ஐந்தாம் ஜார்ஜ் (GEORGE V)1910 – 1936

ஐந்தாம் ஜார்ஜ் மன்னராவார் என யாரும் எதிர்பார்க்கவில்லை, அவரின் மூத்த சகோதரர் இறந்ததால், அவர் மன்னரானார். 1911, ஜூன் 22 அன்று லண்டனில் முடிசூட்டிக் கொண்டார். ஆனால், டெல்லி தர்பாரிலும் முடிசூட்டிக் கொள்ள விரும்பினார். ‘Imperial Crown of India’ என்ற புதிய மகுடம் செய்திருக்கிறார்கள். லண்டனில் நடைபெறும் விழா என்றால், கிறிஸ்தவ வழிபாடுகளுடன் நடக்கும். இந்தியாவில் என்பதால் எந்த சமயச் சடங்கும் இல்லாமல் டிசம்பர் 12, காலை அந்நிகழ்ச்சி நடந்திருக்கிறது. 

ஐரோப்பிய விருந்தினர்கள், இந்திய மன்னர்கள், அதிகாரிகள் டெல்லி, பஞ்சாப் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து வரவழைக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் என விழா பிரமாண்டமாக நடைபெற்றுள்ளது. அந்த விழாவிற்குப் பின் அவர் மட்டுமல்ல யாருமே அந்த மகுடத்தை அணியவில்லை.

எங்கள் ஊர் அருகிலுள்ள சமூகரெங்கபுரம் எனும் ஊரில் (திருநெல்வேலி மாவட்டம்) அருள்மிகு வெங்கடாஜலபதி திருக்கோயின் முன்பகுதியில் ஒரு விளக்குத்தூண் உள்ளது. அதில் உள்ள கல்வெட்டு 1911-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 12ஆம் தேதி எழுதப்பட்டுள்ளது. அதில் ஐந்தாம் ஜார்ஜ், அவரின் மனைவி மேரியும் பொறுப்பேற்று முடிசூட்டிக் கொண்ட செய்தி உள்ளது. மேலும் இதனை நினைவு கூரும் வகையில் கே.ரெங்கஸ்வாமி ரெட்டியார் கோயிலின் முன் விளக்குத்தூண் ஒன்று அமைத்ததாகவும் கல்வெட்டுச் செய்தி குறிப்பிடுகிறது.

‘இவ்வூரின் கிழக்குப் பகுதியில் ‘கோட்டை’ என்கிற பகுதி உள்ளது. அங்கு சிதிலமடைந்த சிறு கல் மண்டபம் உள்ளது. அதிலும் ஐந்தாம் ஜார்ஜ் மகாராஜாவிற்கு பட்டாபிஷேகம் சூட்டப்பட்டமையினை நினைவு கூறும் வகையில், 1911-ம் வருடம் கார்த்திகை மாதம் 26 ஆம் தேதி அந்த விளக்குத்தூண் பண்ணையாரின் கோட்டை மதில் வளாகத்திற்குள் அமைக்கப்பட்ட குறிப்பு காணப்படுகிறது. இந்த விளக்குத்தூணை அப்பொழுது கிராம முன்சீப்பாக இருந்த கோட்டை பண்ணையார் நிறுவியதாகவும் கல்வெட்டு செய்தி கூறுகிறது’ என்கிறது இந்த செய்தி. 

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை தெற்கு பஜாரில் 100 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான பூங்கா உள்ளது. ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் பதவியேற்ற போது இங்கு அமைக்கப்பட்டுள்ள விளக்குத்தூண் மிகவும் முக்கியம் வாய்ந்ததாகக் கருதப்பட்டது.  இந்த விளக்கு தூணில் நான்கு புறமும் சிங்கத்தின் தலை உள்ளது. இந்த தூண் இங்கிலாந்திலிருந்து அப்படியே இங்குக் கொண்டு வரப்பட்டது.

1905-1906-ம் ஆண்டுகளில், அப்போதைய வேல்ஸ் இளவரசரான ஐந்தாம் ஜார்ஜ், தனது மனைவி மேரியுடன் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது சென்னை மக்கள் ப்ளாக் டவுன் என்ற பெயரை விரும்பாததால், வைக்கப் பட்ட பெயர் தான் ஜார்ஜ் டவுன் என்று பெயர் வைக்கப்பட்டது. 

ஐந்தாம் ஜார்ஜ் தனது ஆட்சிக் காலத்தில் முதல் உலகப்போரை (1914 – 1918) சந்திக்க வேண்டியிருந்தது.

1914-ம் ஆண்டு வெளியான Indian Expeditionary Forces (முதல் உலகப்போர்) அஞ்சல் தலைகள் 

1929-ம் ஆண்டு வெளியான Air Mail Series 

தொடரும்…

படைப்பாளர்

பாரதி திலகர்

தீவிர வாசிப்பாளர், பயணக் காதலர்; தொன்மை மேல் பெரும் ஆர்வம் கொண்டவர். அயல்நாட்டில் வசித்து வந்தாலும் மண்ணின் வாசம் மறவாமல் கட்டுரைகள் எழுதிவருகிறார். ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய கட்டுரைகள், ‘பூப்பறிக்க வருகிறோம்’, ‘சினிமாவுக்கு வாரீகளா?’ என்கிற புத்தகங்களாக, ஹெர் ஸ்டோரிஸில் வெளிவந்திருக்கிறதுதற்போது ‘சினிமாவுக்கு வாரீகளா – 3’ மற்றும் ‘சாதனை படைக்கும் சாமானியர்’ என்கிற இரண்டு தொடர்களை ஹெர் ஸ்டோரீஸ் வலைத்தளத்தில் எழுதிவருகிறார்.