சர்வாதிகாரி 1951ஆம் ஆண்டு வெளியான திரைப்படம். இப்படம் தெலுங்கிலும் இதே பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டது. எம்ஜிஆருக்கு இது இருபத்தைந்தாவது திரைப்படம். ஹாலிவுட் இயக்குனர் ஹென்றி லெவின் (Henry Levin) இயக்கிய, ‘தி கேலன்ட் பிளேட்’ (The Gallant Blade) என்ற அமெரிக்கப் படத்தைத் தழுவி தமிழில் உருவான படம் இது என்கிறது இந்து தமிழ் திசை. எம்.ஜி.ஆரின் 25வது படம் இது. தயாரிப்பாளர் முதலில் ‘வீர வாள்’ என்ற பெயரில் படத்தைத் தொடங்க, அதை ‘சர்வாதிகாரி’ எனப் பெயர் மாற்றம் செய்தவர் எம்.ஜி.ஆர்.

சர்வாதிகாரி எனப் படத்தின் பெயரைப் போட்டவுடன், கதை சினாரியோ கே.டி. சண்முகசுந்தரம் (கோ.த. சண்முகசுந்தரம்) எனக் கதை எழுதியவரைத்தான்  முதலில் போடுகிறார்கள். இவர், கொங்கு வட்டார மக்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு எழுதிய எழுத்தாளர்களின் முன்னோடி. பத்திரிகையாளர், எழுத்தாளர். தினமணியின் முதல் ஆசிரியர் இவரே. காந்தியடிகளின் ‘கிராமத்தை நோக்கித் திரும்பு’ என்ற கருத்தை மையமாக வைத்துத்தான் அவர், பெரும்பாலான கதைகளை எழுதியுள்ளார். 

பின் வசனம் ஏ.வி.பி. ஆசைத்தம்பி எனப் போடுகிறார்கள். இவர் நீதிக்கட்சி, சுயமரியாதை, திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் என அரசியலில் தொடர்ந்து பயணித்தவர். திமுக சார்பாக 1957, 1967 ஆண்டுகளில் சட்டமன்ற உறுப்பினராகியவர். 1977ஆம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினராகவும் பணி செய்தவர். இந்தப் படத்துக்கு வசனம் எழுத கலைஞரை அழைத்ததாகவும் அப்போது அவர் அரசியலில் மும்முரமாக ஈடுபட்டிருந்ததால், ஆசைத்தம்பியை அவரே சிபாரிசு செய்ததாகவும் சொல்லப்படுகிறது.

பாடல்கள் கா.மு. ஷெரிப், ஏ. மருதகாசி, கே.பி. காமாட்சி சுந்தரம். 

பின்னணி கீதம் பி.ஏ. பெரியநாயகி, பி. லீலா, லோகநாதன், சௌந்தரராஜன், எஸ். தட்சிணாமூர்த்தி.

சங்கீதம் எஸ். தட்சிணாமூர்த்தி எனப் போடுகிறார்கள். இவர் வேறு இசையமைப்பாளர். ‘ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது,’ ‘நந்தா என் நிலா’ போன்ற திரைப்படங்களுக்கு இசையமைத்த  தட்சிணாமூர்த்தி வேறு இசையமைப்பாளர். 

நடனம் குமாரி கமலா

பின் நடிகர் நடிகைகள் பெயர் போடுகிறார்கள். 

நடிகர்கள்

எம்.ஜி. ராமச்சந்தர் 

வி. நாகய்யா 

எம்.என். நம்பியார்

புளி மூட்டை ராமசாமி, 

அ. கருணாநிதி, 

எஸ்.எம். திருப்பதிசாமி, 

வி.கே. ராமசாமி

எஸ்.எஸ். சிவசூரியன்

மோகனாக கே.கே. சௌந்தர்

எம்.ஏ. சின்னப்பா

பெண் நடிகர்கள்

அஞ்சலி தேவி 

எம். சரோஜா

ஜெயலட்சுமி

எஸ்.ஆர். ஜானகி

அங்கமுத்து

முத்துலட்சுமி

ஸ்டுடியோ மார்டன் தியேட்டர்ஸ்

இயக்கம் டி.ஆர். சுந்தரம். 

‘இந்தக்கதை பல நூற்றாண்டுகளுக்கு முன் நடந்ததாகச் சித்தரிக்கப்பட்ட கற்பனைக்கதை’ என்னும் முன் அறிவிப்பு, பின் ‘மணிப்புரி ராணுவ முகாம்’ என எழுத்து தொடருகிறது. 

‘சண்டை தீர்ந்து போச்சு நம்ம நாட்டிலே 

ஜல்தி போய் சேரலாமே வீட்டிலே’ 

என்ற பாடலுடன் திரைப்படம் தொடங்குகிறது. ராணுவ வீரர்கள் பாடும் பாடல் என்பதை குழுப்பாடலில் அழகாக வெளிப்படுத்தியுள்ளனர். ‘வீட்டிற்குப் போய்த் தூங்குவோம்,  ஆறேழு சீட்டுக்கட்டு வாங்கி விளையாடுவோம்’ என்ற கனவுகளுடன், படை முகாமைக் கலைக்கும் நாளை எதிர்பார்த்து வீரர்கள் பாடுகிறார்கள். தளபதி உக்ரசேனர் (வி. நாகய்யா), முகாமைக் கலைக்கும்படி அரசரிடம் இருந்து உத்தரவு வரும் எனக் காத்து இருக்கிறார்.  தளபதியின் மெய்க்காப்பாளன்தான் பிரதாபன் (எம்.ஜி.ஆர்)

சர்வாதிகாரியில் எம்.ஜி.ஆர்

பத்தாண்டு போரினால், நாட்டில் பஞ்சம் ஏற்பட்டுவிட்டது. ‘போர்தான் நமது எதிரி. போர் வேண்டுமென யார் சொல்கிறார்களோ அவர்கள் தான் நமது எதிரி. மணிப்புரியைக் காக்க அவர்களுடன் போரிடுங்கள்,’ என்கிறார் தளபதி. 

‘ரத்னபுரியின் மீது படையெடுப்பைத் தொடங்க வேண்டும். தாய் நாடு போர் தொடுத்து இருக்கிறது என்ற நிலையில் நம்மை மறந்து விடுவார்கள். இத்திட்டம் புரட்சியைத் தடுக்க மட்டுமல்ல மன்னராட்சியை ஒழித்து, எனது சர்வாதிகார ஆட்சிக்கும் வித்திடும்’ என அமைச்சர் மகாவர்மன் (நம்பியார்) நினைக்கிறார். காரணமில்லாமல் ரத்தினபுரி மீது போர் தொடங்குவது அக்கிரமம் என அரசி சொல்லியும் கேட்காமல், மன்னர் படையெடுப்புக்கான கையெழுத்தை இடுகிறார். 

தளபதி மன்னரைக் காணச் செல்கிறார். ஆனால் அமைச்சர் தடுத்து நிறுத்துவதுடன், பிரதாபனை மயக்க மீனா தேவி (அஞ்சலி தேவி) என்ற பெண்ணை அனுப்புகிறார். ஏற்கனவே இருவருக்கும் அறிமுகம் உண்டு. வேறு ஒரு நேரம், பிரதாபன் மீனாதேவியை ஒரு இக்கட்டிலிருந்து காப்பாற்றியவர்; காதல் அவர் மனதில் இருக்கிறது. ஆனாலும் அமைச்சரின் ஆள் எனத் தெரிந்ததும் திட்டுகிறார். தான் ஏழை என்றும், நாட்டுக்காகத்தான் அமைச்சரிடம் இவ்வாறு நடிப்பதாகவும் மீனா தேவி சொல்கிறார். இருவரும் சமாதானமாகிறார்கள். அப்போது தான் பிரதாபன் யார் என்ற உண்மை மீனா தேவிக்குத் தெரிகிறது. பிரதாபனைத் தாமதப்படுத்துவதுதான் அமைச்சர் தனக்குத் தந்த கட்டளை என்றும், கடிகாரம் தாமதப்படுத்தப் பட்டிருக்கிறது என்றும் உண்மையை அவர் சொல்ல, பிரதாபன் விரைகிறார். இருவரும் தப்பிக்கிறார்கள். 

பின்னும் அமைச்சர் வந்து தளபதியைச் சிறைப்படுத்த, பிரதாபன், தளபதி, வீரர்களுக்கு எழுதிய ஓலையுடன் தப்பித்து விடுகிறார். 

அமைச்சர், பிரதாபனைத் தேடித் திரிகிறார். பிரதாபன், தனது ஆள்களுடன் மறைந்து இருக்கிறார். நகரத்திலிருந்து, போர் பாசறை இருக்கும் இடத்துக்குச் சென்று, தளபதியின் ஓலையைக் கொடுப்பதே அவரது நோக்கம்.

மீனா தேவியைச் சந்தித்தபிறகு பிரதாபன், தளபதியின் ஓலையை வீரர்களிடம் கொண்டு செல்கிறார். வழியில் அமைச்சர்களின் ஆள்களிடம் ஓலையை இழக்கிறார். பிரதாபன் இறந்து விட்டார் என அனைவரும் நினைக்க அவர், தப்பித்துவிடுகிறார். 

மந்திரி, மன்னரையும் அரசியையும் சிறை வைக்கிறார். ஓலையின்றி செல்லும் பிரதாபனை உபதளபதி சமாளித்து அனுப்புகிறார். உபதளபதி, இப்போது அமைச்சரின் கையாள். 

சதி வேலைக்கு மீனாதேவி உடந்தை என நினைத்து பிரதாபன், அங்கு வந்து சண்டை போடுகிறார். தளபதியைக் கொல்வதற்கு நடைபெறும் சூழ்ச்சி குறித்து மீனா தேவி சொல்கிறார். அமைச்சரின், முத்திரை மோதிரத்தைப் பெற்றுக் கொண்டு, பிரதாபன் சென்று, தளபதியை மீட்கிறார். 

உண்மை அறிந்த அமைச்சர், மீனாதேவியிடம் வருகிறார். பிரதாபனை ஒருதலையாய்க் காதலித்த மாமா மகள், அமைச்சரின் வாளுக்குப் பலியாகிறார். 

அமைச்சர் கொல்லப்படுகிறார். நாட்டைக் குடியரசாக மன்னர் அறிவிக்கிறார். உக்ரசேனர் முதல் ஜனாதிபதியாகவும், பிரதாபன் தளபதியாகவும் நியமிக்கப்படுகின்றனர். “சர்வாதிகாரம் இருக்காது சமத்துவம் இருக்கும், குலம் ஒன்று தான்; கடவுளும் அப்படியே”, என ஜனாதிபதி சொல்ல, “இந்த குடியரசில், அன்பும் அறநெறியும் இருக்கும்” என பிரதாபன் சொல்ல, திரைப்படம் நிறைவு பெறுகிறது.

“நாடு! நாடு நாசமாய் போகட்டும்.  நாட்டில் நிலவும் பஞ்சத்திற்கும் பட்டினிக்கும் மக்கள் என்னைத் திட்டுகிறார்கள். அவர்கள் ஆவேசத்தை வேறு பக்கம் திருப்பி விட்டால்? அதற்கு, ரத்னபுரியின் மீது படையெடுப்பைத் தொடங்க வேண்டும். தாய் நாடு போர் தொடுத்து இருக்கிறது என்ற நிலையில் நம்மை மறந்து விடுவார்கள். இத்திட்டம் புரட்சியைத் தடுக்க மட்டுமல்ல மன்னராட்சியை ஒழித்து, எனது சர்வாதிகார ஆட்சிக்கும் வித்திடும்.” 

“மகாராஜா! ஆடுதன் ராஜா” எனச் சீட்டுக்கட்டின் ராஜாவை அவரும் அவரது உதவியாளரும் காட்டிச் சிரிக்கிறார்கள்.

“குலம் ஒன்று தான்; கடவுளும் அப்படியே”

இவ்வாறான உரையாடல்கள் மூலம்,  ஏ.வி.பி. ஆசைத்தம்பி அவர்கள், தனது முத்திரையைப் பதித்து இருக்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும். 

படத்தின் ஆங்கில விளம்பரம்

அரசராக வரும் புளிமூட்டை ராமசாமி யார் சொன்னாலும் கேட்கும் தலையாட்டி பொம்மை மன்னராக, மிகவும் சிறப்பாகச் செய்து இருக்கிறார். மரக்குதிரையில் அமர்ந்து மன்னர், தனது ஓவியத்தைக் கம்பீரமாக வரையச் சொல்லுகிறார். இம்சை அரசன் தனது ஓவியத்தை வரைவாரே அதற்கு முன்னோடியான காட்சி என இதைச் சொல்லலாம். குதிரையில் இருந்து இறங்க வேண்டிய சூழ்நிலை வரும்போது, குதிரையும் இளைப்பாறட்டும் என வேறு சொல்கிறார்.

எம் ஜி ஆர், நம்பியார் போன்றோர் வழக்கமான நடிப்பைக் கொடுத்து உள்ளனர். வழக்கம் போல எம்.ஜி.ஆர் அவர்களின் வாள்சண்டை மிகவும் லாவகமான வாள் சுழற்றலுடன் இருக்கிறது. அரச உடை இந்த திரைப்படம் போல் வேறு எந்த திரைப்படத்திலும் அவருக்குப் பொருந்தியதா எனத் தெரியவில்லை. அவ்வளவு நேர்த்தியாக ஆனால் மேல் நாட்டுப் பாணியில் உள்ளது. நம்பியாரின் தாடி அவருக்கு வேறு ஒரு புதிய பரிணாமத்தைக் கொடுக்கிறது எனச் சொல்லலாம். இந்தப் படத்தின் மூலம் வில்லன் நடிகராக அழுத்தமாக முத்திரை பதித்தார் நம்பியார். இந்தப் படத்தின் வெற்றிக்குப் பிறகு, வில்லன் என்றால் நம்பியார்தான் என்றானது.

அரசியாக வருபவர், நடிகை ஜெயலட்சுமி என நினைக்கிறேன். அற்புதமாகத் தனது பாத்திரத்தைச் செய்து இருக்கிறார். 

பிரதாபனின் முறைப்பெண் கற்பகமாக வரும் எம். சரோஜா அவர்களுக்கு இது முதல் படம். அந்த அறிகுறியே இல்லாத அளவுக்கு நன்றாகச் செய்துள்ளார். ‘அத்தான், அத்தான்’ என வளைய வருகிறார். 

அஞ்சலி தேவி, குழந்தை நட்சத்திரமாக, 1936ஆம் ஆண்டு வெளியான ‘ராஜா ஹரி சந்திரா’விலிருந்து நடிக்கிறார். 1948இல், டி.ஆர். சுந்தரம் இயக்கத்தில் வெளியான ‘ஆதித்தன் கனவு’ அஞ்சலியை நாயகியாக்கிய முதல் தமிழ்ப்படம். டி.ஆர். மகாலிங்கம் அவர்கள் நாயகனாக நடித்த திரைப்படம். தமிழில் அவருக்குப் பெரும் புகழை வாங்கித் தந்த திரைப்படம் என இதைச் சொல்லலாம். தெலுங்கிலும் இவரே கதாநாயகி. டி.பி. முத்துலட்சுமியை துணை நடிகையாக அறிமுகம் செய்த படம் இது. 1950ஆம் ஆண்டு ‘பொன்முடி’ படத்தில் நகைச்சுவை நடிகையாக அறிமுகம் ஆன தூத்துக்குடியைச் சேர்ந்த முத்துலட்சுமி, சந்திரலேகா படத்தில் முரசு நடனம் ஆடிய பெண்களின் ஒருவர். பின்னர் ஏறத்தாழ 300 படங்களில் நகைச்சுவை மற்றும் துணை நடிகையாக நடித்தார்.

டி.பி. முத்துலட்சுமி

அரசி, கற்பகம், மீனா தேவி, மற்றும் வீரர்களுக்கு உதவும் பூஞ்சோலை என வலுவான பெண் பாத்திரங்கள் கொண்ட திரைப்படமாக இது உள்ளது.  

சீனர்கள் வைத்து இருப்பது போன்ற புத்தர் சிலை, பூமி உருண்டை, பெண்டுலம் கொண்ட கடிகாரம் என அரண்மனையின் அலங்காரங்கள் அழகாக உள்ளன. செட்களில் படமெடுத்துவந்த காலத்தில், ‘பஞ்சமும் நோயும் இல்லா’ பாடல் விவசாயி மாடு ஓட்டி கமலையில் தண்ணீர் இறைக்கும் காட்சியை வயல்வெளியில் படமாக்கியுள்ளது வித்தியாசமாக உள்ளது.

மொத்தத்தில் ‘நல்லவன் வாழ்வான்’ என்ற கருத்தைக் கூறும் அழகான திரைப்படம் இது.

படைப்பாளர்

பாரதி திலகர்

தீவிர வாசிப்பாளர், பயணக் காதலர்; தொன்மை மேல் பெரும் ஆர்வம் கொண்டவர். அயல்நாட்டில் வசித்து வந்தாலும் மண்ணின் வாசம் மறவாமல் கட்டுரைகள் எழுதிவருகிறார். ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய கட்டுரைகள், ‘பூப்பறிக்க வருகிறோம்’ என்கிற புத்தகமாக, ஹெர் ஸ்டோரிஸில் வெளிவந்திருக்கிறது.