1950 -1952 

முதல் குடியரசு நாள் விழா 

ஆகஸ்ட் 15, 1947 அன்று இந்தியா ஒரு சுதந்திர நாடாக மாறியபின், அரசியலமைப்பை வரைவதற்கு வரைவுக் குழு நியமிக்கப்பட்டது. அண்ணல் அம்பேத்கர் அதன் தலைவராக இருந்தார். இந்த சட்டவரைவு அரசியலமைப்பு சபையால் நவம்பர் 26, 1949 அன்று ஏற்றுக்கொள்ளப்பட்டது.

1930ம் ஆண்டு, ஜனவரி 26 இந்திய தேசிய காங்கிரஸ் இந்தியச் சுதந்திரப் பிரகடனத்தை அறிவித்தது. இதனால், 1950ம் ஆண்டு அதே நாள் குடியரசு நாளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. இந்த ஜனவரி 26, 1950 அன்று, அரசியலமைப்புச் சட்டம் நாடு முழுவதும் நடைமுறைக்கு வந்தது. விழாவினைக் கொண்டாடும் மக்கள், ராட்டை, கலப்பை மற்றும் கதிர், எழுதுபொருட்கள் படத்துடன் அப்போது அஞ்சல் தலைகள் வெளியிடப்பட்டன.

1951 இந்தியா India

இந்திய புவியியல் ஆய்வு மையத்தின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு 1951ம் ஆண்டு அஞ்சல் தலை வெளியிடப்பட்டது. 

1951ம் ஆண்டு தில்லியில் நடைபெற்ற முதல் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் தொடர்பாக இரண்டு அஞ்சல் தலைகள் வெளியிடப்பட்டன. 

1951ம் ஆண்டு வெளியிடப்பட்ட  கொரியப் போர் அஞ்சல் தலைகள். பொதுவாக overprint அஞ்சல் தலைகள் குறிப்பிட்ட நாட்டிற்கு உதவும் விதமாக வெளியிடப்படும்.

25 ஜூன், 2020 அன்று பிரதமர் மோடி, 1950-ம் ஆண்டில் கொரியப் போர் நடைபெற்றது. இந்தப் போர் முடிந்து 70 ஆண்டுகள் ஆவதையொட்டி கொரிய நாட்டில் அமைதியை நிலைநாட்ட தமது இன்னுயிரை ஈந்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தியுள்ளார். பிரதமர் திரு மோடி, தனது செய்தியில், கொரியப் போரில் இந்தியாவின் பங்களிப்பையும், 60 பாரா ஃபீல்ட் மருத்துவமனை அமைக்கப்பட்டதையும் நினைவு கூர்ந்தார். “இந்தியாவின் சார்பில் அமைக்கப்பட்ட இந்த மருத்துவமனை போர்க்காலத்தின்போது, பாதிக்கப்பட்ட வீரர்களுக்கும் குடிமக்களுக்கும், அத்தியாவசிய மருத்துவ சேவைகளை சிறப்பாக வழங்கியது” என குறிப்பிடுகிறார்.

1950ம் ஆண்டு தொடங்கி 1953ம் ஆண்டு வரை வட கொரியாவுக்கும் தென் கொரியாவுக்கும் இடையே நடைபெற்ற போரில் தலையிட்டு அமைதியை நிலைநாட்ட இந்தியா உதவியது. ஒரு பக்கம் அமெரிக்க ஆதரவு, மறுபக்கம் ரஷ்ய ஆதரவு என இரு நாடுகளும் துண்டாடப்பட்டு வந்த சூழலில், ஐநா சபையில் அமைதிக்கான திட்டம் ஒன்றைத் தீட்டி, ஒப்புதல் வாங்கியது இந்தியா. கஸ்டோடியன் ஃபோர்ஸ் இந்தியா (CFI) என்கிற 6000 இந்தியப் போர் வீரர்களைக் கொண்ட ராணுவப் பிரிவு, கொரிய எல்லையில் அமைதியை நிலைநிறுத்த ‘ஹிந்த் நகர்’ என்னும் முகாமை அமைத்த இந்திய ராணுவம், தங்கள் சொந்த நாடுகளுக்கு செல்ல விரும்பாத போர்க் கைதிகளுக்கு அடைக்கலம் தந்தது; அவர்கள் விரும்பிய நாடுகளுக்கு அனுப்ப ஏற்பாடும் செய்தது. இதுதவிர போரில் காயமடைந்த வீரர்களுக்கான பாரா 60 ஆம்புலன்சுகளை பயன்படுத்தியது; அதனால் கொரியப் பொதுமக்களும் பயனடைந்தனர். இந்த ராணுவ வீரர்களில் பெரும்பான்மையானோர் சென்னையில் இருந்து சென்ற தமிழர்கள்.

ஹிந்த் நகர், கொரிய எல்லை
பாரா 60 ஆம்புலன்ஸ்
இந்திய ராணூவத்தின் மேற்பார்வையில், விரும்பிய நாடுகளுக்கு அனுப்பப்படும் கொரிய வீரர்கள்

இதே ஆண்டு, தென் கொரியா, எந்தெந்த நாடுகள் போரில் பங்கேற்றன என பெரிய பட்டியலிட்டு அஞ்சல் தலைகள் வெளியிட்டுள்ளது. அதில் இந்தியாவும் இருக்கிறது. 

1952 இந்தியா India

1952ம் ஆண்டு, பக்தி இயக்கப் புலவர் சிலரின் அஞ்சல் தலைகள் வெளியிடப்பட்டன. 

கபீர் (Kabir) வாரணாசியில் பிறந்தவர் 

துளசிதாஸ் (Tulsidas) டில்லியில் பிறந்தவர்; இந்தியில் ராமாயணத்தை எழுதியவர்.

மீரா (Meera) ஜோத்பூரில் பிறந்தவர். கண்ணன் மீது பக்தி கொண்டவர். பக்திப்பாடல்கள் பாடியவர். 

சூர் தாஸ் (Surdas) அரியானா மாநிலம், பரிதாபாத் மாவட்டம்,  சிகி என்ற சிற்றூரில் பிறந்தவர். 

பிற கவிஞர்கள் அஞ்சல் தலைகள்

மிர்சா கலிப் (Mirza Ghalib) 27 டிசம்பர் 1797ம் ஆண்டு ஆக்ராவில் பிறந்தவர். முகலாயப் பேரரசின் கடைசி ஆண்டுகளில் வாழ்ந்த உருது மற்றும் பாரசீக மொழிக் கவிஞர். இவர் இந்தியா, பாகிஸ்தான் என இரண்டு நாடுகளிலும் பிரபலமானவர். 1857 சிப்பாய்க் கிளர்ச்சி பற்றியும் இவர் எழுதியுள்ளார்.

ரவீந்திரநாத் தாகூர் (Rabindranath Tagore) கொல்கத்தாவில் பிறந்தார் (1861-1941). அவர் ஒரு பெங்காலி கவிஞர், கதை எழுத்தாளர், பாடலாசிரியர் மற்றும் ஓவியர். பெங்காலி இலக்கியத்தின் ஒரு புதிய வடிவத்தை அவர் அறிமுகப்படுத்தினார். 1913ம் ஆண்டில் இலக்கியத்திற்கான நோபல் பரிசைப் பெற்ற முதல் ஐரோப்பியரல்லாதவர் என்ற பெருமையைப் பெற்றார். இந்தியச் சுதந்திர இயக்கத்தில் பங்கேற்றார். இந்தியாவின், வங்கதேசத்தின் தேசிய கீதங்களை இயற்றியவர். இலங்கை தேசிய கீதம் இவரது படைப்பின் தழுவல் தான். 

தொடரும்…

படைப்பாளர்

பாரதி திலகர்

தீவிர வாசிப்பாளர், பயணக் காதலர்; தொன்மை மேல் பெரும் ஆர்வம் கொண்டவர். அயல்நாட்டில் வசித்து வந்தாலும் மண்ணின் வாசம் மறவாமல் கட்டுரைகள் எழுதிவருகிறார். ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய கட்டுரைகள், ‘பூப்பறிக்க வருகிறோம்’, ‘சினிமாவுக்கு வாரீகளா?’ என்கிற புத்தகங்களாக, ஹெர் ஸ்டோரிஸில் வெளிவந்திருக்கிறதுதற்போது ‘சினிமாவுக்கு வாரீகளா – 3’ மற்றும் ‘சாதனை படைக்கும் சாமானியர்’ என்கிற இரண்டு தொடர்களை ஹெர் ஸ்டோரீஸ் வலைத்தளத்தில் எழுதிவருகிறார்.