இடைவெளி எங்கும் கூடாது, அனைவரும் இணைந்து இருக்க வேண்டும் என்பது மனிதர்களுக்கு நாம் பொதுவாகச் சொல்லும் அறிவுரை.
தொற்றுநோய்கள் இருக்கும் இடங்களில் தனிமனித உடல் இடைவெளி தேவை. கொரோனா காலத்தில் இதைத்தான் ஒட்டுமொத்த சமூகமும் கடைபிடித்தோம்.
அதேபோல் மகளிர் நலனில் ஓரிடத்தில் ‘இடைவெளி’ மிக முக்கியமாகப் பேசப்படும். அந்த இடைவெளியைத்தான் ஆங்கிலத்தில் BIRTH SPACING என்போம்.
பிறப்பு இடைவெளி (BIRTH SPACING)
இரு கர்ப்பங்களுக்கு இடையில் இருக்கும் இடைவெளியே Birth spacing. இது மிக மிக முக்கியமானது மகளிர் நலனில்.
ஆரோக்கியமான பிறப்பு இடைவெளிக் காலம் என்பது 3 ஆண்டுகள். அதாவது ஒரு குழந்தை பிறப்பிற்கும் அடுத்த குழந்தை பிறப்பிற்கும் இடையே இருக்கும் இடைவெளி குறைந்தது மூன்று ஆண்டுகள் இருந்தால் அது அந்தத் தாயின் ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும்.
பிறப்பு இடைவெளிக்கான அவசியங்கள்:
1) ஒரு கருவானது 40வாரங்கள் தாயின் கர்ப்பப்பையில் உயிர் வாழும். அந்த 40 வாரங்களும் அந்தக் கரு உருவாகி ஒரு நிறைமாதக் குழந்தையாக வளர்ந்து, கருப்பையைவிட்டு வெளியேவரும் வரை தாயிடம் இருந்துதான் தனக்குத் தேவையான சத்துகளைப் பெறுகிறது. ஆகையால் அடுத்தடுத்து பிள்ளைப்பேறு நடக்கும்போது தாயின் நுண்சத்துகள் பெரும்பாலும் குறைகின்றன.
2) நுண்சத்துகள் குறைபாட்டில் பெருபாலும் கால்சியம், இரும்புச்சத்து குறைபாடு காணப்படுகிறது. பொதுவாகவே இந்தியப் பெண்களுக்குக் குறிப்பாக கிராமப்புறப் பெண்களுக்கு இத்தகைய சத்துக்குறைபாடுகள் காணப்படுகின்றன. இதில் இடைவெளியின்றி அடுத்தடுத்த கர்ப்பம் தரிப்பதால் மேலும் இந்த நுண்சத்துகள் குறைகின்றன.
3) நுண்சத்துகளின் குறைபாட்டால் குறைமாதக் குழந்தை பிறக்க வாய்ப்புண்டு. குறைபாடு உள்ள குழந்தை பிறக்கவும் வாய்ப்புண்டு. இதைத் தவிர்க்க வேண்டுமெனில் தாய் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருத்தல் வேண்டும்.
4) அடுத்தடுத்து கர்ப்பம் தரிக்கும்போது அதில் சிலவற்றை நாம் தேவையில்லாத கர்ப்பமாகக் கருதி கருக்கலைப்பு செய்ய நேரிடும்.
5) இடைவெளியின்றி அடுத்தடுத்த பிள்ளைப்பேறு ஏற்படும்போது குழந்தை பிறப்பிற்குப் பின் கர்ப்பப்பை, தன் சுருங்கிவிரியும் தன்மையை இழக்கிறது.
இதனால் பிரசவ நேரத்தில் அதிகமான உதிரப்போக்கு ஏற்படுகிறது. இது தாயின் மரணம் வரை இட்டுச் செல்கிறது.
தற்காலிக கருத்தடை முறைகள்:
பிரசவங்களுக்கு இடையிலான இடைவெளியைப் பாதுகாப்பான இடைவெளியாக்கத் தற்காலிக கருத்தடை முறைகளைப் பின்பற்றலாம்.
காண்டம் எனப்படும் ஆணுறை, தற்காலிக கருத்தடை மாத்திரைகள், தற்காலிக கருத்தடை ஊசிகள், தற்காலிக கருத்தடை சாதனங்கள் என அனைத்து வடிவிலும் தற்காலிக கருத்தடை முறைகள் உள்ளன. தமிழகத்தைப் பொறுத்தவரை இவை அனைத்தும் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இலவசமாகக் கிடைக்கின்றன.
வாழ்வா? சாவா?
வாழ்வா சாவா என்றால் நாம் அனைவரும் வாழ்வைத்தான் தேர்ந்தெடுப்போம். வாழ்வதற்கான உரிமை நமக்கு உண்டு.
உலகின் ஏழு அதிசயங்களில் தாஜ்மஹாலும் ஒன்று. அத்தகைய உலக அதிசயக் கட்டிடம் உருவானத்திற்கான அடித்தளம் என்ன? காதலா? அது காதலின் சின்னமாக நான் ஒருபோதும் கருதமாட்டேன். அது 38 வயதே நிரம்பிய ஒரு பெண்ணின் கல்லறை. வாழவேண்டிய மும்தாஜ், 38 வயதில் அவர் மரித்ததற்கான காரணம் அதிகப் பிள்ளைபேறும் பிரசவங்களுக்கு இடையே இடைவெளி இல்லாததும்தான். ஆ,ம் 38 வயதே நிரம்பிய மும்தாஜ் தனது 14வது குழந்தை பெற்றபோது கர்ப்பப்பை சுருங்கும் தன்மையை இழந்து அதிக உதிரப்போக்கு ஏற்பட்டு மறைந்தார்.
மறைந்தபின் நமக்கு தாஜ்மகால் தேவையா, இல்லை நீடித்த வாழ்வு தேவையா என்றால் நீடித்த வாழ்வே வேண்டும். நீடித்த வாழ்வுபெற பிரசவங்களுக்கு இடையில் இடைவெளி கடைபிடிப்போம்.
ஆரோக்கிய வாழ்வு வாழ்வோம். வாழ்வதற்கான உரிமை அனைத்துப் பெண்களுக்கும் உண்டு.
(தொடரும்)
படைப்பாளர்:
மருத்துவர் அனுரத்னா. இவர் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அரசு மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவராகப் பணியாற்றுகிறார். ஓய்வு நேரங்களில் விளிம்புநிலை மக்களை அவர்கள் இருப்பிடத்துக்கே தேடிச்சென்று மருத்துவ உதவி வழங்குகிறார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மூலமாக சமூகத்தில் அறிவியல் சிந்தனைகளை பரப்பிவருகிறார். பெண்கள் மற்றும் இதர ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வியல் போராட்டங்களில் பங்குகொள்கிறார். மனிதி அமைப்பின் உறுப்பினராக உள்ளார். கட்டுரைகள் மற்றும் கவிதைகள் எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். 2012ம் ஆண்டு வெளிவந்த “மனிதநேய மாமுனிவர்” என்ற நூலின் ஆசிரியர்.
அருமையான தகவல் சகோதரி