நாங்கள் தெருப்பிள்ளைகள் எல்லாரும் ஒன்று காளியம்மன் கோவில் மைதானத்தில் விளையாடுவோம், இல்லை என்றால் ஆச்சி வீட்டுத் திண்ணையில் விளையாடிக் கிடப்போம். ஆச்சி வீட்டுத் திண்ணைதான் தெருவிலேயே பெரியது. இரண்டு பெரிய நீண்ட உயரமான படிகள் தாண்டி திண்ணை. அம்பது பேர் கூடி உட்காரலாம். எவ்வளவு வெயிலடித்தாலும் சில்லென்று இருக்கும். சமயத்தில் பிள்ளைகளின் காட்டுச் சத்தம், கட்டுக் கடங்காமல் எல்லை மீறினால், அதைவிட யானைப் பிளிறலாய் பெரியாச்சி வந்து சத்தம் போடும். அவ்வளவுதான் எல்லாரும் ‘கப்சிப்’.
வெளித் திண்ணைத் தாண்டி, இன்னும் இரண்டு படிகள் ஏறினால், வீட்டோடு இணைந்தது போல இன்னொரு திண்ணை. அதில்தான் நகை அடகு வைக்க வந்தவர்கள் உட்காருவார்கள். உள்திண்ணைக்கு ஒரு பெரிய கம்பி கேட். வீட்டோடு இணைந்து பெரிய மரத்தடுப்பு. வீட்டுள் யாரும் எளிதில் நுழைந்து விட முடியாது. பேங்க் கேஷியருக்கு இருப்பது போல இடுப்புயரம் மரத்தடுப்பு. மேலே உத்திரம் வரை கம்பிவலைத் தடுப்பு. நடுவே நகை, பணம் கொடுக்கல் வாங்கலுக்காக சிறிய பிறை போன்ற ஜன்னல். அதற்கும் குட்டிக் கதவு உண்டு. ஆச்சி எப்பவாவது ஊருக்குப் போனால், பெரியாச்சி வீட்டைப் பூட்டி, உள் திண்ணையின் கம்பி கேட்டைச் சாத்தி, யார் வந்தாலும் கேட்டைத் திறக்காமலேதான் பேசும்.
வெளித்திண்ணையிலிருந்து படிகள் மொட்டை மாடி போகும். படிகள் போகும் பாதை ஜன்னல் போல சிறிய மாடம் போல அழகாக இருக்கும். முத்தண்ணன் ஊரிலிருந்து வந்தால், அங்கே நின்றுதான் பிரஷ் வைத்து பல் தேய்க்கும். அங்கிருந்தே சாக்கடையில் கொப்புளித்துத் துப்பும். அதுதான் எங்கள் ஊரிலேயே பிரஷ் வைத்து, பேஸ்ட் வைத்து வாய் நிறைய நுரை கொண்டு… அது பெரிய சீர். எங்கள் ஊரிலேயே முதன் முதல் லுங்கி கட்டியதும் முத்தண்ணன்தான். பேண்ட் ஷர்ட் போட்டு டக்’இன் பண்ணி ஆஃபிஸர் போல நடந்ததும் முத்தண்ணன்தான். எங்கள் ஊரில் மட்டுமல்ல, முத்தண்ணனின் ஊரிலும் முதன் முதலாக காலேஜ் போய் படித்தது, டவுன் ஆஃபிஸர் போல ட்ரஸ் பண்ணுவது எல்லாம் முத்தண்ணன்தான்.
எல்லாப் பிள்ளைகளுக்குமே முத்தண்ணனைப் பிடிக்கும். ஊரிலிருந்து அந்தண்ணன் எப்படா வரும் என்று இருக்கும். வந்தார் என்றால், எல்லா பிள்ளைகளும் முத்தண்ணா முத்தண்ணா என்று சுற்றித் திரிவோம். அவர் பக்கத்தில் யார் உட்காருவது என்று போட்டா போட்டி நடக்கும். அவரும் சிரித்தபடியே சளைக்காமல் எங்களோடு பேசுவார். எங்களுக்குள் சண்டை வந்தால் பஞ்சாயத்து அவரிடம்தான். புதுப் புது விளையாட்டுகள் சொல்லித் தருவார். விடுகதைகள் போடுவார். அவர் சொல்லும் விடுகதையை – சொற்கட்டை யாராலும் அவிழ்க்க முடியாது. அழகாய் வரைவார்.
எல்லாருக்கும் நோட்டுப் புத்தகத்தில் ஒரு படமாவது வரைந்து கொடுப்பார். அட்டை போடச் சொல்லிக் கொடுப்பார். பாடத்தில் எதாவது சந்தேகங்கள் இருந்தால், டீச்சரை விட அருமையாகச் சொல்லிக் கொடுப்பார்.
ஒரு ஞாயிற்றுக் கிழமை மத்தியானம். தெருவே அமைதியாக இருந்தது. பிள்ளைகள் எல்லாரும் ஆச்சி வீட்டுத் திண்ணையில் விளையாடிக் கொண்டிருந்தார்கள். எங்கிருந்தோ அரக்கப் பரக்க முத்தண்ணன் ஓடி வந்தது.
‘ஐ.. முத்தண்ணன்!’ பிள்ளைகள் கத்த, முத்தண்ணன் திண்ணையின் கேட்டை இழுத்து பூட்டியது. உள் திண்ணையில் பாதியும், வெளித்திண்ணையிலுமாய் பிள்ளைகள் பிரிந்து கிடந்தார்கள். உள்ளே வீட்டுக்குள் போய் அந்தக் கதவையும் சாத்தி பூட்டி விட்டது. வீட்டிலிருந்து பின்பக்கம் பள்ளிவாசலுக்கு வழி உண்டு. அதில் குதித்துப் போய்விட்டது. பின்னாலேயே நான்கு போலீஸ்காரர்கள் துரத்திக் கொண்டு வந்தார்கள். அவர்களுக்கு வழி புரிந்து, பள்ளிவாசலின் முன் பக்கம் போவதற்குள் சிமிட்டும் நேரத்தில் அந்தண்ணன் பறந்து விட்டது.
பிள்ளைகள் திண்ணை உள்ளே மாட்டிக் கொண்டு ஒரே அலறல். தெருவே கூடிவிட்டது. அப்புறம் வேறு எதுவும் வழி இல்லாததால், பூட்டை உடைத்துத் திறந்தார்கள்.
ஊரில் முத்தண்ணன் ஒரு குழந்தையைக் கொன்று, கிணற்றில் போட்டு விட்டதாம். வெறும் தங்கத் தோட்டிற்காக நடந்த கொலையாம். எப்பவும் அந்தக் குழந்தை அந்தண்ணனோடவே தான் சுத்துமாம். அந்தக் குழந்தையை வளர்த்ததே முத்தண்ணன்தானாம். பெத்தம்மா, ஆச்சியிடம் சொல்லிக் கொண்டிருந்தது.
ஃ ஃ ஃ
அந்தத் தெரு பள்ளி வாசலில் ஒரு குளம் உண்டு. அராபியக் கதைகளின் அற்புத உலகில் நீந்தச் சொல்கிற குளம். தாமரைக் குளம். மொட்டை மாடியில் இருந்து பார்க்கையில் வானத்தைத் துண்டாக்கி, செவ்வகத்தில் அடைத்தது போலப் பளீரெனக் கண்ணைப் பறிக்கும். வானத்தில் தாமரைகள் முளைத்து நிற்கும். மேகங்கள் மண்ணைத் தழுவிக் கிடக்கும். காற்று வீசும்போது, வானம் அலை அலையாய் அசையும்.
அந்தக் குளத்தினுள் ஒரு பெரிய மாய உலகம் இருப்பதாக சாஹிரா சொல்லுவாள். பாதாள உலகம். நிலத்திற்குள் ஓர் உலகம். அந்த உலகத்தின் மலர்ச்சிதான் பூமியில் செடி கொடி மரங்களாக வெளிப்படுவது. மௌத்’தானவர்களைப் புதைப்பது அதனால்தான். அவர்கள் அப்படியே அந்த பாதாள உலகத்தில் போய் வாழ்வார்கள். இங்கு போலவே அங்கும் பெரிய உலகம் இருக்கிறது. ஆனால் இந்த உலகை விட அங்கு ஆச்சரியங்களும் அற்புதங்களும் நிறைந்திருக்கும்.
அதனுள் அத்தனை அழகான கதைகள். அத்தனை அருமையான மனிதர்கள். அஸரத்துகள், சுல்தான்கள், பேஹம்கள், அழகிகள், பேரழகிகள், நாட்டியங்கள், ஓவியங்கள், விளக்கு பூதங்கள், ஏவலுக்குக் காத்திருக்கும் அடிமைகள். திகட்டாத இனிப்புகள், தீராத பண்டங்கள், அள்ளக் குறையாத செல்வம், யாருக்கும் சாவே இல்லை. மொத்தத்தில் இந்த உலகில் கிடைக்காத எல்லாம் அந்த உலகில் அவள் கதைகளில் இருந்தன.
அவள்தான் எது சாப்பிடும் முன்பும் ‘பிஸ்மில்லா’ சொல்லிச் சாப்பிட, சொல்லிக் கொடுத்தாள்.
‘நீ பள்ளிவாசல் உள்ள போயிருக்கியா’
‘இல்லியே’
‘ஒருநாள் போய்ப் பார்ப்பமா’
பள்ளி மதிய உணவு இடைவேளையில், இருவரும் கிளம்பினார்கள். அந்தப் பள்ளிவாசல் அவ்வளவு அழகு. பசுமையும் வெண்மையும் கலந்த நிறம். இங்கதான் தொழுகை செய்கிற இடம், இது துவா ஓதும் இடம், இந்த மைக்கில்’தான் வாங்கு’ சொல்வார்கள். இதோ, குளம்! அலையலையாய் நீர் வரிகளோடிய குளம்! மொட்டை மாடியிலிருந்து பார்க்கும்போதான அதே பேரழகுடன், ஆனால் அதைவிடவும் பெரியதாய் குளம்!
தாமரைக் குளம்!
‘ஏ.. பூப் பறிப்பமா’
அதற்குள் ஒரு வண்ணத்துப் பூச்சி அவர்களைத் திசை திருப்ப, பள்ளிவாசலின் வாங்கு’ சொல்லுமிடத்துக்கு ஓடினார்கள். தன்னையறியாமல் கூச்சலிட்டார்கள். வாசல் கேட்’டில் ஒரு அஸரத்’ கத்தினார். ‘ஏ யாரு பிள்ளைங்களா அது? எப்படி உள்ள வந்தீங்க; வெளாட்ற இடமால்ல இது… ம்?’
பக்கத்தில் இன்னொருவர் ‘வச்சுப் பூட்டுங்க சொல்றேன். அப்பத்தான் இதுகளுக்கு புத்தி வரும்’
இருவரும் பூட்டிவிட்டுச் சென்றார்கள்.
ஐயோ! சாஹிரா’வும் இவளும் அழுத அழுகை! அழுதழுது முகமெல்லாம் சிவந்து வீங்கி விட்டது. பள்ளிக்கூடம் இந்நேரம் பெல்’ அடித்திருப்பார்கள். கேட்’டெல்லாம் மூடி இருப்பார்கள். மதியம் முதல் பீரியட்’ வரலாறு. இப்பப் போனால், அந்த டீச்சர் அடிச்சே கொன்னுறும்.
சாயந்திரம் அம்மா தேடுவார்களே… இவ்ளோ பெரிய கட்டடத்தில் யாருமே இல்லை. சாயங்காலமாகி, இரவாகி, இருளில் பேய்கள் வந்து, மறுநாளாகி, பசித்து, செத்து…… யாருமே வரவில்லை.
இரண்டு பிள்ளைகளும் பள்ளிவாசல் கேட்டிலேயே உட்கார்ந்து அழுது கொண்டிருந்தார்கள். ஆளரவம் கேட்டது.
‘இனிமே இந்தப் பக்கமே வரக்கூடாது. புரிஞ்சுதா. ஓடுங்க’ என்று அஸரத் கேட்டைத் திறந்து விட்டார்.
ஃ ஃ ஃ
அவனுக்கு வீட்டுக்கு ஏன்டா வருகிறோம் என்றிருந்தது. இத்தனைக்கும் விடியல் தொடங்கி ஏழு மணிக்கு வீட்டை விட்டு கிளம்பினான் என்றால், வருவதற்கு இரவு எட்டரை ஒன்பது ஆகிவிடும்.
வந்தால், சோறு என்று ஒன்றைப் போடுவாள். பார்த்தாலே குமட்டிக் கொண்டு வரும். வாயில் வைக்க விளங்காது. சூடு கூடப் பண்ண மாட்டாள். ஊசிப் போன வாடை வந்தால் கூட அதைத்தான் தின்றாக வேண்டும். அதை மிச்சம் வைத்தால், அடுத்த நாள் அது கூடக் கிடைக்காது. இப்பவே பஸ் காசு முதற்கொண்டு அவள்தான் தருகிறாள். இவன் காசு கடனுக்கு சரியாகப் போய்விடுகிறது.
சனியன்! க்ரெடிட் கார்ட்டில் ஒரு புது மாடல் மொபைல் வாங்கித் தொலைத்தான். அது வட்டி குட்டி போட்டு, அது குட்டியூண்டு குட்டி போட்டு என்று வளர்ந்து வளர்ந்து…. பெருங்கடனாகி விட்டது. அதுதான் கடனாகி விட்டதே என்று கவலையில் இதோடு கொஞ்சம் என்று ஸ்டார் ஹோட்டலில் நண்பர்களோடு குடிக்கச் சென்றதில், இன்னும் சேர்ந்து விட்டது.
அவனுக்குக் குடிக்க வேண்டும் போல இருந்தது.
சோற்றின் மேல் சாம்பாரை ஊற்றி விட்டுப் போய்விட்டாள். அவ்வளவுதான் கம்ப்யூட்டர் முன் அமர்ந்து விட்டாள். அப்படி என்னதான் ஊரில் இல்லாத வேலையோ. ஆஃபிஸிலும் செய்து போதாக் குறைக்கு வீட்டிலும் செய்து. வேலைக்குப் போகிறாளாம். ஊரில் இல்லாத வேலை. மயிரு வேலை!
காலையில் வைத்த சாம்பார். தொட்டுக் கொள்ள எதுவுமில்லை. எரிச்சலாய் வந்தது.
கடனடைய இன்னும் பத்தொன்பது மாதங்கள் இருந்தன.
நல்ல வேளை பிள்ளை தூங்கி விட்டான். இல்லை, அவனுக்கு ஊட்டி விட்டுத் தூங்க வைக்கிற வேலையும் இவன் தலையில் விழுந்திருக்கும். இந்த வேகாத சோற்றை, இவனாலேயே திங்க முடியவில்லை. அந்தப் பிள்ளை எப்படிச் சாப்பிடும்? அது நல்ல நாளிலேயே நல்ல சாப்பாடு என்றாலே, சாப்பிடப் படுத்தி எடுக்கும்.
‘சாப்பிட்டாச்சா, தூங்கலாமா… கரெண்ட் பில்’ போன தடவையே 1000 க்கும் மேல போயிடுச்சு. சும்மா தட்டையே பாத்துக்கிட்டு உக்கார்றது…’
எகிறி எழுந்து எச்சைக் கையால், வாயிலேயே அடித்தான். அவன் அடித்ததை நம்ப முடியாமல் பார்த்தாள்.
‘சோறாடி இது முண்ட. நாயி திங்குமாடி இதை’
‘அதான் நீ திங்குறியே’ அடிபட்ட வலியில், பதிலுக்கு அவனை வலிக்கப் பண்ணும் சீற்றத்துடன் பேசினாள்.
வைத்து விளாசினான். அடிக்குத் தப்பவோ, பதறி விலகவோ அவள் அந்த வீட்டின் குட்டி அறைக்குள் புகுந்தாள். புகுந்து தாழிட முயல, இவன் முழு பலத்துடன் கதவைத் தள்ளினான். அவள் சுவரில் மோதி, கட்டிலுக்கும் சுவருக்கும் இடைப்பட்ட தரையில் விழுந்தாள். கட்டிலில் மகன் தூங்கிக் கொண்டிருந்தான்.
இவன் அந்த அறையைப் பூட்டினான். சட்டையை மாட்டிக் கொண்டு, வீட்டையும் பூட்டிக் கிளம்பினான்.
அது அவர்களது பெட்ரூம். கட்டில் மட்டுமே கொள்ளும் அளவுடையது. அவர்கள் இருந்தது இரண்டாவது மாடி. அது பழைய காலத்து பில்டிங். அந்த வீட்டின் குட்டி அறை சென்று முடிந்தது எப்போதும் பிஸியாக உள்ள நெடுஞ்சாலையில். எவ்வளவு கத்தினாலும் நின்று கேட்க ஆளில்லாத எப்போதும் விரைந்து கொண்டிருக்கும் சாலை அது.
அந்த சாலையில் இலக்கின்றிப் போய்க் கொண்டிருந்தான். அவனுக்குக் குடிக்க வேண்டும் போலிருந்தது. குடித்தே ஆக வேண்டும் போலிருந்தது.
அடித்துத் தள்ளியதில் விழுந்தவள் எழுந்திருக்கவில்லை, அப்படியே கிடந்தாள் – என்று ஞாபகம் வந்தது. என்ன ஒரு நடிப்பு! ஒருவேளை நிஜமாகவேதான் விழுந்து கிடந்தாளோ. மயக்கமோ……அல்லது….அல்லது…
திடீரென பயங்கரமாக ஹாரன் ஒலிக்க, ஒளி வெள்ளம் சூழ –
எதுவும் யோசிக்க முடியாமல், லாரியின் அடியில் தலை சிதறிக் கிடந்தான்.
ஃ ஃ ஃ
படைப்பாளர்:
பிருந்தா சேது
சே.பிருந்தா (பிருந்தா சேது), கவிஞர். எழுத்தாளர். திரைக்கதை ஆசிரியர்.
அருமை பிருந்தா…. எல்லாக் கதையும் ஆழமான ஒரு வலியைச் சொன்னது.
நன்றி மிக