இது பழைய திரைப்படங்கள் குறித்துச் சிறு அறிமுகம். 1940-49 வந்த சில திரைப்படங்களில் இருந்து ஆரம்பிக்கலாம். இக்காலகட்டத்தில், இதிகாசத் திரைப்படங்கள், வரலாற்றுத் திரைப்படங்கள் மட்டுமல்ல சமூகக் கதைகளும் திரைப்படங்களாக வந்துள்ளன.
பல திரைப்படங்களில் கதை மிக கோர்வையாக இருக்கிறது. சில திரைப்படங்களில் கதைக்கு ஒட்டாமல் சில நகைச்சுவைக் காட்சிகள், பாடல்கள் இருக்கின்றன என்றாலும் அவற்றில் மக்களுக்கு ஒரு தகவல் கொடுக்கும் விதமாக வைத்திருக்கிறார்கள். சில திரைப்படங்கள் இப்போதும் பார்த்து வியக்கும்படிதான் உள்ளன. நாயகர் ஒருவரே ஊரையே அடித்து வெல்வது போன்ற காட்சிகள் எல்லாம் மிகவும் குறைவு. அதனால் யதார்த்தமாக இருக்கின்றன. பெரும்பாலும் திரைப்படங்களில் நாயகியின் பெயரைத்தான் முதலில் போடுகிறார்கள். பெண் பாத்திரங்கள் மிக வலுவாக உள்ளன. சும்மா மரத்தைச் சுற்றி ஆடுவதாக இல்லை என்பதெல்லாம் எனக்குப் பெரும் வியப்பை ஏற்படுத்தின. முடிந்தால் நீங்களும் பாருங்கள்.
1940 உத்தம புத்திரன்
https://www.youtube.com/watch?v=lLlU2sKFtxQ&list=WL&index=3&t=5453s
உத்தம புத்திரன் என்றவுடன் நினைவிற்கு வருவது தனுஷ், ஜெனிலியா நடித்து 2010 வெளியான திரைப்படம்தான். நகைச்சுவைப் படமான இதில், மறைந்த விவேக்கின் ‘எமோஷனல் ஏகாம்பரம்’ நடிப்பு பிரமாதமாக இருக்கும். ஆனால், இந்தத் திரைப்படத்தின் கதைக்கும் 1940 ஆம் ஆண்டு வெளியான இந்த உத்தம புத்திரன் திரைப்படத்தின் கதைக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை.
சரி, பழைய உத்தம புத்திரன் திரைப்படத்தின் கதை என்னவென்று தெரிய வேண்டுமா? இம்சை அரசன் 23 ஆம் புலிக்கேசி திரைப்படத்தைக் கண்முன் கொண்டு வாருங்கள். அதுதான் 1940இல் வெளிவந்த உத்தம புத்திரனின் கதை. உத்தம புத்திரன் இதே பெயரில் 1958 ஆம் ஆண்டு மீண்டும் திரைப்படமானது. முதல் படத்தில் நடித்தவர் PU சின்னப்பா. இரண்டாவதில் நடித்தவர் நடிகர் திலகம்.
1939 ஆம் ஆண்டு வெளியான ஹாலிவுட் திரைப்படமான தி மேன் இன் தி அயர்ன் மாஸ்க்கிலிருந்து தழுவி எடுக்கப்பட்டது இந்த உத்தம புத்திரன். தி மேன் இன் தி அயர்ன் மாஸ்க் திரைப்படம், 1847-1850 ஆம் ஆண்டு வெளியான The Vicomte of Bragelonne: Ten Years later என்ற பிரெஞ்சு புதினத்தை அடிப்படையாகக் கொண்டது.
படத்தின் பெயர் ‘உத்தம புத்திரன்’ என்று ஆணைக் குறிப்பதாக இருந்தாலும் நாயகியின் பெயரைத்தான் முதலில் போடுகிறார்கள். நடிகர்கள் பட்டியலைக் கீழ்கண்டவாறு போடுகிறார்கள்.
எம்.வி.ராஜம்மா
டி.எஸ்.கிருஷ்ணவேணி
பி.யு.சின்னப்பா
டி.எஸ்.பாலையா
சி வி பந்துலு
என் எஸ் என்.எஸ்.கிருஷ்ணன்
டி.ஏ.மதுரம்
காளி என்.ரத்னம்
மங்களம்
எஸ் எஸ் கொக்கோ
நடேசம்பிள்ளை
சி.ஆர். கமலம்
யு.ஆர் ஜீவரத்தினம்
பி ஏ பெரியநாயகி
டி டி ராஜகாந்தம்
பாண்டிய நாட்டில் நடப்பதாக கதைக் களம் உள்ளது. காலம் எதுவும் குறிப்பிடப்படவில்லை. கதை எனச் சொல்ல வேண்டும் என்றால், பாண்டிய மன்னரின் மனைவி குழந்தை பிறப்பை எதிர்நோக்கி இருக்கிறார். முதல் குழந்தை பிறந்தால், அமைச்சர் நாகநாதன் (டி.எஸ்.பாலையா) வளர்க்க வேண்டும். இன்னொரு குழந்தை பிறந்தால், அமைச்சர் குணசீலன் வளர்க்க வேண்டும் என மன்னர் விரும்புகிறார்.
ஆனால், ஒரே நேரத்தில் இரட்டைப் பிள்ளைகள் பிறக்கின்றன. குணசீலன் வளர்க்கும் குழந்தை தனக்கு எதிராகவே வளரும் என நினைத்து அதை அமைச்சர் நாகநாதன் கொல்லத் திட்டமிடுகிறார். அதனால், “ஒரு அரசுக்கு இரு வாரிசுகள் இருந்தால் சண்டை வரும். அரசு அழிந்துவிடும். அதனால் ஒருவரை யாருக்கும் தெரியாமல் மறைவாக வளர்க்கலாம்” என மன்னரிடம் ஆலோசனை சொல்கிறார். மன்னரும் மனவருத்தத்துடன் சரி என்கிறார். நாகநாதன் குழந்தையைக் கொல்வதற்குக் கொடுத்து அனுப்புகிறார். ஆனால், காட்டிற்குப் பச்சிலை பறிக்க வந்த மருத்துவர் சூரசேனன் குழந்தையைக் கொல்வதற்கு கொண்டு வந்தவரிடம் இருந்து குழந்தையை வாங்கி, மறைவாக வளர்க்கத் தொடங்குகிறார்.
விக்ரம பாண்டியனாக அரண்மனையில் வளரும் குழந்தை, அனைத்துத் தீய வழக்கங்களின் உறைவிடமாக வளர்க்கிறார். காட்டில் வளரும் சொக்கநாத பாண்டியன் நல்லவராக வளர்கிறார்.
இந்தக் காலகட்டத்தில் மன்னரும் இறந்துவிடுகிறார். வீரபாண்டியன் மன்னராகிறார். ஆனால், நாட்டில் நாகநாதன் வைத்ததுதான் சட்டம்.
சோழ நாட்டு இளவரசி மீனாட்சி (எம்.வி.ராஜம்மா) மன்னரை மணக்கும் எண்ணத்துடன் பாண்டிய நாட்டிற்கு வருகிறார். பெண் பார்க்க வருவது போல மாப்பிள்ளை பார்க்க வந்தால் எப்படி இருக்கும் என இயக்குநர் கற்பனை செய்து பார்த்திருக்கலாம். சோழ நாட்டு இளவரசியின் பெயர் மீனாட்சியா என யாரும் கேட்கக் கூடாது.
மன்னரோ மீனாட்சியைச் சந்திக்ககூடச் செய்யாமல், சாந்தாமணி (டி.எஸ்.கிருஷ்ணவேணி) என்ற பெண்ணே கதி என இருக்கிறார். சொக்கநாத பாண்டியன், அவருடன் இணைந்தவர்கள், நீதி கேட்டுப் போராடியதற்காக மன்னர் முன் இழுத்து வரப்படுகின்றனர். இருவரின் முக ஒற்றுமையைக் கண்ட மன்னர், தனக்குப் பதிலாக மீனாட்சியுடன் சொக்கநாதனைப் போக வைக்கிறார். சொக்கநாதனுடன் இழுத்து வரப்பட்ட மற்றவர்கள், சிறை வைக்கப்படுகின்றனர்.
இவ்வாறாகச் சந்திக்கும் சொக்கனும் மீனாட்சியும் ஒருவரை இன்னொருவர் விரும்புகிறார்கள். பின், சொக்கநாதர், மன்னர் வேடத்தில் சென்று தனது உறவினர்களைச் சிறையில் இருந்து விடுதலை செய்கிறார். அதனால், அவரைத் தூக்கிலிட மன்னர் நினைக்கிறார்.
இந்தக் காலகட்டத்தில், சொக்கனின் வளர்ப்புத் தந்தை சொக்கனும் மன்னரின் மகன்தான் என்ற உண்மையைத் தன் உறவினர்களிடம் கூறுகிறார். செய்தி மன்னருக்கு எட்டி விடுகிறது.
மன்னருக்கோ தனக்குப் போட்டியாக ஒருவர் வருவதில் விருப்பமில்லை. கொல்வதிலும் ஒரு குரூரம் மனதில் தோன்றுகிறது. அதனால், சொக்கனின் தலையில் இரும்பு கவசத்தை அணிவித்து சிறையில் தள்ளி சாவியைத் தன் கழுத்தில் தொங்க விட்டுக்கொள்கிறார்.
சொக்கநாதனின் குணத்தையும் மன்னரின் குணத்தையும் மாற்றி மாற்றி பார்க்கும் மீனாட்சிக்குக் குழப்பம் ஏற்படுகிறது. ஒரு கட்டத்தில் இந்தத் திருமணமே வேண்டாம் எனச் சோழ நாடு செல்ல நினைக்கிறார். பின் உண்மை அறிந்து மன்னர் முன் நடனமாடி, போதை ஏற்றி, சாவியை எடுக்கிறார்.
சொக்கன் குழு அதே முகமூடியை மன்னருக்கு அணிவித்து நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தும் வேலையைச் செய்கிறது. சிறையில் வந்த உணவில் ஒரு கரித்துண்டு கிடக்கிறது. இவ்வளவு சுகாதாரமில்லாத உணவா என வருந்திய மன்னன், அந்தக் கரித்துண்டால், தனது நிலையைக் குறித்து தட்டில் எழுதி வெளியே வீசுகிறார்.
சொக்கனுக்கும் மீனாட்சிக்கும் திருமண ஏற்பாடு நடக்கிறது. வெளியே வீசப்பட்ட தட்டு மூலம் உண்மை அனைவருக்கும் தெரியவருகிறது. மன்னரை இங்கு வரவிடாமல் தடுக்க சொக்கன் உள்ளிட்டோர் செல்கின்றனர். அப்போது ஏற்பட்ட மோதலில் மன்னரின் தேர் மலையில் இருந்து உருண்டு இறக்கிறார். சொக்கன் மீனாட்சி திருமணம் நடைபெறுகிறது.
சத்தியமே என்றும் ஜெயத்தைத் தரும் எனப் படம் முடிகிறது.
ஊரில் இருக்கும் மனிதர்களைக் காட்டும்போது, சட்டை போட்ட ஆண்கள் சட்டை போடாத ஆண்கள் சமமாகவே இருக்கிறார்கள். அரச உடைகளில் நட்சத்திர வடிவம் பெரிதும் காணப்படுகிறது.
திரைப்படத்தில், எழுத்து நடையில் அரசு சார்ந்தவர்கள் பேசுகிறார்கள். பொது மக்கள் அவரவர் இயல்பு நடையில் பேசுகிறார்கள்.
பெண்களில் வழக்கமான சேலை அணிந்தவர்கள், சிறிது முக்காடு இட்டுக் கொண்டவர்கள் எனக் கலந்து வருகிறார்கள்.
செந்தமிழ் நாடெனும் போதினிலே என்ற பாரதியாரின் பாடல் இடம் பெற்றுள்ளது.
‘வேதம் நிறைந்த தமிழ்நாடு
வள்ளுவன் தன்னை உலகினுக்கே’ என்கிற இரண்டு சரணங்களும் வருகின்றன. ஆனால், பாரதியாரின் பெயரைப் போடவில்லை. அந்தக் காலகட்டத்தில் அவரின் பாடல்களுக்குத் தடை இருந்தது. அதனால், பல இயக்குநர்களும் பாரதியாரின் பெயரைப் போடாமலேயே பயன்படுத்தி உள்ளனர்.
https://www.youtube.com/watch?v=qbR6FxcdanU&list=WL&index=40
பகல் வேஷக்காரர்கள் என ஒரு குழு வந்து பாடுகிறது. ஒட்டப்பெண் ஒட்ட மகா ராஜா எனப் பாடல் வருகிறது. ஆடும் பெண் தலையில் கொம்பு போல இருக்கிறது. இருபுறமும் இரு கிளி பொம்மைகள் உள்ளன. இதுதான் ஒட்டக் கூத்து (நாடகம்) என நினைக்கிறேன். பட்டாபியாக காளி என்.ரத்னம், சிடி ராஜகாந்தம் வருகிறார்கள். அந்தக் குழு நடனம் எளிமையாக மிக அழகாக இருக்கிறது. ஜி. ராமநாதன் இசை மிகவும் எளிமையாகவும் இனிமையாகவும் இருக்கிறது.
பாடல் இவ்வாறு வருகிறது. கேட்டு எழுதியதுதான். பிழைகள் இருக்கலாம். தாலியைக் கழற்றி வைத்துவிட்டுப் போ எனச் சொல்லும் கணவனிடம் அது என் பெரிய அண்ணன் போட்டது. அது குறித்துப் பேசாதே, அது எனக்குச் சொந்தமானது என ஒட்டப்பெண் சொல்வதாகப் பாடல் முடிகிறது.
ஓஹோ வாரும் பிள்ளாய் ஒட்டப்பெண்ணே
நான் இவ்வளவு நேரம் சத்தம் போட்டும்
கதவு திறக்க ஏன் தாமதம்?
வாருமையா ஒட்ட மஹாராஜனே
கதவைத் திறந்து வந்தேனய்யா சுவாமி
இந்நேரம் என்ன செய்தாய் ஒட்டப்பெண்ணே
உன்மனம் இரும்போடி
மின்னலிடையழகி அட ஒட்டப்பெண்ணே
விவரத்தை சொல்லடியே யே யே யே
சொல்லுறேன் கேளுமய்யா என் ஒட்டராஜா
தூங்கி எழுந்தேனய்யா
மெல்லி மேல் கோபம் வேண்டாம் என் ஒட்டராஜா
உள்ள வருவீய்யா
கதவைத் திறந்தவுடன் ஒட்டப்பெண்ணே
கள்ளனவன் போனானய்யா
கள்ளனவன் போகயிலே அடி பெண்ணே
கண்டு கலங்கினனே
கண்டது உண்மையானால் என் சாமி இந்த
கன்னியடி செய்வதென்ன?
உண்டோ இவரிவாயோ? என் சாமி நீ
உரைப்பது என் விதியோ?
ஜீவனமே நடக்குமடி அடி பாதகி நீ
வேசி என்று பேரெடுத்தால்
வேசி என்று பேரெடுக்கு? அடி பாவி
வேறு தேசம் வந்தோமோ?
இந்தாரும் நாயகரே நீர் ஒன்றும் இடக்காக பேச வேண்டாம்
எந்தேசத்திலும்? நான் சென்று இரந்து குடித்துடுவேன்
இரந்து குடித்தாலென்ன அடி பாதகி நீ இவனோடு போனாலென்ன
சரடும் தாலியும் வைத்து சண்டாளி கையறவே ஓடிப்போடி நீ
சரிதான்டா நீதானடா அட பாவி இந்த
சரடும் தான் நின்குமதே
என் பெரிய அண்ணன் போட்டான் தெரியாதோடா
பேசாதே எனக்குச் சொந்தம்
எனப் அந்தப் பாடல் வருகிறது.
மம்பட்டியை தோள்ல வச்சு
மடை திறக்க போற மச்சான்
மடைய தெறந்திடுங்க மச்சானே
மயிலு வந்து நீராடட்டும்
என நான்கு வரிகள் வருகின்றன. இந்த வரிகளைப் பல்லவியாக வைத்துப் பிற்காலத்தில் உள்ளத்தில் குழந்தையடி திரைப்படத்தில் பாடல் ஒன்று வருகிறது. இது நாட்டுப்புற பாடலாக இருக்கலாம்.
https://www.youtube.com/watch?v=3oB0VFoS6KY&list=WL&index=41
கதைக்கு ஒட்டாமல், தனிக் கதையாகச் சமத்துவம் குறித்த கதை ஒன்று வருகிறது. இக்கதை புல்லுக்கட்டு கொண்டு வந்து போடும் இளம் பெண்ணும், டி.ஏ.மதுரமும் சபலமும் சாதி வெறியும் கொண்டவரை (என் எஸ் கிருஷ்ணன்) சாடும் விதமான கதை, இளம்பெண்ணாக வரும் அந்த அம்மாவின் நடிப்பு, முகத்தோற்றம், கொசுவம் வைத்து சேலை கட்டியிருக்கும் பாங்கு எல்லாம் அவ்வளவு அழகு போங்கள்!
இவ்வாறான கருத்துகளை வைத்த பெருமை இயக்குநர் டி.ஆர்.சுந்தரம், உரையாடல் எழுதிய டி.வி. சாரி (V. Chari) இருவரையும் சாரும்.
(தொடரும்)
படைப்பாளர்:
பாரதி திலகர்
தீவிர வாசிப்பாளர், பயணக் காதலர்; தொன்மை மேல் பெரும் ஆர்வம் கொண்டவர். அயல்நாட்டில் வசித்து வந்தாலும் மண்ணின் வாசம் மறவாமல் கட்டுரைகள் எழுதிவருகிறார்.