திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் எல்லைக்குட்பட்ட பகுதியில் வாழ்ந்த ஒடுக்கப்பட்ட சாதிப் பெண்கள், 16 முதல் 35 வயது வரையில் கட்டாயமாக முலை வரி கட்ட வேண்டும். மீறினால், அந்த பெண்களின் கூந்தலைக் கொண்டே மரங்களில் கட்டி வைத்து, அடித்து உதைப்பார்கள். சில நேரங்களில் முலை வரி செலுத்தாத பெண்களை அவர்களின் கூந்தலில் (முடியில்) உலக்கையை சுற்றிக் கட்டித் தொங்க விட்டு, முதுகில் பெரிய கல்லை ஏற்றிக் குனிந்த நிலையில் பல நாட்கள் நிற்க வைத்தனர். இந்தத் தண்டனைக்கு ஆளான பெண்கள் பலர் இறந்து போனார்கள். முலை வரி கட்டாத பெண்களின் மார்பகங்கள் அறுத்து எறியப்பட்டன.

  • முத்துக்கமலம் இணைய இதழில் நெல்லை விவேகநந்தா1*

முடிவுறாத தோள்சீலைப் போராட்டம்:

ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த இந்துப்பெண்கள் தோள்சீலை அணிவதற்காக, அய்யாவழி என்ற புதிய மதத்தை உருவாக்கி, அறப்போராட்டம் நிகழ்த்திய, அய்யா வைகுண்டர் இறந்த, அதே 1851-ம் ஆண்டில், ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த கிறிஸ்தவப்பெண்கள் தோள்சீலை அணிவதற்காகச் சட்டப் போராட்டம் நிகழ்த்திய சார்லஸ் மீட் பணி ஓய்வு பெற்றார்.2*

1851-ம் ஆண்டில் நடைபெற்ற ஆடை கண்காட்சி ஒன்றில் கிறிஸ்தவச் சாணார் பெண்கள் ‘சிறந்த தலையணை லேஸ்’ உருவாக்கியதற்கான விருதைப் பெற்றனர். இது ஆடை விசயத்தில் அப்பெண்களின் முன்னேற்றத்தைக் காட்டியது.3*

சார்லஸ் மீட்டுக்குப் பிறகு, நெய்யூரில் பேலிஸ் (REV.F.BAYLIS) என்பவர் மீட்டின் பணியைத் தொடர்ந்தார்.4*

1858-ம் ஆண்டு, டிசம்பர் 25-ம் நாள், கிறிஸ்துமஸ் அன்று, நாயர் சாதியைச் சார்ந்த சாதிவெறியர்கள் சிலர் நெய்யூரின் கிராமம் ஒன்றில் நுழைந்து, அங்கிருந்த கிறிஸ்தவர்கள் அனைவரையும் சுற்றி வளைத்தனர். கிறிஸ்தவப் பெண்களின் ரவிக்கைகளைக் கிழித்தெறிந்து வன்முறையில் ஈடுபட்டனர். அங்கிருந்த கிறிஸ்தவர்கள் மறைந்து ஒளிந்தனர். பெண்களும் குழந்தைகளும் கிறிஸ்தவ மிஷனரி கட்டிடத்தில் தங்க வைக்கப்பட்டனர். இந்தக் கலவரங்கள், நெய்யூர் மிஷனைச் சார்ந்த கிறிஸ்தவர்கள் தங்கியிருந்த கிராமங்கள் தோறும் எதிரொலித்தன.

பொய்க்குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு கல்லங்குழியைச் சேர்ந்த நால்வர், நாயர் சாதியைச் சார்ந்த திருவிதாங்கூர் அரசு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். லாக்கப்பில் அடைக்கப்பட்டு, பல நாள்களுக்குப் பிறகு விடுதலை செய்யப்பட்டனர். அதையடுத்த இரண்டு நாள்களுக்குப் பிறகு, கல்லங்குழி தேவாலயம் தீப்பற்றி எரிந்தது. டிசம்பர் 27-ம் நாள் மைக்கோடு தேவாலயம் தீப்பற்றி எரிந்தது.5*

கலவரம் மூண்டதை அடுத்து, 1858, டிசம்பர் 27-ம் நாள் ராணுவம் வரவழைக்கப்பட்டது. திவான் மாதவராவ், திருவிதாங்கூர் தெற்கு பகுதியின் ராணுவப்படை தலைமை அதிகாரியாக (DEPUTY PEISHCHAR) ஷங்கூனி மேனனை நியமித்தார்.6* கடந்த அத்தியாயத்தில் புத்தன்குட்டியை அடித்து உதைத்த, மாடம்பிள்ளைக்கு வக்காலத்து பேசிய அதே ஷங்கூனிமேனன்தான் இவர். இவர் கலவரத்தை அடக்க வந்த அதிகாரி எனில் ஒடுக்கப்பட்ட சாதி மக்களுக்கு கிடைக்கும் நியாயம் எத்தகையதாக இருந்திருக்கும் என்பதை வாசகர்கள் எண்ணிப் பார்க்க வேண்டுகிறேன்.

ராணுவம் வந்ததைத் தொடர்ந்து, திருவிதாங்கூர் திவான் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

‘எவ்வித அதிகாரமும் இன்றி முற்கால வழக்கங்களை மீறுவது முற்றிலும் தவறானது. அவ்வாறு மீறுபவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள். சாணார்கள் (நாடார்கள்) இதைக்கேட்டு அதன்படி நடக்க வேண்டும். சூத்திரர்களும் (நாயர்கள்) உயர்ந்த சாதியினரும் சாணார்களுக்கு (நாடார்களுக்கு) எதிரான செயல்களில் இறங்கவோ அமைதியைக் குலைக்கும் செயல்களில் ஈடுபடவோக் கூடாது. அவர்கள் அவ்வாறு செய்தால் அவர்களின் நடவடிக்கை குறித்து விசாரணை நடத்த வேண்டிய அவசியம் ஏற்படும்’ என்பதே அந்த அறிக்கை.7*

அதாவது, சாணார் சாதிப்பெண்கள் தோள்சீலை அணிந்தால் தண்டிக்கப்படுவார்கள். நாயர் முதலான உயர்ந்த சாதியினர் சாணார் சாதியினரை அடித்து, உதைத்து, ரத்தக்களரியாக்கி  வன்முறை செய்தால், அவர்களுக்கு தண்டனை கொடுக்கலாமா வேண்டாமா என்று திவான் விசாரணை நடத்துவார். அடடா! என்னே அருமையான சட்டம்!

ஒடுக்கப்பட்ட சாதிப்பெண்கள் தொடர்ந்து தோள்சீலை அணிந்தனர். 

இன்றைய கன்னியாகுமரி மாவட்டத்தின் அகஸ்தீஸ்வரம், தோவாளை ஆகிய தாலுகாக்களை சேர்ந்த ஊர்களிலும் கலவரங்கள் வெடித்து, பெருமளவில் சேதங்கள் உருவாகின. 1858-ம் ஆண்டு டிசம்பர் 29-ம் தேதி, ஜேம்ஸ் டவுண் கிராமத்தில் மூன்று சாணார்களின் (நாடார்களின்) வீடுகள் ஆதிக்கச்சாதியினரால் கொளுத்தப்பட்டன.

1859-ம் ஆண்டு ஜனவரி 4-ம் நாள் கோட்டார், நாகர்கோயிலில் கலவரங்கள் பரவின. நாயர் சாதியினர், வெள்ளாளர் சாதியினரோடு இணைந்து, கிறிஸ்தவச் சாணார்களை (நாடார்களை) தாக்கி, அவர்களது உடைமைகளை அழித்தனர். கிறிஸ்தவப்பெண்களை அடித்து, அவர்களது மேலாடைகளைக் கிழித்தெறிந்தனர்.

வைத்தியலிங்கம் பிள்ளை மற்றும் நீலம் பிள்ளையின் தலைமையில் 200 வெள்ளாளர் மற்றும் நாயர் சாதியினர், ஒன்றுகூடி, கத்தி, கம்புகளுடன் தாழக்குடி கிராமத்துக்குள் நுழைந்தனர். அங்கிருந்த கிறிஸ்தவப் பெண்களையும், ஆண்களையும் தாக்கி, வன்முறையில் ஈடுபட்டனர். கிறிஸ்தவப் பெண்களின் மேலாடைகளைக் கிழித்தெறிந்தனர். கலவரக்காரர்கள் அங்கிருந்த சர்ச் மற்றும் பள்ளிகளை எரித்து விடவும், மிஷனரி மற்றும் ஆசிரியர்களைக் கொலை செய்து விடவும் திட்டமிட்டுள்ளதாக தாழக்குடி கிராமத்து மக்கள் தகவல் அறிந்தனர். அந்த பயத்தால் பல வாரங்கள் வரை, பள்ளிக்கூடங்களும் தேவாலயமும் மூடியே இருந்தது.

தாழக்குடி கலவரம் நிகழ்ந்த மூன்று நாள்களுக்கு முன்பு, அரசு அதிகாரிகள் உட்பட, வெள்ளாளர் சாதியைச் சேர்ந்தவர்கள், கிட்டத்தட்ட 500 பேர் குமாரபுரம், இரவிபுதூர், மருங்கூர் ஆகிய கிராமங்களில் அணிவகுத்துச் சென்றனர். அக்கிராமங்களில் இருந்த கிறிஸ்தவர்களின் வீடுகளுக்குள் நுழைந்து, கிறிஸ்தவர்களைத் தாக்கினர். கிறிஸ்தவ ஆண்கள் பயந்து ஓடினர். பெண்களை வெளியே இழுத்து வந்து, அவர்களின் ரவிக்கைகளைக் கிழித்தெறிந்து, மானபங்கம் செய்தனர். இதே போன்ற கலவரங்கள் ஆரல்வாய்மொழி, செம்பொன்விளை, காட்டுப்புதூர் போன்ற கிரமாங்களிலும் நிகழ்ந்தன.

1859-ம் ஆண்டு 10-ம் தேதி வடக்கன்கரை தேவாலயம் பற்றி எரிந்தது. அதே 10ஆம் தேதியில் நாகர்கோயிலில், கவர்னரின் பங்களா பற்றி எரிந்தது.8*

இந்த நிகழ்வுக்குப் பிறகு நாகர்கோயிலில் வாழ்ந்த கிறிஸ்தவர்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள தயாரானார்கள். பல கிறிஸ்தவர்கள் பெரிய கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றில் கூடி, அந்த தேவாலயத்தை எதிரிகள் எரித்து விடாதவாறு, இரவும் பகலும் காவல் காத்தனர். அந்த காவலில் பெண்களும் குழந்தைகளும்கூட கலந்து கொண்டார்கள்.9* இரண்டு கிறிஸ்தவப் பள்ளிக்கூடங்கள் எரிக்கப்பட்டன. திட்டுவிளை ஊரில், ஒரு கிறிஸ்தவச் சாணார் (நாடார்) மற்றும் அவரது மனைவி ஆகிய இருவரையும் அடித்து துன்புறுத்திய ஆதிக்கச்சாதியினர் அவரது வீட்டையும் கொளுத்தினர். அவ்வீட்டோடு 27 சாணார் சாதியினர் வீடுகள் கொளுத்தப்பட்டன.

நெய்யாற்றின்கரையில் இரண்டு பெண்கள் அரலிமூடு சந்தைக்குச் சென்றனர். அவர்களை திருவிதாங்கூர் அரசின் கடைநிலை ஊழியர் ஒருவன், அடித்து இழுத்து வந்து, சிறைச்சாலை அதிகாரியின் முன்பு நிற்க வைத்து, அப்பெண்களின் மேலாடையைக் கிழித்தெறிந்தான். பின்னர் அப்பெண்கள் அந்த சிறைச்சாலையின் வெளியே இருந்த மரத்தில் கட்டி வைக்கப்பட்டனர். 400 பேர் அடங்கிய நாயர்ப்படைக்குழு ஒன்று, 1859, ஜனவரி 15,19 தேதிகளில், மேலாடை அணிந்த ஒடுக்கப்பட்ட பெண்களையும் கிறிஸ்தவர்களையும் தாக்கும் நோக்கத்தோடு அரமனூர், புத்தன்கரை, திருப்புரம் ஆகிய ஊர்களில் இருந்த சந்தைகளைச் சுற்றிச் சுற்றி வந்தனர். இந்த 400 பேர் படையில் முஸ்லிம்கள், செட்டியார் சாதியினர் போன்றோரும் இருந்தனர்.10*

ஜோசைய்யா என்னும் சமயப்பரப்புரையாளர், 1859, ஜனவரி 23-ம் தேதி, சர்ச்சில் பூசை செய்ய எத்தனித்த போது, அவரை இழுத்துவந்து, அவர் உடுத்திருந்த துணிகளை கிழித்தெறிந்தனர். அவரோடு பல மிஷனரிகளும் இவ்வாறே தண்டிக்கப்பட்டனர். ஆண்களின் துணிகளைக்கூட விட்டு வைக்கவில்லை, கிழித்தெறிந்தனர். துணிகளைக் கிழித்தெறிவதில் என்னதான் வீரம் கிழிந்ததோ, தெரியவில்லை.

200 பேர் கொண்ட சூத்திரர் (நாயர்) படை ஒன்று, தாழக்குடி கிறிஸ்தவர்களைத் தாக்கி, பெண்களின் ரவிக்கைகளைக் கிழித்தெறிந்து தங்களது வீரத்தை நிலைநாட்டியது. 500 பேர் கொண்ட சூத்திரர்(நாயர்) படை ஒன்று, ஆரல்வாய்மொழி, செம்பொன்விளை ஆகிய ஊர்களிலிருந்த கிறிஸ்தவ வீடுகளைக் கொள்ளையடித்து, கிறிஸ்தவர்களைத் தாக்கியது. அந்தப் படை காட்டுப்புதூர் சர்ச்சில் வழிபாடு செய்து கொண்டிருந்த மக்களை விரட்டியடித்து விட்டு, சர்ச்சை இழுத்து மூடியது. இந்த கலவரங்கள் நாகர்கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகள் தோறும் காட்டுத்தீயாகப் பரவியது.

இந்த அத்தியாயத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தோள்சீலைக் கலவரச் சம்பவங்களில் பாதிக்கப்பட்ட கிறிஸ்தவர்களில் பெரும்பான்மை எண்ணிக்கையில் இருந்தவர்கள், சாணார் (நாடார்) சாதியினர். அவர்களுடன் பறையர், ஈழவர் முதலான ஒடுக்கப்பட்ட சாதிகளும் இருந்தனர்.

தொடரும்…

குறிப்பு: சாணார்* என்ற சொல்லை பயன்படுத்துவதில் எழுத்தாளருக்கோ, பதிப்பாசிரியருக்கோ துளியேனும் உடன்பாடில்லை. 18,19-ம் நூற்றாண்டுகளில் இன்றைய நாடார் சாதியினர், சாணார் என்று குறிப்பிடப்பட்டதாலும், அரசு, கிறிஸ்தவ ஆவணங்கள் சாணார்* என்ற பெயரையே பயன்படுத்தியதாலும் அன்றைய நாடான்களுக்கும் சாணார்களுக்கும் இடையேயுள்ள வேறுபாட்டைத் தெளிவாகக் குறிப்பிடவுமே இவ்வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது.

தரவுகள்

  1. தமிழ் நாட்டில் கொத்தடிமைகள்… சங்க காலம் முதல் சுமங்கலி திட்டம் வரை, ப.திருமலை (மூத்த பத்திரிகையாளர்), எஸ்.செல்வ கோமதி (வழக்கறிஞர்),முதல் பதிப்பு : 17 ஆகஸ்ட், 2013, பக்கம் எண்: 104.
  2. THE HISTORY OF THE LONDON MISSION SOCIETY 1795 – 1895, RICHARD LOVETT M.A., IN TWO VOLUMES, VOL II, 1899, PAGE NO: 166.
  3. CHURCH HISTORY OF TRAVANCORE, CM.AGUR, FIRST PUBLISHED 1903, REPRINT 1990, PAGE NO: 935.
  4. A HUNDRED YEARS IN TRAVANCORE 1806 – 1906, Rev.I.H. HACKER (LONDON MISSIONARY SOCIETY), EDITION: 1908, PAGE NO: 44.
  5. HISTORY OF KANYAKUMARI DISTRICT, LIBERATION OF THE OPPRESSED A CONTINUOUS STRUGGLE (A CASE STUDY SINCE 1822) SOCIO-ECONOMIC AND POLITICAL LIBERATION STRUGGLE IN THE EXTREME SOUTH OF INDIA, Dr.D. PETER, M.A., M.LITT., Phd, Dr.IVY PETER, M.A., B.T., P.hd, first edition:2009, page no: 50.
  6. ‘தமிழக நாடார்கள், ஒரு சமுதாய மாற்றத்தில் அரசியல் பண்பாடு’ இராபர்ட் எல். ஹார்டுகிரேவ், தமிழாக்கம்: எஸ்.டி. ஜெயபாண்டியன், முதல் பதிப்பு-2019, பக்கம் எண்: 87. & CHURCH HISTORY OF TRAVANCORE, CM.AGUR, FIRST PUBLISHED 1903, REPRINT 1990, PAGE NO: 934.
  7. ‘தமிழக நாடார்கள், ஒரு சமுதாய மாற்றத்தில் அரசியல் பண்பாடு’ இராபர்ட் எல். ஹார்டுகிரேவ், தமிழாக்கம்: எஸ்.டி. ஜெயபாண்டியன், முதல் பதிப்பு-2019, பக்கம் எண்: 87,88.
  8. HISTORY OF KANYAKUMARI DISTRICT, LIBERATION OF THE OPPRESSED A CONTINUOUS STRUGGLE (A CASE STUDY SINCE 1822) SOCIO-ECONOMIC AND POLITICAL LIBERATION STRUGGLE IN THE EXTREME SOUTH OF INDIA, Dr.D. PETER, M.A,..M.LITT,..Phd, Dr.IVY PETER, M.A., B.T., P.hd, first edition:2009, page no: 51.
  9. CHURCH HISTORY OF TRAVANCORE, CM.AGUR, FIRST PUBLISHED 1903, REPRINT 1990, PAGE NO: 933.
  10. HISTORY OF KANYAKUMARI DISTRICT, LIBERATION OF THE OPPRESSED A CONTINUOUS STRUGGLE (A CASE STUDY SINCE 1822) SOCIO-ECONOMIC AND POLITICAL LIBERATION STRUGGLE IN THE EXTREME SOUTH OF INDIA, Dr.D. PETER, M.A., M.LITT., Phd, Dr. IVY PETER, M.A., B.T., P.hd, first edition:2009, page no: 51, 52.

படைப்பாளர்

சக்தி மீனா

பட்டதாரி, தொழில் முனைவர். பெரியாரின் சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டவர். பொழுதுபோக்காக ஆரம்பித்த எழுத்து, பெரியாரின் வழிகாட்டுதலில், பொதுவுடைமை சித்தாந்தம் நோக்கி நகர்ந்தது. எதுவுமே செய்யவில்லையே என்ற தன் மனக்கவலையைக் களைய, படித்துக்கொண்டும் எழுதிக்கொண்டும் இருக்கிறார்.