கனடா வந்த அதே வாரத்தில் ஒரு நாள் காலை எழுந்து ஹோட்டலின் ஜன்னல் திரையை விலக்கி வெளியே பார்த்தபோது வெள்ளையாக ஏதோ புல்தரையிலும் கார்களின்மீதும் படிந்திருந்தது.

அடடா! அதுவரை நான் திரையில் மட்டுமே கண்டிருக்கும் வெண்பனி! அன்றுதான் சீசன் ஆரம்பம். வெல்கம் டூ கனடா என்று கூவினேன்! ‘புது வெள்ளை மழை பொழிகின்றது’ என்று என்னை அறியாமல் பாட ஆரம்பித்துவிட்டேன்! குளிர்காலம் அதிகாரப்பூர்வமாக ஆரம்பம். ஆம், தினசரி வானிலை மட்டுமல்லாமல் இங்கே குளிர்காலம், வசந்த காலம், வெயில் காலம் ஆரம்பிக்கும் நாட்களையும் அறிவிப்பார்கள். அதைக் கொண்டே அனைவரும் ஹீட்டர் அல்லது ஏசி ஆன்/ஆஃப் செய்வதைத் திட்டமிட்டுக்கொள்ள வேண்டும். ஏனென்றால், வெளியே செல்லும்போது மட்டுமே இயற்கையான தட்பவெப்பத்தை நாம் அனுபவிக்க முடியும். மற்றபடி வீடு, பஸ், ஆபீஸ் என எல்லா இடங்களிலும் குளிர்காலத்தில் ஹீட்டரும் மற்ற காலங்களில் ஏசியும் தவிர்க்க முடியாதவை.

குளிர்காலம் என்பதால் நாம் அடுத்து முக்கியமாகப் பேச வேண்டியது டீ பற்றிதான். முதல் இரண்டு வாரங்களுக்கு ஹோட்டலில் தங்குவதற்கான செலவை ஆபீஸ் ஏற்றுக்கொள்ளும், அதற்குள் வாடகைக்கு வீடு பார்த்துக்கொள்ள வேண்டும். ஆனால், அந்த இரண்டு வாரங்களும் நாங்கள் மிகவும் ஏங்கியது ஒரு கப் நல்ல டீக்காகத்தான்.

ஹோட்டல் அறையில் கிச்சனும் உண்டு. டீ, காபிக்கு எந்த நேரமும் பால், சர்க்கரை, டீ பேக்ஸ், காபி டிகாஷன் எல்லாம் வைத்திருப்பார்கள். பால் சின்னச் சின்ன பிளாஸ்டிக் குப்பிகளில் இருக்கும். அது மிஞ்சிப்போனால் 20 மி.லி.தான் இருக்கும். அதிலும் 2% என்று போட்டிருக்கும் பால் தண்ணியாக இருக்கும். எவ்வளவு திறமையாக டீ தயாரித்தாலும் குடிப்பதற்குச் சுமாராகத்தான் இருக்கும். ஃபிரிட்ஜில் இருக்கும் பாலில் எவ்வளவு சூடான தண்ணீரைக் கலந்தாலும், டீத்தூளை டிப் பண்ணி எடுப்பதற்குள் சூடு காணாமல் போய்விடும். மீண்டும் அதை மைக்ரோவேவ் ஓவனில் வைத்து சூடு பண்ண வேண்டும். அப்பப்பா! ஒரு டீ போடுவதற்குள் கண்ணைக் கட்டிவிடும். இவ்வளவு கஷ்டப்பட்டுப் போடும் டீ சுமாராகக்கூட இருக்காது என்பதுதான் மிகப் பெரிய சோகம்!

டீ, காபி கப்பை பார்த்தால் பெரிதாகக் குறைந்தது 300 மி.லி. அளவு கொள்ளும்படி வைத்திருப்பார்கள். எவ்வளவு பால் , எவ்வளவு தண்ணீர் ஊற்றிக் குடிப்பது என்றே தெரியவில்லை. ஆனால், எவ்வளவு குடித்தாலும் காலைக்கடன் முடிக்கக்கூட உதவாது. முக்குக்கு முக்கு Timhortons, Starbucks என்ற பெயரில் பிரசித்தி பெற்ற காபி கடைகள் இருக்கும். இங்கேயும் டீ பிரமாதமாக இருக்காது. உடனே காபி நன்றாக இருக்குமா என்று கேட்காதீர்கள். எல்லாமே சாயம் கலந்த வெந்நீராகத்தான் இருக்கும். ஆனால், விதவிதமான பெயர்களில் நம்மை அழைக்கும். பெரும்பாலானவர்கள் கையில் இந்த வெந்நீரோடுதான் திரிவார்கள்!

ஒரு வீடு பிடித்துக் குடியேறிவிட்டால் நல்ல டீ சாப்பிடலாம் என்ற ஆசையில் வீடு தேட ஆரம்பித்தோம். பெரிய பழைய புதிய அபார்ட்மெண்ட்கள் இருக்கின்ற இடம் மிஸ்ஸிஸாகா.

ஒண்டாரியோ மாகாணத்தின் தலைநகரான டொரோண்டோவைச் சுற்றி GTA என்றழைக்கப்படும் பகுதியில் ஒண்டாரியோ ஏரியின் கரையோரம் அமைந்த ஒரு தொழில் நகரம் மிஸ்ஸிஸாகா.

ஒண்டாரியோ ஏரியையும் ஹுரான் ஏரியின் ஜார்ஜியன் குடாவையும் இணைக்கும் பிரதான சாலை ஹூரான்டாரியோ. அதில்தான் என் ஆபீஸ். இதுபோன்ற பிரதான சாலையில் வீடு இருந்தால் டிமாண்ட் அதிகம் என்பதால் வாடகை அதிகம். குளிர்காலத்தில் பஸ் மாறி ஆபீஸ் செல்ல வேண்டியிருந்தால் ஏற்படும் சிரமம், நேர விரயம் தவிர்க்க முடிவதாலேயே அதிக விலை கொடுக்க நேரிடும்.

அடுத்த விஷயம், ரியல் எஸ்டேட். சாதாரணமாகப் பேசிக்கொண்டிருக்கும் ஒருவரிடம் நம்பி ஏதாவது வீடு வாடகைக்கு அல்லது விலைக்குத் தெரியுமா என்றுகூடக் கேட்டால் போதும். உடனே ரியல் எஸ்டேட் ஏஜெண்ட், போர்டு ஒன்றை எடுத்துக் கழுத்தில் மாட்டிக்கொள்வார். ஒரு வீட்டை காண்பிக்க பத்துப் பேர் சம்பந்தப்பட்டிருப்பார்கள் ஏஜெண்ட் என்ற பெயரில்! கமிஷன் பிரித்துக்கொள்ள ஏதும் ஆப் வைத்திருப்பார்களோ என்னவோ! இங்கே ஏஜெண்டுகள் தேர்வு எழுதி லைசென்ஸ் பெற்றிருக்க வேண்டும். எந்த ஒரு வீடாக இருந்தாலும் வாடகைக்கோ அல்லது விலைக்கோ விளம்பரம் செய்யப்படும். எத்தனை ஏஜெண்டுகள் பார்ட்டிகளை அழைத்து வந்தாலும், அப்ளிகேஷன் கொடுக்க வேண்டும். ஜாதகத்தைத் தவிர, அனைத்தும் கொடுக்க வேண்டியிருக்கும்!

அப்ளிகேஷன்களை ஓனரின் ஏஜெண்ட் பரிசீலித்து, அதில் தேர்வாகும் பார்ட்டிகளுக்குள் பேரம் நடத்தி, அதிக வாடகை கொடுக்கச் சம்மதிப்பவருக்கு வீடு கொடுக்கப்படும். வாடகை ஒப்பந்தம் முறைப்படி எழுதி, கையெழுத்திட ஏஜெண்டுகள் உதவி செய்வர். ஆனால், அவர்களுக்கான கமிஷன் செல்லர் அல்லது ஓனர் மட்டுமே கொடுக்க வேண்டும். இது தனிப்பட்ட ஓனர்களுக்குச் சொந்தமான பிளாட்கள் இருக்கும் காண்டோ எனப்படும் அபார்ட்மெண்ட்களுக்குப் பொருந்தும்.

அபார்ட்மெண்ட்டில் இன்னொரு வகை ரெண்டல் நிறுவனங்கள் நிர்வகிப்பது. அங்கே எல்லா வீடுகளும் ஒரே மாதிரி இருக்கும், வாடகையும் ஒரே மாதிரி இருக்கும். ஆனால், சில ரெண்டல் நிறுவனங்கள் ஒரு ரூல் வைத்திருப்பார்கள். ஒருவர் எவ்வளவு சம்பளம் வாங்கினாலும், கிரெடிட் ஹிஸ்டரி காண்பிக்க வேண்டும் என்று. கனடா வந்த இரண்டே வாரங்களில் கிரெடிட் ஹிஸ்டரிக்கு எங்கே போவது?

இன்னொரு சங்கடம் இந்த அபார்ட்மெண்ட்களில் வாஷிங் மெஷின் பொதுவாக வைத்திருப்பார்கள். நாம் அங்கே அழுக்குத் துணிகளைப் போட்டுவிட்டு, மீண்டும் போய் ட்ரையர் போட்டுவிட்டு, மீண்டும் போய் எடுத்துக்கொண்டு வரவேண்டும்.

அதில் மிதியடி முதல் நாய் உடை வரை அனைத்தும் துவைக்கப்படும். அதனால் வாஷிங் மெஷின் ஃப்ரீயாக இருக்கும் நேரம் குறைவாக இருக்கும். அதனால் அதிக வாடகை கொடுத்து காண்டோ அபார்ட்மெண்ட்டிலேயே குடிபுகுந்தோம்.

எவ்வளவு வாடகை கொடுத்தாலும் வீட்டிலும் பாத்ரூமிலும் தண்ணீரைத் தரையில் ஊற்ற முடியாது, கூடாது. குளிருக்காக முழுவதும் அட்டையிலேயே 50-60 தளங்களில் வீடுகளைக் கட்டி வைத்திருக்கிறார்கள். அதாவது ஒரு வீட்டின் உட்புறம் நீங்கள் பார்க்கக்கூடிய அனைத்தும், அட்டையில் தான் செய்திருப்பார்கள். அதனால் தரையில் தண்ணீர் ஊற்றினால், இந்திய மதிப்பில் 30 ஆயிரத்திற்கு பில்லை நீட்டுவார்கள்.

அடுத்து மிக முக்கியமான இடம், சமையலறை. எல்லா வீடுகளிலும் பொதுவாகப் பெரிய உபகரணங்களுடன் சேர்த்துதான் வீடு கொடுப்பார்கள். அவை அனைத்தும் ஓனரின் பொறுப்பு. க்ரில் வைத்த ஓவன் அதன் மேலே இண்டக்ஷன் ஸ்டவ் போன்ற குக் டாப், மைக்ரோவேவ் ஓவன், ஃபிரிட்ஜ், டிஷ் வாஷர் எனப்படும் பாத்திரம் கழுவி. இவை அனைத்தும் மின்சாரத்தில் இயங்குபவை. நமக்கு வேண்டும் என்றால் கேஸ் அடுப்பு வாங்கிக்கொள்ளலாம். ஆனால், அதற்கு நிரந்தர குடியுரிமை பெற்று சொந்த வீடு வாங்க வேண்டும். ஆம், வாடகை வீட்டில் இந்தப் பெரிய உபகரணங்கள் எதையும் நாம் மாற்ற முடியாது. நமக்குச் சமைப்பதற்கு குக் டாப் அடுப்பும், சூடு பண்ண மைக்ரோவேவ் ஓவனும் போதுமானது. பெரிய பெட்டி மாதிரி இருக்கிற ஓவன், க்ரில் அடுப்பு போன்றவற்றை உபயோகப்படுத்தினால் நீங்கள் கில்லாடிதான்!

தொடரும்...

தொடரின் முந்தைய பகுதிகள் இங்கே:

கட்டுரையாளர்

பிருந்தா செந்தில்குமார்

பிருந்தா தமிழ்நாட்டில் பிறந்து, சென்னையில் படித்த இளங்கலை வணிகவியல் பட்டதாரி. ஐடி துறையில் சுமார் 20 வருட காலமாக பணிபுரிந்து வருகிறார். தற்போது வேலை நிமித்தமாக 21/2 வருடங்களாக கனடா மிசிசாகா என்னும் நகரத்தில் வசித்து வருகிறார்.

படிக்கும்போதும், வேலை செய்யும் இடத்திலும் தெளிவாக கருத்துகளை பகிர்ந்து கொள்வதாக கிடைத்த பாராட்டுகள் மற்றும் கோவிட் காலத்தில் உறவினர்கள் அளித்த ஊக்கத்தில், முதன்முதலாக தன் கனடா அனுபவத்தை எழுத்தில் பதிவிட்டிருக்கிறார்.