம் தரும் மனநிறைவு பின்னாளில் உங்களை நினைத்து நீங்களே பெருமிதம் கொள்ளச் செய்யும் அழகான நினைவுகளில் ஒன்றாக இருக்கும்.

வாழ்க்கைத் துணை சரியில்லாத போதும் அவர்களால் உறவை முறித்துக் கொண்டு வெளிவர முட்டுக்கட்டையாக முதலில் வந்து நிற்பது  நிதி சார்ந்த அச்சம் தான்.

சுயசம்பாத்தியம் பெண்களுக்கு பல நலன்களைத்  தருவதோடு, சுயமரியாதையையும் தருகிறது.

படைப்பாளர்:

 இராஜதிலகம் பாலாஜி. ஜெர்மனியில் வசித்து வருகிறார். தமிழகத்தைச் சேர்ந்தவர். வளர்ந்து வரும் ஓர் இளம் எழுத்தாளர். பிரதிலிபி தமிழ், பிரித்தானிய தமிழிதழ், சஹானா இணைய இதழ் பலவற்றில் கதை, கட்டுரை, கவிதை, குறுநாவல், நாவல் பல எழுதி வருகிறார். சிந்தனைச் சிறகுகள் என்கிற சிறுகதைத் தொகுப்பு புத்தகத்தின் ஆசிரியர்.