மாமன் மகள் என்பது 1955-ம் ஆண்டு வெளியான திரைப்படம். ஆர். எஸ். மணி. எழுதி, தயாரித்து இயக்கியுள்ளார். சி.வி. ஸ்ரீதர் உரையாடல் எழுதியிருப்பதாக விக்கி பீடியா சொல்கிறது. ஆனால் எழுத்து போடும்போது அவர் பெயரைப் போடவில்லை. 1995 இதே பெயரின் சத்தியராஜ் நடித்த திரைப்படம் வந்துள்ளது.
மணி ப்ரோடக்ஷன் “மாமன் மகள்”
நடிகர்கள்
ஆர் கணேசன் சாவித்திரி
டி.எஸ்.துரைராஜ் எஸ்.ஆர்.ஜானகி
டி.எஸ்.பாலையா சி.கே.சரஸ்வதி
டி.பாலசுப்ரமணியம் கே எஸ் ராஜம்
ஜே.பி.சந்திரபாபு
இசை எஸ்.வி. வெங்கட்ராமன்
அசோசியேட் T R ராமநாதன்
பாடல்கள்
சிவன்
ராமையா தாஸ்
கம்பதாசன்
சுரபி
ஆத்மநாதன்
சீதா ராமன்
பாடியவர்கள்
டி.எம்.சௌந்தரராஜன்
ஏ.எம்.ராஜா
ஜிக்கி
டி.வி.ரத்தினம்
ராணி
மைதிலி
டைரக்ஷ்ன் ஆர்.எஸ். மணி.
மாலதி, தாயில்லாப் பெண். தாயார் இறக்குமுன், காணாமல் போன தனது தம்பி மகனைக் கண்டுபிடித்து அவரைத்தான் மாலதி திருமணம் செய்ய வேண்டும் என உயில் எழுதி வைத்திருக்கிறார்.
அப்பாவின் நண்பர் கன்னியப்பன். தொடக்கம் முதலே அவனுக்கு மாலதியின் சொத்து மீது ஒரு கண். தம்பி மகனைக் கண்டுபிடித்து வருவதாகச் சொல்லித் தனது மைத்துனன் தாண்டவத்தை அழைத்து வருகிறார்.

அதே காலகட்டத்தில் சந்திரன் மாலதியின் ஆசிரியராக வருகிறார். இருவரும் காதலிக்கிறார்கள். மிகவும் பயப்படும் இயல்பு கொண்ட சந்திரன், ஒரு காலகட்டத்தில் பயந்து தனக்கு ஒரே ஆதரவாக இருக்கும் பாட்டியிடம் போகிறார். இவ்வாறு இருந்த தாத்தாவை வீரமாக்கிய தாயத்து ஒன்றைக் கொடுக்க, சந்திரன், வீரனாக மீண்டும் மாலதியைத் தேடி வருகிறார்.

தோட்டக்காரராக மாறுவேடத்தில் மாலதி வீட்டிலேயே வேலை செய்கிறார். கன்னியப்பனின் திட்டம் இவருக்குப் புரிகிறது. ஒரு கட்டத்தில் கன்னியப்பன், மாலதியின் அப்பாவை அடைத்து வைத்து, தாண்டவத்திற்குத் திருமணம் செய்து வைக்க முயலுகிறார். வேலைக்காரர் காவல்துறை அதிகாரிகளை அழைத்து வருகிறார். ஆனாலும் மாலதியின் அப்பா கவலையினால், ஊர் ஊராகச் சுற்றுகிறார் என நம்ப வைக்கிறார். திருமணத்திற்கு வந்தவர்களும் கன்னியப்பனுக்கு நற்சான்றிதழ் கொடுக்க, காவலர்கள் நம்புகிறார்கள். ஆனால் சந்திரன், மாலதியின் அப்பாவைத் தப்பிக்க வைக்க, இருவரும் வருகிறார்கள். சந்திரனையும் தன்னையும் கொல்ல கன்னியப்பன் ஏற்பாடு செய்ததாகவும், அதனால் அவர்கள் மறைவாக வேறு ஊரில் வாழ்ந்ததாகவும் சந்திரன் தான் மாமா மகன் என்ற உண்மையைப் பாட்டி வந்து சொல்கிறார்.

பாட்டி கொடுத்த மந்திர தாயத்துதான் நான் வீரனானதற்குக் காரணம்’’ எனச் சந்திரன் சொல்ல, ‘’இது தாயத்து இல்லை; தாத்தாவுடைய மூக்குப்பொடி டப்பா நம்பிக்கையை வளர்க்க அப்படிச் சொன்னேன்’ என்கிறார் பாட்டி. (ரஜினியின் ‘ராஜாதி ராஜா’ நினைவிற்கு வந்தால் நான் பொறுப்பில்லை.) படம் நிறைவடைகிறது.

வழக்கமான கதையமைப்பு; பாடல், நடனக் காட்சிகள். நகைச்சுவை என்ற பெயரில் சிரிக்கவே வைக்காத நகைச்சுவைப் பகுதி என திரைப்படத்தில் எந்த சிறப்பும் எனக்குத் தெரியவில்லை. மாமன் மகள் என்ற தலைப்பே சரியா எனத் தெரியவில்லை. அத்தை மகள் என்பது தான் பொருத்தமாக இருந்திருக்கும். மாமன் மகன்/ அத்தை மகள் என்ற உறவு தானே இதில் வருகிறது.
கவிஞர் கம்ப தாசன் எழுதி, சந்திரபாபு, துரைராஜ் பாடிய பாடல் இது. இந்தத் திரைப்படத்தின் முகவரியே இது தான். மிகவும் பிரபலமான பாடல். இதன் இறுதிப்பகுதி “ஜவலங்கிடி கிரி கிரி சைதாப்பேட்டை வடகறி உட்டான் பாரு ஜாங்கிரி சோன்பப்டி….. எனப் பிற்காலத்தில் உருவங்கள் மாறலாம் திரைப்படத்தில் காமனுக்குக் காமன் பாடலின் இறுதிப் பகுதியாக வரும். மெட்டும் இதே தான். அவ்வளவு பிரபலம் இவர். நடனம் ஆட்டம் பாட்டம் என மிகவும் புகழப்பட்ட பாடல் இது.
ஹே கோவா மாம்பழமே மல்கோவா மாம்பழமே
மச்சி வீட்டில் காச்சிருக்கும் மல்கோவா மாம்பழமே
பச்சை கிளி கொத்தாத மல்கோவா மாம்பழமே
ஜில்லா எங்கும் குல்ல போடும் பலே கில்லாடி
உன்னை தேடி வந்தேன் தில்லாலங்கடி சிங்கார லேடி.
பட்டு பட்டுன்னு வெட்டிகிட்டு எட்டி எட்டி என்னை பாத்துகிட்டு
பட கண்ணாடிய பேத்துக்கிட்டு
சும்மா சிக் சிக் பம்சிக் போட்டுக்கிட்டு
குதிச்சி நீ வாடி வெளியே குதிச்சி நீ வாடி
மினிக்கு ஜடையும் குலுக்கு இடையும் சிலுக்கு உடையும்
தளுக்கு நடையும் என்னை புடிச்சி மயக்கி புடிச்சி
உன்ன நினைச்சி கிறுக்கு புடிச்சி புலம்புறேனே அப்போ புடிச்சி
மானே தேனே கண்ணே பொன்னே வா.
மீட்டு தட்டி முடிச்சிகிட்டு சீட்டாடி போட்டுபுட்டு
உண்டக்கட்டிக்கு தாளம் போட்ட சிங்கமே
புண்ணாக்கு தின்னுகிட்டு திண்ணியில தூங்கி வந்த சிங்கமே
பிரேக்கப் போடு
இன்னும் ஸ்டாப்பிங் ப்ளஸ் வரலேன்களே
கிர்..
பாட்டெல்லாம் நல்லாத்தான் இருக்கு
மெட்டு நம்ம பரம்பரையாலா இருக்கு
ஆங் யார் நீ
அபாயச்சங்கு அங்கமுத்து பாகவதர் சிஷியன் சிம்மக்குரல் விஞ்ஞான பாகவதர்
ஏய் நீ பாடுனா கழுத தான் கேக்கும்
சும்மா நீங்க கேளுங்க சாரு ……வெள்ளைக்காரன் கூத்த பாத்திருக்கியா நீ? ….. எங்க ஜகா வாங்கு”
ஒன் டூ த்ரீரீ fouru பைவ் சிஸ்சு செவன் எயிட்டு
நண்டு வந்து நரிகிட்ட தான் சொல்லிகிச்சாம் குட் நைட்டு
அங்கெ நாத்தியும் மதினியுமா போடுறாளே left right
அங்கே நான் ஆடிருக்கேன் ஆட்டத்தையும் பாத்திருக்கேன்
ஐயாவின் ஆட்டம் போல அம்மாடி நான் கண்டதில்ல
சபாலக்கிடி கிரிகிரி சாப்பிட்டு பாரு வடகறி
கவிஞர் சுரபி எழுதி டி. எம். சௌந்தரராஜன் பாடிய பாடல் இது. நாயகன் துணிவு பிறந்ததும் பாடும் பாடல் இது. ஒரு கையில் பெட்டியையும் இன்னொரு கையில் கோட்டையும் வைத்துக் கொண்டு, காடு மலையெல்லாம் ஏன் ஏறி இறங்குகிறார் என்பது தான் புரியவில்லை.
நெஞ்சிலே உரமிருந்தால் நேர்மைக் குணமிருந்தால்
வஞ்சகத்தை வென்றிடலாம் வையகத்தை நாட்டிடலாம்
தலை நிமிர்ந்து நில்லடா சஞ்சலத்தை வெல்லடா
சக்தியுண்டு கையிலே சாரமுண்டு நெஞ்சிலே
நித்தமுண்டு வெற்றி இந்த வாழ்விலே
பயம் நீங்கினாலே தோல்வியேது பாரிலே
தலை நிமிர்ந்து நில்லடா சஞ்சலத்தை வெல்லடா
தரணியெங்கும் நிகருனக்கு இல்லையென்று சொல்லடா
எண்ணியெண்ணி அழுபவனை ஏமாற்றும் பாழ் விதியே
கண் திறந்து நிற்பவனை கை கொடுத்து தூக்குமடா
M.K.ஆத்மநாதன் எழுதி, ஜிக்கி பாடிய பாடல் இது.
என்றுமில்லா புது இன்பச் சூழலிலே
என்மனம் சிக்கித் தவிக்கிது
எண்ணாத எண்ணங்கள் எண்ணி எண்ணி
எந்தன் இதயவீணை ஒலிக்கிது -இது
ஏனென்று நீ சொல்லு தென்றலே – மனச
என்னவோ பண்ணுது புரியல்ல
வானில் உலாவும் நிலாவும் கண்டே
விளையாடவே ஆசை பிறக்குது
அந்த ஆசை பிறந்த மனசிலே
என்னை அறியாமல் வெட்கமும் வாட்டுது
ஏனென்று நீ சொல்லு தென்றலே – மனச
என்னவோ பண்ணுது புரியல்ல
துள்ளி துள்ளி மனம் அலை மோதுது
நிலை சொல்லத் தெரியாமல் தடுமாறுது
இன்ப வெள்ளத்தில் அன்னம் போல் விளையாடுது
வேதனையாகவும் உரு மாறுது
ஏனென்று நீ சொல்லு தென்றலே – மனச
என்னவோ பண்ணுது புரியல்ல
புதுப்புது வண்ணங்கள் பிறக்குது
பூங்காவில் ஒரு மலர் சிரிக்குது
மதுர கானம் பாடி வந்தொரு பொன்வண்டு
மந்திரப் பொடி தூவி மயக்குது
மலரின் மதுவை பருகிட துடிக்குது
ஏனென்று நீ சொல்லு தென்றலே
உள்ளந்தன்னிலே உறுதியானதே
வெள்ளமாக பொங்கினாலே
பள்ளமெலாம் மேடாகிப் போகுமடா
பாலைவனம் சோலையாக மாறுமடா
சிறு மாறுதல்கள் கொண்ட இரு பாடல்கள் உள்ளன. பெண்குரலைப் பாடியிருப்பவர் ஜிக்கி. ஆண்குரலைப் பாடியிருப்பார் ஏ எம் ராஜா.
மண்ணும் விண்ணும் ரகசியம் பேசுவது எதனாலே
அது மரத்தினாலே!
கண்ணும் கண்ணும் ரகசியம் பேசுவது எதனாலே- அந்த
அதிசயமாக ரகசியம் ஒண்ணு
அவசியம் தெரிஞ்சிக்கணும் -அதுக்கும்
அர்த்தம் புரிஞ்சிக்கணும்
அழகான காதல் காவியம் சொல்லிக் கொடுத்தால் போதுமா
அதற்காக இனிமேல் வேறு பள்ளிக்கூடம் தான் போகணுமா?
ஆந்த போலே அப்படி இப்படி அரண்டு மிரண்டு பார்க்கணுமா?
ஆசையாக பேசிட வந்தா அங்கும் இங்கும் பதுங்கணுமா?
வேதாந்த ஞானிகள் கூட விளங்கிக் கொள்ள முடியாது
விஞ்ஞான நிபுணர் வந்து விளக்கம் சொல்ல முடியாது
ஏமாந்திடாமல் யோசிக்கணும் எல்லாம் தன்னால் விளங்கிடும்
என்னாங்க சார் நீங்க இன்னும் அறிய பிள்ளையா சரி தான் போங்க
மலரும் மனமும் இணைபிரியாதது எதனாலே!
அது இயற்கை அன்பினாலே
மனமும் மனமும் மகிழப்போவது எதனாலே! -அந்த
அதிசயமாக ரகசியம் ஒண்ணு
அவசியம் தெரிஞ்சிக்கணும் -அதுக்கும்
அர்த்தம் புரிஞ்சிக்கணும்
அழகான காவியமெல்லாம் படித்திருந்தால் போதுமா!
ஆடாத ஓவியம் போலே அசந்து நிற்பது நியாயமா?
ஆந்த போலே அப்படி இப்படி அரண்டு மிரண்டு பார்க்கணுமா?
ஆசையாக பேசிட வந்தா அங்கும் இங்கும் பதுங்கணுமா?
வேதாந்த ஞானிகள் கூட விளங்கிக் கொள்ள முடியாது
விஞ்ஞான நிபுணர் வந்து விளக்கம் சொல்ல முடியாது
ஏமாந்திடாமல் யோசிக்கணும் எல்லாம் தன்னால் விளங்கிடும்
இனிமேலும் நீயும் ஏதும் அறிய பெண்ணாய் இருந்திடலாமா?
(பாபநாசம்) சிவன் எழுதிய அம்பா தேவி என்னும் படலைப் பாடியிருப்பவர் T. V. ரத்தினம்
அம்பா தேவி நீயே துணை
தென் மதுரை வாழ் மீனலோசனி
தேவாதி தேவன் சுந்தரேசன்
சித்தம் கவர் புவன சுந்தரி
பாவை எனது மன நிலையறிவாய்
பழுதிலா என் காதல் உறுதியும் அறிவாய்
பகலிலே பொழுது விடியலிலே எந்தன்
மனதின் நாட்டம் கனவில் இல்லை
தெய்வீக ப்ரேமையுடன் நற்குணம் நிறைந்த
மணாளன் தன் வாழ்வெல்லாம்
அன்பு மலர் இன்ப மணம் கமழ்ந்து மிகுந்து
அருள் புரிவாய் அம்மா
படைப்பாளர்

பாரதி திலகர்
தீவிர வாசிப்பாளர், பயணக் காதலர்; தொன்மை மேல் பெரும் ஆர்வம் கொண்டவர். அயல்நாட்டில் வசித்து வந்தாலும் மண்ணின் வாசம் மறவாமல் கட்டுரைகள் எழுதிவருகிறார். ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய கட்டுரைகள், ‘பூப்பறிக்க வருகிறோம்’, ‘சினிமாவுக்கு வாரீகளா?’ என்கிற புத்தகங்களாக, ஹெர் ஸ்டோரிஸில் வெளிவந்திருக்கிறது. தற்போது ‘சினிமாவுக்கு வாரீகளா – 4’ மற்றும் ‘சாதனை படைக்கும் சாமானியர்’ என்கிற இரண்டு தொடர்களை ஹெர் ஸ்டோரீஸ் வலைத்தளத்தில் எழுதிவருகிறார்.




