பெண்கள் பயன்படுத்தும் சானிடரி நாப்கின்களை செய்தித்தாளில் மடித்து எடுத்துச் செல்வதில் தொடங்கி பெண்கள் குறித்த பல விஷயங்களையும் மறைத்து வைப்பதே வழக்கமாகக் கொண்டிருக்கிறது நம் சமூகம். அவர்கள் குறித்த எதையும் அது அவர்கள் பிரச்னை என்று முத்திரை குத்தி அதை அவர்கள் மட்டுமே பார்த்துக் கொள்ள வேண்டும் என்பது எழுதாத விதி.
அவள் பள்ளி படிக்கும் பொழுது மாணவர்களுக்கும் மாணவிகளுக்கும் தனித்தனியாக உடல்நலம் குறித்த வகுப்புகள் என்று சொல்லி மாதவிடாய் நேரத்தில் ஏற்படும் மாறுதல்கள் போன்றவற்றைக் குறித்துப் பேச ஒரு மருத்துவர் வரவழைக்கப்படுவார். அதுபோல் அங்குள்ள பிற பள்ளிகளில் நடப்பதாக அவர் கேள்விப்பட்டதில்லை. எனவே அது குறித்து மகிழ்ச்சியாக இருந்தாலும், ஒருவேளை மாதவிடாய் நேரத்தில் ஒரு பெண் இதெல்லாம் அனுபவிக்கிறாள் என்பது ஆண் குழந்தைகளுக்கும் சொல்லி வளர்த்திருந்தால் அதை அறிந்து வளரும் எந்த ஆணும் நிச்சயம் அவளுக்கு ஆதரவாக உதவியாக இருப்பான் என்பது அவள் நம்பிக்கை.
ஒரு பெண்ணின் உடலில் இயற்கையாக நடக்கும் மாற்றமான மாதவிடாய்க்குத் ‘தீட்டு’ என்று பட்டம் சூட்டப்பட்டது எப்படி என்று அவள் வியக்காத நாள் இல்லை. கோயிலுக்குப் போகாதே, இதுல உட்காராதே, அதுல படுக்காத என்பதில் தொடங்கி பல சட்டதிட்டங்களை உண்டாக்கிய அந்த நாலு பேரில் ஒருவரேனும் அதுவும் இயல்பான ஒன்று என உணர்ந்தவர்களாக இருந்திருந்தால் அதைச் ‘சுத்தம் இல்லாமல் இருக்கின்றாள்’ என்று அவள் ஊரில் அழைப்பது போல் அழைக்காமல் வேறு விதமாக அழைத்திருக்ககூடும் அல்லவா?
அவள் சிறுவயதில் சில நேரத்தில் அவள் அம்மா மாதவிடாய்க்குச் ‘சுத்தமில்லை’ என்கிற வார்த்தையைப் பயன்படுத்தும் போது, அதுதான் பெண்களுக்கு சுத்தம். அது நடந்தால் தான் உடம்புக்கு நல்லது என்று அவள் சொல்லி இருக்கிறாள்.
பொதுவாகப் பெண்கள் திருமணத்திற்கு முன் உடம்புக்கு பிரச்னை என்று மருத்துவமனைக்குச் சென்றால் அதனால் திருமணத்தில் ஏதேனும் பிரச்னை வரும் என்று சொல்லி மருத்துவமனைக்குச் செல்வதைத் தவிர்த்து மருந்தகத்தில் சென்று மருந்து வாங்கி சாப்பிடுவார்கள் என்று அவள் கிராமத்தில் பலர் சொல்வதைக் கேட்டு அதிர்ந்திருக்கிறாள். பெண் என்பதால் பொறுத்துக் கொள்ள வேண்டியது ஏற்கனவே ஏராளம் இருக்க இது போன்ற கட்டுப்பாடுகள் அவளுக்கு முட்டாள்தனமாகவே தோன்றியது.
ஒருமுறை கல்லூரித் தோழியின் வீட்டில் ஒரு கெட் டு கதருக்காக தங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அவளுக்கு மாதவிடாய் என்று அறிந்து அவள் தோழியின் அம்மா அவளைத் தரையில் பாய்விரித்து படுக்கச் சொன்னது மிகவும் வருந்தச் செய்தது. அன்று இரவு உணவு ஏதும் சாப்பிடாமல் அடுத்த நாள் அந்த இடத்தை விட்டுப் போனால் போதும் என்றிருந்தது அவளுக்கு. அவள் தோழிக்குக் கையறுநிலை. உடன் வந்த மற்ற தோழிகளுக்கு என்ன செய்வதென்று புரியாத நிலை. அவள் வீட்டில் அப்படியெல்லாம் இருப்பதில்லை என்பதால் அவளுக்கு அது வருத்தம் என்பதைத் தாண்டி, அவள் பிறந்து வளர்ந்த கிராமத்தில் இது போல் நடைமுறைகள் கேள்விப்பட்டிருக்கிறாள் . ஆனால், பெருநகரத்தில் வசிக்கும் அவள் தோழியின் அம்மா போன்ற படித்தவர்களும் அதே போல் நடந்ததுதான் வருத்தம் அளித்தது.
திருமணத்துக்கு முன் ஒரு பெண்ணுக்கு மாதவிடாய் ஆகவில்லை என்றாலும் பிரச்னை. திருமணத்திற்குப் பின் ஒரு பெண்ணுக்கு மாதவிடாய் ஆனாலும் பிரச்னை.
திருமணமாகாதப் பெண்ணுக்கு மாதவிடாய் வராததற்கு மருத்துவக் காரணங்கள் பல இருக்கலாம். ஆனால், அதை அந்த நாலு பேரும் தவறாகப் பேசக்கூடும் என்கிற பயத்தில் எந்த மருத்துவமும் செய்யாமல், எல்லாம் திருமணமானால் சரியாகிவிடும் என்று இருக்கும் பல குடும்பங்கள் இன்றும் அவள் கிராமத்தில் அவள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறாள்.
திருமணம் ஆன பெண், முதல் மாதத்திலேயே ‘நல்ல செய்தி’ சொல்லி விட வேண்டும். திருமணத்துக்கு முன்பு வரை பெரும்பாலும் உடலுறவைப் பற்றிய விழிப்புணர்வோ புரிதலோ இல்லாமல் வளர்ந்தவர்கள், திருமணமான முதல் மாதத்தில் அதில் தேர்ந்து ஒரு குழந்தையும் பெற்றுவிட வேண்டும் என்று எதிர்பார்ப்பவர்கள்தாம் அந்த நாலு பேர். ஒருவேளை அப்படித் தாமதமானால் அதற்குப் பலிகடாவாவதும் பெண்கள்தாம்.
இதுவரை குழந்தை பெறத் தாமதமான ஒரு ஜோடியில் ஒரு சதவீதம் பேராவது ஆணுக்குப் பிரச்னை இருக்கிறதா என்று கேட்பவர்கள் இருக்கிறார்களா என்று தெரியாது. ஆனால், 100% பேர் பெண்ணுக்கு என்ன பிரச்னை, டாக்டர் கிட்ட பார்த்திருக்கிறீர்களா என்று கேட்பவர்களாகத்தான் இருக்கிறார்கள்.
அப்படிப்பட்ட கேள்விகளை அவளும் எதிர்கொண்டபோது அவளுக்கு வந்த கோபத்துக்கு அளவில்லை. குழந்தை பெற்றுக் கொள்வது என்பது ஒருவரின் தனிப்பட்ட விஷயம். அதைக் குறித்துப் பொதுவெளியில் கேட்பதைக் காட்டிலும் அதை ஏதோ அந்தப் பெண்ணின் தவறுதான் என்ற நோக்கில் கேட்கப்படும் போது ஒரு பெண்ணுக்கு அது எத்தனை கஷ்டத்தை தரும் என்று நினைக்காதவர்களாகத்தான் இன்றுவரை பலரும் இருக்கிறார்கள்.
அதுவும் அவளுடன் படித்த தோழியே ஏற்கெனவே அவளுக்குத் திருமணம் தாமதமாகத்தான் நடந்திருக்கிறது, இனியும் காலம் தாழ்த்தாமல் சீக்கிரம் குழந்தை பெற்றுக்கொள் என்று அவள் கேட்காத அறிவுரை வழங்கிய போது, படித்தவர்கள் மனநிலையே இப்படி இருக்கும் போது அடுத்தவர்களைக் குறித்து நொந்து என்ன பயன் என்றுதான் அவளுக்குத் தோன்றியது.
வழக்கம் போல் அவற்றைக் கண்டுகொள்ளாமல் கடந்து செல்லும் மனநிலையைத்தான் அவள் கொண்டுள்ளாள்.
அவள் வீட்டில் இருக்கும்போது வீட்டுவிலக்கு ஆகிவிட்டால் விசேஷ நாட்களில் பூஜை நடக்கும் இடத்தைவிட்டுச் சற்றுத் தள்ளி அமர்ந்து கொள்வாள். திருமணம் ஆகி இரண்டாம் வருடம் பொங்கல் அன்று கணவன் வீட்டுக்குச் சென்றிருந்தபோது அவளுக்கு மாதவிலக்கு ஆனபோது அவள் தோழியின் வீட்டில் நிகழ்ந்த சம்பவத்தை எண்ணி ஒரு விதத்தில் அவளுக்குப் பயமாகத்தான் இருந்தது. ஆனால், 60களில் இருக்கும் அவள் மாமியார் இதெல்லாம் எல்லாப் பெண்களுக்கும் ஆகிறதுதானே என்று சொல்லி பூஜை செய்யும் போது வழக்கமாகச் செய்வது போல் அவளைப் பூஜை செய்ய சொன்ன போது அவர் மேல் மரியாதையும் அன்பும் அவளுக்குப் பலமடங்கு கூடியது.
வெளியூரில் வசிக்கும் அவர்கள் வழக்கமாக அங்கு செல்லும்போது வீட்டு வேலைகளில் அவள் மாமியாருக்கு உதவி செய்வதுண்டு. ஆனால், அந்த முறை அவளுக்கு மாதவிடாய் நேரத்தில் வேலை செய்வது கஷ்டமாக இருக்கும் என்று ஓய்வெடுக்கச் சொல்லி அனைத்து வேலைகளையும் அவரே செய்துவிட்டார். மாமியார் என்றாலே கொடுமை செய்பவர்கள் என்று சித்தரிக்கப்படும் நம் சமூகத்தில் மருமகளையும் தன் மகள் போல் பார்க்கும், பழைய பழக்க வழக்கங்களை எல்லாம் கடைப்பிடித்து ஒரு பெண்ணின் மனதை வருத்தமடையச் செய்யக் கூடாது என்று நினைக்கிறார். அவள் உணர்வுகளை மதிக்க வேண்டும் என்று நினைக்கும் அவள் மாமியார் போன்ற பெண்கள்தாம் உண்மையில் தான் செய்வது எத்தனை பெரிய செயல் என்று உணராமல் செய்யும் பெண்ணியப் போராளிகள்.
(தொடரும்)
படைப்பாளர்:
பொ. அனிதா பாலகிருஷ்ணன்
பல்மருத்துவர். சிறுவயதுமுதல் தன் எண்ணங்களை கவிதைகளாக, கட்டுரைகளாக எழுதப் பிடிக்கும். நாளிதழ்கள், வலைத்தளங்களில் வரும் கவிதைப் போட்டிகள், புத்தக விமர்சனப் போட்டிகள் போன்றவற்றில் தொடர்ந்து பங்கேற்று பரிசுகளைப் பெற்றுவருகிறார். மாநில அளவிலான கவிதைப் போட்டி, செஸ் ஒலிம்பியாட், ரங்கோலி போட்டி போன்றவற்றில் பரிசுகளை வென்றுள்ளார். இயற்கையை ரசிக்கும், பயண விரும்பியான இவர் ஒரு தீவிர புத்தக வாசிப்பாளர்.