‘மூணு நேரம் துவைத்து உச்சி ஒரு நேரம் அதாய்
வேணும் பச்சரிசி வெற்றிச் சிறு மணியும்
வேக வைத்து நன்றாய் விரைவாய் மணலில் இட்டு
தாகம் இல்லாமல் தவசு இருக்க வேணும் என்று
பெண்ணுடனே ஆணும் பிறந்த பிள்ளை தன்னோடும்
கண்ணாகக் கட்டில் கலரும் கிழவி வரை
சூலி இளம் பிள்ளை திரண்ட மடமாதும்
மாலின் அருளால் வத்து வகை தான் இழந்து
வீடு மனை மறந்து வித்து விலைகள் செய்து
ஒண்ணில் அரை பாதியென ஒக்க வித்தார் சொத்து அதனை
மண்ணு மறந்து மாடு ஆடுதான் மறந்து
ஆண்ட பண்டம் எல்லாம் அகல மிக மறந்து
கூண்ட பண்டம் எல்லாம் கூசாமலே மறந்து
அனு போகம் அத்து ஆண் பெண் இகழாமல்
இனி போகம் அத்து இருந்தார் தவசு எனவே’1*
பொருள்: ‘ஒரு நாளின் மூன்று நேரங்கள் துணி துவைத்துக் குளித்து, மத்தியான வேளையில் மட்டும் பச்சரிசியும் சிறுமணியும் (சிறுதானியமும்) கலந்து வேகவைத்த கஞ்சியை, விரைவாக மணலில் இட்டுக் குடித்து, தாகம் இல்லாமல் தவசு இருக்க வேண்டும்’ என்பதற்காக பெண்களோடு ஆண்களும், சிறு குழந்தைகளுடன், கட்டிலில் இருந்து எழுந்து நடக்க முடியாத கிழவி வரை, கர்ப்பிணிப்பெண்களும் இளம் குழந்தைகளும் குமரிப்பெண்களும் (மடமாது), வஸ்து வகை இழந்து, வீடு, மனைகளை பாதி விலைக்கு விற்று விட்டு, பிறந்து வளர்ந்து வாழ்ந்த மண்ணை மறந்து, வளர்த்த ஆடு, மாடுகளை மறந்து, சுவையான உணவுப் பண்டங்களை மறந்து, வருமானம் (அனுபோகம்) அற்று, இனிமையான போகங்களும் அற்று தவம் இருந்தார்கள்.’
1838-ம் ஆண்டு மார்ச் மாதம் அய்யா வைகுண்டர் நிகழ்த்திய ‘துவையல் தவசு’ பற்றி விளக்குவதாக அமைந்துள்ளன, மேற்சொன்ன அகிலத்திரட்டு அம்மானையின் வரிகள். இதில் ‘மூணு நேரம் துவைத்து’ என்கிற வரி முக்கியமாகக் கவனிக்கத்தக்கது. ‘இந்து மதத்தின் கீழ்சாதிகளாக (அவர்ணர்களாக) வரையறுக்கப்பட்ட சாணார், ஈழவர், பறையர், புலையர் முதலான சாதி மக்கள், அழுக்கு உடலோடுதான் இருக்க வேண்டும்; இடுப்புக்குக் கீழ்தான் உடையணிய வேண்டும்; இடுப்புக்குக் கீழ் அணியும் உடையும் அழுக்கு ஆடையாகத்தான் இருக்க வேண்டும், இதுவே விதி’ என்று ஆதிக்க சாதிகள் வரையறுத்த சாதியக்கட்டமைப்பை உடைக்கவே, துவையல் தவசில், தென் திருவிதாங்கூரில் ஒடுக்கப்பட்ட 18 சாதிகளைச் சேர்ந்த இந்து மக்களை, மூன்று வேளையும் குளித்து, துவைத்து சுத்தமாக இருக்கச் செய்தார் அய்யா வைகுண்டர். அதுவும் ஒடுக்கப்பட்ட சாதிப்பெண்களின் தோள்சீலையை எதிர்த்து, ஆதிக்க சாதியினர் வன்முறைக் கலவரங்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்த காலகட்டத்தில் இப்படி ஒரு நிகழ்வை நடத்திக் காட்டியது புரட்சியன்றி வேறென்ன?
‘போற்றி நம்பூரி பிராமணர்கள்தன் சீலை
மாற்றித் துவைப்பு மங்கலாய்க் காணுது காண்
இந்தச் சாணார் சீலை யேகா சூரியன் போலே
பந்த ஒளி போலும் பள பளெனக் காணுது காண்’2* என்ற அகிலத்திரட்டு அம்மானையின் வரிகளைக் காண்க.
தோள்சீலைக் கலகம் உச்சக்கட்டத்தில் இருக்கும் போது, ‘போற்றி, நம்பூதிரி பிராமணர்கள் ஆகியோரின் சீலை மாற்றித் துவைத்த பிறகு மங்கி விட்டது. ஆனால் சாணார்களின் சீலை சூரியன் போலும், தீப்பந்தத்தின் ஒளி போலவும், பளபளக்கின்றது’, என்று எழுதுவது புரட்சியின்றி ஆன்மீகமென்று எப்படி ஆகும்?!
ஆக, இந்து மதத்தின் ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த பெண்கள், தங்களின் தோள்சீலைகளையும் பிற துணிகளையும் சுத்தமாகத் துவைத்துக் கட்டுவதற்கும் ஆண்கள் தங்களின் தோள்துண்டுகளையும் பிற துணிகளையும் சுத்தமாகத் துவைத்துக் கட்டுவதற்கும் அந்த மக்களைப் பழக்கிய புரட்சிப் பயிற்சிதான் ‘துவையல் தவசு’.
‘மூணு நேரம் துவைக்கும் உற்ற கலை’3* என்று துணி துவைப்பதை அகிலத்திரட்டு அம்மானை வர்ணிப்பதைக் காண்க!
அறியாமையில் இருக்கும் சிலர் சொல்வதைப் போல், சாப்பாட்டுக்குத் தொட்டுக் கொள்ள கூட்டாகப் (SIDE DISH) பயன்படுத்தப்படும் ‘துவையல்’ என்கிற பொருள் கொண்டதல்ல ‘துவையல்’ தவசில் உள்ள ‘துவையல்’ என்ற சொல். ‘நாகரீகமான ஆடைகளைத் துவைத்துக் கட்டும் உரிமை எல்லோருக்கும் உண்டு’ என்பதை பறைசாற்றும் அறப்போராட்டமே ‘துவையல் தவசு’.
திருவிதாங்கூர் அரசால் கைது செய்யப்பட்ட ‘முத்துக்குட்டி என்னும் அய்யா வைகுண்டர்’, 110 நாள்கள் சிறைத்தண்டனைக்குப் பிறகு 1838-ம் ஆண்டு, மார்ச் மாதம் விடுதலை செய்யப்பட்டார்.4* துவையல் தவசு ஆரம்பிக்கப்பட்டது, அய்யா வைகுண்டர் விடுதலை செய்யப்பட்ட பிறகு, அடுத்து வந்த மாசி மாதத்தின் ஒரு வெள்ளிக்கிழமையில். 1838-ம் ஆண்டு மார்ச் 1-ம் தேதி, தமிழ் மாதம் மாசி 19-ம் தேதி ஆகும். மார்ச் 12-ம் தேதியில் மாசி மாதம் முடிவடைகிறது. எனில் அய்யா வைகுண்டர் விடுதலையான 12 நாள்களுக்குள், துவையல் தவசு என்கிற போராட்டம் தொடங்கப்பட்டிருக்கிறது.
அதாவது முத்துக்குட்டி என்னும் அய்யா வைகுண்டர் திருவிதாங்கூர் அரசின், ‘அனைத்து சாதி மக்களையும் ஒன்று திரட்டி புத்தி சொல்லக்கூடாது’ என்ற நிபந்தனையை துளியளவுகூடக் கருத்தில் கொள்ளவில்லை. அத்தனை துணிச்சல் கொண்ட அய்யா வைகுண்டர் மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்திருப்பாரா?
கன்னியாகுமரி ஊருக்கு வடக்கில் இருக்கும் ஒரு கடற்கரை கிராமம் ஆமணக்கன் விளை. அங்கு நான்கு வாகை மரங்கள் அருகருகே இருந்தன. பரந்து விரிந்த நான்கு வாகை மரங்களின் நிழலில் முத்துக்குட்டி என்னும் அய்யா வைகுண்டர் தலைமையில் மக்கள் கூடினார்கள். அங்கு நிகழ்ந்த துவையல் தவசில் கிட்டத்தட்ட ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த, 700 இந்துக் குடும்பங்கள் கலந்து கொண்டன.5* ஒரு குடும்பத்துக்கு 4 முதல் 5 பேர் உறுப்பினர்கள் என்று கொண்டாலும், கிட்டத்தட்ட 3500 பேர் துவையல் தவசில் கலந்து கொண்டார்கள். துவையல் தவசில் கலந்து கொண்ட மக்களை துவையல்காரர்கள் என்று சொல்கிறது அகிலத்திரட்டு அம்மானை.6* இப்போதும் நான்கு வாகை மரங்கள் நிழல் பரப்பிக் கொண்டிருக்கும் அந்த இடத்தில், தற்போது அய்யா வைகுண்டரின் வழிபாட்டுத்தலம் ஒன்று இயங்கி வருகின்றது. அது ‘வாவைப்பதி’ என்றழைக்கப்படுகிறது.

‘சாணார்* முதலான, ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த, இந்து மக்கள் தங்களின் வீடுகளையும் உடைமைகளையும் விற்று விட்டு வந்து, துவையல் தவசில் கலந்து கொண்டார்கள்’ என்கிறது அகிலத்திரட்டு. வெறும் 12 நாள்களுக்குள், 700 குடும்பங்கள் தங்கள் வீடுகளையும் உடைமைகளையும், அரை விலையில் விற்று விட்டு துவையல் தவசில் கலந்து கொள்ளக் காரணம் என்ன? தங்களின் சொந்த வீடுகளில் தங்கி வாழ இயலாத அளவுக்கு அந்த மக்களுக்கு என்ன நெருக்கடிச்சூழல் ஏற்பட்டது? எனில் அக்காலத்தில் தங்கள் வீடுகளையும் உடமைகளையும் விற்று விட்டு ஓடும் அளவுக்கு, இந்துச்சாணார்* முதலான இந்து மதத்தின் ஒடுக்கப்பட்ட 18 சாதி மக்களுக்கு ஒடுக்குமுறைகளும் அடக்குமுறைகளும் நிகழ்ந்தனவா?! இவையெல்லாம் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டிய கேள்விகள்.
அன்றைய திருவிதாங்கூர் மக்கள் மட்டுமின்றி, தென்பாண்டி நாட்டு மக்களும் துவையல் தவசில் கலந்து கொண்டார்கள். கடம்பன் குளத்தில் இருந்து கார்ப்பத்தப்பண்டாரம், அவருடைய மகன் பொதுப்பண்டாரம், பொதுப்பண்டாரத்தின் மனைவி ஆதிலெட்சுமி, ஆதிலெட்சுமியின் இரண்டு சகோதரர்களான அஞ்சாவது பண்டாரம், அறிவுள்ள பண்டாரம் ஆகிய ஐந்து பேர் அடங்கிய ஒரு குடும்பம் துவையல் தவசில் கலந்து கொண்டது. வள்ளியூர் அருகேயுள்ள இன்றைய குமாரக்குடியிருப்பு கிராமத்தைச் சேர்ந்த ஒருவரும் துவையல் தவசில் கலந்து கொண்டார். அவர் திருநெல்வேலிப்பண்டாரம் என்று அழைக்கப்பட்டார். அதே ஊரைச் சேர்ந்த கோனார் சாதியைச் சேர்ந்த கோனாண்டிப்பண்டாரம் என்பவரும் கலந்து கொண்டார்.7*
‘வாழ்ந்தே தவசு வாவைப் பதியதிலே
தாழ்ந்தே சனங்கள் சந்தோசமாய் இருக்க
அந்தி சந்தி உச்சி ஆக மூணு நேரம்
நந்தி அருளால் நல்ல துணி துவைத்து
உவரி நீர் துவைத்து உவரி நீர் குடித்து
உவரி நீர் தன்னில் உற்று வண்ணமே சமைத்து
உச்சி ஒரு நேரம் உணவு மிக வ(அ)ருந்தி
மச்சிப் புகழ்ந்த விடிய ஒரு சாமம்
உகப்பாட்டும் ஓதி உற்ற அவயம் இட்டு
வகையாய் விடிய வரும் நாழிகை ஏழில்
துணிகள் துவைத்து தோயம் அதில் இறங்கி
கெணியாய் குளித்து கிருஷ்ணர் பதம் போற்றி
இப்படியே நித்தம் இவர் மறவா வண்ணமேதான்
அப்படியே வாரி அலைவாய்க்கரை இருக்க
வாரிப்புறமாய் வளர்காற்று வாடை மிக
நீர் இறைத்தாற்போலே நித்தம் அந்த தவத்தோர்
பேரில் இறைத்து பெரு வாடையாய் வீச
சீர் உகந்த நாதன் செயலாம் என இருந்தார்
இருந்தார் தவசு ஏற்றரிய சான்றோர்கள்
அருந்தாமல் மற்றொன்றும் அன்னம் ஒரு நேரம் அதாய்
வாரி நீரல்லால் மறு நீர் அறியாமல்
சீர் இயல்பாய் சான்றோர் செய்தார் தவம் அதுவே!’
- அகிலத்திரட்டு அம்மானை.8*
‘துவையல்காரர்கள்’, தினமும் மூன்று வேளையும் துணி துவைத்துக் குளித்து சுத்தமான, நாகரீகமான ஆடைகளை அணிந்தார்கள். காலையில் தாங்கள் தெரிந்தும் தெரியாமலும் செய்த சகலவிதமான குற்றங்களுக்கும் அய்யாவிடம் மன்னிப்பு கேட்டு விட்டு, உகப்படிப்பு படித்தார்கள். மதிய வேளையில் உச்சிப்படிப்பு படித்தார்கள். இரவு நேரத்தில் உகப்படிப்பு படித்தார்கள்.
துவையல்காரர்கள், பச்சரிசியும் சிறுபயிறும் கலந்து, கடல்நீரில் வேகவைத்த கஞ்சியை மணல் தரையில் இட்டு, ஒருவேளை மட்டுமே உண்டார்கள் என்றும், கடல் நீரைத்தான் குடித்தார்கள் என்றும் அகிலத்திரட்டு அம்மானை சொல்வது, துவையல்காரர்களுக்கு இருந்த குடிநீர் பஞ்சத்தைக் குறிக்கிறது என்பது எனது கருத்து. அதாவது ‘ஆறு, குளம், பொதுக்கிணறு போன்ற பொது நீர்நிலைகளில் அவர்ணர்கள் நீர் எடுக்கக்கூடாது’ என்ற ஆதிக்கச் சாதிகளின் சாதியக்கட்டுப்பாட்டின் விளைவாக இருக்கலாம்.
‘எதிரி ஒழிக’ என்பது துவையல் தவசின் நோக்கம் அல்ல, ‘நாங்கள் மேம்படுவோம்’ என்பதே துவையல் தவசின் லட்சியமாக இருந்தது.
துவையல்காரர்கள் தங்கியிருந்த வாகை மரங்களின் நிழலில், தெள்ளு எனப்படும் மூட்டைப்பூச்சிகள், நண்டு போன்ற பூச்சிகளின் தொல்லை அதிகமாக இருந்தது என்கிறது அகிலத்திரட்டு. மக்கள் உண்ணும் உணவிலும் உடுத்தும் உடையிலும் தெள்ளு தொந்தரவு அதிகமாகப் பரவத் தொடங்கியது. இதனால் மக்களுக்கு சொறி, சிரங்கு போன்ற தோல் வியாதிகள் பரவத் தொடங்கியது. கடல் நீரின் இரைச்சலுடன் கூடிய கடுமையான வாடைக்காற்றின் குளிரும் அவர்களை அவதிப்படுத்தியது.
‘தேகமதில் சிறங்கு சொறுச்சல் பொறுக்குதில்லை
வேகமுடன் காந்தல் மேலில் பொறுக்குதில்லை
தாகத்துக்கு ஏற்ற தண்ணீர் கிடைக்குதில்லை
பாகமுடன் உண்ணுதற்கு பற்றுதில்லை தீனி அது
இனி எங்கே போவோம் எல்லோரும் என்று சொல்லி
மனு புகழும் சான்றோர் மாதம் ஒரு ஆறாய் இருந்தார் அதிலே’
- அகிலத்திரட்டு அம்மானை
இவ்வாறான பல தொந்தரவுகளுக்கு நடுவே, ஆறு மாதங்கள் ஆமணக்கன் விளையின் வாகை மரங்களின் கீழ் தங்கியிருந்தார்கள் துவையல் தவசில் ஈடுபட்ட துவையல்காரர்கள்.9*
கடலில் குளிக்கும்போது கடல் அலை பெண்களின் சேலைகளை இழுத்துச் சென்றது என்றுரைக்கின்றது அகிலத்திரட்டு. அதாவது கடலின் சீற்றம் அதிகமாக இருந்ததால், அதனாலும் துவையல்காரர்கள் துன்பப்பட்டார்கள். இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு விசயம் என்னவென்றால், 1838-ம் ஆண்டில் திருவிதாங்கூர் பேரரசியின், ‘இந்து மற்றும் கிறித்தவ மதத்தின் ஒடுக்கப்பட்ட சாதிப் பெண்கள் தோள்சீலை அணியக்கூடாது’ என்கிற கட்டளை, நடைமுறையில் இருக்கும் போது, துவையல் தவசில் கலந்து கொண்ட பெண்கள் தோள்சீலை அணிந்தார்கள் என்பதற்கு அகிலத்திரட்டின் இந்த வரியும் ஒரு சான்று. இது ஓர் அறப்புரட்சியே!
‘சங்கையுடன் கூடி சமுத்திரக் கரையருகில்
போய் இருக்கும் வேளையதில் பொங்கு கடல் கோபமதாய்
வாய் இதமாய் திரைத்தான் வந்து கோபித்து எடுத்து
பாலதியப் பெண்கள் பண்பாய் உடுத்திருந்த
சீலை ரெண்டு தனை செகல் கொண்டு போயினதே’
- அகிலத்திரட்டு அம்மானை.10*
‘வீடுகளை விற்று விட்டு, வாகை மரத்தின் நிழலில், மூட்டைப்பூச்சிக்கடியில், பெரும் வாடைக்காற்றின் குளிரில், குடும்பத்துடன், ஆண்களும் பெண்களும் கூட்டமாக, ஆறு மாதங்கள் தங்கியிருந்தது வெறும் ‘சாமி கும்பிடுவதற்காக’ என்பதை அறிவுள்ள மனிதர்கள் நம்ப மாட்டார்கள்.’
ஆறு மாதங்களுக்குப் பிறகு, ‘சொறி சிறங்கு முதலான நோய்களாலும், மூட்டைப்பூச்சியாலும் அவதிப்பட்டதால் மக்கள் வாவைப்பதியை விட்டு வெளியேற முடிவு செய்தார்கள்’ என்று சொல்கின்ற அகிலத்திரட்டு அம்மானையின் அறிமுக கதைச்சுருக்கத்தில்தான்,
‘பண்டார வேசம் பத்தினியாள் பெற்ற மக்கள்
கொண்டாடி நன்றாய்க் குளித்து துவைத்ததுவும்
கண்டு மாபாவி கலைத்து அடித்ததுவும்’11*
என்கிற வாக்கியங்களும் காணப்படுகின்றன. அதாவது ‘பண்டார வேசம் அணியும் திருமாலின் பத்தினி பெற்ற மக்களான சாணார்கள்(நாடார்கள்) கொண்டாடி நன்றாகக் குளித்து துவைத்ததைக் கண்ட மாபாவி, மக்களைக் கலைத்து அடித்து விரட்டிய நிகழ்வையும் அகிலத்திரட்டு அம்மானை எடுத்துரைக்கும்’, என்று அகிலத்திரட்டின் ஆரம்பத்தில் எழுதப்பட்டுள்ளது.
தொடரும்…
தரவுகள்
- பொ. முத்துக்குட்டி சுவாமி அவர்களால் இயற்றப்பட்டு, பா. தங்கையா அவர்களால் அச்சிலேற்றப்பட்ட, அகிலத்திரட்டு அம்மானை, நான்காம் பதிப்பு, பக்கம் எண்: 276.
- பொ. முத்துக்குட்டி சுவாமி அவர்களால் இயற்றப்பட்டு, பா. தங்கையா அவர்களால் அச்சிலேற்றப்பட்ட, அகிலத்திரட்டு அம்மானை, நான்காம் பதிப்பு, பக்கம் எண்: 281.
- பொ. முத்துக்குட்டி சுவாமி அவர்களால் இயற்றப்பட்டு, பா. தங்கையா அவர்களால் அச்சிலேற்றப்பட்ட, அகிலத்திரட்டு அம்மானை, நான்காம் பதிப்பு, பக்கம் எண்: 278.
- அய்யா வைகுண்டரின் தென்பாண்டிநாட்டு வருகை, கலந்தபனை வெ.செந்திவேலு, சூரன்குடி அ.இன்பக்கூத்தன், முதற்பதிப்பு ஆகஸ்ட்,2011, பக்கம் எண்:24.
- ஐயா அவதாரம், ஐயா அருளிய துவையல் தவம், ஆசிரியர்கள்: முனைவர். திருமதி.லட்சுமி அய்யா, திரு.கு.கிருஷ்ணமணி அய்யா, முதற்பதிப்பு:2022, பக்கம் எண்: 58.
- பொ. முத்துக்குட்டி சுவாமி அவர்களால் இயற்றப்பட்டு, பா. தங்கையா அவர்களால் அச்சிலேற்றப்பட்ட, அகிலத்திரட்டு அம்மானை, நான்காம் பதிப்பு, பக்கம் எண்:283.
- அய்யா வைகுண்டரின் தென்பாண்டிநாட்டு வருகை, கலந்தபனை வெ.செந்திவேலு, சூரன்குடி அ.இன்பக்கூத்தன், முதற்பதிப்பு ஆகஸ்ட்,2011, பக்கம் எண்: 24.
- பொ. முத்துக்குட்டி சுவாமி அவர்களால் இயற்றப்பட்டு, பா. தங்கையா அவர்களால் அச்சிலேற்றப்பட்ட, அகிலத்திரட்டு அம்மானை, நான்காம் பதிப்பு, பக்கம் எண்: 277,278.
- அய்யா வைகுண்டரின் தென்பாண்டிநாட்டு வருகை, கலந்தபனை வெ.செந்திவேலு, சூரன்குடி அ.இன்பக்கூத்தன், முதற்பதிப்பு ஆகஸ்ட்,2011, பக்கம் எண்:24. & பொ. முத்துக்குட்டி சுவாமி அவர்களால் இயற்றப்பட்டு, பா. தங்கையா அவர்களால் அச்சிலேற்றப்பட்ட, அகிலத்திரட்டு அம்மானை, நான்காம் பதிப்பு, பக்கம் எண்: 278,279, 280.
- பொ. முத்துக்குட்டி சுவாமி அவர்களால் இயற்றப்பட்டு, பா. தங்கையா அவர்களால் அச்சிலேற்றப்பட்ட, அகிலத்திரட்டு அம்மானை, நான்காம் பதிப்பு, பக்கம் எண்: 279.
- பொ. முத்துக்குட்டி சுவாமி அவர்களால் இயற்றப்பட்டு, பா. தங்கையா அவர்களால் அச்சிலேற்றப்பட்ட, அகிலத்திரட்டு அம்மானை, நான்காம் பதிப்பு, பக்கம் எண்: 2. & அகிலத்திரட்டு அம்மானை (மூலம் ஏட்டுப் பிரதி) மூலமும் உரையும், உரையாசிரியர் நா.விவேகானந்தன், இரண்டாம் பதிப்பு 2006, பாகம் ஒன்று, பக்கம் எண்: 6.
படைப்பாளர்
சக்தி மீனா

பட்டதாரி, தொழில் முனைவர். பெரியாரின் சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டவர். பொழுதுபோக்காக ஆரம்பித்த எழுத்து, பெரியாரின் வழிகாட்டுதலில், பொதுவுடைமை சித்தாந்தம் நோக்கி நகர்ந்தது. எதுவுமே செய்யவில்லையே என்ற தன் மனக்கவலையைக் களைய, படித்துக்கொண்டும் எழுதிக்கொண்டும் இருக்கிறார்.




