நடுத்தர வயதுப் பெண் ஒருவரைக் கற்பனை செய்து பாருங்களேன். அந்தக் காட்சியில் அவரோடு கூடவே கைப்பையும் கட்டாயம் இருக்கும்.

கடந்த அரை நூற்றாண்டில் ஏற்பட்ட மிகப்பெரிய முன்னேற்றம் பெண்கள் வேலைக்கு செல்வதும் பொருள் ஈட்டுவதும் சமூக மதிப்பைப் பெற்றிருப்பதும். இந்த முன்னேற்றத்திற்குப் பின்னே எளிதாகக் கடந்துபோகிற அதிகம் பேசப்படாத ஒரு செய்தி இருக்கிறது. அது பணியிடத்தில் அல்லது பொதுவெளியில் பெண்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறார்கள் என்பதே.  பணி செய்கிற நிறுவனங்களில் பெண்களின் பாதுகாப்பு கருதி பிங்க் பாக்ஸ் தொடங்கி அவசர உதவி எண்கள், பிங்க் காவல் ஊர்தி, மகளிர் காவல் நிலையம் வரை பல்வேறு உதவிகள் கிடைக்கப் பெறுகின்றன.  இவை எல்லாம் பாதுகாப்பு கருதி அரசாலும் நிருவாகத்தாலும் வழங்கப்படுபவை. இவை ஒருபுறம் இருக்கட்டும்.  முதலில் பணியிடத்தில் பெண்களுக்கு மரியாதை இருக்கிறதா? இந்தக் கேள்வியை மீண்டும் ஒருமுறை கேட்டுக்கொள்வோம்.

நாம் பணி செய்கிற பணியிடத்தில் பெண்களுக்கு உண்மையிலேயே உரிய மரியாதை இருக்கிறதா? இருக்கிறது எனில், அது வெறும் சொல்லாக இருக்கிறதா; உண்மையிலேயே அங்கே பெண் மதிக்கப்படுகிறாளா எனச் சிந்திப்போம்.

இல்லை எனில், மரியாதையைக் கொடுக்க விரும்பாதவர் யார்? ஏறக்குறைய நம்மைச் சுற்றியுள்ள பெரும்பான்மையானவர்கள் அந்த மரியாதையைக் கொடுக்க விரும்புவதில்லை.  பணியிடத்தில் உயர் பதவியில் இருக்கிற பெண்களையுமேகூட அவருக்கு அடுத்த நிலையில் இருக்கிற ஆண்கள் மதிப்பதில்லை. எப்போதுமே ‘அந்த அம்மா இருக்கே’ என்று மிகச் சாதாரணமாகச் சொல்வதை நாம் கேட்கிறோம். அதுவே சில நாள்களில் ‘அந்தப் பொம்பளை’ என்றும் மாறிவிடுகிறது.

‘ஒரு பெண் சொல்லி நான் கேட்பதா?’ என்பதுதான் இதன் உள்ளார்ந்த எண்ணமாக இருக்கிறது. ‘ஒரு பெண் என்னை அதிகாரம் செய்வதா?’,  ‘ஒரு பெண் எனக்குக் கட்டளையிடுவதா?’ என்று கோபம் வந்துவிடுகிறது. எழுத்தளவில் சமத்துவம் வந்தாலும், நடைமுறையில் பலநூறு ஆண்டுகள் பின்தங்கிய சிந்தனையோடுதான் இருக்கிறோம். சக மனுஷியை மரியாதையோடு நடத்த யார் சொல்லிக்கொடுப்பது? சொல்லிக்கொடுத்துத் தெரியவேண்டிய பண்பா இது? இந்த இரண்டு கேள்விகளுக்கும் பதில் ஒன்றுதான். அது நமக்கு முன்னே, எதிரே நாம் அன்றாடம் பார்க்கிறவர்கள் சக பெண்களை எப்படி நடத்துகிறார்களோ அதைப் பார்த்து நாமும் அப்படியே பழகியிருக்கிறோம்.

நம் வீட்டுப் பிள்ளையை ‘வாம்மா’, ‘போம்மா’ என அழைக்கிற அதே நாம் தாம், பணியிடத்தில் போகிற போக்கில் உடன் பணியாற்றும் பெண்ணின் செயலையும் தோற்றத்தையும் பண்பையும் பணியையும் காரணமே இன்றி நக்கலடித்துப் பழகுகிறோம். 

குழுவாகச் செயல்படும்போதும் சிறப்பாகச் செயல்படுகிற ஒரு பெண், ஆண் இருவருள் ‘ஆண்’ என்கிற காரணத்துக்காகவே நிர்வகிக்கும் வாய்ப்பு ஒருவருக்கு வழங்கப்படுகிறது. போதிய திறனோடு உள்ள பெண்ணின் தலைமையை ஏற்காத சக ஊழியர்களுமே ஆண் என்கிற ஒற்றைக் காரணத்துக்காக அந்தத் தலைமையை ஏற்றும் பணிந்தும் நடக்கிற பண்பு இங்கு பல்வேறு அலுவலகங்களில் நடக்கிறது.

பணி இடங்களில் ஆண் ஒருவரை ‘சார்’ என விளிப்பதை இயல்பாகப் பார்க்கிறோம். ஆனால் பெண்ணின் தலைமையின்போது தலைமையினும் வயது குறைவான ஆண்களிடமும்கூட அத்தனை சீக்கிரம் அந்த ‘மேடம்’ எனும் சொல் வருவதில்லை.

பணியிடத்தில் யாரும் யாரையும் உறவு வைத்து அழைத்துக்கொள்ள வருவதில்லை. நெடுங்காலப் பழக்கத்தில் உறவுமுறை வைத்து அழைத்துக்கொள்வது இருவரது விருப்பு எனக் கொள்வோம். ஆனால் பெண்களை மட்டும் மிகச் சாதாரணமாக ‘வா ம்மா’, ‘போ ம்மா’, ‘வா ப்பா’, ‘போ ப்பா’ தொடங்கி ‘வா’, ‘போ’ என மாறி சில இடங்களில் ‘அவ’, ‘இவ’ வரை அவர்கள் விருப்பமின்றி அழைக்கப் பழகும் துணிவையும் உரிமையையும் ஆண்களுக்கும் பெண்களுக்குமேகூட யார் கொடுக்கிறார்கள்?

வகிக்கும் பணியின் பெயரை வைத்து அழைக்கப் பழகலாம். ஓரளவு ஒத்த வயதினர் ஒரே பதவியெனில் பெயரைச் சொல்லி அழைக்கலாம். வயது பாகுபாடு இல்லாமல் பணியிடத்தில் ஒருவரை ஒருவர் ‘வாங்க’, ‘போங்க’ என அழைப்பதில் எந்தக் கிரீடம் இறங்கிவிடுமெனத் தெரியவில்லை. வயது மூப்பும் அனுபவ மூப்பும் பக்குவத்தையும் கண்ணியத்தையும் தரவேண்டுமேயன்றி ‘நான்தான்’ என்கிற ஆணவத்தைத் தரக்கூடாது. இத்தனை ஆண்டுகாலப் பணி அனுபவத்தில் உடன் பணியாற்றுபவரை மரியாதையோடு அழைக்கக்கூடத் தெரியாமலேயே பணிசெய்து ஓய்வு பெற்றுவிடும் நபர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

நாம் யாரிடம் அதிகம் பேச விரும்புகிறோம் என எண்ணிப் பார்த்தால் நம்மை மதிப்போடு நடத்துபவரை என்பதுதான் பதிலாக இருக்கும். அதுவேதான் பிறரும் நம்மிடம் எதிர்பார்ப்பது என்பதை எப்போது நாம் புரிந்துகொள்ளப் போகிறோம்.

செயற்கை நுண்ணறிவுகூட ஓர் உரையாடலின்போது நம்மிடம் மதிப்போடு உரையாடுகிறது. நாம்தாம் மதிப்போடு பழகத் தவறுகிறோம். எப்போது கற்கப்போகிறோமோ?!

இது ஒருபுறமிருக்கட்டும்.  பணியிடத்தில் பெண்களிடத்தில் குரல் உயர்த்தும் ஆண்களின் மனநிலைதான் என்ன? ஆயிரம் ஆண்டுகால அடிமை விலங்கை ஒடித்தெறிந்து வந்து உங்கள்முன் வளையாமல் நிற்பது உங்களுக்கு எரிச்சலூட்டுகிறதா? அவளின் அறிவும் ஆளுமையும் உங்களுக்குத் திகைப்பூட்டுகிறதா? அவளது நிலைப்பாட்டின் உறுதியைத்  தாங்க முடியாமல் குரலை உயர்த்துகிறீர்களா? என்ன தான் காரணம்??

அறிவினால் எதிர்கொள்ள முடியாத எந்தவொரு விவாதத்தையும் அதிகாரத் தொனியில் குரலை உயர்த்தி அடக்கிவிடமுடியாது என்பதே உண்மை. தவிர, குரலை உயர்த்தி ஒருவரது மாண்பைக் குறைத்துவிடலாம் என நினைப்பது அறியாமையன்றி வேறில்லை. எந்தச் சூழலிலும் அதிகாரத்தைப் பயன்படுத்தி யாரும் யாரிடமும் குரலை உயர்த்த இங்கு யாருக்குமே உரிமையில்லை. அப்படி உயர்த்தும் நபருக்கு ஏதோ மனிதப்பண்பில் போதிய வளர்ச்சி இல்லை என்றே பொருள் கொள்ளவேண்டும்.

குரல் உயர்த்தாத கண்ணிய ஆண்கள் பலர் இருக்கிறார்கள். சக பெண் பணியாளர்களுக்கு ஆதரவாக பல்வேறு பிரச்னைகளில், சவால்களில் உடன் நிற்கிற ஆண்களும் இருக்கின்றனர். அவர்களது எண்ணிக்கை உயரவேண்டும் என்பதே விழைவு.

நட்புடன் பெண்ணை எதிர்கொள்ளப் பழகுங்கள்.  வாய்ப்பு இருப்பின் கவிஞர் அறிவுமதியின் ‘நட்புக்காலம்’ கவிதைத் தொகுப்பைப் படியுங்கள். சிரித்தாலோ உரையாடலைத் தாமாகத் தொடங்கினாலோ ‘இவள் இப்படித்தான்’ என நீங்களாகவே ஒரு முன்தீர்மானத்தை உருவாக்கிக் கொள்ளாதீர்கள்.

உங்களுக்கு இருக்கிற டீக்கடை பெஞ்ச்போல எங்களுக்கும் ஒன்று வாய்க்கட்டும். அங்கே நாங்களும் பணி முடித்து சில கதைகள் பேசி, களைப்பு தீர ஒரு டீ குடித்துச் செல்கிறோம். முடிந்தால் ஒரு ‘ஹெலோ’ சொல்லுங்கள்.  கொஞ்சம் இடம் விடுங்கள்.  குறைந்தபட்சம் அவள் பின்னே, ‘இவ தானே’ எனப் பேசாதீர்கள். பிறகென்ன, நாங்களும் சொல்வோம் , ‘அண்ணே! ஒரு டீ… ஸ்டிராங்கா… சர்க்கரை கம்மியா’.

பேசுவோம்…

படைப்பாளர்

பா. ப்ரீத்தி

தொடக்கப் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றுகிறார். தமிழ்நாடு அரசின் தமிழ்ப் பாடநூல் குழுவில் நூலாசிரியராகப் பணியாற்றியுள்ளார். பேறுகாலம் குறித்த இவரது அனுபவப் பகிர்வை ‘பிங்க் நிற இரண்டாம் கோடு’ என்கிற புத்தகமாக பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ளது.