பாலின சமத்துவம் கொண்ட சமூகம் என்பது என்ன?
சம உரிமைகள் மற்றும் சம வாய்ப்புகள் கொண்ட சமூகம் என்பதே பாலின சமத்துவம்.
பல நூறு வருட பெண்ணிய போராட்டங்களின் வழியே பெண்கள் சட்டரீதியாக சம உரிமைகள் பெற்றனர், பெற்றுக் கொண்டிருக்கின்றனர். ஆனால் சம வாய்ப்புகளும் சம நிலையும் பெண்கள் பெற்றால் மட்டுமே சம உரிமைகள் தரும் பலன்களை முழுமையாக அனுபவிக்க முடியும். காலம்காலமாக சமூகத்தில் நிலைக்கும் பால்நிலை வகிபாகங்கள், பெண்களின் முன்னேற்றத்துக்கும் மேம்பாட்டுக்கும் தடைகளாக இருக்கின்றன. எடுத்துக்காட்டாக பெண்கள் கல்வி கற்கவோ வேலைக்கு சென்று ஊதியம் பெறவோ உரிமைகளைப் பெற்றுள்ளனர். ஆனால் இவற்றை பெண்கள் சுதந்திரமாகச் செயல்படுத்த முடிகிறதா? குறிப்பாக தமிழ் சமூகத்தின் வீடுகளில் இது சாத்தியமா?
பால்நிலை வகிபாகங்கள் (Gender roles) என்பது சமமான வேலைப்பகிர்வினைக் கொண்டு கட்டமைக்கப்பட்டதல்ல. அவை பாரபட்சமாக பெண்கள் மேல் சுமத்தப்பட்டிருக்கின்றன. புலம் பெயர் சமூகத்திலும் சமூக மறு உற்பத்தி (Social Reproduction) என்பது பெண்கள் மீதே சுமத்தப்பட்டு வருகிறது.
‘சமூக மறு உற்பத்தி’ என்பது கடல் போன்ற ஒரு விடயப்பரப்பு. அதனை எதிர் வரும் அத்தியாயங்களில் ஆழமாகப் பேசுவோம்.
திருமணப் பேச்சு என்று வந்தவுடன், மணமகளை மட்டுமே நோக்கி பாயும் கேள்விகள் நம் தமிழ்ச் சமூகத்தில் உண்டு.
1. திருமணம் செய்யும் பெண் பட்டப்படிப்பு முடித்துள்ளரா?
மேலும் படிப்பதற்கான திட்டங்கள் வைத்துள்ளாரா?
2. வேலை செய்கிறாரா ? திருமணத்தின் பின் வேலை செய்வதை தொடருவாரா இல்லையா?
3. குழந்தை பிறந்த பின் வீட்டோடு இருப்பாரா ?
4. சமூகப்பணி மற்றும் கலைகள் பயிலுதல் (இசை, நடனம், எழுத்து போன்றவை) இவற்றையெல்லாம் புறந்தள்ளி, வீட்டையும் கணவனையும் குழந்தைகளையும் ‘பொறுப்பாக’ கவனித்து கொள்வாரா ?
இன்றும் பல குடும்பங்களில் திருமணத்திற்குப் பிறகு பெண்கள் கல்வி கற்பதை அவ்வளவாக விரும்புவதில்லை. கணவனைவிட மனைவி கல்வித்தகைமை கூடியவராக வந்து விடுவார் என்ற ‘ஈகோ’ பிரச்னை ஒரு பக்கம் இருக்க, கல்வியிலே நாட்டம் கொண்டால் எதிர்கால மனைவி தன்னையும் வீட்டையும் சரி வர ‘பராமரிக்க’ மாட்டார் என்ற சுயநல லாப நட்ட கணக்குகளும் இதற்கு காரணம். எங்கே வீட்டு வேலைகள் தன் தலையில் விழுந்து விடுமோ என்ற பயம் வேறு ஆண்களை ஆட்கொள்கிறது. அதனாலேயே மேற்சொன்ன கேள்விகள் பெண்களை நோக்கிப் பாய்கின்றன.
என் சொந்த அனுபவத்தில் நான் சந்தித்த வேடிக்கை வினாக்கள்:
‘ஏன் இதற்கு முன்பாக படித்து முடிக்கவில்லை?’
‘அரசியலில் ஏன் பட்டப்படிப்பு?’
‘கல்யாண உறவை எப்படி கவனித்து கொள்ள முடியும்?’
ஒவ்வொருவரின் வாழ்க்கைப் பயணமும் வேறுபட்டது, ஒருவர் இருபதுகளில் முதுகலைமாணிப்பட்டம் பெற்றிருக்கலாம்; இன்னொருவர் நாற்பதுகளில்கூட பெறலாம்.
மனிதர்களின் பொருளாதார சூழல், உடல்நிலை, வதிவிட வசதிகள், குடும்ப நிலவரம், வாழ்வில் சந்திக்கும் உறவுகள் என்று பல காரணிகள் அவர்களின் வாழ்க்கை சாதனைகளையும் முன்னேற்றங்களையும் தீர்மானிக்கின்றன. இந்த அடிப்படை புரிதலை உள்வாங்காமலே பல திருமணப் பேச்சுகள் அரங்கேறுகின்றன. அடி வயிற்றிலிருந்து பொங்கும் ஒரேயொரு கேள்வி எனக்கு – கல்வி கற்கும் சம சட்ட உரிமைகளை எல்லோரும் பெற்ற இச்சமூகத்திலே, பெண்ணாக பிறந்தவள் மட்டும் திருமணத்தின் பின் படிப்பதற்கு ஏன் அனுமதி கேட்க வேண்டும்?
குடும்பம் என்ற கட்டமைப்பில் சகல வேலைகளையும் பொறுப்புகளையும் பெண்கள் மேல் சுமத்தி, அவர்கள் கல்வி கற்கவும் சம்பாதிக்கவும் கலைகள் பயிலவும் இன்னொருவரிடம் பிச்சை கேட்கும் அசிங்கங்கள் நாகரீக சமூகத்தில் தேவையில்லை.
எந்தத் துறையைத் தேர்ந்தெடுத்து படிக்க வேண்டும் அல்லது என்ன வேலை செய்ய வேண்டும் என்பதைக்கூட மாப்பிள்ளைமார் முடிவு செய்வது வேடிக்கையான விஷயம்! கல்வியின் கடவுளாக சரசுவதி எனும் பெண் தெய்வத்தை கொண்டுள்ள இந்து சமய சமூகம்கூட பெண்களுக்கு நியாயமான கல்வி/வேலைக்கான முழு விடுதலையைப் பறித்து வைத்துள்ளது பெரும் நகைமுரண்.
சில ஆண்டுகளுக்கு முன், நானும் என் பழைய தோழியும் ஒரே அமைப்பில் சமூகப்பணியாற்றிக்கொண்டு இருந்தோம். தனது நண்பர் ஒருவரை எனக்கு மாப்பிள்ளை பார்க்கலாம் என ஆலோசனை சொன்னார். அவள் அறிமுகப்படுத்திய நண்பரும் என்னை உணவகம் ஒன்றில் இரவு உணவுக்கு சந்தித்தார். அவருக்கு எங்களின் சமூகப்பணியும் அதன்மேல் உள்ள ஆர்வமும் நன்றாகவே தெரியும். அந்நேரம் நான்கு அமைப்புகளில் தொண்டராக நான் பணிபுரிந்து வந்திருந்தேன். முதல் சந்திப்பிலேயே திருமணத்துக்குப் பின் நான் எந்த அமைப்புகளில் வேலை செய்ய வேண்டும், எதை விட்டு விலக வேண்டும் என்று எனக்குப் பாடம் எடுக்கத் தொடங்கினார். ஆக மொத்தத்தில் சமூகப்பணியை குறைத்துக் கொள்ளவேண்டும். அந்த முடிவையும் அவர் கையில் எடுத்துக் கொண்டார், அதுவும் சந்தித்த முதல் நாளே! அக்கணமே முடிவெடுத்தேன் அவர் என் எனக்கானவர் இல்லை என்று. நான் அடக்கமில்லாத, அதிகமாக உரிமைகளைக் கோரும் பெண் என்று என் பழைய தோழியிடம் அவர் குறைபட்டுக் கொண்டாராம்.
ஏற்கனவே உறவு முறிவுகள் இருந்ததும் ஏறத்தாழ 30 வயதாகியும் திருமணம் ஆகவில்லை என்பதும், அதனால் மாப்பிள்ளை சொல்வதற்கு இணங்கிச் செல்லவேண்டும் என்று வேறொரு அரசியல் இதில் விளையாடாமலும் இல்லை. இதையொத்த எண்ணங்களை என் பழைய தோழிகளும் கொண்டிருந்தனர். ஆணாதிக்க சிந்தனை என்பது பெண்களிலும் உண்டு. அவற்றுக்கு அவர்களே காரணமாக இல்லை, அவர்களை நாள்தோறும் வளர்த்த சமூகம் ஆணாதிக்கக் கோட்பாட்டை ஊட்டி வளர்த்துள்ளது.
சமூகப்பணி, மற்றும் செயற்பாட்டு களங்களில் ஈடுபடுதல் (Being an activist) என்பதெல்லாம் ‘குடும்பத்துக்கு’ ஒவ்வாத விடயங்கள் என்று என் முன்னாள் துணை கூறியதும் நினைவுக்கு வருகிறது. திருமணத்தின்போது படிப்பை தள்ளிப் போடவேண்டும் என்றும், குழந்தை பிறந்த பின்னரே படிப்பைப் பற்றி யோசிக்கலாம் என திருமணத்துக்குப் பின்னும் நிபந்தனைகள் போடப்பட்டன. இத்தனைக்கும் திருமணத்துக்கு முன்பு நாங்கள் காதலித்தபோது, படிப்பிற்கு எந்த தடையும் அவர் சொல்லவில்லை. திருமணத்துக்குப் பின் வேறு வழியில்லை, கணவன் பேச்சை கேட்டுத்தான் ஆக வேண்டும் என்ற மமதை வேறு!
இதில் பல அம்சங்கள் பின்னிப் பிணைந்துள்ளன. மேல் கல்வி, சமூக மற்றும் செயற்பாட்டு பணி என்பது நல்ல விழிப்புணர்வையும் ஒடுக்குமுறைகளை எதிர்க்கும் பண்புகளையும் வளர்த்துவிடும். நண்பர்களும் சுற்றமும் பெருகி, ஆதரவு அமைப்பை (support system) விருத்தி பண்ணும். இவையனைத்தும் கணவன், மனைவியை ‘கட்டுப்படுத்துவதை’ எதிர்க்கும், கேள்விக்குள்ளாக்கும். கணவன் மனைவிக்கு சம அந்தஸ்தை விரும்பியோ விரும்பாமலோ வழங்க நேரிடும். வீட்டு வேலைகளையும் குடும்ப பொறுப்புகளையும் சமமாகப் பங்கிட வைக்கும். இந்த மாற்றங்களை கணவர்மார் அவ்வளவாக விரும்புவதில்லை. மனைவி எந்நேரமும் தன்னையும் தன் குடும்பத்தையும் பற்றி மட்டுமே சிந்திக்க வேண்டும், 24 மணிநேரமும் அதற்காகவே அர்ப்பணிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பே ஆண்களிடையே மேலோங்கியுள்ளது. மனைவியே எப்போதும் விட்டுக் கொடுத்தும் அனுசரித்தும் செல்ல வேண்டும் என்று வீட்டுச் சூழல் மட்டுமில்லாமல், தமிழ் சினிமாவும் சில எழுத்தாளர்களின் கதை புத்தகங்களும் இதிகாசங்களும் புராணங்களும், கோயில் முதல் தேவாலய போதனைகளும் சொல்லித் தந்து விடுகின்றன. காலத்துக்கும் உதவாத இந்த போதனைகள் நம் ஆண்களின் சிந்தனையை சிதைத்து விடுகின்றன.
ஒரு ஆணுக்கு திருமணத்திற்கு முன்னும் பின்னும் இருக்கும் அதே சுதந்திரம் பெண்ணுக்கும் உண்டு. அதை நாம் கேட்டு வாங்க வேண்டியதில்லை. கல்வியோ வேலையோ சமூகப்பணியோ யாரிடமும் அனுமதி வாங்க தேவையில்லை, எந்த குற்ற உணர்ச்சியோ பயமோ இல்லாமல் வாழ்க்கை இலட்சியங்களை தெளிவாகக் கூறிவிட்டு செயற்படுத்துங்கள். கல்வியும் சம்பாத்தியமும் என்றும் கைவிடாது, வாழ்க்கை இறுதிவரை கைகொடுப்பது இவைதான், உறவினர்கள் அல்ல.
படைப்பாளர்
அஞ்சனா
பத்திரிகைத் துறையில் பட்டயப் படிப்பு முடித்து ஊடகவியலாளராக இலங்கையிலும், இங்கிலாந்து சட்டத் துறையிலும் பணியாற்றியுள்ளார். தற்போது கணக்கியல் துறையில் பணியாற்றிவரும் இவர், MSc. Public Policy பயின்று வருகிறார். லண்டனில் புத்தக விமர்சனங்கள் மற்றும் பெண்ணிய செயற்பாடுகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார்.