கோமதியின் காதலன் 1955-ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம்.

இந்தத் திரைப்படம் தேவன் எழுதிய அதே பெயரில் ஆனந்த விகடனில் வெளிவந்த தொடரின் தழுவல். தேவன் (ஆர். மகாதேவன்) பல நகைச்சுவைக் கதைகளையும் கட்டுரைகளையும் எழுதியவர். ஆனந்த விகடனின் முகங்களில் ஒருவர். துப்பறியும் சாம்பு இவரது பிரபலமான படைப்பு.

டி ஆர் ஆர் புரொடக்ஷன்ஸ் என நடிகர் டி.ஆர். ராமச்சந்திரன் தயாரித்த இந்தப் படத்திற்குத் திரைக்கதை, வசனம் எழுதி ப. நீலகண்டன் இயக்கியுள்ளார். பாடலாசிரியர் கு. மா. பாலசுப்ரமணியம் உதவி இயக்குநர்களில் ஒருவர். 

டி.ஆர். ராமச்சந்திரன் தயாரித்த திரைப்படம் என்றாலும், சாவித்திரி டி. ஆர். ராமச்சந்திரன் நடித்த என, சாவித்திரியின் பெயரைத்தான் முதலில் போடுகிறார்கள். 

நடிகர்கள்

கே.சாரங்கபாணி                  கே.ஏ.தங்கவேலு

டி.பாலசுப்ரமணியம்           ஆர்.பாலசுப்ரமணியம்

பிரெண்ட் ராமசாமி              வி.ஆர்.ராஜகோபால்

நாராயணன்                            சாயிராமன்

கே.டி.சந்தானம்                     பி.டி.சம்பந்தம்

வி.பி.எஸ்.மணி                       எஸ்.எஸ்.சிவசூரியன்

ஹரிஹரன்                             பி.கல்யாணம்

மாஸ்டர் ரங்கநாதன்

நடிகைகள் 

டி.பி.முத்துலட்சுமி        பி.எஸ்.ஞானம்

பி.சுசீலா                            தனம்

எஸ். ஆர். ஜானகி       சாரதாம்பாள் பாக்யமாக

நடனம்

சாயீ, சுப்புலட்சுமி

ராகினி

தங்கம்

சுகுமாரி

பாடல்கள் புரட்சிக்கலைஞர் பாரதிதாசன், கே டி சந்தானம், கு மா பாலசுப்ரமணியம், கே பி காமாட்சி, கு மு அண்ணல் தங்கோ ஆகியோரால் எழுதப்பட்டுள்ளன. இசையமைத்தவர் ஜி. ராமநாதன்.

பாடியவர்கள், பி ஏ பெரியநாயகி, ஜிக்கி, லீலா, ஜெயலஷ்மி, டி வி ரத்தினம், கோமளா, சீர்காழி கோவிந்தராஜன், ஏ எம் ராஜா 

படம் தொடங்கும்போது, நாயகன் ராஜன், காரை ஓட்டிவரக் கோவிலிலிருந்து வந்துகொண்டிருந்த நாயகி கோமதியின் தம்பி பாலு அடிபடவிருந்து தப்பிக்கிறார். இருவருக்கும் ஏறக்குறைய கண்டதும் காதல். 

கோமதி, ராஜன் இருவரும் அருகாமை ஜமீன்தார்களின் பிள்ளைகள். இருநூறு ரூபாய் பெறுமானமான நிலத்திற்காக ஆளுக்கு ஐம்பதாயிரம் ரூபாய் வழக்கில் விட்டுப் போராடிக் கொண்டிருக்கும் வீம்பு பிடித்த எதிரிகள்.

கோமதியையும், தம்பி பாலுவும் சென்னையில் குடும்ப நண்பர் தர்ம லிங்கத்தின் வீட்டில் தங்கிப் படிக்க ரயிலில் போகிறார்கள். அந்தப்பக்கம், ராஜனின் அண்ணன், ‘சுயசரிதை எழுதுவதைத் தவிர ஒன்றுக்கும் உதவாதவன்’ எனச் சொல்ல, ராஜனும் புறப்பட்டு சென்னை செல்ல வருகிறார். இருவரும் ரயிலில் சந்தித்துக் கொள்கிறார்கள். 

மணி, பக்கிரி என்ற இரண்டு திருடர்களின் கைகளில் ராஜனின் பெட்டி சிக்கிக் கொள்கிறது. அவரின் நாட்குறிப்பு உள்ளே இருக்கிறது. அதன்மூலம், ராஜனுக்கு பாரிஸ்டர் உறவினர் என்றும், பார்த்தால் அடையாளம் தெரியாத அளவில் தான் இருவரின் உறவும் இருப்பது தெரிய வருகிறது. மணி, தான் தான் ராஜன் எனச் சொல்லி பாரிஸ்டர் வீட்டில் தங்குகிறான்.

தற்செயலாகத்  தர்ம லிங்கத்தைச் சந்தித்த ராஜன், கோமதி அவரின் வீட்டில் இருப்பதால் அவரின் வாகன ஓட்டுநராக, ராமு என்ற பெயரில் வாழ்கிறார். காதல் வளர்கிறது. கோமதிக்கு ஜமீன் பகை குறித்த வருத்தம் இருப்பதால், தான் தான் பக்கத்து ஜமீனின் மகன் என்பதை ராஜன் சொல்லிக் கொள்ளவில்லை. 

மணியும் பக்கிரியும் திருடுவதிலேயே குறியாக இருக்கிறார்கள். ஜமீன் என நம்பிய தர்ம லிங்கம், மணிக்குத் தன் மகளைத் திருமணம் செய்துவைக்கத் திட்டம் தீட்டுகிறார். மணியின் திருட்டுக்களுக்கு ராஜன் மீது பழி விழுகிறது. கோமதியும் ஒரு காலகட்டத்தில், காதலன் தான் திருடன் என நம்பும் சூழ்நிலை உருவாகிறது. இறுதியில் அப்பாக்கள் வர உண்மை தெரிகிறது. மணி சிறை செல்ல, காதலர்கள் இணைகிறார்கள்.  

அக்காலகட்ட சென்னை, அதன் கடற்கரை ஆங்காங்கே காட்டப் படுகிறது. அவசர காவல்துறையிற்கான தொலைப்பேசி எண் 93 என இருந்திருக்கிறது.

டி.ஆர்.ராமச்சந்திரன் பாடல் காட்சிகள்,சண்டை போடுவது, நகைச்சுவை செய்வது, வாகனம் ஓட்டும் பாணி என, இயல்பான நாயகனாக நடித்திருப்பது சிறப்பு. தனக்காக உருவாக்கிய நகைச்சுவைத் திரைப்படம் என்றாலும், மணி, பக்கிரியாக வரும் தங்கவேலு, பிரெண்ட் ராமசாமி இருவருக்கும் பல நகைச்சுவைக் காட்சிகளைக் கொடுத்திருப்பது இவரின் பெருந்தன்மையைக் காட்டுகிறது. இருவரும் மிகவும் சிறப்பாகவே செய்திருக்கிறார்கள். 

கோமதியாகச் சாவித்திரி வருகிறார். இவருக்கு அம்பிகாபதி நாடகம் ஒன்றும் உள்ளது. இவர், வழக்கமான இயல்பான தோற்றத்தில் நடிப்பிலும் இவர் கவருகிறார் என்றால், பொன்னாயி/ சினிமா நடிகை என வரும் டி.பி.முத்துலட்சுமி அசத்தியிருக்கிறார். 

பாரிஸ்டராக வரும் டி.பாலசுப்ரமணியம் உடல்மொழி அவ்வளவு இயல்பாக இருக்கிறது. 

வி.ஆர்.ராஜகோபால் எனப்படும் குலதெய்வம் ராஜகோபால் சிறு வேடத்தில் வருகிறார். நாடகக் குழுக்களில் இணைந்து நடித்து வந்தவர், 1954 ஆம் ஆண்டு வெளிவந்த நல்ல காலம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகியிருக்கிறார். 1956 ஆம் ஆண்டு வெளிவந்த, குலதெய்வம் திரைப்படத்தில் நான்கு கதாநாயகர்களில் ஒருவராக நடித்ததால் ‘குலதெய்வம் ராஜகோபால்’ என அழைக்கப் பட்டிருக்கிறார். 1962ல் மதுரையில் நடந்த விழாவில், கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், அவரது மனைவி மதுரம் மற்றும் எழுத்தாளர் தமிழ்வாணன் ஆகியோரால், குலதெய்வம் ராஜகோபாலுக்கு, “சின்ன கலைவாணர்’ பட்டம் அளிக்கப்பட்டுள்ளது. கலைவாணர் NSK தான் இவரின் தொடக்கக் காலத் திரைப்படங்களுக்கு இவரைப் பரிந்துரைத்தவர். பிற்காலத்தில் “குலதெய்வம் ராஜகோபால்” பாக்கிய ராஜ் அவர்களின் படங்களில் பெருமளவிற்கு வலம்வந்தார்.

பாடல்கள் பலவும் சிறப்பாக உள்ளன.

சீர்காழி கோவிந்தராஜன் கு. மா. பாலசுப்ரமணியம்

வானமீதில் நீந்தியோடும் வெண்ணிலாவே நீ தான் 

வந்ததேனோ ஜன்னலுக்குள் வெண்ணிலாவே 

நானும் உன்னைப் பார்த்து விட்டால் வெண்ணிலாவே 

முகம் நாணியே மறைவதேனோ வெண்ணிலாவே. 

பட்டப் பகலில் ஜோதி வீசும் வெண்ணிலாவே – உன்னைப் 

பார்ப்பதும் ஓர் விந்தையன்றோ வெண்ணிலாவே  

வட்டமான உன் முகத்தில் வெண்ணிலாவே -ரெண்டு 

வண்டுகள் சுழல்வதேனோ வெண்ணிலாவே 

சீர்காழி கோவிந்தராஜன் & ஜிக்கி

அன்பே என் ஆரமுதே வாராய்

தென்றலலை மீதினிலே திங்கள் பிறைத் தோணியிலே

தேன்மொழி உனையழைத்தே செல்வேனே

வெண்ணிலவுக் கிண்ணியிலே என் இதயக் காதலையே

உண்ணும் மதுவாய் நிறைத்துத் தருவேனே…

**

வண்ணமிகும் வானவில்லை பொன்னாடையாய் மடித்தே

வல்லி உனக்கே பரிசு தருவேனே! ஏஏஏ ஏஏஏஏஏஏ

கண்சிமிட்டும் தாரகையை முல்லை மலராய்த் தொடுத்து

காதல் மண மாலையாக அணிவேனே

மின்னல் ஒளிக் கோடுகளாம் மேகம் என்னும் வெண்திரையில்

உன்னழகை ஓவியமாய் வரைவேனே 

விண்ணில் மழைச் சாரல்களை விளைநலமாக்கிய பின்

இன்னொளியை மீட்டி இசை பொழிவேனே

சீர்காழி கோவிந்தராஜன் கு. மு. அண்ணல் தங்கோ

தெள்ளுதமிழ் தினைமா -முத்தம்மா 

தித்திக்கும் நன் மலைத்தேன் 

அள்ளித்தரும் சர்க்கரை- கற்கண்டும் 

அன்புத் தமிழாமோ?

சொல்லினிற் கீரன் என்றும்- முத்தம்மா 

வில்லினிற் சேரன் என்றும் 

சொல்லித் திரிவதல்லால்- முத்தம்மா 

தொண்டென்ன செய்தோமடி 

முத்தெடுத்த தமிழர்- முத்தம்மா 

மூடர்களாவாரோ?

முத்தளித்த கடலை- பகைவர் 

முற்றுகை செய்யலாமோ?

புரட்சிக்கவி பாரதிதாசன் ஏ.எம்.ராஜா

நீலவான் ஆடைக்குள் உடல் மறைத்து

நிலா என்று காட்டுகின்றாய் ஒளிமுகத்தை!

கோல முழுதும் காட்டிவிட்டால் காதல்

கொள்ளையிலே இவ்வுலகம் சாமோ? 

கு.மா. பாலசுப்பிரமணியம்

புதுமை நிலா அங்கே – அலை

பொங்கும் கடல் இங்கே

இதய தாகம் தணிய வாழ்வில்

இணைந்திடும் நாள் எங்கே?

கவிஞர் கே டி சந்தானம் சீர்காழி கோவிந்தராஜன்

கொங்கு நாட்டு செங்கரும்பே தங்க சிலையே- அன்பு 

பொங்க வரும் புத்தமுதே இன்பநிலையே 

கங்கை நதி கோதுமையே, காவேரி வெற்றிலையே 

சிங்களத்து தேயிலையே, சிவபுரி புகையிலையே 

 சேலத்து மாம்பழமே, திண்டுக்கல் மலைப்பழமே  

பாலக்காட்டு நேந்திரமே பண்ருட்டி பலாப்பழமே 

கே.பி. காமாட்சிசுந்தரம் ஜிக்கி 

அனங்கனை நிகர்த்த அழகனே- உந்தன் 

ஆசை மறவேனே- கண்ணா 

மனங்கவர் ராஜா மகிழ்ந்திடும் ரோஜா 

மலரும் நான்தானே –

மணமலர் எந்தன் மனமதை அறிந்தும் 

வாடவிடாதே உண்மை தெரிந்தும் 

வசந்த காலத்தின் தென்றலைப் போலே 

வந்து இசைந்து மகிழ்ந்திடச் செய்வாய் 

தந்தி வீணையில் மீட்டுதல் போலே சிந்தை மீட்டிவிட்டாய் 

செந்தமிழ் சொல்லின் இனிமையைப் போலே 

சிந்தையில் புகுந்துவிட்டாய் 

உனை மறந்தாலே வாழ்வினில் இனிமேல் 

உயிர் தரியேனே நானே புவிமேல் 

எனை மறவாது இன்பம் தருவாய் 

தொடரும்…

படைப்பாளர்

பாரதி திலகர்

தீவிர வாசிப்பாளர், பயணக் காதலர்; தொன்மை மேல் பெரும் ஆர்வம் கொண்டவர். அயல்நாட்டில் வசித்து வந்தாலும் மண்ணின் வாசம் மறவாமல் கட்டுரைகள் எழுதிவருகிறார். ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய கட்டுரைகள், ‘பூப்பறிக்க வருகிறோம்’, ‘சினிமாவுக்கு வாரீகளா?’ என்கிற புத்தகங்களாக, ஹெர் ஸ்டோரிஸில் வெளிவந்திருக்கிறதுதற்போது ‘சினிமாவுக்கு வாரீகளா – 3’ மற்றும் ‘சாதனை படைக்கும் சாமானியர்’ என்கிற இரண்டு தொடர்களை ஹெர் ஸ்டோரீஸ் வலைத்தளத்தில் எழுதிவருகிறார்.