சண்டிராணி 1953ஆம் ஆண்டு வெளியான திரைப்படம். பானுமதி எழுதி, ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் தயாரித்து, இயக்கினார். மூன்று மொழிகளிலும் படம் ஒரே நாளில் வெளியானது. பானுமதி இந்த திரைப்படத்தை இயக்கியதன் மூலம் இந்தியாவின் முதல் பெண் இயக்குனர் என்ற பெருமையைப் பெற்றார்.

சண்டிராணி என்ற தலைப்பிற்குப் பின் பின்வருமாறு எழுத்து போடுகிறார்கள். 

பானுமதி

என்.டி. ராமராவ்

எஸ்.வி. ரங்கராவ்

ரேலங்கி

வித்யாவதி

ஹேமலதா

குமாரி துளசி

அங்கமுத்து

அமர்நாத்

துரைசுவாமி 

நாகேஸ்வரராவ் 

வெங்கடராமன் 

ராஜ்குமார் 

கணபதி பட் 

வசனம் – உதயகுமார்

பாட்டு – கே.டி. சந்தானம்

சங்கீதம் – சி.ஆர். சுப்புராமன், எம்.எஸ். விஸ்வநாதன்

பின்னணி – பானுமதி, கண்டசாலா, ராணி, ஜமுனா, சரோஜினி, A P கோமளா 

ஸ்டுடியோ – பரணி ஸ்டுடியோஸ் 

எடிட்டிங் தயாரிப்பு  – P. S. ராமகிருஷ்ண ராவ்

திரைக்கதை டைரக்சன் – பானுமதி

ஸ்வர்ணபுரி மன்னர் சுகுமார் மகாராஜாவின் இருபத்தைந்தாவது பிறந்த நாளன்று கதை தொடங்குகிறது. அவரது பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது நடனமாடிய ஏழைப் பெண்ணை மணந்து கொள்கிறார். சேனாதிபதிக்கு இதில் விருப்பம் இல்லை. ஆனாலும் அரசர் அதைப் பொருட்படுத்தவில்லை. அரசருக்கு இரட்டைப் பெண் குழந்தைகள் பிறக்கின்றன. சேனாதிபதி அரசியை விஷம் கொடுத்து கொன்று விடுகிறார். மன்னருக்கு மனநிலைப் பிறழ்வு என கதை கட்டி, கோட்டையில் அடைத்து வைக்கிறான். குழந்தைகளை, அமைச்சரும் அவரது மனைவியும் எடுத்துக் கொண்டு ஆளுக்கொரு திசை செல்கிறார்கள். அமைச்சர் பிடிபட, ஒரு குழந்தையை சேனாதிபதியே வளர்க்கிறார். 

அமைச்சர் இறக்கிறார். இறப்பதற்கு முன், தனது மகனை ஒருவரிடம் கொடுத்து வளர்க்கிறார். அவர் தான் கிஷோர் (என் டி ஆர்). கிஷோர் கோட்டைப் பாதுகாவலனாக நியமிக்கப் படுகிறார். இளவரசி சம்பாவை சந்தித்து, இளவரசியின் வரலாற்றை அவரிடமே  சொல்கிறார். காட்டிற்குச் சென்று சண்டியையும் பார்த்து வருவதாக வாக்குறுதி கொடுக்கிறார்.

சண்டி அரண்மனைக்கு வருகிறார். சம்பாவாக நடிக்கிறார். சம்பா அப்பாவை சந்திக்கிறார். ரகசிய பாதை வழியே வெளியே செல்கிறார். 

சம்பாவும் கிஷோரும் காதலிக்கிறார்கள். 

இதற்கிடையில், சேனாதிபதி, கிஷோரை கைது செய்கிறான். மக்கள் உதவியுடன் சண்டி சண்டையிட்டு நாட்டைக் காப்பாற்றி உயிரை விடுகிறார். சம்பாவும் கிஷோரும் இணைகிறார்கள்.

திரைப்படத்தின் முதுகெலும்பே பானுமதி அம்மாதான். சண்டியாக வாள் சண்டை, புலியுடனான சண்டை என மிகவும் நேர்த்தியாக செய்து இருக்கிறார். 

உடன்பிறந்தவர்களின் இடமாற்றம் என்பதெல்லாம் நமக்குப் பழகிய கதைதான் என்றாலும், இந்தத் திரைப்படம் வெளியான  காலட்டத்திற்கு அவ்வளவு பழைய காட்சியாகத் தோன்றி இருக்காது. அதுவும் நாயகி இவ்வாறு செய்வது என்பது எல்லாம் மிகவும் புதிதாக இருந்து இருக்கும். 

பானுமதி மற்றும் அவரது கணவர் பி.எஸ். ராமகிருஷ்ணா ராவ் இருவரும் இணைந்து ‘பரணி ஸ்டுடியோஸ்’ என்ற நிறுவனத்தை நிறுவினார்கள். இப்படி கதை, திரைக்கதை, இயக்கம், நடிப்பு, பின்னணிப் பாடல், தயாரிப்பு என பானுமதி அம்மாவின் பல முகங்களையும் செவ்வனே காட்டிய திரைப்படம் என இதைச் சொல்லலாம். காட்சியமைப்பு எல்லாம் மிகவும் செலவழித்து எடுத்து இருக்கிறார். 

என் டி ஆர் அவர்களும் வாள் சண்டை போன்றவற்றில் நிறைவாகச் செய்து இருக்கிறார். அவரது குறும்பு ததும்பும் முகம், காதல் காட்சிகளுக்கு வலு சேர்க்கிறது. 

வில்லனாக ரங்காராவ் பெரிய அளவில் நடித்தது இல்லை. இந்த திரைப்படத்தில் வில்லனாக வருகிறார். அவரது, உடலும் உயரமும் தோற்றமும், சேனாதிபதிக்கு அப்படியே பொருந்தி வருகிறது.

சி.எஸ்.ஆர். ஆஞ்சநேயுலு, ரேலங்கி, பலரும் தெலுங்கு நடிகர்கள்தான். நன்றாகவே செய்து இருக்கிறார்கள். 

K.D. சந்தானம் அனைத்துப் பாடல்களையும் எழுதியுள்ளார். கண்டசாலா, பானுமதி இணைந்து பாடிய ‘வான்மீதிலே’ பாடலைப் போன்று ஒரு பாடல் இசையமைத்துக் கொடுங்கள் என எம்.எஸ்.வி. அவர்களிடம் இளையராஜா அவர்கள் கேட்டதால், போடப்பட்ட பாடல் தான் ‘வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே’ என்ற மெல்லத் திறந்தது கதவு திரைப்படப் பாடல் என எம் எஸ் வி அவர்கள் ஒரு நேரலையில் குறிப்பிடுகிறார்கள். அந்த அளவிற்கான இனிமையான பாடல் இது. கவிதையும் அழகாக இருக்கும்.

வான் மீதிலே

இன்பத் தேன் மாரி பெய்யுதே

வண்ணம் சேர்க்கலாமதே

வீசும் வெண்ணிலாவிலே

சுகாதீபம் மேவும் அனுராக கீதம்

ஸ்ருதியோடு பாடும்

மதுவண்டு கேளாய்

சுகானந்த ஜீவிய கானம் இதே

வசந்தத்திலாடும் மலர் தென்றல் நீயே

மையல் கொண்டு நாடும்

தமிழ் தென்றல் நானே

நிஜந்தான் என் ஆருயிர் நீ வாழும் நாள்

மனம் ஒன்று சேர்ந்தே உறவாடும் போது

மது உண்ணும் வண்டு 

தனக்கேது ஈடு

இமைக்கின்ற போகமும் ஆகாது

கேட்பதற்கு எளிமையாகவும் இனிமையாகவும் உள்ள மற்றொரு பாடல் பானுமதி அவர்கள் மட்டும் பாடிய இந்தப் பாடல் –

நிலா நிலா ஓடி வா நில்லாமல் ஓடி வா 

நேரில் கண்டதெல்லாம் நீ சொல்ல வா வா 

வளரும் காதலுக்கு நீயே ஒரு சாட்சி 

மறையும் ஆசைக்கெல்லாம் நீயே அத்தாட்சி 

மனமதிலே என்றும் மாறாத காட்சி 

மணலில் வீடு கட்டி விளையாடும் பிள்ளை 

மனம் போல் நான் மகிழ்ந்தேன் பேதை உள்ளம் 

எனை மறந்தால் ஏது வாழ்வில் இன்பம் 

வான் மீதிலே இன்பத் தேன் மாறி பெய்யுதே

இன்னதென்று அறியாமல் 

உன்னையும் உணராமல் ஏன் இந்த ஆனந்தமே- மனமே 

கண்களிலே உவகை சின்னஞ்சிறு சிட்டு போல் 

சிறிய நினைவு போல் ஏன் இந்த ஆனந்தமே

கருதிய நினைவெல்லாம் கை கூடாமலே 

கட்டழகன் கருத்தை புரிந்து கொள்ளாமலே 

பருவ துடிப்பினாலே முன் பின் எண்ணாமலே 

பட்சம் வைத்தேன் அவர் பால் லஜை இல்லாமலே 

ஏன் இந்த ஆனந்தமே- மனமே 

பொதுவாக பானுமதியம்மா பாடல் துள்ளலுடன்தான் இருக்கும். அவரின் துன்பப் பாடல் மிகவும் இனிமையாக இருக்கிறது.

என் வாழ்வெல்லாம் சிறை வாசமோ 

இனிமேல் விமோசனம் ஏதும் ஆகாதோ

பொன் கூண்டிலே கிளி தன்னையே 

வைத்துப் பூட்டியது போலே 

எதை வேண்டி என் மன வேதனை 

மிகவே செய்கிறாய் வீணே 

அகம் வானிலே சிறு வாசமும் 

மனம் போல் உலாவிடுதே 

உயர் மானிட ஜென்மமாகியும் 

உரிமை சிறிதும் இல்லையே 

கே ராணி அவர்கள் பாடிய பாடல் 

வராமலே வந்த நாளிதே சுப நாளிதே 

எதிர்பாராத ஆனந்த நாளிதே 

இந்த ஊரார் கொண்டாடும் பொன்னாளிதே 

பாரிலே நேரில்லா வீரனாய் 

பாங்குடனே செல்வம் யாவும் கொண்டே 

அன்பு மாறாமலே எந்த நாளுமே 

மன சீரோடு தான் வாழ வேண்டுமே 

பாடல்கள் இனிமையாக மட்டுமல்லாமல் மிகவும் எளிமையாகவும் உள்ளன. படம் முழுமை பெருமுன்னே சி.ஆர். சுப்பராமன் இறந்து விட்டார். 36  வயதில் இறந்தது உண்மையில் மாபெரும் இழப்பு தான்.  அவரது இறப்பிற்குப் பின் பாடல்களை எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைத்துள்ளார். 

படைப்பாளர்:

பாரதி திலகர்

தீவிர வாசிப்பாளர், பயணக் காதலர்; தொன்மை மேல் பெரும் ஆர்வம் கொண்டவர். அயல்நாட்டில் வசித்து வந்தாலும் மண்ணின் வாசம் மறவாமல் கட்டுரைகள் எழுதிவருகிறார். ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய கட்டுரைகள், ‘பூப்பறிக்க வருகிறோம்’ என்கிற புத்தகமாக, ஹெர் ஸ்டோரிஸில் வெளிவந்திருக்கிறது.