நிறங்களை வைத்து இங்கு ஒரு பெரும் வியாபாரமே நடந்து வருகிறது. வெண் தோல்தான் அழகு என்கிற கற்பிதத்தை மக்கள் மத்தியில் விதைத்து ஏற்றத் தாழ்வுகளை உருவாக்கிக் கொண்டிருக்கும் அழகு சாதன நிறுவனங்கள், அழகைத் தோல் நிறத்தோடு ஒப்பிடுவது எந்த வகையில் நியாயம்? தோல் நிறம் என்பது அந்தந்த நாட்டின் தட்பவெப்ப நிலையையும் சூழலையும் பொருத்தது. முன்பு கூறியது போலவே தோல் நிறமியான மெலனின் சூரியனின் புற ஊதாக் கதிர்களிடம் இருந்து மனிதனைக் காக்கும் ஒரு பாதுகாப்பு கவசம் போல் செயல்படுகிறது.
சரி, இந்தத் தோல் நிறமி மனிதர்களிடம் மட்டும்தான் இருக்கிறதா என்று கேட்டால், இல்லை இது தாவரங்கள், காய்கறிகள், பறவைகள், விலங்குகள், நுண்ணுயிரிகள் உள்ளிட்ட பல உயிரினங்களில் இது காணப்படுகிறது. தாவரங்களின் பச்சை நிறத்திற்கு க்ளோரோஃபில் (chlorophyll) என்னும் நிறமிதான் காரணம். கேரட், மாம்பழத்தின் செம்மஞ்சள் நிறத்திற்கு பீட்டா கரோட்டின் (beta carotene), தக்காளியின் சிவப்பு நிறத்திற்கு லைக்கோபீன் (lycopene), திராட்சை, நீல பெரி (blue berries) போன்ற பழங்களின் நீல/ஊதா நிறத்திற்கு ஆன்தோசயானின் (anthocyanin), புலிகளின் செம்மஞ்சள் நிறத்திற்கு பியோமெலனின் (pheomelanin) போன்ற நிறமிகள்தாம் காரணம். இந்த நிறமிகள் அனைத்தும், ஒளி தங்கள் மீது படும் போது, தங்களுக்கான குறிப்பிட்ட வண்ணத்தைத் தவிர மீதி அனைத்து வண்ணங்களையும் உள்வாங்கிக் கொள்ளும்.
இதில் மிகவும் சுவாரசியமான ஒன்றுதான் மயில் தோகையில் இருக்கும் வண்ணங்கள். மேற்குறிப்பிட்டவற்றைப் போல் மயில் தோகையில் நீலம் மற்றும் பச்சை நிறங்களுக்கான நிறமிகள் ஏதுமில்லை. பிறகு எப்படி மயில் தோகை அத்தனை அழகான வண்ணங்களை வெளிப்படுத்துகிறது? அதற்கு மயில் தோகையின் கட்டமைப்புதான் காரணம். கெரட்டின் (keratin) மற்றும் மெலனின் புரதங்களாலான மயில் தோகையில் நானோ கம்பிகள் (nanorods) உண்டு. இந்த நானோ கம்பிகள் ஒளிக் கதிர்களை உள்வாங்கிக் கொண்டு, தங்கள் கட்டமைப்பிற்கேற்ப நீலம் மற்றும் பச்சை நிறங்களுக்கான அலைநீளங்களை மட்டும் பெருக்கி வெளிப்படுத்தும். கெரட்டின், மெலனின், ஒளி மூன்றும் ஒருமித்து நடத்தும் ஓர் அழகிய வண்ண நாடகத்தால்தான் மயில் தோகை நீலம், பச்சை நிறங்களில் தெரிகிறது. இது தவிர மயில் தோகையில் கரோட்டினாய்ட்ஸ் (carotenoids) என்னும் நிறமியைப் படிய வைக்கும் செல்கள் இருப்பதால் அழகிய மஞ்சள், செம்மஞ்சள் நிறங்கள் காணப்படுகின்றன.
அப்படியானால் வெண்ணிற மயில்களில் என்ன நடக்கிறது? லூசிசம் (leucism) என்னும் பின்னடைவு குறைபாட்டால்தான் சில மயில்கள் வெள்ளை நிறத்தில் காணப்படுகின்றன. லூசிசம் என்பது மெலனின் உருவாக்கக்கூடிய செல்களின் உற்பத்தியையும், போக்குவரத்தையும், இயக்கத்தையும் முற்றிலுமாகப் பாதிக்கும் ஒரு மரபணுக் குறைபாடு. இது ஒரு குறிப்பிட்ட உறுப்பை மட்டும் பாதிக்க கூடியது. இதனால், பாதிக்கப்பட்ட உறுப்புகளில் மட்டும் கறுப்பு, அடர் காவி போன்ற நிறங்கள் வெளிப்படுவதில்லை. சில வகை லூசிசம், நிறமி செல்கள் அனைத்தையும் பாதிக்கும். உதாரணமாக, மயிலின் தோகை பகுதி மட்டும் வெள்ளையாக இருப்பதும், கண்கள் கரிய நிறத்தில் இருப்பதும் இந்தக் குறிப்பிட்ட மரபணு பிறழ்வால்தான். தோகையில் படியக்கூடிய கரோட்டினாய்ட்ஸால் வெளிப்படும் மற்ற மஞ்சள், செம்மஞ்சள் நிறங்கள் வெளிப்படாமல் இருப்பதற்கும் லூசிசம்தான் காரணம்.
பொதுவாகவே, மயில்கள் உணவிலிருந்துதான் கரோட்டினாய்ட்ஸ் நிறமிகளை எடுத்துக் கொள்ளும். பிறகு, எடுத்துக் கொண்ட நிறமிகளைத் தோகையில் படிய வைக்கும். இந்த வேலையைச் செய்யக்கூடிய நிறமி செல்கள் மரபணு பிறழ்வால் பாதிக்கப்பட்டிருக்கும். அதனால், நிறங்களை முழுமையாகத் தோகையில் படிய வைக்க முடியாது. அதுமட்டுமன்றி மெலனின் உருவாக்கத்தில் பிரச்னை இருப்பதால், சாதாரண மயில் தோகையில் இருக்கக்கூடிய நானோ கம்பிகளின் கட்டமைப்பு, இந்த வெண்ணிற மயில்களில் சற்று வித்தியாசமாக இருக்கும். மாறுபட்ட கட்டமைப்பைக் கொண்ட நானோ கம்பிகளால் ஒளியிலிருந்து வரக்கூடிய ஒரு குறிப்பிட்ட அலைநீளத்தை மட்டும் பெருக்கி வெளிப்படுத்த முடியாது. இதுதான் சில மயில்கள் வெள்ளையாக இருப்பதற்கான காரணம். சில மயில் தோகைகள் முழுவதும் வெள்ளையாக இருக்காமல், ஆங்காங்கே மட்டும் வெள்ளையாகவும் மற்ற இடங்களில் வண்ணங்களோடும் இருக்கும். இதற்குப் பகுதி லூசிசம் (partial leucism) என்று பெயர்.
இதே பகுதி லூசிசம்தான் வெள்ளைப் புலிகளின் தோற்றத்திற்குக் காரணம். எளிமையாகச் சொல்ல வேண்டும் என்றால் புலிகளின் தோலில் உள்ள சில பகுதிகளில் இருக்கும் செம்மஞ்சள் நிறத்திற்குக் காரணமான பியோமெலனின் நிறமியை உருவாக்கும் செல்கள் மரபணு பிறழ்வால் பாதிக்கப்பட்டு செயல் படாது. அதனால், பாதிக்கப்பட்ட இடங்கள் வெண்மையாகவும் மற்ற இடங்கள் கரிய நிறத்திலும் இருக்கும். இந்தக் கரிய நிறத்திற்கு மெலனின் நிறமிதான் பொறுப்பேற்கும்.
ஆய்வுக்கூடத்தில் பயன்படுத்தப்படும் வெள்ளெலிகளுக்கும் இதே லூசிசப் பின்னணிதானா? இல்லை, வெள்ளெலிகளின் வெண் தோலுக்கு அல்பினிசம் (albinism) என்று பெயர். இதுவும் ஒரு பின்னடைவு மரபணுக் குறைபாடுதான். அல்பினிசம் என்னும் குறைபாடிருப்பதால் இந்த வெள்ளெலிகளுக்கு அல்பினோ ரேட் (albino rat) என்கிற காரணப் பெயரும் உண்டு. அல்பினிசத்திற்கும் லூசிசத்திற்கும் என்ன வித்தியாசம்? இரண்டுமே வெண் தோல் நிறத்தைத்தானே கொடுக்கிறது? அல்பினசத்தால் பாதிக்கப்பட்டால் உடலில் உள்ள மெலனின் நிறமி செல்கள் அனைத்தும் செயலிழந்து ஒட்டுமொத்த உடலும் வெண்ணிறத்தில் காட்சியளிக்கும். கருவிழி, தலைமுடி உள்பட அனைத்தும் வெளிறிய நிறத்தில் இருக்கும். இது லூசிசத்தைப் போல் சில குறிப்பிட்ட உறுப்புகளைப் பாதிக்காமல் ஒட்டுமொத்த உடலையும் பாதிக்கும். அல்பினோ எலிகளின் விழிகள் சிவப்பு நிறத்தில் இருப்பதற்கும் இதுதான் காரணம்.
மனிதர்களிலும் இந்த அல்பினிசம் பரவலாகக் காணப்படுகிறது. இது போன்ற பின்னடைவு நோய்கள் ஏற்பட பெற்றோரிடமிருந்து வரக்கூடிய இரண்டு மரபணு மாற்றுருவிலுமே பிறழ்வு ஏற்பட்டிருக்க வேண்டும். இதில் மிக சுவாரசியமானது என்னவென்றால் மனிதனின் தோல் நிறத்தை நேரடியாகவோ மறைமுகமாகவோ கிட்டதட்ட 150க்கும் மேற்பட்ட மரபணுக்கள் கட்டுப்படுத்துகின்றன. அந்தந்த நாட்டின் தட்பவெப்ப நிலைக்கு ஏற்றாற்போல இந்த மரபணுக்களின் கட்டமைப்பும் செயல்பாடும் வேறுபடும். உதாரணத்திற்கு, மெலனின் உற்பத்தியை நிர்ணயிக்கக்கூடிய மூன்று மரபணுக்களும் ஓங்கு (dominant) பண்புடையதாக இருந்தால் கரிய தோல் நிறம் வெளிப்படும். இதுவே, அந்த மூன்று மரபணுக்களுமே ஒடுங்கு (recessive) பண்புடையதாக இருந்தால் வெண்ணிறத் தோல் வெளிப்படும். இந்த மூன்று மரபணுக்களும் எப்படிச் சேர்கிறது என்பதைப் பொறுத்துதான் தோல் நிறம் நிர்ணயிக்கப்படுகிறது. இந்த மூன்றில் ஒன்றுக்கு மேற்பட்ட மரபணுக்கள் ஓங்கு பண்புடையதாக இருந்தால் அது அடர் நிறத் தோல் நிறத்திற்குக் காரணமாகும். இதுவே ஒன்றுக்கும் மேற்பட்ட மரபணுக்கள் ஒடுங்கு பண்புடையதாக இருந்தால் அது வெளிறிய நிறத்திற்குக் காரணமாகும்.
இதுதான் தோல் நிறங்களின் அடிப்படை. இது மனிதர்களின் சூழலுக்கு ஏற்றவாறும் அவர்களின் மரபணுக் கட்டமைக்கு ஏற்றவாறும் தீர்மானிக்கப்படுகிறது. இதில் எந்த நிறம் அழகு என்பது அர்த்தமற்றது. இதில் எது பொருந்தி வாழத்தக்கது என்பதே சாமர்த்தியமான சிந்தனை. ஒவ்வொரு நிறத்துக்கும் ஒரு தனித்துவமான பண்பு உண்டு. கரிய தோல் நிறத்திலிருக்கும் மெலனின் நிறமி சூரியனின் புற ஊதாக் கதிர்களிடமிருந்து காக்கும். வெளிறிய தோல் உடையவர்கள் அதிகமான வைட்டமின் ’டி’யை உள்வாங்கக் கூடியவர்கள். இந்தப் பண்புகள் சூழலை அடிப்படையாக வைத்தே அடுத்த தலைமுறைக்கு கடத்தப்படும்.
காலனிய ஆட்சியின் போது நிறத்தை அடிப்படையாக வைத்து நடத்தப்பட்ட முதலாளித்துவம் இன்றும் பல இடங்களில் நடக்கிறது. வெண் தோல் உடையவர்களை அதிகாரம், அந்தஸ்து, ஆதிக்கம் உடையவர்களாகப் பாவித்து, கரிய தோல் உடையவர்களை அவர்களுக்கு அடிமைகளாக்கி, உழைப்பைச் சுரண்டிக் கொண்டதில் இங்கிலாந்து வரலாற்றில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இதன் விளைவு, இங்கிலாந்து ஆட்சியின் கீழிருந்த ஆசியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகள் அனைத்திலும் தோல் நிறத்தால் பாகுபாடு ஏற்பட்டது. சீனா, ஜப்பான், தென் கொரியா, இந்தியா, ஆப்ரிக்கா உள்ளிட்ட நாடுகள் இன்றளவும் வெண்ணிறத் தோல் மீது அதிக மோகம் கொண்டுள்ளன. திருமணத்தின் போதுகூட வெண் தோலுடைய பெண்களையே அதிகம் விரும்பும் அவலம் இந்தியாவில் இன்னும் பல இடங்களில் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இந்தியாவில் அதிகம் விற்பனையான ஃபேர் அண்ட் லவ்லி (fair and lovely) நிறுவனத்தின் பெயர் 2020இல் க்ளோ அண்ட் லவ்லி (glow and lovely) என்று பெயர் மாற்றப்பட்டது. வெண் தோல்தான் அழகு என்பதை வலியுறுத்துவதாக எழுந்த குற்றச்சாட்டை முன்னிட்டு இந்தப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அமெரிக்காவில், கறுப்பின மக்கள் மீது நடத்தப்பட்ட போலீஸ் அராஜகத்திற்கு எதிராக 2013இல் தொடங்கப்பட்ட ’Black lives matter’ இயக்கத்திற்குப் பிறகு உலக நாடுகளின் பல பகுதிகளில் இனம் சார்ந்த மற்றும் நிறம் சார்ந்த சமூக வேறுபாட்டைப் பற்றிய விழிப்புணர்வு பரவலாக ஏற்பட்டிருக்கிறது. இன்றைய திரையுலம் கறுப்பு, மாநிறத்தில் இருக்கும் கதாநாயகிகளை அங்கீகரிக்கத் தொடங்கியுள்ளது. ஆனால், இந்த மாற்றங்கள் அனைத்தும் ஒரு சிறிய அளவிலேயே நடக்கிறது என்பதுதான் நிதர்சனம். தோல் நிறத்திற்கும் அழகுக்கும் அந்தஸ்திற்கும் அதிகாரத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. தோல் நிறம் என்பது சூழலையும் மரபியலையும் அடிப்படையாக வைத்துக் கட்டமைக்கப்பட்டது என்கிற புரிதல் ஏற்பட வேண்டும். அதுதான் நிறம் சார்ந்த பாகுபாட்டைக் குறைக்கும் ஒரு சிறந்த வழி.
படைப்பாளர்:

வைஷ்ணவி என்கிற வாசகியாக இருந்து வெண்பா எனும் எழுத்தாளராக, ‘அவளொரு பட்டாம்பூச்சி’ வழியாக எழுத்துலகிற்கு அறிமுகமானவர். SRM கல்லூரியில், மரபணு பொறியியலில் இளநிலை தொழில்நுட்பம் (B.Tech Genetic Engineering) பயின்று, தற்போது அண்ணா பல்கலைக்கழகத்தில் கணக்கீட்டு உயிரியலில் முதுநிலை தொழில்நுட்பம் (M.Tech Computational Biology) பயின்று வருகிறார். ஹெர்ஸ்டோரிஸ் இணையதளத்தில் வெளிவந்த ‘தாயனை’ தொடர், ஹெர்ஸ்டோரிஸ் வெளியீடாக வந்திருக்கிறாது.