ஆம்ஸ்டர்டாமிற்குச் செல்ல வேண்டும் என்கிற தகவல் கிடைத்தவுடன் நான் செய்த முதல் வேலை ஆன் ஃபிராங்க் ஹவுஸிற்குச் செல்வதற்காக, டிக்கெட் முன்பதிவு செய்ததுதான். ஒவ்வொரு செவ்வாய்க் கிழமையும் காலை பத்து மணிக்கு இந்த டிக்கெட்டுகள் இணைய தளத்தில் கிடைக்கும். சரியாக இரண்டு மாதங்களுக்கு முன்னர் முன்பதிவு செய்ய வேண்டும். டிக்கெட்டுகள் சில நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்துவிடும். அந்தச் சிவப்பு வண்ண டைரியைப் பார்ப்பதில் இருந்த ஆர்வம்தான் இதற்குக் காரணம். அப்படி அந்த டைரியில் என்ன இருக்கிறது என்று கேட்கிறீர்களா?
ஒரு பதிமூன்று வயதுப் பெண் எழுதிய டைரியில் என்ன இருக்கும்? வரலாற்றைப் பேசும். அதன் இருண்ட பக்கங்களை உலகிற்கு வெளிச்சமிட்டுக் காட்டும். அடக்குமுறையினால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் மனதைப் படம்பிடித்துக் காட்டும். இனத்தின் பெயரிலோ, மதத்தின் பெயரிலோ நடைபெறும் எதிர்கால ஒடுக்குமுறைகளுக்குச் சான்றாக இது விளங்கும். இதெல்லாம் சாத்தியமா என்கிறீர்களா?
ஆம். ஆன் ஃபிராங்க் என்கிற பெயருடைய ஒரு பதிமூன்று வயதுப் பெண்ணின் டைரி இவற்றைச் சாத்தியப்படுத்திக் காட்டியது.

1929இல் ஜெர்மனியின் பிராங்பர்ட் நகரத்தில் ஜூன் 12 அன்று பிறந்த ஆன் ஃபிராங்க், தனது நான்கு வயதிலேயே நாட்டைவிட்டு வெளியேற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்.1933இல் ஹிட்லரின் நாஜிப் படைகள் ஜெர்மனியில் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, யூதர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடங்கின. தான் பிறந்த யூத மதம்தான், தன் தாய்நாட்டைப் பிரியக் காரணம் என்பதெல்லாம் அந்த நான்கு வயது குழந்தைக்குத் தெரிந்திருக்க நியாயம் இல்லை. தன் பாட்டியுடன் நெதர்லாந்திற்கு வரும் ஆன், ஆம்ஸ்டர்டாமில் இருக்கும் தன் குடும்பத்தினருடன் சேர்ந்துகொண்டார். அங்கு பள்ளிப் படிப்பைத் தொடங்கிய ஆன் மிகவும் புத்திசாலியான மாணவியாகப் பள்ளியில் அறியப்பட்டார். புது நண்பர்களை உருவாக்கிக் கொள்வதிலும் ஆனுக்கு எந்தப் பிரச்னையும் இருக்கவில்லை. எப்போதும் துறுதுறுப்புடன் புதிதாக என்ன விளையாடலாம் என்று நண்பர்களுக்கு யோசனை சொல்லக்கூடிய தோழியை யாருக்குத்தான் பிடிக்காது.
படிப்பு, நண்பர்கள், விளையாட்டு, பொழுபோக்கு என்று எல்லாக் குழந்தைகளின் வாழ்க்கையைப் போலத்தான் ஆன் ஃபிராங்க் வாழ்க்கையும் சென்று கொண்டிருந்தது. 1939இல் போலந்தின் மீது படையெடுத்து இரண்டாம் உலகப் போரைத் தொடங்கியது ஜெர்மனி. யூதர்கள் மீதான வன்முறைகள் போலந்திலும் தொடர்ந்தன. 1940 மே மாதத்தில் மூன்றே நாட்களில் நாஜிப் படைகளின் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் வீழ்ந்தது நெதர்லாந்து. அதன் பின்னர் நெதர்லாந்திலும் நாஜிப் படைகளின் கொடூரங்கள் ஆரம்பித்தன. நெதர்லாந்தில் வசிக்கும் யூதர்கள் அனைவரும் தங்களைப் பதிவுசெய்து கொள்ள வேண்டியது கட்டாயமாக்கப்பட்டது.
தாங்கள் யூதர்கள் என்று அடையாளம் காட்டக்கூடிய நட்சத்திர முத்திரையை அவர்கள் எந்நேரமும் உடையில் அணிந்திருக்க வேண்டும். டிராம் போன்ற பொது போக்குவரத்துகளில் பயணிக்கக் கூடாது. பீச், பார்க், ஹோட்டல், நீச்சல் குளங்களில் யூதர்களுக்கு அனுமதி இல்லை. காலை ஆறு மணிக்கு முன்னதாகவோ இரவு எட்டுமணிக்குப் பிறகோ தெருக்களில் நடமாட யூதர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. கார் ஓட்டக் கூடாது. யூதர்களுக்கு என்று தனி பள்ளிக்கூடங்கள் ஆரம்பிக்கப்பட்டன. அவர்கள் மற்ற மதத்தினருடன் பள்ளிகளில் சேர்ந்து படிக்க அனுமதி இல்லை. பத்திரிகையாளராக, வழக்கறிஞராக இன்னும் பல உயர்ந்த பதவிகளில் பணியாற்ற யூதர்கள் மறுக்கப்பட்டனர்.
இத்தனை களேபரங்களுக்கு மத்தியிலும் ஆன் ஃபிராங்கின் தந்தை ஓட்டோ ஃபிராங்க் தன் குடும்பத்தைக் காப்பதற்காக அத்தனை முயற்சிகளையும் எடுத்தார். குடும்பத்துடன் அமெரிக்காவிற்குத் தப்பிச் செல்வதற்காக அவர் விண்ணப்பித்திருந்தார். அமெரிக்கத் தூதரகம் இருந்த ரோட்டர்டாம் நகரத்தின் மீது ஜெர்மனி குண்டுமழை பொழிந்து நாசமாக்கியது. இனி போர் முடிந்தால் மட்டுமே தங்களால் தப்பிக்க முடியும் என்று உணர்ந்த அவர், தன் குடும்பம் சில காலத்திற்குத் தலைமறைவாக வாழ்வதற்கு ஏற்பாடுகளைச் செய்திருந்தார்.
ஜூன் 12, 1942இல் தன் பதிமூன்றாவது பிறந்தநாளைக் கொண்டாடிய ஆன் ஃபிராங்கிற்கு இன்னும் ஒரு மாதத்தில் தான் தலைமறைவு வாழ்கைக்குச் செல்ல வேண்டி வரும் என்று தெரியாது. தன் பிறந்தநாள் பரிசாகக் கிடைத்த, சிவப்பு, வெள்ளைக் கட்டங்கள் அமைந்த வெளிப்புற உறை கொண்ட ஒரு டைரியை மகிழ்வுடன் திறந்து தன் மனதில் உள்ளதையெல்லாம் பகிர்ந்து கொண்டார். ‘கிட்டி’ என்று அதற்குப் பெயரிட்டார்.
“உன்னிடம் எல்லாவற்றையும் நம்பிக்கையுடன் சொல்ல முடியும் என்று நம்புகிறேன், இதுவரை யாரிடமும் இவ்வளவு நம்பிக்கை வைத்து நான் எந்த விஷயத்தையும் பகிர்ந்து கொண்டதில்லை. மேலும் நீ எனக்கு ஒரு சிறந்த ஆறுதலையும் ஆதரவையும் தருவாய் என்று நம்புகிறேன் .இது ஜூன் 12, 1942 அன்று ஆன் ஃபிராங்க் தன் சிவப்பு டைரியில் எழுதிய முதல் பதிவு.

ஜூலை 5, 1942இல் ஆன் ஃபிராங்கின் அக்கா மார்கெட் ஃபிராங்கிற்கு ஜெர்மனியில் உள்ள தொழிலாளர் முகாமுக்குச் செல்ல அழைப்புக் கடிதம் வந்தது. இந்த அழைப்புகளைப் பின்பற்றிச் சென்றவர்கள் யாரும் உயிருடன் திரும்பியதாக அறியப்படவில்லை. எனவே மார்கெட்டை அனுப்ப ஓட்டோ தம்பதி தயாராக இல்லை. இப்படி ஒரு கடிதம் வருவதற்கு முன்னே தன் குடும்பத்திற்காக ரகசிய இடத்தைத் தயார் செய்து வைத்திருந்தார் ஓட்டோ. ஜூலை 16 ரகசிய இடத்திற்குச் செல்லலாம் என நாள் குறித்திருந்தனர். ஆனால், மார்கெட்டிற்கு அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டதால் அவர்கள் உடனடியாக அங்கு செல்லத் தயாரானார்கள்.
ஜூலை 6, 1942 காலை ஏழு மணி. ஒன்றுக்கும் மேற்பட்ட ஆடைகளை அணிந்துகொண்டனர் ஆனும் மார்கெட்டும். கைகளில் நிறைய சுமைகளுடன் சென்றால் சந்தேகம் வரும் என்பதற்காக, குறைந்த அளவு பொருட்களையே எடுத்துச் சென்றனர். ஆன் தன்னுடன் கொண்டு சென்றது அந்தச் சிவப்பு டைரியை. தன் செல்ல விலங்கு மியுச்சியை அழைத்துச் செல்ல முயன்றபோதும் அனுமதி மறுக்கப்பட்டது. அந்தச் சிறிய பூனைக் குட்டியை ஆதரவின்றி எப்படித் தனியே விட்டுச் செல்வது என்று தந்தையிடம் கேட்டார் ஆன். சில நாட்கள் அதைப் பார்த்துக்கொள்ளும்படி பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு ஒரு கடிதம் எழுதி வைத்துவிட்டு வந்தார். அவர்கள் ஸ்விட்சர்லாந்துக்குத் தப்பிச் சென்றதைப் போல எல்லாரையும் நம்ப வைத்தனர்.
ஓட்டோ ஃபிராங்க்கின் அலுவலகத்தில் சரக்குகள் வைக்கும் கிடங்கின் மேல் மாடியில், ஒரு செயல்பாட்டில் இல்லாத ஆய்வகத்தையே ரகசிய தங்குமிடமாக ஓட்டோ தேர்வு செய்தார். ஏற்கெனவே தேவையான பொருட்களை அங்கே சேமித்து வைத்தார். அவரது அலுவலகத்தில் பணிபுரியும் மீப் கீஸ், பெப் வோஸ்குய்ல், ஜோஹன்னஸ் க்ளீமன் மற்றும் விக்டர் க்ருக்லர் ஆகியோர் இந்தத் தலைமறைவு வாழ்க்கைக்கு ஓட்டோ குடும்பத்தினருக்கு உதவினர். உணவு, உடை, பிற பொருட்களைக் கொண்டுவந்து கொடுத்தனர். இவ்வாறு யூதர்களுக்கு உதவி செய்பவர்களுக்கு மரண தண்டனை அறிவிக்கப்பட்டிருந்தது. இருந்தும் அவர்கள் இந்தக் குடும்பத்தினரைக் காப்பாற்றி வந்தனர். கீழே கிடங்கில் பணிபுரிபவர்களுக்கு மேலே தலைமறைவாக உள்ளவர்களைப் பற்றித் தெரியாது.

பெப் வோஸ்குய்லின் தந்தை ஜோஹன்னஸ் வோஸ்குய்ல் மாடிக்குச் செல்லும் படிக்கட்டுகள் இருந்த கதவை மறைக்குமாறு ஒரு புத்தகப் பெட்டியை உருவாக்கினார். ஓட்டோ குடும்பத்தினரின் வாழ்வு மேலும் ரகசியமானது. ஓட்டோ குடும்பத்தினருடன் சேர்த்து வான்பெல்ஸின் குடும்பமும், பெபெர் என்பவருமாக மொத்தம் எட்டுப் பேர் அந்தப் புத்தகப் பெட்டிக்குப் பின் தங்கள் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்தனர்.
(தொடரும்)
தரங்கிணி

எல்சீவியர் என்னும் தனியார் கம்பெனியில் பணியாற்றி வருகிறார். வாசிப்பில் நாட்டம் உடையவர். பெண்ணியம் சார்ந்த சமூக முன்னெடுப்புகளில் பங்களிப்பதில் ஆர்வம் உடையவர்.




