திருமணத்துக்கு முன்பு உடலுறவு கொண்டால் கருத்தடை சாதனங்களை உபயோகித்து, பாதுகாப்பாக இருங்கள் என்று திரைக் கலைஞர் குஷ்பு சொன்னதற்குத் துடைப்பக் கட்டையோடு சென்று எதிர்ப்பு தெரிவித்த சமூகம் நம்முடையது. திருமணத்திற்குப் பின்பு ஒரு பெண், கணவன் அல்லாத வேறோர் ஆணுடன் உடலுறவு வைத்துக் கொள்ளுதல் கிரிமினல் குற்றம் இல்லை என நீதிமன்றம் சொல்லும் அளவுக்கு இன்று மாறியுள்ளது. நூறாண்டுகளுக்கு முந்தைய ஐபிசி பிரிவு 497 எனும் இந்தச் சட்டம் சில வருடம் முன்பு நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டது. திருமணத்துக்கு முந்தைய உடலுறவு, திருமணம், காதல் குறித்து ஒட்டுமொத்த இந்தியச் சமூகத்தின் பார்வை மாறி இருக்கிறது. மேற்கத்திய தாக்கமும் தனி மனித உரிமைகள் பற்றிய விழிப்புணர்வும் இதற்குக் காராணமாக உள்ளன. மேற்குலக நாடுகளின் கலாசாராமாக அறியப்படும் டேட்டிங் இந்தியாவிலும் வேகமாக வளர்கிறது. நீங்க நம்பவில்லை என்றாலும் அதான் நிஜம். கூடப் படிப்பவர்கள், உடன் வேலை செய்பவர்கள், நண்பரின் நண்பர் என்று அறிமுகமாகிப் பழகுவது மட்டுமின்றி இணையத் தளங்கள் மூலம் அறிமுகம் இல்லாதவர்களைச் சந்தித்துப் பழகுவதும் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது. ஒரு பெண் தொழில் முனைவராக பெண்களின் கட்டுப்பாட்டில் டேட்டிங் தேர்வுகள் இருக்க வேண்டும் என நினைத்த விட்னியைத் தெரியுமா? அதற்கு முன் டேட்டிங் வரலாற்றையும் கொஞ்சம் பார்த்துவிடுவோம்.
ஆசிய நாடுகளைப் போல பெற்றோர் சம்மதத்துடன் துணைக்கு ஒரு முதிய பெண்ணையும் அழைத்துக் கொண்டு வெளியே டின்னர் சாப்பிடச் சென்ற காலம் மேற்குலக நாடுகளிலும் இருந்தது. பெண்கள் வெளியே வருவதற்கு வாய்ப்பளித்த உலகப் போர் இந்த வழக்கத்தை மாற்றியது. 1896ஆம் ஆண்டில்தான் அமெரிக்க எழுத்தாளர் ஒருவர் முதன் முதலில் ‘டேட்டிங்’ என்கிற சாெல்லைப் பயன்படுத்தினார். குடும்பம், சொத்து, கல்யாணம். இம்மூன்றும் இணைந்தே இருந்த காலத்தில் காதலுக்கு அவ்வளவு முக்கியத்துவம் இல்லை. ஆணும் பெண்ணும் தனித் தனி நபராக, அவரவர் சம்பாத்தியம் அவரவர் உரிமை எனும் நிலை வளர வளர காதல் மிக அவசியமான ஒன்றாக மாறியது.
ஆணும் பெண்ணும் பேசிப் பழகும் சந்தர்ப்பங்களைக் காலந்தோறும் மக்கள் தேடிக் கொண்டே இருக்கிறார்கள். நூலகம், தட்டச்சு நிலையம், கோயில், சந்தை, நம்மூர் டீக்கடை, மேற்கத்திய காப்பிக்கடை என இடம் வேறுபடும். நோக்கம் ஒன்றுதான். தினசரிப் பத்திரிகைகள் அறிமுகமான காலத்தில் அதில் விளம்பரம் கொடுக்கும் வழக்கம்கூட இருந்தது. புதுத் தொழில்நுட்பம் எது வந்தாலும் ஏதோ ஒரு விதத்தில் ஆண் – பெண் உறவு முக்கிய இலக்காக மாறிவிடும். தொலைபேசி முதல் இணையம் வரை எந்தத் தொழில்நுட்பமும் அதற்கு விதிவிலக்கல்ல. அதிநவீன செயற்கை நுண்ணறிவுத் துறையும் இதற்கென பல கோடிகளைக் கொட்டி ஆய்வுகள் மேற்கொள்கிறது.
இணையம் அறிமுகமான1990களில் ஏஓஎல் சாட் ரூம்களிலும், பத்திரிகை விளம்பரத்தின் இணைய வடிவமான க்ரைக்லிஸ்டிலும் காதல் வளர்த்தார்கள். மைஸ்பேஸ் சமூக வலைத்தளத்தின் புல்லட்டீன் அறிவிப்பு பலகைகளும் இதற்கே பயன்பட்டது. 1995 ஆம் ஆண்டு க்ரமென் ஆரம்பித்த மேட்ச் தளம் காதலிக்க இணையர்களைத் தேடுவதற்கென்றே பிரத்தியேகமாக உருவானது. இதன் வெற்றியால் இஹார்மனி, ஓகேக்யூபிட் போன்று பல தளங்கள் அறிமுகமாயின. 2012 ஆம் ஆண்டு அறிமுகமான டிண்டர் மற்ற எல்லாச் செயலிகளைவிட அதிகப் பாய்ச்சல் காட்டியது. திறன்பேசித் திரையில் தெரியும் முகம் பிடித்திருந்தால் வலதுபுறமும் பிடிக்கவில்லை என்றால் இடதுபுறமும் தள்ளும் ஸ்வைப் வசதி அனைவருக்கும் பிடித்துப்போனது.
பயனர் உள்நுழைந்தவுடன் உருவாக்கும் சுயவிவரக் குறிப்புகளின் அடிப்படையில் அதே மாதிரி விஷயங்களில் ஆர்வம் உள்ளவர்களைப் பரிந்துரைக்கும் இந்தச் செயலிகள். சுயவிவரக் குறிப்பு என்பது உயரம், நிறம், பிடித்தது, பிடிக்காதது, பாலினம், பாலியல் தேர்வு என நீண்ட பட்டியல். ஒரு பயனர் தனக்குப் பிடித்த இன்னொரு நபரின் படத்தை வலதுபுறம் ஸ்வைப் செய்து அந்த நபரும் இவர் படத்தை வலதுபுறம் ஸ்வைப் செய்தால் போதும். இருவருக்கும் பிடித்திருப்பதால் உரையாடலைத் தொடங்க முடியும். ஒருவருக்குப் பிடித்து இன்னொருவருக்குப் பிடிக்காமல் இடதுபுறம் ஸ்வைப் செய்தால் உரையாடலைத் தொடங்க முடியாது. இன்னாருக்கு உங்களைப் பிடித்திருக்கிறதாம் எனத் தகவல் மட்டும் போய்ச் சேரும். சில செயலிகள் பொருத்தமான பலரின் விவரங்களை மொத்தமாகக் காட்டும். படித்துப் பார்த்து விருப்பம் தெரிவிக்கலாம்.
சாதி, மத அடையாளங்கள் அடிப்படையில் தனித்தனிப் பிரிவாக இருக்கும் மேட்ரிமோனி வலைத்தளங்கள்கூட இந்தியாவில் டேட்டிங் தளங்கள் போலப் பயன்படுகின்றன. திருமணத்துக்குத் தயாராக இருக்கும், வேலை, சம்பளம் உள்ளிட்ட அனைத்தும் பொருந்தி வரும் நபரை மேட்ரிமோனி தளத்தில் தேர்ந்தெடுத்து பேசிப் பழகி டேட்டிங் செய்கிறார்கள். டேட்டிங்கிற்கு என்றே இருக்கும் டிண்டர் (Tinder) செயலி உலகளவில் பிரபலமானது. இந்தியாவிலும் முதலில் அறிமுகமானது டிண்டர் செயலிதான். சில குறிப்பிட்ட வசதிகள் பணம் செலுத்திப் பெறும் வகையிலானது. பதிவு செய்துகொள்வது இலவசம். போலி உறுப்பினர்கள் அதிகம் இருப்பதுதான் இதன் சிக்கல். பம்பிள் (Bumble) டேட்டிங் செயலியின் சிறப்புப் பெண்களுக்கு அளிக்கும் முக்கியத்துவம். எனவேதான் இந்தியாவில் டிண்டரைவிட பம்பிள் செயலி தற்போது வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது. காதல் இல்லாத நட்பு, தொழில்முறை நட்பு என்று மேலும் சில சிறப்புகளும் இதில் உண்டு.
ஹாப்பன் (Happn) செயலியின் சிறப்பம்சம் வாழ்க்கையில் நாம் சந்திக்கும் நபர்கள், கடந்து வந்திருக்கும் நபர்களை மேட்ச் செய்வதில் கவனம் செலுத்துகிறது. நமக்கானவரை சந்தித்தும் பழகாமல் கடந்து வந்திருந்தால் இந்தச் செயலி நமக்கு உதவும். அய்லே (Aisle) செயலி நீண்ட கால சீரியஸ் ரிலேஷன்ஷிப்களுக்கு ஏற்றது. ஹிஞ்ச் (Hinge) செயலி டேட்டிங்கையும் சமூக வலைத்தள கான்செப்டையும் சேர்த்து செயல்படுகிறது. ஒளிப்படங்களுக்கு விருப்பக்குறியிடும் நபர்களில் இருந்து நமக்குப் பிடித்தவரைத் தேர்ந்தெடுத்துப் பேசிப் பழகலாம். மூன்றில் இரண்டு பால் புதுமையினர் டேட்டிங் செயலி மூலமே தன் இணையரைத் தேர்ந்தெடுக்கிறார்கள். இந்தியன்க்யூபிட், க்வாக்-க்வாக், படூ, மேட்ச், எலிட்சிங்கிள்ஸ் எனப் பல டேட்டிங் தளங்கள் உள்ளன.
முன்பின் அறிமுகம் இல்லாதவர்களுடன் பழகுவது ஆபத்தில்லயா? 2022 ஆம் வருடம் தன் இணையர் ஷ்ரத்தாவை 35 துண்டுகளாக வெட்டிக் குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருந்த அஃப்தாபை எளிதில் மறக்க முடியாது. இவர்கள் இருவரும் டேட்டிங் செயலி மூலம் அறிமுகமானவர்கள்தாம். ஏற்கெனவே தெரிந்தவர்களைக் காதலித்து நடக்கும் கல்யாணத்திலும் பெற்றோர் பார்த்து வைத்த கல்யாணத்திலும்கூடக் கொலைகள் நடக்கின்றன. அதீத வன்முறை பெரும்பாலும் திடீரென ஒரு நாளில் நடக்காது. சிறிதாகத் தொடங்கி பெரிதாக வளர்வதை உணர்ந்து அந்த உறவில் இருந்து வெளியில் வருவது அவசியம். சந்தேகம் உண்டாக்கும் நடவடிக்கைகளை (red flags) அனைவருமே அடையாளம் காண்கிறோம். அசட்டையாக அதைப் புறந்தள்ளுவதுதான் சிக்கலே. இணைய நட்பின் வழி உருவாகும் உறவுகள் ஆபத்தானவை என்பது முழுப்பொய். பாதுகாப்பானவை என்று சொல்லவில்லை; எந்த வழியில் ஆரம்பிக்கும் உறவுகளும் பாதுகாப்பானதில்லை என்பதே உண்மை. டேட்டிங் தளங்களும் இதற்கு விதிவிலக்கல்ல.
ஆணை மையமாக வைத்து இயங்கும் சமூகத்தில் எல்லா நுகர்வுப் பொருள்களும் ஆணை மனதில் வைத்தே தயாராகின்றன. பெண்ணுக்கென்றே பிரத்யேகமான பொருள் என்றாலும் ஆணைக் கவரத்தான் பெண்ணுக்கு அதெல்லாம் தேவை என நம்புகிறது சமூகம். பெண்ணை மையமாக வைத்து இயங்கும் டேட்டிங் தளமாக பம்பிள் செயலியை வடிவமைத்தன் மூலம் விட்னி வுல்ப் ஹெர்ட் (Whitney Wolfe Herd) எதிர்காலத்தில் இத்துறை எந்தப் பக்கம் செல்ல வேண்டும் என வழிகாட்டியிருக்கிறார். இளவயதில் மோசமான பாய்ஃப்ரெண்ட் மூலம் ஏற்பட்ட அனுபவங்கள் அடிப்படைக் காரணம். படித்து வளர்ந்து டிண்டர் நிறுவனத்தில் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது. மார்க்கெட்டிங் தலைவராக டிண்டர் நிறுவனத்தின் வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றினார். வேலையோடு காதலும் கலந்து கொஞ்சம் பிரச்னையாகிவிட்டது. டிண்டர் நிறுவனத்தில் உடன் பணிபுரிந்தவர்கள் மீது தொடர்ந்த பாலியல் தொந்தரவு தொடர்பான வழக்கில் நஷ்ட ஈடு பெற்றுக் கொண்டு எப்போதும் டிண்டர் அனுபவங்களைப் பற்றிப் பேசுவதில்லை என்று கையெழுத்திட்டு விலகிவந்தார். பேசவில்லை என்றாலும் அந்த அனுபவங்கள் காணாமல் போவதில்லை. தன் மோசமான அனுபவங்களில் கற்ற பாடத்தினை முதன்மையாக வைத்துப் பெண்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பம்பிள் செயலியை உருவாக்கினார்.
பாதுகாப்பு என்பதைவிட கன்ட்ரோல் பெண் பயனர்கள் கையில் இருக்கிறது என்பது இன்னும் பொருத்தமானது. பெண்தான் உரையாடலைத் தொடங்க முடியும். அன்மேட்ச் செய்வதும் ப்ளாக் செய்வதும் எளிது. அந்த நபரின் நடத்தை பற்றி ரிப்போர்ட் செய்யும் வசதியும் உள்ளது. அரட்டைப் பெட்டியில் மட்டுமின்றி தளத்துக்கு வெளியே தொலைபேசியிலோ நேரில் சந்தித்தபோதோ மோசமான அனுபவம் கிடைத்திருந்தாலும் அதைப் பதிவு செய்யமுடியும். அந்த நபர் பம்பிள் தளத்தின் மூலம் உங்களைத் தொடர்புகொள்வது முற்றிலும் தடை செய்யப்படும். பெண்களுக்கு மட்டுமின்றி அனைவரும் பாதுகாப்பாக உணரும்படியான விதிகள் உள்ளன. ஆபாசமான படம் அனுப்பப்பட்டிருந்தால் அது ப்ளர் செய்யபட்டு பயனருக்கு எச்சரிக்கை செய்யப்படும். பயனர் விருப்பம் இருந்தால் மட்டும் திறந்து பார்க்கலாம். புரஃபைல் ஒளிப்படம், சுயவிவரம் இரண்டும் சரிபார்க்கப்படுகிறது. ஆபாசம், வெறுப்பு, குழந்தைகள் உருவம் போன்றவையும் வெறுப்புப் பேச்சு, வன்முறை, போதை உள்ளிட்டவையும் கண்காணிக்கப்பட்டு நீக்கப்படுகின்றன. போலி புரஃபைல்கள் அடையாளம் கண்டு அழிக்கப்படுகின்றன. இந்தப் பாதுகாப்பு அம்சங்கள் வரவேற்பைப் பெறுவதால் மற்ற நிறுவனங்களும் இவற்றில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளன.
இத்தனை பில்லினியர் நிறுவனர்கள் மத்தியில் தங்களுடைய தளத்தின் நடத்தை தன்னுடைய பொறுப்பு என ஒரு பெண் மட்டும் எண்ணுவது ஏன் என்கிற டைம் இதழின் கேள்விக்கு “அது தற்செயலானதில்லை” என்று பதிலளிக்கிறார் விட்னி. முந்தைய டிண்டர் நிறுவனப் பணியின் குறைபாடுகள், ட்ரம்புக்கு நன்கொடை அளித்தது உள்ளிட்ட சில குற்றச்சாட்டுகளும் இவர் மீது உண்டு. நிரல் எழுதினாரா, முதலீடு திரட்டினாரா, ஆரம்பக் காலப் பணியாளர்களுக்குப் பங்கு வழங்கினாரா என அடுக்கடுக்காகக் கேள்விகள் எழுப்பி விட்னியின் சாதனைகள் ஒன்றுமில்லை என நிறுவ முயல்கிறார்கள். பெண்களை மையப்படுத்திச் சிந்திப்பதுதான் தங்கள் நிறுவனத்தின் எதிர்காலத்துக்கு நல்லது என்பதைப் பலர் உணர்ந்து கொள்ளச் செய்ததே அவர் சாதனை.
படைப்பாளர்:
இரா. கோகிலா. இளநிலை கணிப்பொறி அறிவியல் படித்தவர். சிறுவயதில் இருந்தே வாசிப்பில் ஆர்வம் உண்டு. புனைவுகளில் ஆரம்பித்த ஆர்வம் தற்போது பெரும்பாலும் பெண்ணியம், சமூகம், வரலாறு சார்ந்த அபுனைவு வகை புத்தகங்களின் பக்கம் திரும்பியிருக்கிறது. பயணம் செய்வது பிடிக்கும். கல்விசார்ந்த அரசுசாரா இயக்கங்களில் தன்னார்வலராகச் செயல்படுகிறார்