கல்யாணம் பண்ணிப்பார், 1952ஆம் ஆண்டு வெளியான திரைப்படம்.

இந்த திரைப்படம்,’பெல்லி சேசி சூடு’ என்ற பெயரில், தெலுங்கில் 29 பிப்ரவரி 1952இல் வெளிவந்தது.  தமிழில், ‘கல்யாணம் பண்ணிப்பார்’ என அதே ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று வெளியிடப்பட்டது. இரண்டுமே வணிக ரீதியாகப் பெரும் வெற்றி அடைந்தன.

தெலுங்கு மற்றும் தமிழ்ப் பதிப்புகள் ஒரே நேரத்தில்தான் படமாக்கப்பட்டன. தெலுங்குப் பதிப்பு 100 நாள் ஓடி முடித்த பிறகு தமிழ்ப் பதிப்பு வெளியானதால், அங்கு கிடைத்த வரவேற்பும் வெற்றியும் இங்கும் எளிதாக ஒட்டிக் கொண்டன.  கன்னடத்தில் ராஜ்குமார் மற்றும் லீலாவதி நடித்த இப்படமும் பெரும் வெற்றி பெற்றது. இந்தியில் 1972ஆம் ஆண்டு இந்த கதை ரீமேக் செய்யப்பட்டது. ஜீதேந்திரா, ராக்கி மற்றும் சத்ருகன் சின்ஹாவுடன் ‘ஷாதி கே பாத்’ என்ற பெயரில் வெளிவந்த இந்தப் படம் வெற்றி பெறவில்லை. 

விஜயா புரொடக்ஷன்ஸின் தயாரிப்பு With sequences in Gevacolor எனப் போடுகிறார்கள். 

கெவாகலர் (Gevacolor) என்பது ஒரு கலர் மோஷன் பிக்சர் செயல்முறை. கருப்பு வெள்ளைக்குப் பதிலாக சில வண்ணங்கள் தெரியும். இது 1947ஆம் ஆண்டில் பெல்ஜியத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. ‘La maison du printemps’ 1949 கெவாகலரில் எடுக்கப்பட்ட முதல் திரைப்படம்.

கல்யாணம் பண்ணிப்பார் இந்தத் தொழில் நுட்பத்தில் எடுக்கப்பட்ட முதல் இந்தியப் படம். ‘எங்குச் சென்றாயோ’ பாடல் காட்சி இந்தத் தொழில்நுட்பத்தில் படமாக்கப்பட்டது. இது ஊர்வசி/ அர்ஜுனன் பாடும் பாடலாக வரும் கனவுப் பாடல். ஷாஹென்ஷா (ஹிந்தி 1953) கெவாகலரில் எடுக்கப்பட்ட முதல் முழு நீள இந்தியத் திரைப்படம்.  அலிபாபாவும் 40 திருடர்களும் (1956) கெவாகலரில் எடுக்கப்பட்ட முதல் முழு தமிழ்த் திரைப்படம்.

கதை சக்கரபாணி 

வசனம் பாட்டுக்கள் தஞ்சை ராமையாதாஸ் 

நடிகர்கள்

என்.டி. ராமராவ்

எஸ்.வி. ரங்கராவ்

சோகா ராவ்

துரைசாமி 

சி.வி.வி. பந்துலு 

பாலகிருஷ்ணா

பத்மநாபன் 

வெங்கையா

மாஸ்டர் நந்து, மாஸ்டர் போகன் 

ஜி. வரலட்சுமி

சாவித்திரி

சூர்யகாந்தம்

புஷ்பலதா

டி.என். மீனாட்சி

பேபி கிரிஜா 

பேபி உஷா 

பேபி ராஜகுமாரி 

படத்தின் ஒளிப்பதிவாளர் ஆங்கிலோ இந்தியரான மார்கஸ் பார்ட்லி. இவர் பின்னாளில் உலகப்புகழ் பெற்ற கான் திரைப்பட விழாவில் மலையாளத்தின் கிளாஸிக் படமான ‘செம்மீன்’ படத்துக்காக தங்கப்பதக்கம் வென்றவர் ஆவார்.

ராஜா ஒரு ஆசிரியர் மற்றும் நாடக ஆர்வலர். குண்டு மற்றும் நடிகர்கள் குழுவுடன் சேர்ந்து, ராஜா தனது ஓய்வு நேரத்தில் உள்ளூர் அரங்குகளில் நாடகங்களை நடத்துகிறார். ராஜா, அம்மா, தங்கை அம்மணி, மற்றும் சிறுவன் குண்டு அனைவரும் ஒரே வீட்டில்தான் இருக்கிறார்கள். குண்டு  பெரியம்மா எனத்தான் ராஜாவின் அம்மாவை அழைக்கிறான். ராஜாவை ‘மாஸ்டர்ஜி’ எனக் கூப்பிடுகிறான். இந்த இருவரும் மகன்கள் போலவேதான் வீட்டில் நடத்தப் படுகிறார்கள். இருவரும் நாடகம் நாடகம் எனச் சுற்றித் திரிகிறார்கள். 

ராஜாவின் தாய் மாமா, பாடிபில்டரான பீமண்ணாவுடன் காதலில் இருக்கும் தனது மகள் சிட்டியை, ராஜாவுக்குத் திருமணம் செய்து வைக்க விரும்புகிறார். ராஜா சிட்டியைத் திருமணம் செய்து கொண்டால் அம்மணிக்குப் பொருத்தமான மணமகனைத் தேடித் தருவதாகச் சொல்கிறார். ராஜா தங்கைக்குத் திருமணம் நடக்காமல், தான் திருமணம் செய்து கொள்வதில்லை எனப் பிடிவாதமாக இருக்கிறார். தானே தங்கைக்கு மாப்பிள்ளையைத் தேடி ஒரு ஊருக்குப் போகிறார். 

அங்கு உணவு விடுதி நடத்தும் ஒரு பாட்டி வீட்டுக்கு அண்ணன் தம்பி இருவரும் செல்கிறார்கள்.பாட்டி, ஒரு வீட்டில் மாப்பிள்ளை இருப்பதாகச் சொல்கிறார். இவர்கள், அந்த மாப்பிள்ளை வீட்டை அடையாளம் கேட்க, அந்த வீட்டிற்குப் பதிலாக ரங்காராவ் வீட்டுக்கு அந்த ஆள் கூட்டி வந்து விடுகிறார். ரங்காராவ் ஊரின் பஞ்சாயத்துத் தலைவர், ஒடிந்து போன ஜமீன்தார். ஆனாலும் ஊருக்கு வரும் யாராக இருந்தாலும், தன் வீட்டில் வந்து தங்க வேண்டும்; விருந்து உண்ண வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர். அதனால்தான் அந்த மனிதர், மாப்பிள்ளை வீட்டிற்கு வழி காட்டுவதற்குப் பதில், இவர்களை இங்கே அழைத்து வந்திருக்கிறார்.

ஜமீன்தார், மாப்பிள்ளை வீட்டில், தான் பேசிக் கொள்வதாகச் சொல்கிறார். ராஜாவின் அப்பா தனது நண்பர் எனச் சொல்கிறார். தன் மகளைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என வேண்டுகோளும் வைக்கிறார். இரவில், ஜமீன்தாரின்  மகள் சாவித்திரி வந்து அப்பாவிடம் பணம் எதுவும் கிடையாது என்ற உண்மையைச் சொல்ல, இவருக்கும் சாவித்திரியைப் பிடித்துப் போகிறது. அம்மா, தங்கை இருவரையும் வரவழைக்கிறார்கள். திருமணமும் நடக்கிறது.

ஜமீன்தார், ரமணி (என்.டி. ராமராவ்) வீட்டில் பேசி, அம்மணியின் திருமணத்தை முடித்து வைக்கிறார். ஆனால் இவர் பேசிய வரதட்சணையைக் கொடுக்காததால், மாப்பிள்ளை ரமணியின் அப்பா, மகனை அழைத்துச் சென்று விடுகிறார். 

ஆனால் மணப்பாக்கத்திலிருந்து சென்னை போகும் ரமணி, வழியில் சிதம்பரம் சென்று மனைவியை அழைத்துக் கொண்டு சென்னை செல்கிறார். அப்பாவுக்குத் தெரியாமல், அங்கு மனைவியுடன் குடும்பம் நடத்துகிறார். ஊரிலோ அம்மணி வேறு யாருடனோ ஓடிப்போய் விட்டதாகப் புரளி. புரளிச் செய்தி, ரமணியின் அப்பாவிற்கு எட்ட, அப்பா மகனைப் பார்க்க வருகிறார். மகன் மனநோயாளி போன்று நடிக்கிறார். இதனால் தன்னுடன் அழைத்து வந்து விடுகிறார்.

அவருக்கு உதவும் நர்ஸாக, மனைவியும் கூடவே வருகிறார். புராணங்களைப் படித்துக் காட்டி, அன்பு செய்து மாமனாரைக் கவருகிறார். ஒரு காலகட்டத்தில் இவரை, மகனுக்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்கலாம் என்ற எண்ணம் அவருக்கு வருகிறது. 

இந்த காலகட்டத்தில் அம்மணி கர்ப்பமானதால், அம்மா வீட்டுக்குப் போய் விடுகிறார். உண்மை தெரிந்து, பேரனைத் தன்னுடன் வைத்துக் கொள்ள அப்பா விரும்புகிறார். மகன் சண்டை போட்டு, உன் சொத்தும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம் எனச் சொல்லி வெளியேறும் போது, அப்பா, மாரடைப்பால் இறந்ததாக நடிக்கிறார். மகன் வந்து, “என் மகனை உங்களிடம் கொடுத்திருந்தால் இறந்து இருக்க மாட்டீர்களே” என அழ அப்பா விழித்து, சிரிப்பதுடன் திரைப்படம் நிறைவடைகிறது. 

மாமனாருக்கு மருமகளை அடையாளமே தெரியவில்லை. இவர் தான் நர்ஸ் என்பது புரியவில்லை என்பது கொஞ்சம் நெருடல்தான். மற்றபடி, கதை எந்த இடத்திலும் தொய்வு இல்லாமல் செல்கிறது. வரதட்சணை சிக்கலை இவ்வளவு நகைச்சுவையாக எளிமையாக எடுத்துச் சொல்வது என்பது, இயக்குநரின் அபார வெற்றி தான். எந்த இடத்திலும் பரப்புரை செய்வதாகவே இல்லை. குடும்பத்தில் ஒருவர் (அப்பா) தவறு செய்தால், அவரிடம் மல்லுக்கட்டுவதை விட்டுவிட்டு, இயல்பாகப் பிற குடும்ப உறுப்பினர்கள் அவரவர் வேலையைப் பார்த்தால் சிக்கல்கள் பெரும்பாலும் நீங்கிவிடும். இந்த தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு படம் இயல்பாக நகருகிறது.

சாவித்திரியின் திருமணம் நடக்கும் போது சில நாற்காலிகள் அங்கு இருக்கின்றன. பிரமுகர் வந்து உட்காருகிறார். அவருக்கு ஒருவர் காற்று வீசுகிறார். அடுத்து அவரைவிடப் பெரிய பிரமுகர் வருகிறார். உடனே இவர் எழுந்து அவருக்கு இவருக்கு இடம் கொடுக்கிறார். இப்படிப் போகிறது. பார்க்க நகைச்சுவையாகவே இருந்தது. இது வைதீக திருமணம்.

இன்னொரு திருமணம் ஒன்று நடக்கும் பாருங்கள். அது சிட்டியின் திருமணம். சிட்டியின் அப்பா, ராஜாவுக்குத் திருமணம் நடந்த பின்னும், அவருக்குத்தான் தன் மகளைத் திருமணம் செய்து கொடுக்கப் போவதாகச் சொல்கிறார். இதனால் காதலன் பயில்வான், ராஜாவைக் கொல்லப் போகிறேன் என வருகிறார். இதனால் ராஜாவின் மாமனாரான ரங்காராவ், சிட்டி- பயில்வான் திருமணத்தை நடத்தி வைக்கிறார். மணமக்களுக்குப் பின்னணியில், காந்தியின் படம் உள்ளது. இருவரின் கைகளையும் இணைத்து, கிறிஸ்தவத் திருமணம் போல, ஒருவரை ஒருவர் கைவிடமாட்டோம் எனச் சொல்லி, மஞ்சள் கயிறு கட்டித் திருமணத்தை அவர் நடத்தி வைக்கிறார். ஏதோ காந்தியின் தலைமையில் பெரியவர் ஒருவர் நடத்தி வைக்கும் திருமணம் போன்ற ஒரு திருமணம். 

மணப்பாக்கம் கிராமத்திலிருந்து சிதம்பரம் செல்லும் ரயிலில், V S M 130 என எழுதி இருக்கிறது. சிதம்பரத்திலிருந்து செல்லும் ரயிலில் SIR என எழுதி இருக்கிறது.  

பொதுவாகவே காட்டும் வீடுகள் அனைத்திலும் காந்தி புகைப்படம் இருக்கிறது.

தஞ்சை என். ராமையா தாஸ் அவர்கள் பாடல்களை எழுதியுள்ளார்.

கண்டசாலா அவர்கள் திரைப்படத்திற்கு இசை அமைத்துள்ளார்கள். பல பாடல்கள் மிகவும் அருமையாக உள்ளன.

“ஜகமெல்லாம் ஒரு நாடக மேடை 

ஜனமெல்லாம் அதில் வேஷதாரிகள்  

பகவான் அதற்கே சூத்ரதாரி என்றால்

வரதட்சணையினாலே நம் வாழ்க்கையை வலி வாங்கவே 

வழிபார்க்கும் வைதீக பெரியாருக்கும் அறிவு வரவே” 

என்ற தொகையறாவுடன் தொடங்கும் “பொன்னும் ஒளி போல், பூவும்மணம் போல் பூதலம் மேல் வாழ்வீர்” பாடல் இது வரை கேட்டது இல்லை என்றாலும், கேட்பதற்கு மிகவும் இனிமையாக இருக்கிறது.  

நர்சாக ஆடிப்பாடும் மனமே என்னை அறியாயோ மூடமனமே என்ற பாடல் காதல் ஜோடி பாட அதை புராணப்பாடல் என மாமனார் நினைக்க, கதையை நகர்த்திக் கொண்டு போகும் இந்தப் பாடல் நல்ல நகைச்சுவைப் பாடல். 

“ஏழுமலை ஆண்டவனே”என்ற பாடல், கீழே இருக்கும் மாமனாரை பக்திப்பாடல் பாடுவதாக ஏமாற்றி, மேலே மாடியில் கணவருடன் பாடும் குறும்புப்பாடல்.

“ஏன் இந்த சுட்டித்  தனமே என் மனதில் ஆடும் மனமே பாடல் மிகவும் பிரபல பாடல். 

“எங்கே சென்றாயோ பிரியா பிரியா” என்ற கனவுப்பாடலின் பாடலும் காட்சியமைப்பும் அழகாக இருக்கிறது. கெவாகலர் என்பது ஒரு கலர் மோஷன் பிக்சர் செயல்முறை. கருப்பு வெள்ளைக்கு பதிலாக சில வண்ணங்கள் தெரியும். இந்தப் பாடல் காட்சி இந்த தொழில் நுட்பத்தில் படமாக்கப்பட்டது. எனக்குப் பெரிய வேறுபாடு ஒன்றும் தெரியவில்லை. 

காதல் பாடல் என்றால், வர்ணனை தான் பெரும்பாலும் இருக்கும். ‘யாரோ யாரோ’ பாடல், கணவன் மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் வாரி விட்டுக் கேலி பேசுவது போல இருக்கிறது. பொதுவாகவே கணவன் மனைவி இடையிலான பேச்சு என்பது இப்படித்தான் நம் குடும்பங்களிலும் இருக்கும் என்பதால் கேட்க மிகவும் சுவாரசியமாக உள்ளது. 

ஆண்: யாரோ யாரோ நவநாசக சூத்திரதாரிகள் யாரோ 

பெண்: நேர்மையான என் மாமனார் தனை வஞ்சனை செய்தவர் 

யாரோ அவரே 

ஆண்: பாதத்திலே பரிதாபமாகவே பலமுறை கெஞ்சினதாரோ 

உனை விடமாட்டேன் நீ தானே வாழ்வில் 

துணையென பேசியதாரோ?

பெண்: ப்ரியசகி மேல் உள்ள பிரேமையினாலே 

பயமின்று துணிந்தவர் யாரோ?

நியாயவாதி அநியாயவாதியாய் மாயமே செய்தவர் யாரோ?

யாரோ அவரே 

என ஒருவரை ஒருவர் வாரிவிட்டுக் கொள்வது அவ்வளவு இயல்பாக இருக்கிறது.

நாயகன் என்.டி. ராமராவ், ரமணியாகவே வாழ்ந்து இருக்கிறார். குறும்பு ததும்பும் முகம் இக்கதைக்கு அவ்வளவு பொருத்தமாக இருக்கிறது. ஒரு பாடலுக்குத் தேவை என்பதற்காக கண்டசாலா அவர்களிடம் போய் ஆர்மோனியம் வாசிக்கக் கற்றுக் கொண்டு இருந்திருக்கிறார்; இசைக்குறிப்புகள் குறித்தும் சிறிது கற்று இருக்கிறார்  என்னும் போது, அவர் எடுத்துள்ள சிரத்தை புரிகிறது. 

அம்மணியாக வரும் ஜி. வரலட்சுமி அவர்களும், அவருக்கு இணையாகவே குறும்பு, அமைதியான நடிப்பு, சோகம் என அனைத்திலும் கொடிகட்டிப் பறக்கிறார். மிகவும் இயல்பாகச் செய்து இருக்கிறார். 

சாவித்திரி என்ற பெயரில் தான் நடிகையர் திலகம் சாவித்திரி வருகிறார். மிகவும் சின்னப்பொண்ணாக இருக்கிறார். எளிமையான அவரது தோற்றமே, அவரது அமைதியான பாத்திரத்துக்கு வலு சேர்க்கிறது.

சாவித்திரி அவர்களின் கணவராக  யெண்டமூரி ஜோக ராவ் (Yandamuri Joga Rao) வருகிறார். எழுத்து போடும்போது சோகா ராவ் எனப்போடுகிறார்கள். பார்ப்பதற்கு ஒல்லியாக இப்போதைய நகைச்சுவை நடிகர் பாலா போல இருக்கிறார். ஆட்டம் பாட்டம் நகைச்சுவை என, என் டி ஆர் அவர்களுக்கு ஈடுகொடுத்து நடித்து இருக்கிறார்.  படம் தொடங்கி ஏறக்குறைய ஒரு மணி நேரம் கழித்துத் தான் என்டிஆர் உள்ளே வருகிறார். அதுவரை திரைக்கதையை இயல்பாக, நகைச்சுவையாக இவர் நகர்த்திக் கொண்டு போகிறார். 

ஜமீன்தாராக வரும் எஸ்.வி. ரங்கராவ் மிகவும், ஒல்லியாக இருக்கிறார். நொடித்துப்போன பணக்காரர் போல அப்படியே இருக்கிறார். இதற்காகவே மெலிந்தாரோ என்னவோ தெரியவில்லை. நகைச்சுவையும் இயல்பாக வந்து இருக்கிறது. மிகவும் மாறுபட்ட ரங்காராவ்.

பாட்டியின் பேத்தியாக வரும் சிறுமி, அந்தக்கால சித்தாடை (சிறுமிகளுக்கான பாவாடை தாவணி) கட்டி வருவது அவ்வளவு அழகாக, இயல்பாக உள்ளது. பிற்காலத்தில் எல்லாம், இப்படி பத்து வயது பெண் என்றால் பாவாடை சட்டை என மாறிவிட்டது. அதன்பிறகு, இப்போது தான் குழந்தைகள், பாவாடை தாவணி என்னும் சித்தாடையுடன்  மீண்டும் வலம்வருவதைப் பார்க்கிறேன். 

புஷ்பலதா பொம்மை போல் சிறு பெண்ணாக மிகவும் துறுதுறுவென வருகிறார். இவர் தமிழில் பிற்காலத்தில் நடித்த AVM ராஜன் அவர்களின் மனைவி புஷ்பலதா இல்லை. அவருக்கு முந்தைய காலத் தெலுங்கு நடிகை. இவர் அப்பாவின் எதிர்ப்பை மீறிக் காதலிக்கும் காட்சிகள் இனிமை. அவரது காதலராக வரும் பீமண்ணா அப்படி ஒரு பெரிய தோற்றம். ஆனாலும் இந்த இணையும் அழகாகத்தான் இருக்கிறது. பெற்றோருக்குத் தெரியாமல் திருமணம் செய்து விட்டுப் பயப்படும் சிட்டியைப் பார்த்து, “பயமென்னடி சிட்டி பயமென்னடீ” எனப் பாடுவதெல்லாம் அழகு. 

நாயகனின் அப்பாவாக வருபவர், அம்மணியின் அம்மாவாக வரும் டி.என். மீனாட்சி அவர்கள், சிறு மகனாக வருபவர், சாப்பாடு கடை நடத்தும் பாட்டி எனப் பலரும் நம்மை மிகவும் ஈர்க்கிறார்கள். Feel good movie எனச் சொல்லுவார்களே, அவ்வாறான இனிமையான திரைப்படம். முடிந்தால் பாருங்கள். மூன்று மணி நேரத்தை இனிமையாகக் கழிக்கலாம். 

பொதுவாகத் திருமணத்தில் கதை முடிந்தால் அது திரைப்படம்; திருமணம் முடிந்தபின் வரும் சிக்கல்களைச் சொன்னால் அது தொலைக்காட்சித் தொடர் எனச் சொல்வதுண்டு. இரண்டும் சரி பாதி கலந்த திரைக்கதை. அதாவது நாயகன் நாயகி திருமணம் ஏறக்குறைய இடைவேளையில்தான் வருகிறது. அதற்கு முன், அவர்கள் காதலிக்கவும் இல்லை; கனவு காணவும் இல்லை; இவ்வளவு ஏன் கதைகூட அவர்களைச் சுற்றி இல்லை. ஓரிரு காட்சிகளில் நாயகி வருகிறார். ஒரு மணி நேரம் கழித்துத்தான் நாயகனின் தலையே தெரிகிறது. ஆனாலும் அதுவரை அலுக்கவேயில்லை. இப்படி ஒரு கதைக்கான பல இலக்கணங்களை அப்படியே ஓரம்கட்டியத் திரைக்கதை. 

ஆபாசம் இல்லை. குடும்பப் படம் என்றால், பெண்ணடிமைத்தனம் போன்றவை தலைதூக்கும். அவ்வாறான காட்சியமைப்புகள் இல்லை. இயல்பாகவே சில முற்போக்குக் காட்சிகள், வரதட்சணை குறித்த எள்ளல்கள் உள்ளன. ஆனால் கருத்துச் சொல்வது போன்ற எண்ணமே நமக்கு வரவில்லை. அதனால் திரைக்கதை எழுத நினைப்பவர்கள் பார்க்கவேண்டிய திரைப்படம் இது என்பது என் எண்ணம். 

படைப்பாளர்

பாரதி திலகர்

தீவிர வாசிப்பாளர், பயணக் காதலர்; தொன்மை மேல் பெரும் ஆர்வம் கொண்டவர். அயல்நாட்டில் வசித்து வந்தாலும் மண்ணின் வாசம் மறவாமல் கட்டுரைகள் எழுதிவருகிறார். ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய கட்டுரைகள், ‘பூப்பறிக்க வருகிறோம்’ என்கிற புத்தகமாக, ஹெர் ஸ்டோரிஸில் வெளிவந்திருக்கிறது. ஹெர் ஸ்டோரிஸில் இவர் தொடராக எழுதிய விளையாட்டு பற்றிய கட்டுரைகள் ‘தமிழர் பாரம்பரிய விளையாட்டுகள்’ என்ற பெயரில் நூலாகவும், சினிமா கட்டுரைகள் ‘சினிமாவுக்கு வாரீகளா?’ என்ற பெயரில் நூலாகவும் ஹெர் ஸ்டோரிஸ் வெளியிட்டுள்ளது.