குருவுக்கு ‘பக்’கென்றது. என்னடா இவன் போகாமல் , தன்னை போகச் சொல்கிறான் என்று.

ஆதியும் குருவும் உறவினர்கள் மட்டும் அல்ல. நல்ல நண்பர்களும்தாம். நான்கு வருடங்கள் குருவைவிட ஆதி மூத்தவன்.

“என்ன சொல்ற நீ? நான் எப்படிப் போக முடியும்?” என்றான் குரு.

“போகலாம்டா, அதுல என்ன தப்பு?”

“டேய், நீ என்னோட அண்ணன் முறை. அப்படிப் பார்த்தா அந்தப் பொண்ணு எனக்கு அண்ணி. நான் எப்படிப் போய்ப் பெண் பார்க்க முடியும்? நான்தான் மாப்பிள்ளைன்னு நினைச்சுட்டா?”

“அதெல்லாம் ஒன்னும் நினைக்க மாட்டாங்க. போன உடனே சொல்லிடு, நீ என்னோட தம்பின்னு” என்று சொல்லிச் சிரித்தான் ஆதி.

“டேய், அதான் உன் அப்பா, அம்மா எல்லாம் போறாங்க, அவங்க பாக்குறாங்க , அப்புறம் நான் எதுக்குடா?”

“போய் பொண்ண பார்த்துட்டு ஓகேவான்னு மட்டும் சொல்லு. மேல எதுவும் கேட்காத.”

பொறியியல் கல்லூரியில் நான்காம் வருடம் படிக்கிறான் குரு. அவனுக்குப் பெண் பார்க்கும் படலம் புதியதுதான். ஆதியைப் பார்க்கவும் அவனுக்குப் பாவமாகத்தான் இருந்தது. ‘சரி போய்தான் வருவோம்’ என்று முடிவு செய்தான்.

அந்த நாளும் வந்தது. தன் பெரியம்மா, பெரியப்பாவுடன், ஆதியின் தங்கை சுமித்ரா மற்றும் ஒரு சில உறவினர்களுடன் பெண் பார்க்கச் சென்றான் குரு. ஆறு சொச்சம் உறவினர்கள். குருவின் அம்மாவும் வந்திருந்தார்கள். குருவுக்கு, ‘பொண்ணே இப்போதான் பார்க்க போறோம்! நானே எக்ஸ்டிரா லக்கேஜ், இதுல நீங்க எல்லாம் எதுக்கு வரீங்க?’ என்று கேட்கத் தோன்றியது.

அதில் அறுமுகம் மாமாவும் அடக்கம். அவர் குருவின் தாய் மாமா. அவன் அம்மாவுடன் கூடப் பிறந்தவர்களில் மூத்தவர். அவன் அம்மாவுக்கும் பெரியம்மாவுக்கும் ‘காட் பாதர்’ போல. பல திருமணங்கள் நடக்கக் காரணமானவர் அவர். ‘அட, நம்ம சங்கரன் பொண்ணு. நான் பாத்துதான் சம்பந்தம் அமைஞ்சது.’ ‘இந்தக் கல்யாணி மகன் பூபதி, அவனுக்கும் நான் சொல்லித்தான் பொண்ணு கிடச்சது. ஆனா, பாருங்க அன்னிக்கு என்னைப் பார்த்ததும் பாக்காத மாதிரி போய்ட்டான்’ போன்ற வசனங்களை அடிக்கடி பேசுவார் ஆறுமுகம் மாமா. இந்த வரன் புரோக்கர் மூலமாக வந்தாலும் அத்தைக்குத் தூரத்து உறவினர் என்று பின்புதான் தெரியவந்தது. மாமா குஷியாக அத்தையுடன் கிளம்பிவிட்டார் பெண் பார்க்க. குருவைப் பார்த்தவுடன் ஆறுமுகம் மாமா, “என்னடா, பொண்ணு பார்க்க இப்பவே ஒத்திகையா? உனக்கும் நான் பொண்ணு பாத்துதான் கல்யாணம் நடக்கணும். லவ் கிவ்வு பண்ணித் தொலைச்சுடாத என்ன!”

“சரி மாமா, அப்படி நடந்ததுனா என் பெண்டாட்டி கழுத்துல’ ஆறுமுகம் மாமா மூலமாக அமைந்த வாழ்க்கைத் துணை’ ன்னு போர்டு மாட்டிடலாம், சரியா?”

முகத்தைத் திருப்பிக் கொண்டார் ஆறுமுகம் மாமா. உறவினர்கள் என்றால் கொஞ்சம் அலர்ஜி குருவுக்கு. பல நேரம் சகித்துக்கொண்டுதான் போக வேண்டி இருக்கிறது.

பெண்ணின் வீடு கொஞ்சம் சுமாராகத்தான் இருந்தது. பெரிய வீடுதான், ஆனால் ஒட்டு வீடு. பூர்வீக வீடாக இருக்குமோ என்னவோ. ஐந்து வருடங்களாகத் தேடியும் இன்னும் தன் மகனுக்குப் பெண் அமையவில்லை என்கிற காரணத்தால் பெரியம்மா, பெரியப்பாவைச் சமாதானப்படுத்தி அழைத்து வந்திருப்பது புரிந்தது. இருப்பினும் பெரியப்பா ஒத்துக்கொள்வாரா என்பது சந்தேகம்தான். விருப்பம் இல்லாதவர் போல் பட்டும் படாமல் இருந்தார் பெரியப்பா.

இரு வீட்டிலும் கரம் கூப்பி பரஸ்பரம் வணக்கம் வைத்துக் கொண்டார்கள். வணக்கம் வைக்கத் தடுமாறினான் குரு. ஆறுமுகம் மாமா ஜாடையாக, “வணக்கம் சொல்லு, வணக்கம் சொல்லு” என்று உத்தரவிட்டார். உள்ளங்கைகள் நன்கு பதியாமல் வணக்கம் இட்டான் குரு.

ஆறுமுகம் மாமாதான் ஆரம்பித்தார். “நான் பையனோட தாய் மாமா. இவரு பையனோட அப்பா, மேலாளர் ஆக இருந்து பணி ஓய்வு பெற்றுவிட்டார். இவங்க பையனோட அம்மா. இல்லத்தரசி. பொண்ணு பொறியியல் முதல் வருசம் படிக்குது. பையன் மூத்தவன், பொண்ணு இரண்டாவது. இவங்க என் இரண்டாவது தங்கை. இவன் அவங்க மகன். பொறியியல் கடைசி வருடம் படிக்கிறான்…” இப்படி எல்லா உறவுகளையும் கணீரென்ற உரத்த குரலில் அறிமுகப்படுத்தி வைத்தார் ஆறுமுகம் மாமா.

தன்னைப் பற்றிச் சொல்கையில் கொஞ்சம் கூச்சமாக இருந்தது குருவுக்கு. ‘இவன் யாரடா (சம்பந்தமே இல்லாமல் ) கோமாளி ‘ என்று எல்லாரும் தன்னைப் பார்ப்பது போலத் தோன்றியது. பெண் வீட்டு அறிமுகம் அவர்கள் பக்கம் ஒரு பெரியவர் செய்து வைத்தார். அவர்தான் அத்தையின் தூரத்துச் சொந்தம் போல. அவருக்குப் பெண் வீடு சொந்தமாம்.

பின் விஷயத்துக்கு வந்தார் ஆறுமுகம் மாமா.

“நாங்க ***** சாதி. ***** கூட்டம். நீங்க?”

“நாங்களும் ***** சாதி தாங்க. ***** கூட்டம்” என்றார் பெண்ணின் அப்பா.

‘ஒரு வேளை வேற சாதின்னு சொன்னா வீட்ட விட்டு வெளிய போக சொல்லிடுவாங்களோ’ என்று நினைத்துக் கொண்டான் குரு. தான் ஒரே சாதியாக இருப்பதனால்தான் இங்கு அமர வைக்கப்பட்டு உபசரிக்கப் படுகிறோம் என்பது அவனுக்குப் புரிந்தது.

தங்கள் குலதெய்வங்கள், பெண் மற்றும் மாப்பிள்ளையின் ஜாதகப் பொருத்தம், வர்க்கப் பொருத்தம், கௌரவப் பொருத்தம் பற்றி எல்லாம் பேசிக் கொண்டார்கள். வர்க்கப் பொருத்தம் பற்றிதான் பெரியப்பாவும் கொஞ்சம் மனக் கிலேசம். ஜாதகப் பொருத்தம் நன்றாகப் பொருந்தி வருவதாகவும் பரஸ்பரம் தங்கள் சொந்தக்காரர்கள் இன்னார் இன்னார் என்றும், அதன் மூலம் இரு வீட்டாரும் எவ்வாறு நெருக்கம் என்பது பற்றியும் பேசி சிலாகித்தார்கள். ‘சிம்பன்சிகூட நமக்கு நெருங்கின சொந்தம்தாங்க , 99 சதவீதம் DNA ஒத்துப் போகுதாம்’ என்று சொல்ல நினைத்து சபை நாகரிகம் கருதி அமைதி காத்தான் குரு. இரு குடும்பத்தார்களும் பேசிக் கொண்டவை எல்லாம் வாழப் போகும் இருவருக்கும் எந்த வகையில் உபயோகப்படும் என்று தெரியவில்லை, ஆனால் பேசினார்கள்.

சாதி, வர்க்கமெல்லாம் பேசி முடித்த பின் பெண் உள் அறையிலிருந்து அழைத்து வரப்பட்டார். பெண் நல்ல சிவப்பு, கொஞ்சம் பூசினார் போல உடல்வாகு. கண்ணாடி அணிந்திருந்தார். பட்டுப் புடவையில் இருந்தார். ஆதி ஒருமுறை ஒரு பெண் பார்க்கும் நிகழ்வில் சுடிதாரில் பெண் வந்தால் போதும் என்று சொல்ல, ஆறுமுகம் மாமா ‘அதெல்லாம் பெரியவங்களுக்கு மரியாதையா இருக்காது’ என்று மறுத்துவிட்டதாகக் கேள்விப்பட்டான்.

ஆதிக்கு அனுப்புவதற்காகப் பெண்ணைத் தங்களது கேமராவில் மூன்று நான்கு படங்கள் எடுத்துக் கொண்டார்கள். ஒருமணி நேரத்தில் முடிந்தது பெண் பார்க்கும் படலம். விட்டால் போதும்டா சாமி என்று தெறித்து ஓடி வந்துவிட்டான்.

பெண் பார்க்கும் படலத்தை ஒரு ‘ஈவெண்ட் மேனஜர்’ போல நல்ல நேர்த்தியுடன் நடத்தி முடித்திருந்தார் ஆறுமுகம் மாமா. சும்மாவா, பல திருமணங்களை முன் நின்று நடத்தியவர் ஆயிற்றே!

அடுத்த நாள் ஆதி தொலைபேசியில் பெண்ணைப் பற்றிக் கேட்க , ‘நல்லா லட்சணமாக இருந்தாங்கடா’ என்று முடித்துக் கொண்டான் குரு. ஆனால், அந்தச் சம்பந்தம் பின்பு கூடி வரவில்லை.

(தொடரும்)

படைப்பாளர்

ராம் குமார்

மருத்துவர். ஒரு ஆண் பிள்ளைக்கு அப்பா. மனைவி பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியர்.