போர்ட்டர் கந்தன் 1955-ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம்.
நரசு ஸ்டுடியோஸ் அளிக்கும் போர்ட்டர் கந்தன் என தான் திரைப்படம் தொடங்குகிறது. எழுத்து போடும்போதே பொன்னிலம் என்ற ஊரின் ரயில் நிலையத்தின் புகைப்படத்தின் மேல் போடுவது, கதைக்கு மிகவும் பொருத்தமாக உள்ளது.
கதை P செங்கைய்யா
வசனம் சாண்டில்யன், கோ த சண்முகசுந்தரம், எம்.எஸ்.கண்ணன்
கு.மா.பாலசுப்பிரமணியம், கவி கா.மு.ஷெரீப், ‘மேதாவி’ (கோ.த.சண்முகசுந்தரம்) ஆகியோர் வேளுக்குடியைச் சேர்ந்த இவருடைய இளமைக்கால நண்பர்கள்.
எம்.எஸ்.கண்ணன் அவர்கள் குறித்து இணையத்தில் எந்தத் தகவலும் இல்லை.
நடிகர்கள்
எம்.கே.ராதா
டி.பாலசுப்ரமணியம்
டி.எஸ்.துரைராஜ்
எம்.என்.நம்பியார்
எஸ்.வி.சுப்பையா
எம்.கே.முஸ்தபா
கே. துரைசாமி
TK சம்பங்கி
‘மாஸ்டர்’ பாபுஜி
ஜி.முத்துகிருஷ்ணன்
நடிகைகள்
ஜி.வரலட்சுமி
ஆர்.லலிதா
TP முத்துலட்சுமி
பேபி மகேஸ்வரி
ராஜாமணி
பாடல்கள்: மருதகாசி, அம்பிகாபதி, குழந்தை கவி வள்ளியப்பா
பின்னணி பாடல்கள்: ஜிக்கி, ராணி, கண்டசாலா, எஸ்.சி.கிருஷ்ணன், திருச்சி லோகநாதன், வி.என்.சுந்தரம்
சங்கீத டைரக்ஷன் விஸ்வநாதன்-ராமமூர்த்தி
சிறுவர் நிகழ்ச்சி அமைப்பு கோ த சண்முகசுந்தரம்
டைரக்ஷன் கே.வேம்பு
தயாரிப்பு வி.எல்.நரசு
Production manager K பாலாஜி
பொன்னிலம் ரயில் நிலையம் மிகவும் சிறியது. ஊர், ரயில் நிலையத்திலிருந்து ஓரிரு மைல் தூரத்தில் இருக்கிறது. இரண்டிற்கும் இடையில் காடு இருக்கிறது. இவ்வாறான ரயில் நிலையத்தில் ஒரு ஸ்டேஷன் மாஸ்டர் அவருக்கு உதவியாளர் என இருவர் தான் பணி புரிகிறார்கள். அந்த உதவியாளர் தான் போர்ட்டர் கந்தன். வழக்கமாக ரயில் நிலையத்தில் சிவப்பு சீருடை அணிந்து கொண்டு பணி புரியும் போர்ட்டர் வேலை அல்ல அது.
அவருக்கு ஒரு மகன் இருக்கிறான். கணவன் மனைவி மகன் என நிம்மதியாக வாழ்ந்து கொண்டு இருக்கும் குடும்பம். அவரின் தம்பி வீரப்பன், திருடன். ஒருநாள் திருடனைத் தேடி வந்ததாகக் காவலர் ஒருவர் வருகிறார்.
வீரப்பன் அன்றே அண்ணன் வீட்டிற்கு வருகிறார். இவர் திட்டி அனுப்பிவிடுகிறார். பாசத்தால் தானே வருகிறான் எனக் கந்தனின் மனைவி வள்ளி சொல்கிறார். இதை வெளியிலிருந்து கேட்டுக் கொண்டிருந்த தம்பி திருந்துகிறார்.
மறுநாள் அடைமழை. பள்ளியிலிருந்து ரங்கன் வரும் வழியில், மழைக்காக ஒரு மரத்தின் மீது ஏறி உட்காருகிறான். அதனால், திருடர்கள், அன்று வரும் ரயிலைக் கவிழ்க்கப் போவது தெரிகிறது. இவன் அனைவரையும் காப்பாற்றுகிறான். ரயிலிலிருந்த சிறுமி, (ரயில்வே அதிகாரியின் பேத்தி) பரிசாகத் தன் சங்கிலியைக் கழற்றிக் கொடுக்கிறாள். அரசாங்கமும் ரங்கனுக்கு அங்கீகாரம்/ பணம் எல்லாம் அனுப்புகிறது.
ஆனால் ரயில்வே அதிகாரியாக விசாரணைக்கு வருகிறார். ‘பாலத்திற்கு வெடி வைத்தது உன் தம்பி தான். வீட்டிற்கு வந்த அவனை நீ பிடித்துக் கொடுக்கவில்லை. அதனால் உனக்கு இங்கு வேலை இல்லை’ என்கிறார்.
கந்தன் வேலை தேடி, குடும்பத்துடன் சென்னை வருகிறார். வழக்கம் போல ஏமாற்றுபவர்களிடம் சிக்குகிறார். ஒரு தாத்தா மட்டும் உதவுகிறார். நடைபாதையில் வாழும் சூழ்நிலைக்கு வருகிறார்கள். குடும்பமே அவ்வப்போது திருட்டுப் பழி ஏற்கிறது. பார்ப்பதற்கு அழுக்கு ஆடையுடன் இருக்கும் அவர் சொல்லும் உண்மை எதையும் யாரும் கேட்பதாக இல்லை. இப்படி ஒரே சோகம் தான்.
இந்தக் காலகட்டத்தில் கந்தனுக்கு வேலை போனது குறித்து செய்தித்தாள் மூலம் அறிந்து கொண்ட தம்பி, சிறையிலிருந்து தப்பி வருகிறார். வேலையிலிருந்து நீக்கிய அதிகாரி வீட்டிற்குச் செல்கிறார். ஆனால் பழி ஏற்பதோ கந்தன். காயம் பட்ட தம்பிக்கு மருத்துவம் பார்த்த மருத்துவர் நீதிமன்றத்தில் வந்து அனைத்து உண்மைகளையும் சொல்லி, கந்தன் வேறு வீரப்பன் வேறு எனத் தெரிய வருகிறது. கந்தனுக்குப் பழைய வேலை கிடைக்க, திரைப்படம் இனிதாய் நிறைவு பெறுகிறது.
‘முகமது நபி எனும் பெரியார் நமது நாட்டுக்கு மேற்கே உள்ள அரேபியா என்னும் தேசத்திலே மெக்கா என்னும் நகரிலே 1400 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்தார்…’ எனப் பள்ளியில் குழந்தைகள் படிக்கிறார்கள். இவ்வாறு நபி குறித்துப் பாடம் இருந்து இருக்கிறது எனத் தெரிய வருகிறது.
இரட்டை வேடம் என்றால்,வழக்கமாகத் திருடனுக்குத் தான் கன்னத்தில் மச்சம் வைப்பார்கள். இந்தத் திரைப்படத்தில் ஒரு மாற்றமாகக் கந்தனுக்கு மச்சம் உள்ளது. எம்.கே.ராதா, கந்தனாகவே மாறியிருக்கிறார் என்றே சொல்லவேண்டும். அவ்வளவு இயல்பாக பொருந்தி போகிறார்.
ஏழைக் குடும்பப்பெண்ணாக வரும் வரலட்சுமி முகமே, கனிவும் அன்பும் நிறைந்து வழியும் முகம். அதுவே அவர்களின் பாத்திரத்திற்கு மிகவும் உறுதுணையாக இருக்கிறது. நடிப்பும் அபாரம் தான்.
சிறுவர்களாக வரும் ராஜாமணி, பேபி மகேஸ்வரி இருவரிடமும் அழகும் நடிப்பாற்றல் இரண்டும் ஒருசேரத் தெரிகிறது.
அதே போல அதிகாரியாக வரும் டி.பாலசுப்ரமணியம் அவர்களின் மிடுக்கும் உடல்மொழியும் அவ்வளவு இயல்பு.
மொத்தத்தில் நடிகர்கள் அனைவரையுமே இயக்குநர் நன்கு பயன்படுத்தியிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.
வீடு, வீடுகளில் இருக்கும் பொருட்கள் என அந்தக் காலகட்டத்தின் வீடுகளின் அமைப்பை ஆவணப்படுத்தி இருப்பது போன்று மிக நேர்த்தியாக உள்ளன. பாத்திரங்கள், விளக்கு, விளக்குழி போன்றவை இன்றைய தலைமுறை அறிந்திராதவை.
நடைபாதையில் வாழும் எளியவர்களின் வாழ்வை ஆவணப்படுத்துகிறது. மழை பெய்ததும் பொருள்களை எடுத்துக் கொண்டு ஓடுகிறார்கள். பிற்காலத்தில் அழகி திரைப்படத்தில் இது போன்ற வாழ்வை காட்டுவார்கள்.
சிங்காரச்சென்னை எப்படி இருந்தது என்பதையும் இத்திரைப்படம் சொல்லுகிறது.
‘நான் இந்த ஓட்டலில் சாப்பிடுகிறேன்’ என ஒருவர் மீது எழுதி வைத்திருக்கிறார்கள். இதன் பொருள் என்ன எனத் தெரியவில்லை. உட்கார்ந்த இடத்தில் கையை இப்போது கழுவுவதற்கு பாத்திரத்தில் தண்ணீர் கொண்டு வந்து கொடுப்பது போல கொண்டு வந்து வைக்கிறார்கள். இதெல்லாம் அப்போதே இருந்திருக்கிறது என்னும் போது வியப்பாகவே இருந்தது.
இரவில் தீப்பந்தங்களுக்கு அருகில் நின்று ஆடிப்பாடும் கொண்டாட்டம் கொண்டாட்டம் பாடலைப் பார்க்கும் போது, “ராக்கம்மா கையத்தட்டு” பாடல் நினைவிற்கு வந்தது. நீண்ட முடியுடன் வரும் அந்த நடிகரைப் பார்க்கும் போது நடிகர் பப்லு பிரித்திவிராஜ் நினைவிற்கு வந்தார். மருதகாசி எழுதியிருக்கும் பாடலைத் திருச்சி லோகநாதன், எஸ்.சி.கிருஷ்ணன், செல்லமுத்து, மாதவன், ராணி ஆகியோர் இணைந்துப் பாடியிருக்கிறார்கள்
“கொண்டாட்டம் கொண்டாட்டம்
பணம் உண்டானால் வாழ்வில் உண்டு கொண்டாட்டம்.
பெண்டு பிள்ளைங்க நல்லா இருக்க
பெரிய மனுஷன் பேரெடுக்க
திண்டு போட்டு சாஞ்சு இருக்க திருடனானாலும்
பணம் உண்டானால் வாழ்வில் உண்டு கொண்டாட்டம்.
திண்டாட்டம் அண்ணே திண்டாட்டம்
நம்ம செவப்பு தொப்பி காரரோடு
CID கண்டுக்கிட்டா திண்டாட்டம்
ஏ திண்ணை தூங்கி வீரர்களா
தெண்ட சொத்துக்காரர்களா
வாங்க வாங்க பயம் வேணாங்க
நல்ல மனுஷன் போல நடிச்சு காசையும்
கள்ள சந்தையிலே குவிச்சு
பெரிய வள்ளல் என்றெல்லோரும் சொல்ல
வாழும் மனிதர் வழியில் நடந்து கொண்டு
பணம் உண்டானால் வாழ்வில் உண்டு கொண்டாட்டம்.
காத்து நுழையாத கற்கோட்டை ஆனாலும்
கட்டுக்காவல் ரொம்பக் கச்சிதமாய் இருந்தாலும்
பாத்து புகுந்தது பதுங்கியே தேட்டை போடும்
இந்த பக்கா கள்ளன் எதுக்கும் பயப்படவே மாட்டாண்டீ
என்னா வேணும் ஏது வேணும் கேட்டுக்கோ
இந்தா 2000 ரூபாய் நீயும் வாங்கிக்கோ
எங்கே?
என பெண் கேட்க
அடி சக்க பொடி மட்ட
திருப்பிப் பார்த்தாதான் ஒண்ணுமில்லாத வெறும் மட்ட
அடி பட்டி அழகு கிட்டி
இந்த ஐயா கிட்ட இருக்கு அந்த நோட்டு
இது கள்ள நோட்டு
தங்க பெல்ட்டு
வெறும் கில்டு
இந்தா சீப்பு’
இது டூப்பு
பொய்யும் பொருட்டும் தெரிஞ்சபோதும்
புத்தி ரொம்ப இருந்தபோதும்
செய்யும் தொழிலைத் திருந்தச் செய்யும்
திறமையோடு கையில்
பணம் உண்டானால் வாழ்வில் உண்டு கொண்டாட்டம்.
மருதகாசி எழுதி, எஸ் சி கிருஷ்ணன் எழுதிய, புகழ்பெற்றப் பாடல் இது.
எழுதிச் செல்லும் விதியின் கை
எழுதி எழுதி மேற்சொல்லும்
அழுதாலும் தொழுதாலும்
அதில் ஓரெழுத்தும் மாறாதே
வருந்தாதே மனமே என்ற பாடல் மிகவும் புகழ் பெற்றப் பாடல்
வருந்தாதே மனமே
ஒரு போதும் அவனன்றி ஓர் அணுவும் அசையாதே..
இரவும் பகலும் மாறித் தோன்றும் முறையை எண்ணிப் பார்
இலைகள் உதிர்ந்து மீண்டும் தோன்றும் நிலையை எண்ணிப்பார்
நிலையை எண்ணிப்பார்…
இன்பம் துன்பம் யாவும் ஈசன் செயலே ஆகுமே
இகழ்ந்த வாயே புகழ்ந்து பேச காலம் மாறுமே
காலம் மாறுமே…
நல்ல நல்ல சேவை நாட்டுக்குத் தேவை என்ற அழ. வள்ளியப்பா எழுதிய பாடல் ஒன்றும் உள்ளது. அவரது பாடல் ஒன்று இவ்வாறுத் திரைப்படம் ஒன்றில் பயன்படுத்தப் பட்டது இதுவே முதல் முறை என நினைக்கிறேன். பாடல் சொற்களின் பொருளுணர்ந்து, சிறுவர் சாரணர் படை பாடுவதாக காட்சி அமைத்து இருப்பது சிறப்பு. ஜிக்கி குழுவினர் பாடலைப் பாடியிருக்கிறார்கள்.
நல்ல நல்ல சேவை நாட்டுக்குத் தேவை
நாமிதை இன்றே நாடுதல் நன்றே
சொல்வதிலும் அதை செய்வதிலும்
மனத்தூய்மையை நாமே அடைவோமே
கல்வியினால் பெறும் அறிவையெல்லாம்
காட்டிடுவோமே நலம் மிகப்பெறவே
எதிர்காலமே இளைஞர்களாலே
எழில்மிகு ஒளியென திகழ்ந்திடுமே
யாவரும் சமமே என உணர்வோமே
இதனை நன்றாய் எடுத்துக் கூறிடுவோம் நாமே
தேவைகள் அறிந்தே சிறந்திடும் வகையில்
நாமிதை இன்றே நாடுதல் நன்றே
சீரோங்கவே செயல் புரிவோமே
தினம் இதை மனதினில் நினைத்திடுவோம்
வாய்மையும் அன்பும் மனதினில் ஓங்க
பாரினில் நன்றாய் வாழ்ந்து காட்டிடுவோம் நாமே
வாழ்ந்திடும் அறிவால் அகம் தழைத்திடவே
நாமிதை இன்றே நாடுதல் நன்றே
மருதகாசி எழுதி, கண்டசாலா பாடிய பாடல் இது.
வினையா விதியா உலகின் சதியா?
வேதனையும் சோதனையும் விளையாடும் இந்த நிலை
ஆசைவலைப் பாசந்தனை
அறிந்திடாத நெஞ்சில்
நேச விதை விதைத்தவர்கள்
நிலைகுலைந்து வாடும் நிலை
பாலைவனம் போன்ற மனம்
சோலைவனமாக
பரிந்து வந்து அன்புமழை
பொழிந்தவர்கள் துன்பநிலை
உள்ளமதில் கள்ளமில்லா
உத்தமர்கள் தமையே
கள்ளர் கொலைகாரரென்று
கை விலங்கு பூட்டியது.
தொடரும்…
படைப்பாளர்

பாரதி திலகர்
தீவிர வாசிப்பாளர், பயணக் காதலர்; தொன்மை மேல் பெரும் ஆர்வம் கொண்டவர். அயல்நாட்டில் வசித்து வந்தாலும் மண்ணின் வாசம் மறவாமல் கட்டுரைகள் எழுதிவருகிறார். ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய கட்டுரைகள், ‘பூப்பறிக்க வருகிறோம்’, ‘சினிமாவுக்கு வாரீகளா?’ என்கிற புத்தகங்களாக, ஹெர் ஸ்டோரிஸில் வெளிவந்திருக்கிறது. தற்போது ‘சினிமாவுக்கு வாரீகளா – 3’ மற்றும் ‘சாதனை படைக்கும் சாமானியர்’ என்கிற இரண்டு தொடர்களை ஹெர் ஸ்டோரீஸ் வலைத்தளத்தில் எழுதிவருகிறார்.




