1986இல் ராஜீவின் கல்விக் குழு வந்தது. புதிய கல்விக் கொள்கை என்கிற பெயரில் அரசு, தனியார் நிறுவனங்கள் மற்றும் தொழிற்துறைக்குப் பணியாளர்களை வழங்கும் விதத்தில் அந்தக் கல்விக் கொள்கை அமைந்தது. மதிப்பெண்கள் மட்டுமே முக்கியத்துவம் பெற்றது. ஆங்கிலம் அவசியம் என்று வலியுறுத்தப்பட்டதால் நிறைய ஆங்கிலவழிக் கல்வி நிறுவனங்கள் இந்தக் காலக்கட்டத்தில்தான் தோன்றின. சாதி, சமய, வர்க்க வேறுபாடுகள் இல்லாத கல்விமுறை தேவைப்பட்ட போது யஷ்பால் கல்விக் குழு 2009இல் அமைக்கப்பட்டது. எட்டாம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி என்கிற முறையை இவர்கள்தாம் கொண்டு வந்தார்கள். அதனால் கிராமப்புற பள்ளிகளில் குழந்தைகள் இடைநிற்றல் தவிர்க்கப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கது.
இப்போது நிறைய கல்லூரிகள் பெருகியிருக்கின்றன. அவற்றில் படித்து (?) முடித்துவிட்டு வெளியேறும் லட்சக்கணக்கான மாணாக்கர்கள் என்ன ஆகிறார்கள் என்று நாம் எப்பொழுதேனும் சிந்தித்திருக்கிறோமா?.. அத்தனை பேருக்கும் வேலை என்றால் எத்தனை கம்பெனிகள் இங்கே இருக்க வேண்டும்?. இத்தனை பேரை உற்பத்தி செய்து தள்ளும் கல்லூரிகள் தங்கள் பணிகளைச் செவ்வனே செய்கின்றனவா என்று பார்த்தால் பதில் பூஜ்ஜியமாக இருக்கிறது. பள்ளி இறுதித் தேர்வில் மாவட்டத்திலும் மாநிலத்திலும் முதல் மதிப்பெண் பெறும் மாணவிகள் எங்கு காணாமல் போகிறார்கள் என்று யோசித்திருக்கிறோமா? முதல் மதிப்பெண் பெற்றபின் அடுத்துப் படிக்க வேண்டிய பாடப் பிரிவைத் தேர்வு செய்வதில் நிறைய பேர் குழம்பி விடுகிறார்கள். இதற்கு நிறைய உதாரணங்களைக் காட்டலாம். எனக்குத் தெரிந்த ஒரு பெண் பள்ளியில் முதல் மாணவியாக வந்தார். அதன்பின் அவர் தேர்வு செய்தது பொறியியலில் ஒரு படிப்பை. ஆனால் இரண்டு மாதங்கள் மட்டுமே வகுப்புக்குச் சென்ற அவர் கல்லூரியில் இருந்து நின்று விட்டார். ஆறு மாதங்கள் சும்மா இருந்து விட்டு மீண்டும் ஒரு ஆர்ட்ஸ் வகுப்பில் சேர்ந்து பெயருக்கு ஒரு பட்டத்தை வாங்கி விட்டு பதினைந்தாயிரம் சம்பளத்துக்கு வேலைக்குப் போகிறார். இன்னொரு பெண் பள்ளியில் மூன்றாவது இடம் பிடித்தார். நல்ல படிப்பு படிக்கச் சொன்னோம். அவரது தாயாரோ அதையெல்லாம் மறுத்து விட்டு பெயருக்கு (அதாவது கல்யாணப் பத்திரிகையில் போடும் அளவு கௌரவமாக(?) இருந்தால் போதும் என்று சொன்னார். (குழந்தைக்கு ஏபிசிடி சொல்லிக் கொடுக்கத் தெரிஞ்சாப் போதும் என்பது அவரது வாதம்.) ஒரு டிகிரி போதும் என்று சொன்னதால் இப்போது அந்தப் பெண் ஒரு தனியார் பெட்ரோல் பங்கில் வெறும் பத்தாயிரம் சம்பளத்துக்கு வேலை பார்க்கிறார். அதாவது இப்போது இருக்கும் படிப்புகள் பல ‘வேலைக்காகாது’ என்பதுதான் உண்மை.
பொறியியல் துறையில் படிக்கும் தோழியின் மகளுக்கு ஒரு செமஸ்டருக்கு மட்டுமே புத்தகங்கள் வழங்கப்பட்டு, வகுப்புகள் எடுக்கப்பட்டன. இரண்டாம் பருவத் தேர்வின் போது கொரோனா வந்து உலகமே வீட்டில் பதுங்கிக் கொண்ட போது ஆன்லைனில் எடுக்கப்பட்ட வகுப்புகள் அவ்வளவு சிலாக்கியமாக இல்லை. அதன் பின்னர் மூன்றரை ஆண்டுகளும் புத்தகங்கள் கொடுக்கப்படவேயில்லை. எதைப் பார்த்துப் பாடம் எடுத்தார்கள் என்பதே ஆச்சரியம்தான். இதில் ஓர் இருண்மை நகைச்சுவை என்னவென்றால் இறுதிப் பருவத் தேர்வின் போது செய்முறைத் தேர்வு வைத்திருக்கிறார்கள். அப்போது சிமெண்ட்டும் மணலும் எவ்வளவு கலக்க வேண்டும் என்று வழிகாட்டி பேராசிரியரைக் கேட்டிருக்கிறார்கள். அவருக்குத் தெரியவில்லை. ஏதேதோ உளறிக் கொட்டியிருக்கிறார். அப்புறம் அங்கிருந்த ஒரு கட்டிட மேஸ்திரியைக் கேட்டு கலவை கலக்கினார்களாம். கட்டிடப் பொறியியல் பேராசிரியருக்கு கலவை அளவு தெரியவில்லை என்பது எவ்வளவு அபத்தம். இந்த மாதிரி ஆட்களிடம் படிக்கும் மாணவர்கள் எப்படி நல்லதொரு சமுதாயத்தைக் கட்டமைக்கப் போகிறார்கள்?
இப்போதைய மத்திய அரசு புதிய கல்விக் கொள்கை கொண்டு வரப்போவதாக வயிற்றில் புளியைக் கரைத்திருக்கிறார்கள். ஏனென்றால் இப்போதைய அரசு மதச் சார்புள்ளதாகவும், பழமையை ஊக்குவிப்பதாகவும் இருப்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. அதற்கேற்ற மாதிரி அவர்கள் கொண்டுவரும் கல்விக் கொள்கைகள் சிலவற்றைப் படிக்கும் போது பயமாகத்தான் இருக்கிறது. முதலாவது நான்காம் வகுப்பிலிருந்தே மாணவர்களை வடிகட்டி எடுப்பதாகச் சொல்வது. இதனால் கற்றலில் பின்தங்கி இருக்கும் மாணவர்கள் மற்றும் கற்றல் குறைபாடுள்ள மாணவர்கள் பள்ளிக்கு வராமல் இடை நிற்கும் அபாயம் இருக்கிறது. பொருத்தமற்ற பாடங்களையும், மதச்சார்புடைய பாடங்களையும் ஊக்குவிப்பதால் உண்மையான வரலாறுகள் மறைக்கப்படும் அபாயம் உள்ளது. இரண்டாவது, பழைய கல்வி முறையால் வேலைவாய்ப்பு திறன்கள் குறைந்து விட்டது என்று சொல்லி, மாணவர்களுக்குத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி கொடுத்து அவர்களுக்கு ஆர்வம் உள்ள வேலையைச் செய்ய அனுமதி வழங்கப்போவதாகச் சொல்லியுள்ளது. வேலை செய்து சம்பாதிக்கத் தொடங்கி விட்டால் மனம் மீண்டும் படிப்பில் ஈடுபடாது என்பது உண்மையான ஒரு விஷயம். இந்தக் கொள்கை குலக்கல்வி முறையை ஊக்குவிக்கிறது என்று கல்வியாளர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். மூன்றாவதாக, தேசிய அளவிலான பள்ளிக்கல்வி தரச் சான்று ஆணையம் ஒன்று அமைக்கப்பட்டு, பள்ளிகளின் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட போவதாகச் சொல்லி இருக்கிறது. இது அரசுப் பள்ளிகளை முற்றிலும் முடங்கச் செய்துவிடும் என்கிற அச்சம் ஏற்பட்டுள்ளது.
ஆசிரியர்களின் தரம் மற்றும் தலைமை ஆசிரியர்களின் தகுதி போன்றவற்றில் எந்தச் சமரசமும் ஏற்படுத்திக் கொள்ளாது, ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை ஆசிரியர்களின் தரத்தை நிர்ணயிக்கும் தரச்சான்றுத் தேர்வுகளை அவர்கள் எதிர்கொள்ள வேண்டும் என்பது. இது மிகவும் வரவேற்கத்தக்க விஷயம். ஏனென்றால் ஆசிரியர்களுக்கு விஷயங்கள் தெரிந்தால்தான் அவர்களால் மாணவர்களுக்கு அறிவுத்திறனை ஏற்படுத்த முடியும். எனக்குத் தெரிந்த ஆசிரியர் ஒருவர் கிட்டத்தட்ட பதினைந்து வருடங்களுக்கு முன்பே தான் பாடப்புத்தகத்தைத் தாண்டி பிற புத்தகங்களைப் படிப்பதில்லை என்று பெருமை(?) பொங்கப் பகிர்ந்தார். “அப்படியானால் உங்கள் மாணவர்களுக்கு நீங்கள் எதையுமே புதிதாகக் கற்றுத் தரவில்லை. புத்தகத்தில் இருப்பதை அப்படியே சொல்லித் தர நீங்கள் எதற்கு? உங்கள் மாணவர்களை நினைத்தால் கவலையாக இருக்கிறது” என்றேன். அவர் என்னுடன் பேசுவதில்லை. அதனால் ஆசிரியர்களின் தரம் குறித்து அவ்வப்போது தேர்வுகள் வைப்பது அவசியம்.
மதிய உணவு திட்டத்திலிருந்து ஆசிரியர்களை விடுவித்து விட்டு அந்தப் பொறுப்பை தனியாரிடம் ஒப்படைக்க மத்திய அரசு முயற்சி செய்கிறது. இதன் மூலம் அரசு கொண்டு வந்த நலத்திட்டம் தாரைவார்க்கப்பட்டு வியாபார மயமாகப் போகும் விபத்து உண்டு. தனியார் மயமாகும் போது அங்கு குழந்தைகள் நலன் கருத்தில் கொள்ளப்படாமல் போகும் ஆபத்தும் ஏற்படலாம்.
இந்தியக் கலாச்சாரக் கூறுகளை இன்றைய தலைமுறை மறந்துவிட்டது. அதனால் அவற்றைக் கற்பிக்கும் பொருட்டு சமஸ்கிருதம் ஒரு பாடப்பிரிவாக வைக்கப்பட உள்ளது. இது ஓர் அப்பட்டமான மதச் சார்புள்ள விஷயமாகப் பார்க்கப்படுகிறது. இந்தியா போன்ற மதசார்பற்ற நாட்டில் இதுபோல ஒரு மதத்திற்கு மட்டும் ஆதரவாகக் கல்விக் கொள்கை கொண்டு வரும்போது, அது சிறுபான்மை இன மக்களைப் பெரிதும் பாதிக்கிறது என்பதை அரசு கவனத்தில் கொள்ள மறுக்கிறது. அடுத்து, கோத்தாரி குழு கல்வியைச் சேவை என்றழைத்தது. ஆனால், மத்திய அரசு கல்வியை முதலீடு என்கிறது. கல்வி முற்றிலும் வியாபாரமயமாக்கப்படப் போகிறது என்பதற்கு இதைவிடத் தெளிவான சான்று தேவையில்லை.
தனியார் பல்கலைக்கழகங்கள் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுடன் இணைந்து இங்கு கல்வி சேவை (?) நடத்தலாம் என்றும் இந்தப் புதிய கல்விக் கொள்கை குழு முன்மொழிந்திருக்கிறது. இதனால் கல்வி அப்பட்டமான வியாபாரப் பொருளாகிப் போகும்,
இன்றைய காலகட்டத்தில் அவசரமான, அவசியமான ஒரு கல்வித் தேவைக்கு நாம் ஆளாகியிருக்கிறோம். இப்போது வெறும் மதிப்பெண் இயந்திரங்களை மட்டுமே உருவாக்கி வரும் கல்விமுறையை மாற்றி, வாழ்க்கைக் கல்வியையும் கற்றுணரும் வகையில் கல்விக் கொள்கை மாற்றியமைக்கப்பட வேண்டும். இதனால் தேர்ச்சி பெறாமல் போனால் தற்கொலை செய்யும் மாணவர்கள் எண்ணிக்கையை நாம் கணிசமாகக் குறைக்கலாம்.
இந்தியா சுதந்திரம் அடைந்து 77 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் இன்னும் ஆங்கிலேயர் கொண்டுவந்த பழைய கல்வி முறையே பின்பற்றிக் கொண்டிருக்காமல், இன்றைய தேவைக்கும் நாட்டின் வளர்ச்சிக்கும் ஏற்ப புதிய கல்விக் கொள்கையை எந்தவித சமரசமும் இன்றி அனைவரின் கருத்துகளையும் கேட்டு உடனடியாகக் கொண்டுவர வேண்டியது மிக அத்தியாவசியமான தேவை.
படைப்பாளர்:
கனலி என்கிற சுப்பு
‘தேஜஸ்’ என்ற பெயரில் பிரதிலிபி தளத்தில் கதைகள் எழுதி வருகிறார். சர்ச்சைக்குரிய கருத்துகளை எழுதவே கனலி என்ற புனைபெயரைப் பயன்படுத்துகிறார். ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய கட்டுரைகள், ‘பெருங்காமப் பெண்களுக்கு இங்கே இடமிருக்கிறதா?’ , ‘அவள் அவன் மேக்கப்’ , ’இளமை திரும்புதே’ ஆகிய நூல்களாக வெளிவந்திருக்கின்றன.