இப்போது ஊருக்கு ஊர் நடைபெறும் புத்தக திருவிழாக்கள்,  எங்கள் இளமைக்கால வாசிப்புப் பழக்கம் குறித்து உங்களுடன் சிறிது பகிர்ந்து கொள்ளும் எண்ணத்தை வரவழைத்தது. 

மனிதனின் ஆகப் பெரிய கண்டுபிடிப்பு எது என்று கேட்ட போது, சற்றும் யோசிக்காமல் புத்தகம் என பதிலளித்தாராம் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். பாறை ஓவியங்கள், பானை வரி வடிவ எழுத்துக்கள், என பரிணாம வளர்ச்சியடைந்து,  சுவடிகள், அச்சு வடிவம், இணையப் பக்கங்கள் என ஆயிரக்கணக்கான ஆண்டுகள், வெவ்வேறு வடிவங்களில் புத்தகங்கள் நம்முடன் பேசிக்கொண்டே இருக்கின்றன. 

எங்கள் இளமைக்காலத்தில் ஆண்கள், ஊரில் இருந்த வாசகசாலை போன்ற படிப்பகங்களில் சென்று நாளிதழ்கள், மாத, வார இதழ்கள் படிப்பார்கள். எங்களுக்கு அந்த வசதி கிடையாது. பெண்கள் அங்கு செல்வதே கிடையாது. ஆனாலும், வாசிப்பு என்பது பெண்களின் மிகப் பெரிய பொழுதுபோக்காக இருந்தது என்பதே உண்மை. இப்போது வாட்சப்பில் இருக்கிறார்கள் நாடகம் பார்க்கிறார்கள், என பெண்களைக் குறை சொல்வதுபோல, அப்போது பத்திரிகைகள்/ புத்தகங்கள் படிப்பதை குறை சொல்லிக் கொண்டுதான் இருந்தார்கள். ஆனாலும் பெரும்பாலானோர் கடையில் பொட்டலம் மடித்து தரும் தாள் முதல்கொண்டு அனைத்தையும் வாசிக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தோம் என்பதே உண்மை.

வீடுகளில் செய்தித்தாள் வாங்கும் வழக்கம் எல்லாம் கிடையாது. நடுநிலைப் பள்ளியில் படித்த வரை பள்ளியில் செய்தித்தாள் படிப்போம். பின் அதுவும் இல்லை.

சலூன், பிரிண்டிங் பிரஸ் போன்ற மக்கள் கூடும் தொழில் நடத்தியவர்கள் செய்தித்தாள் வாங்குவார்கள். இரவு வீட்டில் கொண்டு போடுவார்கள். தேவை என்றால் அவர்களிடம் வாங்கிப் படிக்கலாம். ஒரு கால கட்டத்தில், தொலைக்காட்சியில் மகாபாரதம், ராமாயணம் இந்தியில்  ஒளிபரப்பிய போது, முழு வசனத்தையும் தமிழில் மொழிபெயர்த்து தினமலரில் போடுவார்கள். அதற்காக, ஞாயிறு மட்டும் தினமலர் வாங்கியது உண்டு. அந்த காலகட்டத்தில், வாரமலர் இலவச இணைப்பாக வரத் தொடங்கியதால், அதுவும் சேர்த்துப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. சில நேரங்கள், பழைய பேப்பர் வாங்குபவரிடம் கூட வாங்கி வாசித்து விட்டு, மறுநாள் கொடுத்ததுண்டு!

சிறார் வாசிப்பு:

சிறுவர் பத்திரிகைகள் என எடுத்துக் கொண்டால், அம்புலிமாமா, ரத்னபாலா, பாலமித்ரா, கோகுலம் போன்ற பல பத்திரிகைகள் வெளிவந்தன. அவற்றைப் பெரும்பாலும் தொடர்ச்சியாக வாசித்ததாக நினைவு. அணில் மாமா, மணிப்பாப்பா, பாப்பா மஞ்சரி,  பொம்மை வீடு அவ்வப்போது படித்த நினைவு உள்ளது. அழ. வள்ளியப்பா, பூவண்ணன், பெ தூரன், வாண்டு மாமா போன்றோரை இப்புத்தகங்கள் எங்களுக்கு அறிமுகப் படுத்தின.

விக்கிரமாதித்தன் கதை

அம்புலிமாமா என்றாலே சட்டென்று நினைவுக்கு வருவது விக்கிரமாதித்தன் கதை தான். அம்புலிமாமாவில் நீண்ட காலமாக வெளிவந்த இத்தொடர்கதையில், மன்னன் விக்கிரமாதித்தன் மரத்தில் தொங்கும் வேதாளத்தைச் சுமந்து செல்வார். “மன்னா, நாம் நடக்கும்போது பொழுது போவதற்காக நான் ஒரு கதை சொல்கிறேன்” என வேதாளம், கதையை ஆரம்பிக்கும். கதையின் முடிவில் கதையைக் குறித்து புதிர்போடும். அதற்கு விடை தெரிந்தும் மவுனமாக இருந்தால், தலை வெடித்து விடும் என்று விக்கிரமனை மிரட்டும். ‘கதையைக் கேட்ட பின், விக்கிரமாதித்தன் பேசலானான்’, என விக்கிரமாதித்தன் கதை தொடரும். கதைக்கான விளக்கத்தை விக்கிரமாதித்தன் சொல்வார். இதனைக் கேட்ட வேதாளம் மிகச் சரியாகச் சொன்னாய் விக்கிரமாதித்தா. ஆனால் நீ வாய் திறந்து பேசியதால் நான் உன்னை விட்டுப் போகிறேன். இதோ பார்…இப்பொழுது முடிந்தால் என்னைப் பிடித்துக் கொள் என்று சொல்லி விக்கிரமாதித்தன் பிடியிலிருந்து தப்பி பறந்து விடும் வேதாளம். 

இப்படி விக்கிரமாதித்தன் கதை முடியும். 

சித்திரக் குள்ளன் கதைகள், வேதாள கதைகள், மாயாவி கதைகள், துப்பறியும் சாம்பு கதைகள்  போன்ற படக்கதைகள் சிறுவர்களிடம் சாகா வரம் பெற்றிருந்தன. ராணி காமிக்ஸ், முத்து காமிக்ஸ் என வெளிவந்த படக்கதைகள் சிறுவர்களைக் காந்தம்போல இழுத்தன. பலரின் வாசிப்பு வாயிலின் திறவுகோளாக படக்கதைகள்தான் இருந்தன என்பது மறுக்க முடியாத உண்மை. 

அம்புலிமாமாவில் புராண, பஞ்ச தந்திர, மாயாஜால, நாட்டுப்புற, அயல்நாட்டுக் கதைகள் என பலவிதமான கதைகள் வெளிவந்தன. நிலவொளியில் குழந்தைகளுக்குக் கதை சொல்லும் வழக்கம் இருப்பதால், இந்த பெயர் வைத்திருக்கலாம்.

புத்தகத்தில், பக்கத்திற்குப் பக்கம் வரும் படங்கள் அற்புதமாக இருக்கும். அம்புலிமாமா, தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, ஒடியா, ஆங்கிலம் மராத்தி, மலையாளம், பெங்காலி என பல மொழிகளில் வெவ்வேறு பெயர்களில் வெளிவந்தது. அதனால், கதைகளில் வரும் ஊர் மற்றும் ஆட்களின் பெயர்கள் தமிழ் மொழிக்கு தொடர்பில்லாதது போலவே இருக்கும். 

சிறுவர் பத்திரிகைகளில் படங்கள் நிறைய இருக்கும். அதனால், அவற்றின் விலை சிறிது கூடுதலாகவே இருக்கும். பூந்தளிர் 80களில் வரத் தொடங்கிய சிறுவர் இதழ். அதே காலகட்டத்தில் தினமலர், தினத்தந்தி போன்ற நாளிதழ்கள் இலவச இணைப்பாக சிறுவருக்கான பத்திரிகைகள் கொண்டு வந்தன. 

இவை போக அக்பர் பீர்பால் கதைகள், தெனாலிராமன் கதைகள், மரியாதை ராமன் கதைகள் போன்றவை புத்தகங்களாக வாங்கிப் படித்ததுண்டு. 

நடுத்தர வசதி கொண்ட வீடுகளில் ஏதாவது ஒரு பத்திரிகை வாங்குவார்கள். அந்த பத்திரிகை குறைந்தது 20 வீடுகளுக்கு செல்லும். அதனால் தொடர்ச்சியாக ராணி, தேவி, குமுதம், குங்குமம், விகடன், கல்கி, கல்கண்டு, சாவி, இதயம் பேசுகிறது, முத்தாரம், பாக்யா என பல பத்திரிகைகள் வாசிக்கலாம். 

தமிழின் முதல் நாவலான பிரதாப முதலியார் சரித்திரம் முதலே பல நாவல்கள் வெளிவந்துள்ளன.

பெண் வாசிப்பு:

எங்கள் காலகட்டத்தில், ராணிமுத்து, மாலைமதி போன்ற பெண்களை முன்னிலைப் படுத்தி நாவல்கள் மாதந்தோறும் ஏற்கனவே வெளிவந்து கொண்டிருந்தன. 

பெண் எழுத்தாளர்கள் அனைத்து பத்திரிகைகளிலும் எழுதிக் கொண்டிருந்தனர். ராஜம் கிருஷ்ணன், லட்சுமி, அனுராதா ரமணன், சிவசங்கரி, ரமணி சந்திரன், இந்துமதி, வாஸந்தி என பெரிய  எண்ணிக்கையில் பெண் தமிழ் எழுத்தாளர்கள் இருந்தனர். ராஜம் கிருஷ்ணன் அவர்கள் கதைக்களத்திற்குச் சென்று வாழ்ந்து பார்த்து எழுதக்கூடியவர்.  அலை வாய்க்கரையில் கதை அணுஉலைப் புகழ் இடிந்தகரை ஊரைக் கதைக்களமாக வைத்து எழுதப்பட்ட புதினம். அனுராதா ரமணன் அவர்களின் ஆனந்த விகடனில் வெளியான சிறுகதை சிறை, திரைப்படமாக எடுக்கப்பட்டது. மேலும் அவரது கதைகள் கூட்டுப்புழுக்கள், மலரின் பயணம், ஒரு வீடு இருவாசல் திரைப்படமாக எடுக்கப்பட்டன. அவரது கதைகள் அர்ச்சனைப் பூக்கள், பாசம், கனாக்கண்டேன் தோழி போன்றவை  தொலைகாட்சித் தொடர்களாக வந்துள்ளன.

எதற்காக? திரிவேணி சங்கமம், 47 நாட்கள், அம்மா ப்ளீஸ் எனக்காக, ஒரு மனிதனின் கதை, நெருஞ்சி முள், திரிசங்கு சொர்க்கம் போன்றவை சிவசங்கரி அவர்களின் புகழ் பெற்ற நாவல்கள்.

கிரைம்/துப்பறியும் நாவல்கள்:

அந்த காலகட்டத்தில் தான் பாக்கெட் நாவல்கள் அறிமுகமாகின. பாக்கெட் நாவல்கள் பலவும் ஜி.அசோகன் என்பவரால் வெளியிடப்பட்டன. அவரே தமிழ் பாக்கெட் நாவல்களின் முன்னோடி. பாக்கெட் நாவல்களின் முடிசூடா மன்னனாக ராஜேஷ் குமார் இருந்தார். பட்டுக்கோட்டை பிரபாகர், பாலகுமாரன், அனுராதா ரமணன் போன்ற பலரின் கதைகள் பாக்கெட் நாவல்களாக வெளிவந்தன. ராஜேஷ்குமார், நாவல்களுக்குத் தனி வரவேற்பு இருந்தது. அதனால் அவருக்கு எனத் தனியாக ‘க்ரைம் நாவல்’ தொடங்கப் பட்டது. அவரது துப்பறியும் தொடர்களின் விவேக், ரூபலா கதாபாத்திரங்கள் மிகவும் புகழ் பெற்றவை.

பின் பட்டுக்கோட்டை பிரபாகர் எழுதிய நாவல்கள் ‘ நாவல் டைம்’ என வெளிவந்தன. அவரது துப்பறியும் தொடர்களின் பரத், சுசிலா கதாபாத்திரங்கள் புகழ் பெற்றவை. ‘ஙே என விழித்தான்’ என்ற சொற்றொடர் இல்லாத ராஜேந்திர குமார் அவர்களின் கதைகளே இருக்காது. அவரது ‘வணக்கத்துக்குரிய காதலியே’ கதை  பிற்காலத்தில் திரைப்படமாக வந்தது.

எழுத்தாளர் பி.டி.சாமி ‘பேய் கதை மன்னன் பி.டி.சாமி’ என்றே அழைக்கப் பட்டார். அவர்தான் புனித அந்தோணியர் திரைப்படத்திற்கும் திரைக்கதை வசனம் எழுதியவர் என்பது ஒரு முரண்.

சு. சமுத்திரம் ஏறக்குறைய அதே காலகட்டத்தில், நக்கீரன், தராசு, ஜூனியர் விகடன் போன்ற அரசியல் தொடர்பான பத்திரிகைகள் வெளிவந்தன.

பொம்மை, பேசும் படம் போன்ற சில திரைத்துறை தொடர்பான பத்திரிகைகளும் வெளிவந்தன.

அறிவியல் மற்றும் இலக்கிய பத்திரிகைகளாக கலைக்கதிர், கலைமகள், தீபம், கணையாழி, மஞ்சரி, செம்மலர், தாமரை, போன்றவை வெளிவந்தன.

இவையெல்லாம் பொது மக்கள் நடுவில் எவ்வளவு அறிமுகமாகி இருந்தன என எனக்குத் தெரியாது. எனது அப்பா பா. அமிழ்தன் அவர்களின் படைப்புக்கள் இந்த பத்திரிகைகளில் வரும் என்பதால் எங்கள் வீட்டிற்கு இவை அறிமுகமாகின.

கணையாழி டில்லியில் இருந்து வெளிவந்த ஒரே தமிழ் இலக்கிய இதழ்.

அமுதசுரபியின் ஆசிரியராக விக்கிரமன் அவர்களும் , தீபம் ஆசிரியராக  நா. பார்த்தசாரதி அவர்களும்  இருந்தனர்.

ரசித்த எழுத்தாளர்கள்:

அகிலனின் ‘எங்கே போகின்றோம்’ தொடர்நாவல் கலைமகளில் வெளிவந்தது. அவரின் பல சிறுகதைகள் கலைமகளில் வெளிவந்தன. அவை எனக்கு அவரை அறிமுகப்படுத்தின. விரசமில்லாத அவரின் எழுத்து நடை என்னை மிகவும் கவர்ந்தது. பல விருதுகளை தட்டிச் சென்றவர். தமிழுக்கு முதல் ஞானபீட பரிசைக்  கொண்டு வந்தவர். இவரின் வாழ்வு எங்கே? கதை குலமகள் ராதை’ என்ற பெயரிலும், கயல்விழி ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’ என்ற பெயரிலும் திரைப்படமாக வெளிவந்தன. 

கல்கண்டு எழுத்தாளர் தமிழ்வாணன், அப்போதெல்லாம் எங்கள் மத்தியில் மிகவும் புகழ்பெற்ற எழுத்தாளர். தொப்பி அணிந்த பிரபலங்கள் என்றதும் நினைவுக்கு வருபவர்களில் தமிழ்வாணன் அவர்களும் ஒருவர். முதலில் அவர் ‘சங்கர்லால் துப்பறிகிறார்’ எனவும், பிறகு ‘தமிழ்வாணன் துப்பறிகிறார்’ எனவும் எழுதினார். டோக்கியோ ரோஜா, ஹாங்காங்கில் சங்கர்லால், பெர்லினில் சங்கர்லால், நேப்பிள்ஸ் சங்கர்லால், நியூயார்க்கில் சங்கர்லால் என பல சங்கர்லால் தொடர்கள் வந்தன. பின் ஹவாயில் தமிழ்வாணன், சிகாகோவில் தமிழ்வாணன் என பல தமிழ்வாணன் தொடர்கள் வரத்தொடங்கின.

பத்திரிகைகள்:

அவருக்காக கல்கண்டு படிக்கத் தொடங்கி அவர் இறந்த பின்னும் பலகாலம், கல்கண்டு வாசகியாக இருந்தேன். லேனா தமிழ்வாணனின் பயணக் கட்டுரைகள், கேள்வி பதில், சினிமா விமர்சனம், ஒருபக்கக் கட்டுரை, ராஜேஷ் குமார், ரவீந்தர், சுபா, தேவிபாலா, ராஜேந்திர குமார், ப.கோ பிரபாகர்  போன்றோர் எழுதிய மர்ம தொடர்கள், துணுக்குகள் என கல்கண்டு துளி கூட விரசமில்லாத தரமான பத்திரிகையாக இருந்தது.

கல்கி பத்திரிகையில், கல்கி அவர்கள் எழுதிய பொன்னியின் செல்வன், பார்த்திபன் கனவு, சிவகாமியின் சபதம், அலை ஓசை, தியாக பூமி என  கதைகள் எப்போதும் ஒன்று மாற்றி ஒன்று வந்துகொண்டே இருக்கும். கல்கியின், ‘அலை ஓசை’ (1956) ராஜாஜியின், ‘சக்கரவர்த்தி திருமகன்’ (1958), அகிலனின், ‘வேங்கையின் மைந்தன்’ (1960) தொடர்கள் சாகித்ய அகாடமி பரிசு வென்ற படைப்புகள். கல்கியின் பார்த்திபன் கனவு பிற்காலத்தில் திரைப்படமாக வெளிவந்தது. கல்கி இதழில் வெளிவந்த உமா சந்திரனின் ‘முள்ளும் மலரும்’  பிற்காலத்தில் திரைப்படமானது.

‘வேங்கையின் மைந்தன்’ அகிலன் எழுதி கல்கி இதழில் வெளிவந்த தொடர். சென்னை சபாக்களில் அரங்கேறும் நாடகங்கள் அந்த நடிகர்களின் படங்களுடன் வரும். அகிலனின் ‘பாவை விளக்கு’ என்னும் புதினம் கல்கியில் தொடராக வந்து பின் திரைப்படமானது. 

குமுதம் இதழில் எழுத்தாளர் பாக்கியம் ராமசாமி அவர்கள் அப்புசாமி, சீதாப்பாட்டி என்ற வயதான தம்பதி குறித்து எழுதிய நகைச்சுவைக் கதைகள் வெளிவந்தன. ஆறு வித்தியாசங்கள் எங்கள் மத்தியில் பிரபலமாக இருந்தது. எழுத்தாளர் சாண்டில்யன் அவர்களின் வரலாற்றுப் புதினங்கள், குமுதத்தில் தொடர்ச்சியாக வெளிவந்தன. 

சுஜாதா அவர்களின் ‘நைலான் கயிறு’, ‘ரத்தம் ஒரே நிறம்’ பெரிதாக பேசப்பட்டன. எழுத்தாளர் ஜெயலலிதா (அம்மா) அவர்களின் ‘நெஞ்சில் ஒரு கனல்’ அதிர்வலைகளை உண்டாக்கியத் தொடர்கதை. குடிகார காதல் கணவன் குறித்து இளம் மனைவியின் பார்வையில் கதை சென்றதாக நினைவு.

எழுத்தாளர் அகிலன் அவர்கள் எழுதிய ‘சித்திரப்பாவை’ ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்தது. இந்நூலுக்காக ‘ஞானபீட பரிசு’ அவருக்கு வழங்கப்பட்டது. 

தேவன் அவர்கள் எழுதிய ‘துப்பறியும் சாம்பு’ ஆனந்த விகடனின் சிறுவர் தொடர். ‘தில்லானா மோகனாம்பாள்’ ஆனந்த விகடனின் மிகவும் புகழ்பெற்ற தொடர். ‘என் இனிய இயந்திரா’,  ‘மீண்டும் ஜீனோ’ போன்ற அறிவியல் தொடர்களை சுஜாதா அவர்கள் எழுதினார். ஜீனோ என்பது இயந்திர நாய். அவர் அக்காலகட்டத்தில் எழுதிய, ப்ரியா, காயத்ரி, கரையெல்லாம் செண்பகப்பூ, போன்ற தொடர்கள்  பிற்காலத்தில் திரைப்படங்களாயின. அவரது துப்பறியும் தொடர்களின் கணேஷ், வசந்த் கதாபாத்திரங்கள் மிகவும் புகழ் பெற்றவை. 

சிவசங்கரி அவர்கள் எழுதிய ‘எதற்காக’, இந்துமதி அவர்கள் எழுதிய ‘தரையில் இறங்கும் விமானங்கள்’ ஜெயகாந்தன் அவர்கள் எழுதிய ‘ஒரு நடிகை நாடகம் பார்க்கின்றாள்’ போன்றவை விகடனில் தொடராக வெளிவந்தவை. 

ராணி புத்தகத்தில் குரும்பூர் குப்புசாமி நிறைய எழுதுவார். ‘பாரிசில் ஒரு பட்டிக்காட்டான்’, ‘குட்டித்தீவை (இலங்கை) எட்டிப் பார்த்தேன்’, போன்ற பல பயணக் கட்டுரைகள் அவர் எழுதியுள்ளார். மேலும் அமுதா கணேசன் என்ற பெயரில், கதைகளும் அவர் எழுதுவார்.

‘வேரில் பழுத்த பலா’ எழுதிய  சு. சமுத்திரம், ‘வீரபாண்டியன் மனைவி’ எழுதிய அரு ராமநாதன், விக்கிரமன், கோவி மணிசேகரன், உமா கல்யாணி, எஸ் பாலசுப்ர மணியன், நெல்லை கவிநேசன் போன்ற பெயர்கள் சட்டென்று மனதில் வரும் எழுத்தாளர்களுடையவை.

‘நம் வாழ்வு’ என ஒரு கத்தோலிக்க மாத இதழ் வெளிவந்தது. அதில் வந்த பரமார்த்த குரு கதைகள் போன்றவை எங்களை மிகவும் ஈர்த்தவை.

சோவியத் யூனியனிலிருந்து வெளிவந்த விலை மலிவு விலைப்  பத்திரிகைகள் படங்களுக்காக புகழ் பெற்றிருந்தன.

பல வீடுகளில் பெண்கள் தொடர்கதைகளை ஒரே புத்தகமாக வைத்திருப்பார்கள். இவ்வாறும் பல கதைகள் வாசிக்கக் கிடைக்கும். அவற்றிக்கு எடுத்துக் காட்டாக, ஜாவர் சீதாராமன் எழுதிய ‘மின்னல் மழை மோகினி’, ‘உடல் பொருள் ஆனந்தி’, கல்கியின் ‘சிவகாமியின் சபதம்’, ‘பொன்னியின் செல்வன்’ போன்றவற்றைக் குறிப்பிடலாம். 

இப்பொது மீள் வாசிப்பு செய்யும்போது பல கதைகள், இதையா அவ்வளவு ஆர்வமாக வாசித்தோம் என்ற நினைப்பை ஏற்படுத்துகிறது. வயதும் அனுபவமும் இந்த எண்ணத்தை உருவாக்கலாம். ஆனாலும் வாசிப்பு எங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்திய நல்ல தாக்கத்தை மறக்க முடியாது. வாசிப்போம். நேசித்து வாசிப்போம்!

படைப்பாளர்:

பாரதி திலகர்

தீவிர வாசிப்பாளர், பயணக் காதலர்; தொன்மை மேல் பெரும் ஆர்வம் கொண்டவர். அயல்நாட்டில் வசித்து வந்தாலும் மண்ணின் வாசம் மறவாமல் கட்டுரைகள் எழுதிவருகிறார்.