பெண் 1954ஆம் ஆண்டு வெளியான திரைப்படம். கதை வசனம் திரு ரா. வேங்கடாசலம் எழுதியிருக்கிறார். ஏ வி எம் நிறுவனம் தயாரித்த இத்திரைப்படத்தை இயக்கியவர் திரு எம்.வி. இராமன்.
திரு எம்.வி. இராமன் என்னும் மகாலிங்கம் வெங்கட் ராமன் எடிட்டராகத் தனது திரை வாழ்க்கையைத் தொடங்கி, பின்னர் எழுத்து மற்றும் இயக்கம் எனத் தொடர்ந்திருக்கிறார். வாழ்க்கை (1949) இல் இணை இயக்குநராகவும், கதையாசிரியராகவும் பணியாற்றியுள்ளார். அதே திரைப்படத்தைத் (வாழ்க்கை) தெலுங்கில் ஜீவிதம் என்றும் இந்தியில் பஹார் என்றும் இவரே இயக்கியிருக்கிறார். பிற்காலத்தில் கொஞ்சும் சலங்கை (1962) பட்டணத்தில் பூதம் (1967) உட்படப் பல வெற்றிப் படங்களை இயக்கியிருக்கிறார்.
பெண் என்னும் இத்திரைப்படம் ஒரே நேரத்தில் ஹிந்தி மொழியில் லட்கி எனவும் தெலுங்கு மொழியில் சங்கம் எனவும் தயாரிக்கப்பட்டது. மூன்று மொழிகளிலுமே வைஜெயந்திமாலா அம்மாவே நடித்திருக்கிறார். ஹிந்தியிலும் வைஜயந்திமாலாவும் அஞ்சலி தேவியும்தான் நடித்திருக்கிறார்கள். ஜெமினிக்கு அவர்களுக்குப் பதிலாக பரத் பூஷனும், பாலச்சந்தருக்குப் பதிலாக கிஷோர் குமாரும், சாரங்கபாணிக்குப் பதிலாக ஓம் பிரகாஷும் நடித்து இருக்கிறார்கள்.
திரைப்படத்தில் எழுத்து போடும்போது, வைஜெயந்திமாலா, அஞ்சலிதேவி நடிக்கும் பெண், எனத் தான் முதலில் போடுகிறார்கள். ஆங்கிலத்தில் போடும்போது ‘Girl’ எனப் போடுகிறார்கள்.
இசை ஆர்.சுதர்சனம். பாடல்கள் பாபநாசம் சிவன், உடுமலை நாராயண கவி, கு.சா. கிருஷ்ணமூர்த்தி, கே. பி. காமாட்சி மற்றும் வி.சீதாராமன் இயற்றியுள்ளனர்.
பின்னணிப் பாடல்கள் எம்.எஸ்.ராஜேஸ்வரி, டி.எஸ்.பகவதி, சுசிலா, சி.எஸ்.ஜெயராமன், மோத்தி,.சந்திரபாபு என போடுகிறார்கள். ‘மாதர் தம்மை இழிவு செய்யும்’ என்ற பாரதியார் பாடலும் உள்ளது. ஆனால் அவர் பெயர் குறிப்பிடப்படவில்லை. விடுதலை பெற்ற பின்பும் அவரது பாடல்களுக்குத் தடை இருந்ததா எனத் தெரியவில்லை. அல்லது தடை குறித்து யாரும் சிந்திக்காமல் இருந்திருக்கலாம்.
உல்லாசமாகவே உலகத்தில் வாழவே பாடலைச் சந்திரபாபு, வீணை பாலச்சந்தருக்காகப் பாடியிருக்கிறார். எங்கள் டூரிங் டாக்கீஸ் புகழ் பாடலாக இருந்த இந்தப் பாடல் நடிகர் சந்திரபாபு, தனக்காகப் பாடியிருப்பார் எனத் தான் இதுவரை நினைத்து இருந்தேன்.
நடிகர்கள்
சங்கரபாணி
நாகையா
ஆர் கணேசன்
பாலச்சந்தர்
எஸ் வி சஹஸ்ரநாமம்
வி .கே. ராமசாமி
ஆர் பாலசுப்ரமணியம்
பி.டி. சம்பந்தம்
கே.என். கமலம்
கே.ஆர். செல்லம்
பேபி ராதா
குமாரி புஷ்பா
இந்த வரிசையில் தான் பெயர்கள் போடுகிறார்கள்.
கண்மணி, ராணி இருவரும் தோழிகள். மறுபுறம் ராஜாவும் ரகுவும் தோழர்கள். ராணி, தவறு எங்கு நடந்தாலும், குறிப்பாகப் பெண்களுக்கு எதிராக எங்குத் தவறு நடந்தாலும் தட்டிக் கேட்பவர். கண்மணி, அமைதியாகப் போகும்படி அறிவுறுத்துபவர். அந்தப்பக்கம், ராஜா, மாதர் தம்மை இழிவு படுத்தும் மடமையைக் கொளுத்துவோம் எனப் பாடுபவர் என்றால், அவரது அப்பா, பெண்களே பேய் என்னும் கொள்கை உடையவர். ரகு பெற்றோர் இல்லாதவர். கொஞ்சம் ஜாலிப் பேர்வழி.
ராஜாவும் ரகுவும் கல்லூரிக்கு என நகரம் (பெங்களூரு) வருகிறார்கள். வாகனத்தில் வரும்போதே எதிரில் வரும் வாகனத்தில் இருக்கும் கண்மணி, ராதா இருவரிடமும் சண்டை. சினிமா வழக்கப்படி ராஜா, கண்மணியைக் காதலிக்கிறார். ராணியை, ரகு காதலிக்கிறார்.
கண்மணி தாயை இழந்தவர். பெற்றோர் சாதி மறுப்புத் திருமணம் செய்தவர்கள் என்பதால், கண்மணியுடன் ராணி பழகுவது ராணியின் அம்மாவிற்குப் பிடிக்கவில்லை. ஆனால் அப்பா பரந்த மனப்பான்மை உடையவர். மகளைச் சுதந்திரமாக வளர்ப்பவர்.
கண்மணியின் பெற்றோர் சாதி மறுப்புத் திருமணம் செய்தவர்கள் என்பதால், அவரது திருமணம் தடைப்பட்டுக் கொண்டே இருக்கிறது. ஒரு காலகட்டத்தில் வயதான ஒருவர் பெண் கேட்டு வருகிறார். ராணி அந்த வயதானவரைத் திட்டி அனுப்புகிறார். அப்பா மனமுடைந்து போகிறார்.
ராணி, விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்வதற்காக, மைசூர் பல்கலைக்கழகத்தின் சார்பில் கொழும்பு செல்கிறார். Olympics at Colombo என்கிறது செய்தித்தாள். திருவாங்கூர், மதராஸ், மைசூர், சிலோன் என அப்போது பல்கலைக்கழகங்கள் இருந்திருக்கின்றன. அனைத்துப் போட்டிகளிலும் அவர் தான் வெல்வார் என்பது தான் அனைவருக்கும் தெரியுமே! அந்த நிகழ்வு நேரடி ஒலிபரப்பாக வானொலியில் வருகிறது. அதைக் கேட்டுக்கொண்டு இருந்த கண்மணியிடம் தனது காதலைச் சொல்ல ராஜா வருகிறார். அங்கு ராணிக்குக் காயம் ஏற்பட, இங்கு, நேரடி ஒலிபரப்பைக் கேட்டுக் கொண்டிருந்த கண்மணி, அந்த செய்தியை அப்பாவிடம் சொல்ல வந்து, கீழே விழுகிறார். ராஜா முதலுதவி செய்கிறார்.
காதல் கைகூடுகிறது. கண்மணியின் அப்பா, சாதி மறுப்புத் திருமணம் செய்தது குறித்துக் கூறுகிறார். நண்பன் ரகு, ராஜா கண்மணி திருமணத்திற்கு ஆட்சேபம் கூறுகிறார். அது எனக்கு ஒரு பொருட்டே இல்லை எனச் சொல்லி, ராஜா திருமணம் செய்து கொள்கிறார்.
பர்மாவில் கண்மணியின் அத்தை மகன் சுந்தரம் இருக்கிறார். அவர் சிறுவயதில் பேசி வைத்தபடி கண்மணியைத் திருமணம் செய்து கொள்ளும் எண்ணத்தில் வருகிறார். இங்கு அவருக்குத் திருமணம் ஆகிவிட்டது எனத் தெரிந்ததும், சென்னைக்குப் புறப்பட்டு விடுகிறார். அவரைத் தேடி வந்த கண்மணியின் அப்பா, சுந்தரம் கடலுக்குள் போய்விட்டார் என நினைத்து, சுந்தரம் சுந்தரம் எனக் கத்திக் கொண்டே கடலுக்குள் செல்கிறார். ஆனால், அவரோ, ஒரு படகின் அருகில் அமர்ந்து குடித்துக் கொண்டு இருக்கிறார். விளைவு கடலுக்குள் விழுந்து அப்பா இறந்து விடுகிறார். இடம் பெசன்ட் நகர் எலியட்ஸ் பீச்.
ராஜா திருமணம் செய்து கொண்டது பெற்றோருக்குத் தெரிய வருகிறது. ஊர் இவர்களுக்கு எதிராகக் கிளம்புகிறது மகனை வரவழைத்து வேறு திருமணத்திற்கு ஏற்பாடு செய்கிறார்கள். அவர்களை மீறி ராஜன் இங்கே வருகிறார். இங்கு வந்து பார்த்தால், வீட்டில் கண்மணியும் சுந்தரும் இருக்கிறார்கள். இவருக்கு உடனே சந்தேகம். வீட்டிற்குப் போய்த் திருமணத்திற்கு ஒத்துக் கொள்கிறார். சந்தேகம் வந்தால் ஏன் எனக் கேட்காமலேயே செய்த திருமணத்திற்கான மணமுறிவைக் கூட கேட்காமல், உடனே திருமணம் தான் நாயகன் செய்யும் செயலா எனத்தான் கேட்கத் தோன்றியது.
கால் அடிபட்டு வந்த ராணி சக்கர நாற்காலியில் இருக்க வேண்டிய சூழ்நிலை. இலங்கையில் இருக்கிறார். ஆதலால், கண்மணிக்குக் கடிதம் போட்டுத் தொடர்பு கொள்ள நினைக்கிறார். அதுபோலவே, கண்மணியும் தனக்குத் திருமணம் ஆனதைக் கடிதம் மூலம் தெரிவிக்கிறார். ராணியின் அம்மா, அனைத்துக் கடிதங்களையும் கிழித்துப் போட்டுத் தொடர்புகளைத் தகர்த்தெறிகிறார்.
இடையில் ராணி தாய் நாடு செல்வதற்கு முன் கிராமிய நடனம் ஆடுகிறார் எனச் செய்தித்தாள் சொல்கிறது. அதுவரை, ராணி, இலங்கையிலிருந்து இருக்கிறார் எனத் தெரிகிறது
இப்படி நாட்கள் கடந்த நேரத்தில் தான் ராஜாவிற்குத் திருமண ஏற்பாடு நடைபெறுகிறது. மணமகள் வேறு யாருமல்ல ராணியே தான். கடிதம் எதற்கும் பதில் இல்லாததால், திருமணத்திற்கு முந்தைய நாள், ராணியே போய்க் கண்மணியை அழைத்து வருகிறார்.
ராணி, ஒரு பிரபலம் என்பதால், செய்தி, செய்தித்தாளில் வருகிறது. அதைப் பார்த்து, ரகுவும், சுந்தரும் வருகிறார்கள். உண்மை தெரிகிறது. கண்மணியை ஏற்றுக் கொள்வதாக இருந்தால், உங்களால் ஊருக்குள் வர முடியாது என ராஜாவின் அப்பாவை அவரது உறவினர் கேலி பேசுகிறார். அவர் வேறு யாருமல்ல; கண்மணியை ஏற்கனவே பெண் பார்த்து விட்டுச் சென்ற வயதானவர். ராணி அதைச் சொல்லிக் காட்டுகிறார். ராஜாவின் அப்பாவின் எண்ணம் ‘பெண்கள் வீட்டின் கண்கள்’ என்பதாக மாறுகிறது. அதே மேடையில் கண்மணி ரகுவைத் திருமணம் செய்யச் சொல்லி ராணியிடம் சொல்ல ரகு ராணி திருமணம் நடைபெறுகிறது.
நாயகி வைஜயந்தி மாலா. சென்னை திருவல்லிக்கேணியில் பிறந்த இவர்,1940களில் பிரபலமாக இருந்த நடிகை வசுந்தராதேவியின் மகள். வசுந்தராதேவி நடித்த மங்கம்மா சபதம் பிரமாண்டமான வெற்றியைப் பெற்ற திரைப்படம். சொல்லப்போனால் பெண்ணை முன்னிலைப்படுத்தி வெளிவந்த திரைப்படங்களில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற முதல் படமாகக் கூட இருக்கலாம்.
வைஜெயந்திமாலா, 1940 ஆம் ஆண்டு வாடிகன் சிட்டியில் தனது 7வது வயதில், போப் பயஸ் XII முன்னால் நடனமாடத் தேர்ந்தெடுக்கப் பட்டவர். இவ்வாறு சிறுவயதிலிருந்தே நடனம் அவருக்குக் கைகூடி வந்திருக்கிறது.
ஏவிஎம் புரொடக்ஷன்ஸின் ‘வாழ்க்கை’ (1949) படத்தில் வைஜெயந்திமாலா 13 வயதில் அறிமுகமானார். அதே கதையின் இந்திப் பதிப்பில் நடித்து இந்திப் படவுலகில் கால் வைத்தது மட்டுமல்லாமல், இந்தியில் மிகவும் பிரபலமாகவும் இருந்தார். பல விருதுகளைப் பெற்ற இவர், காங்கிரஸ் சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக இருந்தவர். தற்போது பாரதிய ஜனதா கட்சியில் இருக்கிறார்.
நடிகர் ஒய்.ஜி. மகேந்திரனின் அப்பா ஒய்.ஜி.பார்த்தசாரதி, இவரது தாய் மாமா.
பாடியவர் எம் எஸ் ராஜேஸ்வரி
அகில பாரத பெண்கள் திலகமாய்
அவனியில் வாழ்வேன் நானே
ஆணுக்குப் பெண் தாழ்வெனப் பேசும்
வீணரை எதிர்ப்பேன் நானே…..(அகில)
வாழ்வினிலே இன்பம் வாய்த்திடவே
பழமை ஜாதி பேதம் எல்லாம்
பகைக்கும் புதுமைப் பெண் நானே –எள்ளி
நகைக்கும் புதுமைப் பெண் நானே (அகில)
வாசுகி ஔவை மணிமேகலை
மரபில் உதித்தவள் நானே – ஒளி
வீசும் கற்புக் கனலாம் கண்ணகி
வீரப் பெண்மணி போலே
வாழ்ந்திடுவேன் புவி மேலே
என introduction song என்னும் அறிமுகப்பாடலில் வைஜயந்தி மாலா குதிரையில் வருவது தான் திரைப்படத்தின் முதல் காட்சி.
அடுத்த காட்சி, ஒரு கணவன் தன் மனைவியை அடிக்கிறான். மனைவியிடம் போய் வைஜயந்தி மாலா போய் என்ன எனக் கேட்க? அப்பெண்ணோ, நீங்கள் இதில் தலையிட வேண்டாம் அம்மா; இது புருஷன் பொஞ்சாதி சண்டை” என்கிறார். இவர் பதிலுக்கு, “இது தான் முட்டாள் தனம்; இவன் அடிச்ச அடி உன்னை மாத்திரம் அடிச்சது இல்லை. பெண் குலத்துக்கே ஆண்கள் செய்கிற அக்கிரமம்” என புரட்சிப்பெண்ணாகத் தான் தனது, ஆட்டத்தைத் தொடங்குகிறார். இவர் பதிலுக்கு அந்த ஆணை அடிக்க சாட்டையை ஓங்குவது எல்லாம் கொஞ்சம் கூடுதல் தான். முன்பின் தெரியாத யாரை என்றாலும் அடிக்கப் போவது முறை கிடையாது. அது ஆணானாலும் சரி; பெண்ணானானாலும் சரி.
மற்றபடி திரைப்படத்தின் இறுதி வரை, அதே வேகத்துடன் அவரைப் படைத்திருப்பது சிறப்பு. அடிக்கிறதும் அணைக்கிறதும் அவன் தானே எனத் தோழி சொல்ல, அணைச்சா அடிக்கணுமாக்கும் எனப் பதில் சொல்வதாகட்டும்; மிகவும் வயதானவர் பெண் கேட்டு வரும் போது இவர், பாட்டி வேடம் போட்டு நாடகம் நடத்துவதாகட்டும் அதே துடிப்புடன் செய்திருக்கிறார்.
அவரின் உயரம், நல்ல உடல்வாகு போன்றவற்றால், எந்த உடை அணிந்தாலும் மிக நேர்த்தியாகத் தெரிகிறார். அவரது நடனத் திறமையைக் காட்டுவது போன்றே தான் திரைப்படம் இருக்கிறதே தவிர, கதையை நகர்த்துவதற்கான அவரது காட்சிகள் குறைவு என்றே சொல்ல வேண்டும். கிடைத்த கொஞ்சம் இடத்திலும், நன்றாகச் செய்து இருக்கிறார். தமிழ் உச்சரிப்பு பல இடங்களில் ch போடுவதற்குப் பதிலாக sh போடுவது போலவே இருந்தது. எடுத்துக்காட்டாக செய்ற என்று சொல்ல வேண்டுமென்றால், ஷெய்ர எனச் சொல்கிறார். அவர் அப்பா பாத்திரமும், நாயகனின் அப்பா பாத்திரமும் கூட சில நேரங்களில் இப்படிப் பேசுகிறார்கள்.
கண்மணியாக வரும் அஞ்சலிதேவி, அமைதியான பெண்ணாக மிக இயல்பான, நடிப்பை வழங்கி இருக்கிறார்.
“மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்;
வைய வாழ்வு தன்னில் எந்த வகையினும் நமக்குளே
தாதர் என்ற நிலைமை மாறி ஆண்க ளோடு பெண்களும்
சரிநிகர் சமானமாக வாழ்வம் இந்த நாட்டிலே!”
என பாரதியார் எழுதி டி. ஏ. மோதி அவர்கள் பாடிய பாடலுடன் நாயகன் ஜெமினி கணேசன் அறிமுகம் வருகிறது. திரைப்படத்தில் எழுத்து போடும்போது, பாலச்சந்தர் பெயரை இவருக்கு முன்னே போடுகிறார்கள். அப்போது ஜெமினி கணேசன் அவர்களின் பெயர் ஆர் கணேசன் என இருந்திருக்கிறது. இவரின் பெயரைப் பின்னால் போட்டாலும், கதை முழுவதும் இவரைச் சுற்றியே நகருகிறது. இவர் தான் நாயகன் எனத்தான் சொல்லத் தோன்றுகிறது.
நாயகனின் தோழனாக வரும் வீணை பாலச்சந்தர், குறும்புக்கார வேடத்தில் சிறப்பாகச் செய்து இருக்கிறார். மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம் என்ற பாடலுக்கு ஆடும் ஆட்டமாகட்டும், உல்லாசமாகவே உலகத்தில் வாழவே போடும் ஆட்டமாகட்டும்; “தூங்குறப்பவே கண்ணு தெரியிற வயசு” எனச் சொல்லும் பெரியவரிடம், “நடந்துக்கிட்டு இருக்கும் போதே கண்ணு தெரியாத வயசு”, என இவர் பதில் சொல்வதாகட்டும் அவ்வளவு குறும்பு. பார்ப்பதற்கு இளம் வயது நாசர் மாதிரி இருக்கிறார்.
நாயகனின் அப்பாவாக சாரங்கபாணி வருகிறார். எழுத்து போடும்போது, அவர் பெயரைத் தான் முதல் பெயராகப் போடுகிறார்கள். மேலே கடிகாரம், உள்ளே பொடி என அவர் வைத்திருக்கும் பழைய கால பொடி டப்பாவில், அவர் பொடி எடுத்துப் போட்டுக்கொண்டே, பெண்களைத் தொடர்ந்து கேவலமாகப் பேசுகிறார். இறுதியில் உளம் மாறுகிறார்.
நாயகியின் அம்மாவாக வருபவர் (கே.ஆர்.செல்லம்) அவ்வளவு இயல்பாக நடித்துள்ளார்கள்.
திரைப்படத்தில் வரும் கர்னல் என்றால், வீட்டிலும் துப்பாக்கியுடனேயா இருப்பார்? ஆனால் பல திரைப்படங்கள் அதைத்தான் தொடர்ந்து சொல்கின்றன. இப்படமும் விதிவிலக்கல்ல.
“ஜாதி பேதம் பேசும் பொல்லா சமூகம் மாறாதா?
காதல் வாழ்வின் மேன்மை காணும் காலம் வாராதா?
நீதியில்லா மாந்தர் சொல்லும் நிந்தை நீங்காதா? ஜோதியாம் என் கண்மணி வாழ்விலே சுகம் ஓங்கவே- ஜாதி”
என வி. நாகய்யா அவர்கள் பாடிய விழிப்புணர்வு பாடல் ஒன்று உள்ளது.
எளியோர் மனம் படும் பாட்டிலே
எழும் ஓசையாம் தாலாட்டிலே
ஆண்டவன் ஆகாசமெல்லாம் தூங்குகின்றாரே!
மாந்தரெல்லாம் மாநிலமேல் ஏங்குகின்றாரே
வளர் பார்தனிலே யாவரும் பகவான்
பகைமையொடு பாகுபாட்டைப் படைத்து
தாழ்ந்தோருயர்ந்தோராக மக்கள் வாழ
சிலர்தனவந்தர் பலர் தரித்திரராய்க் காணும்
இது யார் செயல்? விதியா! வினையா!
அறிந்து சொல்வீரே!
கோடான கோடி உயிர்களுக்கொரு தந்தை
சிலர் கோடையில் பலர் குடிசையில் குடி
கூன் குருடு நொண்டி செவிடர் ஊமை பிற
(இச்சொற்கள் தற்போது வழக்கொழிந்த சொற்கள் என்றாலும் பாடலில் இருப்பதால் அப்படியே பதிவு செய்கிறேன்)
நிறை குறைகளுக்கே இதுவரைக்கும் ஒரு
இது யார்… அறிந்து சொல்வீரே!
என கடவுகளைக் கேள்வி கேட்கும் சி.எஸ்.ஜெயராமன் அவர்கள் பாடிய பாடல் ஒன்று உள்ளது.
INA கேப்டன் என வரும் சுந்தரத்திற்குப் பெரிய வரவேற்பு, துறைமுகத்திலேயே கிடைக்கிறது. சென்னை இளைஞர் சங்கம் வரவேற்பு கூட்டம் நடத்துகிறது. முகப்பில் ஜெய் ஹிந் என வண்ண விளக்கு அலங்காரம். அவர் சாதி ஒழிப்பு குறித்துப் பேசுகிறார், என்ற காட்சியெல்லாம், நேதாஜி என்ற பெயருக்கு அப்போது இருந்த செல்வாக்கைக் காட்டுகின்றன. நேதாஜின் படத்தின் அருகே, ராட்டை பொறித்த மூவர்ணக்கொடி தான் உள்ளது. எங்கள் எதிர்வீட்டுத் தாத்தா இப்படி ஒரு கொடி வைத்திருந்தார்.
1931 கராச்சியில் கூடிய காங்கிரஸ் குழு, பிங்கலி வெங்கைய்யா வடிவமைத்த இந்த கொடியை ஏற்றுக் கொண்டது. ஜூலை 14, 1947-இல் சாரநாத் சாஞ்சி ஸ்தூபியில் உள்ள தர்ம சக்கரம் ஏற்கப் பட்டது. இவ்வாறு மாற்றியமைக்கப்பட்ட தேசியக் கொடி முதல் முதலாகச் சுதந்திர இந்தியாவில் ஆகஸ்ட் 15, 1947-ஆம் நாள் ஏற்றப்பட்டது.
அதனால், இந்த திரைப்படம் இதற்கு இடைப்பட்ட காலகட்டத்தில் நிகழும் நிகழ்வுகள் என எடுத்துக் கொள்ளலாம். அதற்குள் தந்தி போக்குவரத்து ஆரம்பமாகிவிட்டதா? என சுந்தரம் கேட்கிறார். உலகப்போர் காலகட்டத்தில் இது நிறுத்தப் பட்டிருக்க வேண்டும். இந்தக் கொடியை வைத்துக் கொண்டே, அடிமையைத் தகர்த்த தியாகிகளின் பெயரால் கேட்கிறேன் என்றும் அவர் தனது சொற்பொழிவில் கூறுகிறார். அது, விடுதலைக்குப் பின்னான காலகட்டம் எனவும் நினைக்கத் தோன்றுகிறது.
வீடுகள் மிக அழகாக வடிவமைக்கப் பட்டுள்ளன.
அன்றைய பெங்களூருவின் தெருக்கள் தானா எனத் தெரியவில்லை. தெருக்களும் மிக அழகாக இருக்கின்றன.
திருமண ஊர்வலத்தில் வாண வேடிக்கை, யானைகள், குதிரைகள், பூப்பல்லக்கு எல்லாம் அமர்க்களம். விளக்கு அலங்காரமும் சிறப்பாக உள்ளது.
சந்திரபாபு பாடிய பாடல்
கல்யாணம் கல்யாணம் வேணும் வாழ்வில் கல்யாணம்…
உல்லாசமாகவே உலகத்தில் வாழவே
மாப்பிள்ளையாகி ஆனந்தமாக மணமாலை சூடிடும்
மங்காத இன்பமே மனைவியினாலே
மாமியார் வீடே சொர்க்கத்தை போலே
ஆணுக்கு பெண்ணும் பெண்ணுக்கு ஆணும்
வேணும் கட்டாயம் வாழ்விலே கல்யாணம்-2 வைபவம்..
மாப்பிள்ளையாகி ….
காதலுக்கு ஜாதி இல்லே பேதமில்லே ஏதுமில்லே
கருப்பில்லே செகப்பில்லே கட்டு தாலி கழுத்திலே
ஆண்டவன் எனக்கே அருள் புரிந்தானே
ஆகும் என் மனமே அன்றைய தினமே…
சரோஜா, கிரிஜா, ஜலஜா, வனஜா.
மாலினி, லோசனி, மஞ்சுளா, பாஷிணி.
யாரோ ஒரு பெண்மணி அவளே உன் கண்மணி
பட்டண பெண்ணோ பட்டிக்காடோ
கட்டின ராஜ ஹனி மூன் போடா
வீட்டின் விளக்கு வாய்த்தாள் உனக்கு
விதி கூட்டி வைத்த
தோழிகள் இருவரும் சேர்ந்து “சொன்ன சொல்லை மறந்திடலாமோ வா வா வா என்ற பாடல் ஒளிபடைத்த கண்ணினாய் வா வா வா என்ற தொனியில் இருக்கிறது. தோழிகள் இருவரும் சேர்ந்து பாடும் பாடல் அவ்வளவு இனிமை. டி.எஸ்.பகவதி, எம்.எஸ்.ராஜேஸ்வரி இருவரும் பாடும் இப்பாடல் இரு குரலிசை மூலம் பிரபலமானதாக இருந்தது.
சொன்ன சொல்லை மறந்திடலாமா வா வா வா
உன் சுந்தர ரூபம் மறந்திடப் போமோ வா வா வா
இன்னமுதம் போல் பேசிடும் கண்ணா வா வா வா
இதயம் தனையறிந்து மனம் மகிழ்ந்து அருகிலே வா வா
தண்டை ஒலி இசையைக் கேட்டதில்லையோ வா வா வா – அந்தச் சத்தத்திலே போதை கொண்டதில்லையோ வா வா வா
கெண்டை நிகர் விழியைக் கண்டதில்லையோ வா வா வா -அந்தக் கிறுக்கிலே இன்பம் கொண்டதில்லையோ அருகிலே வா வா
இதய வீணையை மீட்டி விட்டாயே வா வா வா -அந்த
இனிய நாதமென் உடலை வாட்டுதே வா வா வா
புதுப்புது அழகாய் தோற்றுகிறாயே வா வா வா - மது
மலரை வண்டு மறப்பதுண்டோ அருகிலே வா வா
வாளின் சக்தி பெரிதா? பேனாவின் சக்தி பெரிதா என்ற நாட்டிய நாடகம்
வாள் முனையின் சக்தியினால் உலகம் ஆளுவோம் எனத் தொடங்கும், டி.எஸ்.பகவதி, எம்.எஸ்.ராஜேஸ்வரி & பி.சுசீலா என்ற மூன்று பெரிய பாடகர்கள் இணைந்து பேனா பெரிதா? வாள் பெரிதா என வரும் போட்டிப்பாடல். இரண்டும் நாட்டுக்குத் தேவை என்கிறது. அந்த பாடலுக்கு மூன்று விதமான மேடைகள் போட்டுப் பாடலை இன்னொரு கோணத்திற்குக் கொண்டு சென்று இருக்கிறார்கள்.
1852 ஆம் ஆண்டு வெளிவந்த “பெற்ற தாய்” திரைப்படத்தில் ‘எதுக்கு அழைத்தாய்’ என்ற பாடலை, பி. சுசிலா அவர்கள் முதலில் பாடியிருக்கிறார்கள். இந்த திரைப்படத்தில் வரும், வாள் முனையின் சக்தியினால் உலகை ஆளுவோம் என்ற பாடலில் அவர்களும் பாடியிருக்கிறார்கள் இதற்கு முன் வேறு பாடல்கள் பாடியிருக்கிறார்களா எனத் தெரியவில்லை. இது அவரது இரண்டாவது பாடலாக இருக்கலாம்.
பி. சுசிலா தமிழ்நாட்டில் உள்ள அனைவரின் உள்ளங்களிலும் ஊடுருவி வாழ்பவர். தமிழுக்கும் அமுதென்று பேர் என அனைவருக்கும் தமிழ் சொல்லிக் கொடுப்பவர். புலப்பாக்க சுசீலா என்ற சுசிலாம்மா ஆந்திரா மாநிலம் விஜயநகரத்தில் பிறந்தவர். முறையான இசைப்பயிற்சி பெற்றவர். 1950 ஆம் ஆண்டில் சென்னை வானொலியில் பாப்பா மலர் நிகழ்ச்சியில் பாடத்தொடங்கினார். பின் தான் ‘பெற்ற தாய்’ படத்தில் பாடியிருக்கிறார். சில பத்தாயிரம் பாடல்களைப் பாடியிருக்கும் அவர் தென்னிந்தியாவில் இசைத்தொடர்பாக இருக்கும் அனைத்து விருதுகளையும் பெற்றவர். திரையுலகின் வரலாறு என எழுதினால் அவரைத் தவிர்த்து விட்டு எழுத இயலாது எனச் சொல்லுமளவிற்கு வாழ்ந்து கொண்டிருப்பவர்.
வாள்
வாள் முனையின் சக்தியினால் உலகம் ஆளுவோம்
இதன் வலிமையினால் பகையை வீழ்த்தி வாகை சூடுவோம்
வெற்றி வாகை சூடுவோம்
அரசாளும் சக்தி யாகும் எங்கள் வீர வாளுக்கே
வெற்றி வீரவாளுக்கே
இந்த ஆண்மையேது உலகினிலே எழுதுகோலுக்கே
ஏழை எழுதுகோலுக்கே
அரை நொடியில் ஆண்டியையும் அரசனாக்குவோம்- மக்கள்
அடிமை வாழ்வைப் போக்கி நாட்டில் விடுதலை வாழ்வோம்.
பேனா
எழுதுகோலின் சக்தியாலே உலகை ஆண்டிடுவோம்
என்றும் அழிவில்லாத கலைகளினாலே அறிவை வளர்த்திடுவோம்- மக்கள் அறிவை வளர்த்திடுவோம்.
நாவசைந்தால் நாடகம் கவிக் காவியம் வளரும் -உயர்
நாகரீகப் பண்பும் அன்பும் நாட்டிலே பெருகும்
நவலோக சொர்க்க போகம் யாவும் சேரும் வாழ்வினிலே
வாள்:
கத்தியின் சக்தியைத் தெரியாமல் வீணாக கத்தாதே போ போ
பேனா:
புத்தியின் சக்தியை அறியாமல் தற்புகழ்ச்ச பேசாதே போ போ பே௱
வாள்:
சேரன் சோழன் பாண்டியன் வாழ்வு சிறந்து ஓங்க ஜயமளித்த கத்தி
பேனா :
சென்ற கால நிகழ்ச்சியும் மக்கள் வாழ்வின் மகிமையும் பொன் எழுத்தால் பொறித்துக் காட்டும் சக்தி
சமாதான தேவதை:
இணையாகும் கண்கள் ஒன்றை ஒன்று
எதிர்த்து மோதலாகுமா
‘இந்த உலகில் எந்த சக்தியும் தனித்து வாழ முடியுமா
எந்நாளும் உங்கள் சேவையே நாட்டின் முக்கிய தேவையே
எழுது கோலும் வீரவாளும் எந்த நாளும் உலகையாள ஒன்று சேர்ந்து வாழ்க வாழ்கவே
எம்.எஸ்.ராஜேஸ்வரி அவர்கள் பாடிய ‘பாரத நாட்டுக்கிணை பாரத நாடே’ பாடலின் அரங்கமும் மிகவும் அழகாக உள்ளது.
பரதரென்ற எங்கள் முனிவருந்த நாட்டியக்கலையே -ஓர்
பதந்தூக்கும் நடராஜன் அமர்ந்தது எங்கள் தில்லையே!
பாரத நாட்டுக்கிணை பாரத நாடே
பாருலகறியும் இதற்கில்லை ஈடே
காவிரி கங்கை யமுனை ஆறுகளிங்கே
கோயிலையும் இமயத்தின் எவரெஸ்டுமிங்கே தேவர் சொல் திருக்குறள் கீதையுமிங்கே
தேனின் இனிய திருவாசகமுமிங்கே
சிற்பமும் ஓவியமும் சிறுவருமறிவர்
பற்பல கலைக்கும் பிறந்த வீடிதுவே
அற்புத நடனத்தில் அரம்பையர் நிகர்வார்
கற்பெனும் விலையில்லாப் பொற்பணியணிவார்
புத்தர் பரமகம்சர் இங்கவதரித்தார்
கவி காளிதாசன் கம்பனுமிங்கே பெரும் புகழ் படைத்தார்
உத்தமர் காந்திஜிக்கு உலகில் யாருவமை
உயர் கலைக் கோவில்கள் காட்சி கொள்- பழமைப்
இப்படிப் பல சிறந்த பாடல்கள் உள்ளன.
படைப்பாளர்

பாரதி திலகர்
தீவிர வாசிப்பாளர், பயணக் காதலர்; தொன்மை மேல் பெரும் ஆர்வம் கொண்டவர். அயல்நாட்டில் வசித்து வந்தாலும் மண்ணின் வாசம் மறவாமல் கட்டுரைகள் எழுதிவருகிறார். ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய கட்டுரைகள், ‘பூப்பறிக்க வருகிறோம்’, ‘சினிமாவுக்கு வாரீகளா?’ என்கிற புத்தகங்களாக, ஹெர் ஸ்டோரிஸில் வெளிவந்திருக்கிறது. தற்போது ‘சினிமாவுக்கு வாரீகளா – 3’ மற்றும் ‘சாதனை படைக்கும் சாமானியர்’ என்கிற இரண்டு தொடர்களை ஹெர் ஸ்டோரீஸ் வலைத்தளத்தில் எழுதிவருகிறார்.