பாதாள பைரவி 1951ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம்.
விஜயா புரோடக்ஷன் தயாரிப்பு பாதாள பைரவி என்ற தலைப்புடன் திரைப்படம் தொடங்குகிறது. கதை நாகேந்திரராவ். பாட்டு வசனம் தஞ்சை ராமையாதாஸ், திரைக்கதை கே.வி. ரெட்டி, BSc (Hons ), கே. காமேஸ்வரராவ் BA.
N. T. ராமாராவ்
எஸ்.வி. ரங்கராவ்
சி.எஸ்.ஆர். ஆஞ்சநேயுலு
ரேலங்கி
பாலகிருஷ்ணா
பத்மநாபம்
பெண் நடிகர்கள்
கே. மாலதி
டி.ஜி. கமலா தேவி
ஹேமலதம்ம ராவ்
கிரிஜா
சுரபி கமலா
சிட்டி
பின்னணி பாடியவர்கள், கண்டசாலா பி லீலா, கிருஷ்ணவேணி (ஜிக்கி) எனப் போடுகிறார்கள். இந்த திரைப்படத்தில்தான் அவர் பெயர் முதன் முதலாக ஜிக்கி எனப் போடப்படுகிறது என நினைக்கிறேன்.
ஆங்கிலத்தில் Music Gandasala என்றும் தமிழிலில் சங்கீதம் ஜி. வெங்கடேஸ்வர ராவ் எனவும் போடுகிறார்கள்.
நிர்வாகிகள் நாகி ரெட்டி, சக்கரபாணி, டைரக்ஷன் Directed by KV ரெட்டி, BSc (Hons ) எனப் போடுகிறார்கள்.
இணையத்தில் இந்த திரைப்படம் குறித்து தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன. தெலுங்கில் மார்ச் மாதமே இந்தப் படம் வெளியிடப்பட்டு, பின் தமிழில் மே 17ஆம் தேதி படத்தை வெளியிட்டனர். இரு மொழிகளிலும் படம் வசூலை வாரிக் குவித்தது.
24 ஜனவரி 1952 அன்று மும்பையில் நடைபெற்ற இந்தியாவின் முதல் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட ஒரே தென்னிந்தியத் திரைப்படம் இது. இந்தியத் திரைத்துறையின் நூற்றாண்டு விழாவில் ஏப்ரல் 2013 இல், CNN-IBN தனது ‘100 சிறந்த இந்தியத் திரைப்படங்கள்’ பட்டியலில் பாதாள பைரவியைச் சேர்த்தது எனப் பல தகவல்கள் உள்ளன.
கதை என எடுத்துக் கொண்டால், fantasy உலகம் எனப்படும், கற்பனை உலகிற்கு நம்மை இழுத்துச் செல்லும் ஆற்றல் மிகுந்த கதை இது. பொதுவாகவே இந்த மாதிரி மந்திரதந்திரக் கதைகளில் எனக்குப் பெரும் ஆர்வம் கிடையாது. மிகவும் பிரபலமான திரைப்படம் என்பதால், எப்படித்தான் இருக்கிறது எனப் பார்ப்போமே என நினைத்துத் தான் பார்த்தேன். உண்மையில் சலிப்புத் தட்டாமல் நன்றாகவே இருந்தது.
தோட்டா ராமன், உஜ்ஜயினி நகரில், தனது அம்மாவுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார். ஊருக்குள் வம்பு செய்து கொண்டிருந்த அரசியின் தம்பியை இவர் அடிக்க, அரசரின் முன் நிறுத்தப்படுகிறார். அங்கு இளவரசி இந்துவைப் பார்த்த ராமன், அவரைக் காதலிக்கத் தொடங்குகிறார். அவரைப் பார்க்க அரண்மனை அந்தப்புரம் வரை வருகிறார். காதலிக்கும்படி செய்தும் விடுகிறார்.
ஆனால் காவலர்களிடம் மாட்டிக் கொள்கிறார். அரசர், இவரின் தலையைக் கொய்து கொல்ல ஆணையிடுகிறார். இளவரசி, ராமனைத் தப்பிக்க வைக்க முயலும்போது, அரசரும் வந்து விடுகிறார். இதனால் ராமனைக் கொல்லாமல், “உன் நிலையை உயர்த்தினால் வா; இல்லையென்றால் வராதே,” என அரசர் ராமனிடம் சொல்லி அனுப்புகிறார்.
நேபாளத்தில் மந்திரவாதி ஒருவன் இருக்கிறான். நரபலி அளித்தால், அவனுக்கு, ஒரு சிறிய சிலை கிடைக்கும். அதை வைத்து வேண்டினால், பாதாள பைரவி தோன்றி, அவன் நினைத்ததை எல்லாம் செய்யும். அத்தெய்வத்தின் கோவிலினுள் நுழையவும், நரபலி கொடுக்கவும் ஒருவர் தேவை. அவன் தனது தொலைநோக்கி மூலம் பார்க்கும் போது ராமன், இளவரசியை அந்தப்புரத்தில் சென்று பார்க்கும் எண்ணத்தில் கயிறு வழியாக மதில் சுவரைக் கடந்து கொண்டிருக்கிறார். இவன்தான் தனக்குச் சரியான ஆள் என ராமனைத் தேடி மந்திரவாதி அவனுடைய உதவியாளன் டிங்கிரியுடன், நேபாளத்திலிருந்து வருகிறான்.
மந்திரவாதி, ஒரு மரக்குடுவையில் கைவிட்டு, சுற்றி இருப்பவர்கள் அனைவரும் கேட்கும் பொருட்களை எல்லாம் எடுத்துக் கொடுக்கிறான். தானும் எல்லாவற்றையும் பெறலாம் என எண்ணிய ராமன், அந்த குடுவையைப் பிடுங்கிக் கொண்டு ஓடுகிறார். ஆனால் அவரால் ஒன்றும் பெறமுடியவில்லை. மந்திரவாதி, தன் மந்திரத்தால்தான் அதை வரவழைத்ததாகவும், இந்தக் குடுவையில் எந்த சக்தியும் இல்லை எனவும் சொல்கிறான். இளவரசியைத் திருமணம் செய்யும் வழியைச் சொல்லித் தருவதாகச் சொல்லி ராமனை அழைத்துச் செல்கிறான்.
ராமனும் சாகசங்கள் செய்து கோவிலை அடைகிறார். மந்திரவாதி, ராமனை அருகில் இருக்கும் குளத்தில் குளித்துவிட்டு வருமாறு சொல்கிறான். ராமன் குளிக்கும்போது, ஒரு முதலை அவரைக் கொல்ல முயல்கிறது. ராமன் முதலையைக் கொல்ல, அது ஒரு பெண்ணாக மாறுகிறது. தனக்குச் சாபவிமோசனம் கிடைத்ததாகச் சொல்லும் அந்தப் பெண், மந்திரவாதியைப் பற்றிய உண்மையைச் சொல்கிறார். உண்மையை உணர்ந்த ராமன், மந்திரவாதியைப் பலிகொடுத்து, பாதாள பைரவியின் சிலையைப் பெற்று நாடு திரும்புகிறார். பணக்காரர் ஆகிறார். அரசரிடம் திருமணத்துக்குச் சம்மதமும் பெறுகிறார்.
இதையெல்லாம் அறிந்த மந்திரவாதியின் உதவியாளர் டிங்கிரி, தொலைநோக்கி மூலம் மந்திரவாதி இறந்து கிடைப்பதைப் பார்க்கிறார். தன்னிடம் இருந்த சஞ்சீவி வேர் மூலம், மந்திரவாதியின் தலையை ஒட்டவைத்து, உயிர்ப்பித்து, நடந்தவற்றை விவரிக்கிறார். மந்திரவாதி உஜ்ஜயினியை நோக்கிச் செல்கிறான்.
வழியில், இந்துவின் தாய்மாமா, இந்து கிடைக்காததால் தற்கொலை செய்ய முயல்வதை இருவரும் பார்க்கிறார்கள். ராமனிடம் இருக்கும் அந்த பாதாள பைரவி சிலையை எடுத்து வந்து தந்தால், இந்துவை அவனுக்கு மணமுடித்து வைப்பதாக மந்திரவாதி அவரிடம் கூறுகின்றான். தாய்மாமா, சிலையைக் கொண்டு வந்து கொடுக்கிறான். வாங்கிய மந்திரவாதி, பாதாள பைரவியை அழைத்துக்கொண்டு இந்துவுடன் தன் இருப்பிடத்திற்குச் செல்கிறான்.
இந்துவின் தாய்மாமா, உண்மையைச் சொல்கிறான். ராமன் தன் நண்பன் அஞ்சியுடன், மந்திரவாதியைத் தேடிச் செல்கிறார். இருவரும் ஒரு இடத்தில் தூங்குகிறார்கள். அதேநேரம் மந்திரவாதி, இந்துவைத் தன் மனைவியாக்க முயல்கிறான். அவள் மறுக்கவே, பாதாள பைரவியை அழைத்து, ராமனைக் கட்டி இங்கே கொண்டு வருமாறு வேண்டுகிறான். ராமனும் அவர்கள் முன் கட்டுண்டு கிடக்கிறான். இந்துவின் முன்னே ராமனை அடித்துச் சம்மதிக்கச் சொல்கிறான். நாளை சம்மதிக்கவில்லை எனில் ராமன் நரபலியாக்கப்படுவான் என எச்சரித்துச் செல்கிறான்.
அஞ்சி, எழுந்து பார்த்ததும் ராமனைக் காணாமல், தேடி அலைகிறார். ஒரு இடத்தில், இரண்டு பூதங்களிடம், ஒரு ஜோடி மாய செருப்பும், ஒரு மந்திர சால்வையும் இருக்கின்றன. அவற்றை யார் எடுத்துக் கொள்வது என இரண்டும், சண்டை இட்டுக் கொண்டிருந்தன. அஞ்சி, இருவரையும் ஏமாற்றி சால்வையையும், செருப்பையும் எடுத்துக் கொள்கிறார். சால்வை, போர்த்தியவரை மாயமாக மறையச் செய்யும். செருப்பு, வேண்டிய இடத்திற்குக் கூட்டிச் செல்லும். இது போதாதா? அஞ்சி ராமனை விடுவிக்கிறார் .
ராமன் மந்திரவாதியைக் கொல்ல, இந்துவும் ராமனும் இணைகிறார்கள்.
தொடக்கக் காட்சியில், இரு கைகளிலும், கம்பு சுற்றி சண்டை போடுவதாகட்டும், மக்களிடம் வம்பு செய்யும் அரசியின் தம்பி மீது, இடது கையால் கற்களை வீசுவதாகட்டும், இரு கைகளும் அவ்வளவு லாவகமாக இயங்குகின்றன.
இளமையான, குறும்பு ததும்பும் முகம். ‘உன் பிரியம் இல்லை என்றால், என் பிராணன் எதற்கு ராஜகுமாரி?’ என அந்தப்புரத்தில் இளவரசியிடம், பேசுவதெல்லாம் அப்பப்பா, ஆந்திர மக்கள், பல பத்து ஆண்டுகள் இவரின் நடிப்பில் கட்டுண்டு இருந்தார்கள் என்றால், இவை தான் அதன் அடிநாதம் போல.
இந்துவாக கே.மாலதி நடித்து உள்ளார். ஸ்ரீ முருகன் திரைப்படத்தில், பார்வதியாகவும் அவர் நடித்து இருக்கிறார். இருவரும் இணைந்து ஆடிய நடனம் மிகவும் புகழ்பெற்று விளங்கி இருக்கிறது. அதுவே, மக்கள் திலகம் முதன் முதலில் நாயகனாக நடித்த ராஜகுமாரி திரைப்படத்தின் நாயகிக்கான வாய்ப்பைப் பெற்றுக் கொடுத்து இருக்கிறது. இந்தத் திரைப்படத்திலும் இவரின் நடிப்பு குறிப்பிடத்தகுந்த முறையில் உள்ளது.
பாதாள பைரவியாகக் கிரிஜா, நேபாள மந்திரவாதியாக எஸ்.வி. ரங்கராவ், உஜ்ஜயினி மன்னராக சி.எஸ்.ஆர். ஆஞ்சநேயுலு, சூரசேனாவாக ரேலங்கி, வல்லூரி பாலகிருஷ்ணா அஞ்சியாக என முழுக்க முழுக்க தெலுங்கு நடிகர்கள்தான் என்றாலும், திரைப்படம் என்னவோ தமிழ்த் திரைப்படம்தான் என்ற உணர்வைக் கொடுக்கிறது. அனைவரும் மிக இயல்பாக நடித்து உள்ளனர்.
படத்தில் ஏராளமான மாயாஜால காட்சிகள்; பிரமாண்ட செட்கள் என அந்த காலகட்டத்துக்கு மிகவும் புதுமையான அனுபவத்தைக் கொடுத்து இருக்க வேண்டும். ‘உயிருடன் உனைக் காண்பேனோ’ என்ற பாடலில் கடல் வருகிறது, மலை வருகிறது, வயல் வெளி வருகிறது. இப்படிக், குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என பல்வேறு நிலப்பரப்பில் அந்த காலகட்டத்தில் வேறு பாடல்கள் உருவாகி இருக்குமா என்பது ஐயமே.
ராமனின் மாளிகை எல்லாம் உண்மையான மாளிகையை மிஞ்சி நிற்கும் அழகுடன் உள்ளது. அந்த மாளிகைக்குள் ராமன் மன்னரை அழைத்து வரும்போது, பெண்கள் ஆடுகிறார்கள். அவர்களின் நடனமெல்லாம், பிரபல பாடல்களின் நடனக் காட்சிகளுக்கு இணையாக அவ்வளவு அழகாக உள்ளன. சிறு பிழை கூட தெரியவில்லை.
இசை கண்டசாலா G வெங்கடேஸ்வர ராவ். பாடல்கள் அவ்வளவு அருமையாக உள்ளன. பல பாடல்கள் இன்றும் காலம் கடந்தும் மக்கள் மனதில் நிற்கின்றன.
பின்னணி பாடியவர்கள், கண்டசாலா, பி லீலா, கிருஷ்ணவேணி (ஜிக்கி). ‘கனிந்த காதலர்க்கு தேவியின் அருளாலே காணிக்கைத் தருவேனே’ எனத் தொடங்கும் பாடல், ‘காதலே தெய்வீக காதலே’ பாடல் , ‘அமைதியில்லா என் மனமே, என்ன தான் உன் பிரேமையோ’ என்ற பாடல், போன்றவை இலங்கை வானொலி எங்கள் இதயத்துக்குள் கொண்டுவந்த பாடல்கள்.
படைப்பாளர்
பாரதி திலகர்
தீவிர வாசிப்பாளர், பயணக் காதலர்; தொன்மை மேல் பெரும் ஆர்வம் கொண்டவர். அயல்நாட்டில் வசித்து வந்தாலும் மண்ணின் வாசம் மறவாமல் கட்டுரைகள் எழுதிவருகிறார். ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய கட்டுரைகள், ‘பூப்பறிக்க வருகிறோம்’ என்கிற புத்தகமாக, ஹெர் ஸ்டோரிஸில் வெளிவந்திருக்கிறது.