பொன்னி 1953ஆம் ஆண்டு வெளியான திரைப்படம். இப்படம் அதே ஆண்டில் தெலுங்கிலும் வெளியானது.
சுப்பையா நாயுடு இசையமைத்துள்ளார். பாடல் வரிகள் நாராயணகவி, ராமையா தாஸ், பாலசுப்ரமணியம் & மக்கலன்பன். பின்னணி பாடகர்கள் சி.எஸ்.ஜெயராமன், லோகநாதன், மாரியப்பா, பெரியநாயகி, ஜெயலட்சுமி, கோமளா மற்றும் ராதா.
பட்சிராஜா ஸ்டுடியோஸ் வழங்கும், லலிதா, பத்மினி, ஸ்ரீராம் வழங்கும் பொன்னி என திரைப்படம் தொடங்குகிறது.
கதை ஏ. எஸ். ஏ. சாமி
வசனம் ஏ. எஸ். ஏ. சாமி, இளங்கோவன், பாலசுப்ரமணியம்
பாடல் வரிகள் நாராயணகவி, ராமையா தாஸ், பாலசுப்ரமணியம், மக்களன்பன்
இசை எஸ். எம். சுப்பைய்யா நாயுடு. பாடல்கள் கேட்க இனிமையாக இருக்கின்றன.
பின்னணி பாடியவர்கள்: C S ஜெயராமன், லோகநாதன், மாரியப்பா, பெரியநாயகி, ஜெயலட்சுமி, கோமளா
கிங் காங் (ஹங்கேரிய உலக சாம்பியன்), தாரா சிங் (இந்திய ace wrestler) நடுவர் அலிரேசா பே (துருக்கியின் சாம்பியன்)
இயக்கம் ஏ. எஸ். ஏ. சாமி,.C சீனிவாச ராவ்,
தயாரிப்பு எஸ். எம். ஸ்ரீ ராமுலு நாயுடு
நடிகர்கள்
சமரசமாக ஸ்ரீராம்
முருகனாக டி.எஸ். துரைராஜ்
நல்லசிவம் பிள்ளையாக டி. பாலசுப்ரமணியம்
சுந்தரமாக எம்.எல்.என். கௌசிக்
முனுசாமியாக எம்.ஆர். சுவாமிநாதன்
சொக்கனாக வி.எம். ஏழுமலை
நாராயண பிள்ளை நிபுணர் டிடெக்டிவ்
முனியனாக கே.எஸ். கண்ணையா
தமிழ் பண்டிதராக டி.பி. பொன்னுசாமி
வையாபுரியாக பொன்னையா
சர்வதேச மல்யுத்தம்
ஹங்கேரிய உலக சாம்பியனாக கிங் காங்
இந்தியாவின் தலைசிறந்த மல்யுத்த வீரராக தாரா சிங்
துருக்கியின் சாம்பியனாக அலிரேசா பே (நடுவர்)
பெண் நடிகர்கள்
பொன்னியாக லலிதா
கண்மணியாக பத்மினி
சொர்ணமாக பி.சாந்தகுமாரி
மரகதமாக பி.எஸ்.ஞானம்
சந்தானலட்சுமியாக கே.என்.கமலம்
வள்ளியாக பச்சநாயகி
இளம் பொன்னியாக குழந்தை ஆஷா
இளம் கண்மணியாக சி.ஆர்.சந்திரகுமாரி
நடனம்
ராகினி
அம்பிகா
சுகுமாரி
இரவில் ஒரு இடத்தில் கைக்குழந்தையுடன் பெண் குழந்தை ஒருத்தி இருக்கிறாள். சிறிது நேரத்தில் சிறுமி அழுதுகொண்டே அம்மாவைத் தேடிப் போகிறாள். இந்த நேரத்தில் அங்கு காரில் வரும் தம்பதியர், குழந்தையை எடுத்துச் செல்கிறார்கள். அதை ரிக்க்ஷாகாரர் முருகன் பார்த்துக் கொண்டே இருக்கிறார். சிறிது நேரத்தில் அந்த சிறுமியுடன் அவரது அம்மாவும் (பி. சாந்த குமாரி) வருவார். வந்து பார்த்தால், அவர் விட்டுச் சென்ற கைக் குழந்தை அங்கு இல்லை. ‘ஐயோ, பால் வாங்கப் போன நேரத்தில் குழந்தையைக் காணோமே’ என அம்மா அழுகிறார். முருகன் நடந்ததைச் சொல்லி, மறுநாள் அந்த வீட்டிற்கு அழைத்துச் செல்வதாகக் கூறுகிறார்.
குழந்தையை எடுத்துச் சென்ற அம்மாவிற்குக் குழந்தையைத் தானே வளர்க்கலாம் என்பது விருப்பம். அவர்களுக்குக் குழந்தை இல்லாததால், ஏற்கனவே ஒரு மகனைத் தத்து எடுத்து வளர்த்துக் கொண்டு இருக்கிறார்கள். அதனால் இந்தக் குழந்தையை எடுத்து வளர்ப்பதில் கணவருக்கு விருப்பம் இல்லை என்றாலும், சரி என்கிறார். மறுநாள், முருகனுடன், குழந்தையின் அம்மா வருகிறார். முருகன், செல்வச் செழிப்புடன் இந்த குழந்தை வளரட்டுமே என்கிறார். பெற்ற அம்மா, விருப்பமில்லாமல் குழந்தையை அங்கேயே விட்டுச் செல்கிறார்.
குழந்தை அங்குக் கண்மணி என்ற பெயரில் வளருகிறது. அந்த வீட்டின் வேலைக்கார அம்மா மரகதத்துடன், பெற்ற அம்மா பழக்கம் வைத்துக் கொண்டு அவ்வப்போது குழந்தையைப் பார்த்துக் கொள்கிறார். அருகில் பலகாரக் கடை வைத்து நடத்துகிறார்.
தன்னுடன் இருக்கும் மகள் பொன்னியை, நல்ல பள்ளியில் படிக்க வைக்க வேண்டும் என்பது இப்போது அம்மாவின் விருப்பம். ஆனால், படித்த, வசதியான வீட்டுக் குழந்தையை மட்டுமே பெரிய புகழ்பெற்ற பள்ளியில் சேர்ப்பார்கள். அதனால், குழந்தையின் அம்மா பர்மாவில் இருப்பதாகச் சொல்லிப் பள்ளியில் சேர்கிறார். குழந்தையிடமும் அவ்வாறே சொல்கிறார். இரு மகள்களும் ஒரே பள்ளியில் படிக்கிறார்கள். வளர்கிறார்கள். ஒரு காலகட்டத்தில் பொன்னிக்கு இவர் தான் உண்மையான அம்மா; பர்மாவில் அம்மா என்று எவரும் இல்லை என்ற உண்மை தெரிகிறது.
மூத்த மகள் பொன்னி (லலிதா) அன்பானவராகவும், இளைய மகள் கண்மணி (பத்மினி) அகங்காரியாகவும் வளருகிறார்கள். சகோதரிகள், மற்றும் கண்மணியின் அண்ணன் சுந்தரம் (எம்.எல்.என். கௌசிக்) மூவரும் ஒரே பள்ளியில் படிக்கிறார்கள். சுந்தரமும் அந்த வீட்டின் தத்துப் பிள்ளைதான். இப்போது சுந்தரத்தின் உடன்பிறந்த அண்ணன் மோகன் இங்கு வருகிறான். வளர்ப்புத் தந்தையாருக்கு, சுந்தரத்தின் சொந்த குடும்பத்திலிருந்து யார் வந்தாலும், மகன் மாறிவிடுவான் என பயம். அதனால் பெற்றோர் இறப்பிற்குக் கூட விடவில்லை.
இப்போது அண்ணன் வந்து இருக்கிறான். கண்மணியுடன் பழகுகிறான். இவருக்குப் பிடிக்கவில்லை என்றாலும், வேறு வழி இல்லை. மோகன் தான் உடன்பிறந்த அண்ணன் என அறிமுகம் செய்யாமலேயே வீட்டில் வைத்துக் கொள்கிறார்.
கண்மணியைக் கவனித்துக் கொள்ளும் வேலைக்கார அம்மா மரகதம், ஒரு காலகட்டத்தில் வேலையை விட்டு வெளியேறுகிறார். இதனால், மூத்த மகள் பொன்னியை அங்கு வேலைக்கு அனுப்பி, கண்மணியை, மோகனிடமிருந்து காப்பாற்ற நினைத்துச் செயல்படுகிறார் அம்மா. ஆனால், கண்மணி, பொன்னியை மாடியிலிருந்து கீழே தள்ள, பொன்னியின் கை ஒடிந்து விடுகிறது.
மோகன் தவறானவன் எனக் கண்மணிக்குத் தெரியவைக்க குடும்பம் முயலுகிறது. உண்மை தெரிந்த கண்மணி, குளோரபாரமை மூக்கில் வைத்து, தற்கொலைக்கு முயலுகிறார். கொலை செய்ய முயன்றதாகப் பழி பொன்னி மீது. இந்த காலகட்டத்தில் யார் யாருடைய குழந்தை என்பது போன்ற விவரங்கள் அனைத்தும் தெரிய வருகிறது. கண்மணி தற்கொலைக்கு முயன்றார் என்றால், மோகன் உடன் இருந்த தொடர்பு குறித்தும் தெரிய வரும் என்பதால், பொன்னி பழியைத் தானே ஏற்றுக் கொள்ள நினைக்கிறார். ஆனால், அவரது கை உடைந்து இருப்பதால், அவரால் அதைச் செய்திருக்க முடியாது என வழக்கு தள்ளுபடி ஆகிறது. அனைவரும் ஒரே வீட்டில் இணைந்து மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள் என்பதாகத் திரைப்படம் நிறைவு பெறுகிறது.
தங்கையை அகங்காரியாகக் காட்டுகிறார்கள். அவருக்கான பாடல்கள் எல்லாம், பெண் உரிமை தொடர்பானதாக உள்ளன. இரண்டையும் இணைத்துச் சொல்வது போன்ற ஒரு நெருடல் வருகிறது.
பெரியநாயகி அவர்கள் பாடிய அழகிய நடனத்துடன் பத்மினி பாடும் பாடல் இது.
மதிமுக ரதி என நான் ஆடுவேன்
புது யுகம் பெறவே தினம் போராடுவேன்.
வீர மாது என புவிமேல்
பலசெல்வம் சூழவே வாழ்வேனே
விரைவினில் பெண்கள் விடுதலை காண
ஆணோடு சரி நிகர் நின்றே
புது யுகம் பெறவே தினம் போராடுவேன்.
ஜான்சி ராணியை புகழ்ந்து பாடிடுவேனே
அவள் அறிவினை நானே அடைந்திடுவேனே
எதிலும் காணுவேன் ஜெயமே
பழமைகள் நீங்கும் புதுமையினாலே
மாறாத பெருமை கொள்வேனே
புது யுகம் பெறவே தினம் போராடுவேன்
பெரியநாயகி அவர்கள் பாடிய, பத்மினி சிறு கிடார் வைத்துக் கொண்டு ஆடத்தொடங்கும் பாடல் மிகவும் அழகு.
ஆண்களைப் போல பெண்கள் வாழ வேண்டுமே
எந்நாளும் அஞ்சாமலே சமத்துவம் காண்பேனே புது வாழ்விலே
நானே யுவராணி எனவே செல்வம் பொங்க
நிலையான எண்ணம் கொள்வேன்
குறை தீரவே- என்னாசை நிறைவேறவே
எந்நாளும் அஞ்சாமலே சுதந்திரம் காண்போம் புவி வாழ்விலே
வீரம் அதிகாரம் செல்லாது இனி ஆண்கள் ஜம்பம்
பகுப்பாக பெண்கள் வாழ நான் வழி காட்டுவேன்
புகழ் நாட்டுவேன் அன்பாலே பண்பாலே
நலம் காணும் மேலான குணம் சேரவே
ஆடி பாடு பாப்பா
விளையாடி பாடு பாப்பா
நல்ல அறிவை சொல்லி கேட்பாய்
என ஏறக்குறைய ஓடிவிளையாடு பாப்பா போன்று ஒரு பாடல் உள்ளது.
லலிதா பத்மினி சகோதரிகள் வழக்கம் போல அழகோ அழகு.
இயக்கம் ஏ. எஸ். ஏ. சாமி, C சீனிவாச ராவ் எனப்போடுகிறார்கள். ஏ. எஸ். ஏ. சாமி அவர்களைக் குறித்து நாம் அறிவோம்.
C சீனிவாச ராவ், “இவர் பொன்னி (1953) என்ற தமிழ்த்திரைப்படத்தில் இயக்குநராக அறிமுகமானார்” என்கிறது விக்கிப் பீடியா. முதலில் நடிகை கண்ணாம்பாவின் மகளை மணந்த இவர், மனைவியின் இறப்பிற்குப் பின் நடிகை ராஜசுலோச்சனா அவர்களை மணந்து உள்ளார்.
அம்மாவாக பி. சாந்தகுமாரி நடித்துள்ளார். அவர் திரையுலகில் அம்மா என்றே அழைக்கப் பட்டு இருக்கிறார். அந்த அளவிற்கு, அவர் முன்னணி நடிகர்களின் அம்மாவாக நடித்து இருக்கிறார். வசந்த மாளிகையில் சிவாஜியின் அம்மா இவரே.
ஸ்ரீராம், மோகன் என்னும் சமரசம் ஆக வருகிறார். பக்கவாட்டில் பார்க்கும் போது, இளம் வயது சல்மான்கான் போல உள்ளார். நாகரீக வில்லன் தோற்றத்திற்கு அழகாகப் பொருந்தி வருகிறார். நன்றாக நடிக்கவும் செய்து இருக்கிறார்.
இந்த ஸ்ரீராம் என்னும் மதுரை ஸ்ரீராமுலு மொத்தம் 23 படங்களில் நடித்துள்ளார். சந்திரலேகாவில் குதிரை வீரனாக நடித்துள்ளார். இதுதான் அவருக்கு முதலில் கிடைத்த பெரிய பாத்திரம். மர்ம வீரன் என்ற திரைப்படத்தைத் தயாரித்து நடித்து, ஏற்பட்ட தோல்வியால் பெரும் இழப்பைச் சந்தித்து இருக்கிறார்.
திருவிதாங்கூர் சகோதரிகள் மூவரும் அம்பிகா என்பவருடன் நடித்த பாமா விஜயம் நடன நாடகம் ஒன்றும் திரைப்படத்தில் உள்ளது. ராகினி, அம்பிகா, சுகுமாரி என எழுத்து போடும் போது போடுகிறார்கள். மலையாள உலகில் சில ஆண்டுகளுக்கு முன் வரை நடித்து வந்த சுகுமாரி, குழந்தை நட்சத்திரமாகத் தமிழில் சில திரைப்படங்களில் நடித்து இருக்கிறார். நாகர்கோவிலில் பிறந்தவர் சுகுமாரி, தனது அத்தையான இந்தத் திருவிதாங்கூர் சகோதரிகளின் தாயாரிடம் தான் சென்னையில் வளர்ந்து இருக்கிறார்.
பொன்னி SSLC முடிக்கிறார். அப்படியானால் கண்மணி அவரை விட 4-5 வகுப்புகள் குறைவாகப் படிப்பவராகத் தான் இருக்க வேண்டும். ஆனால் கண்மணி கார் எல்லாம் ஓட்டும் பெரிய பெண்ணாக வருகிறார். இருவரும் அழகாக இருக்கிறார்கள் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. பள்ளி என்பதற்குப் பதில் கல்லூரி எனக் காட்டியிருக்கலாம்.
ஒரு வீட்டில், இவ்வளவு பெரிய பாட்டலில் (½ லிட்டர்) குளோரபாரம் எதற்கு இருக்கிறது என்ற கேள்வியும் எழுந்தது.
குடும்பம் என்றாலே யாராவது ஒருவர் தியாகம் செய்ய வேண்டும் என்பதான கருத்தைத் தான் இதிலும் திணிக்கிறார்கள். இதில் பொன்னி, தனது தங்கைக்காக அனைத்து சிரமங்களையும் ஏற்றுக் கொள்கிறார்.
ஆனாலும் பெண்களை முதன்மைப் படுத்தி அந்த கால கட்டத்தில் திரைப்படங்கள் உருவாகி இருக்கின்றன என்பதற்கு இந்த திரைப்படமும் சிறந்த எடுத்துக்காட்டு.
படைப்பாளர்
பாரதி திலகர்
தீவிர வாசிப்பாளர், பயணக் காதலர்; தொன்மை மேல் பெரும் ஆர்வம் கொண்டவர். அயல்நாட்டில் வசித்து வந்தாலும் மண்ணின் வாசம் மறவாமல் கட்டுரைகள் எழுதிவருகிறார். ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய கட்டுரைகள், ‘பூப்பறிக்க வருகிறோம்’ என்கிற புத்தகமாக, ஹெர் ஸ்டோரிஸில் வெளிவந்திருக்கிறது. ஹெர் ஸ்டோரிஸில் இவர் தொடராக எழுதிய விளையாட்டு பற்றிய கட்டுரைகள் ‘தமிழர் பாரம்பரிய விளையாட்டுகள்’ என்ற பெயரில் நூலாகவும், சினிமா கட்டுரைகள் ‘சினிமாவுக்கு வாரீகளா?’ என்ற பெயரில் நூலாகவும் ஹெர் ஸ்டோரிஸ் வெளியிட்டுள்ளது.