***கதையும் திருப்பங்களும் விவாதிக்கப்பட்டுள்ளன என்பதை வாசிக்கும் முன்னே அறிக

ஒரு பெருநகரம்.

விண்ணை முட்டும் கட்டிடங்கள், வசதிபடைத்த வீடுகள் எல்லாம் இருந்துகொள்ள உழைத்த, உழைக்கும் மக்களின் வாழ்வினூடே பயணிக்கிறது கதை.

மும்பையை அதன் வேகமான நகர்தலாகவே படம்பிடித்துக் காட்டியிருக்கிறார் இயக்குநர் பாயல் கபாடியா. காதலை மறுக்கும் இடத்தில் ஒரு வரி காரணம் சொல்லிவிட்டு உடனே சொல்லுவார் பிரபா,

“என் டிரெய்னுக்கு நேரமாச்சு, நான் போகணும்”

அதுதான் மும்பை. காதலை விட்டாலும், நகர்தலை விடமுடியாது.

மும்பைக்குப் போன எல்லா மும்பைக்காரர்கள் போலவே, பாயல் கபாடியாவுக்கு, மும்பையின் மேல் காதல் இருப்பதும், அந்த மும்பையை உழைக்கும் மக்களுடன் சேர்ந்து சந்தித்த அனுபவம் இருப்பதும்,  இந்தப் படத்தில் அருமையாக வந்திருக்கிறது. பாலங்களுக்கு மேலே விண்ணளக்கும் கட்டடங்களும், பாலங்களுக்குக் கீழே குடிசைக்குவியலும் ஒரே காட்சியில் வருகிறது. அதுதான் மும்பை.

கதைமாந்தர்களாக இல்லாத முகமற்ற குரல்கள், முதல் பாதியில் அவ்வப்போது மும்பைக்கும் தனக்குமான தொடர்பை, தான் கொட்டும் உழைப்பை, இடப்பெயர்வைச் சொல்கின்றன. கொஞ்ச நாள்களே மும்பையில் வாழ்ந்திருந்தாலும், இந்தக் குரல்களை நாம் கேட்டிருப்போம். மும்பையின் குணங்களை இடைவிடாமல் மும்பைக்காரர்கள் எப்போதும் பேசுவார்கள். திரையில் கேட்கும் இந்தக் குரல்கள் மும்பையின் வாசனைகளை நிச்சயம் நினைவுபடுத்தும்.

மருத்துவர், மூத்த செவிலி பிரபாவிடம் அவர்மேல் கொண்ட காதலைச் சொல்கிறார். திருமணம் செய்து சிறிது நாள்களிலேயே விட்டுவிட்டு ஜெர்மனி போய்விட்ட கணவனை, இல்லை இல்லை அவன் அளித்துவிட்டுப்போன திருமணம் ஆகிவிட்டது என்ற ‘மணநிலை’யை, நினைத்து காதலை மறுக்கிறார் பிரபா. இறுக்கமான, எதையும் பட்டென்று பேசிவிடுகின்ற விதிகளைப் பின்பற்றுகிற வெகுசிரத்தையான செவிலி இவர்.

அனு, இளைய செவிலி, பிரபாவுடன் ஒரு அறையில் தங்கி இருக்கிறார். முஸ்லிம் பையனை காதலிப்பதால், இது நிறைவேறாத காதல் என்ற மனநிலையில் படத்தின் இறுதிக்காட்சி வரை இருக்கிறார். ஆனால், அந்தக் காதலை உற்சாகத்துடனும், எதிர்பார்ப்புடனும் அணுகுகிறார்.

அதே மருத்துவமனை கேண்டீனில் சமையல் செய்யும் அம்மா பார்வதி, மில்லில் தன் இறந்துபோன கணவனுக்கு நட்ட ஈடாகக் கொடுக்கப்பட்ட இடத்தின் சான்றுகள் இல்லாததால், ரியல் எஸ்டேட் நிறுவனத்தால் 25 வருடங்கள் தான் வாழ்ந்த வீட்டை விட்டு வெளியேற்றப்படும் நிலையில் இருப்பவர். இவருக்கு பிரபா ஆதரவாக இருக்கிறார்.

பிரபாவின் கணவனைப் பற்றி பேசும் இடத்தில், “யார்னே தெரியாம எப்பிடி கல்யாணம் பண்றது?” என்று கேட்கிறாள் அனு.

அதற்குப் பிரபா, “நல்லா பழகினப்புறம்கூட அடையாளம் தெரியாதவங்களா மாறலாம்” என்று சொல்வது பொட்டில் அறைகிறது.

அனு தன்னுடைய காதலனுடன் ஒரு நோயாளியைப்பற்றி பேசும்போது, ஆணுறுப்பு பற்றிக் குறிப்பிட, “நீ எத்தனை பார்த்திருக்கிறாய்?” என்று தயக்கமாகக் கேட்கிறான். அதற்கு அவள் “நீதான் என் முதல்” என்று சொல்லாததே பார்க்கும் நமக்கு நிம்மதி அளிக்கிறது.

பெரும் கூட்டத்தின் நடுவே பெருநகரம் தரும் தனிமையும், அப்பெரும் தனிமைகளூடே, காதலர்கள் முத்தம் தந்துகொள்ள,  தனிமை தேடி ஓடச்செய்யும் நெருக்கமும், பேருருவ கட்டடங்களில் வேலை செய்பவர்களுக்கு நகரங்களுக்கு நடுவில் உருவாகும் குடிசைக்குவியலும், அந்த குடிசைக்குவியலை தூக்கிவிட்டு பேருருவக் கட்டடங்கள் எழுப்ப நடக்கும் அரசியலும், முதல் பாதி முழுக்க நம்மை ஆக்கிரமிக்கின்றன.

‘நீ வந்த புதிதில் தலைமைச் செவிலிக்கு அப்படி பயப்படுவாய்’ என்று பார்வதி சொல்வதைக்கேட்டு, இந்த இறுக்கமான, எல்லா இளைய செவிலிகளுக்கும் பாடமெடுக்கும் பிரபாவா அப்பிடி இருந்தார் என்று நமக்கு ஆச்சர்யம் மேலிடுகிறது. ஒருவேளை அனு மாதிரி இருந்திருப்பாரோ என்று நினைக்கத்தோன்றுகிறது.

இரண்டாம் பாதி, கடற்கரை கிராமமான ரத்னகிரியில். பார்வதி சொந்த ஊருக்குச் செல்ல முடிவு செய்கிறார். பிரபாவும், அனுவும் கூட போய் விட்டுவிட்டு வரலாமென்று போகிறார்கள். அனுவின் காதலனும் பிரபா, பார்வதிக்கு தெரியாமல் அங்கே போகிறான். அனுவும் அவனும் அவ்வப்போது கிடைக்கும் தனிமைகளில் சந்திந்துக் கொள்கிறார்கள். பிரபாவுக்கும் இது தெரிய வருகிறது. இப்போது கடற்கரையில் ஒருவன் மயக்கநிலையில் ஒதுங்குகிறான். பிரபா அவனைக் காப்பாற்றுகிறாள்.

அவருக்கு முதலில் எதுவும் நினைவில்லை என்கிறார்கள். பின், பேசப்பேச, அவர் சொல்லுகிறார், “நான் பெரிய ஃபேக்டரியில் வேலை பார்த்தேன், என் முதலாளி என்னை நிறைய வேலை வாங்கினார். அந்த கட்டிடத்தை விட்டு பலநாள்கள் என்னால் வெளியே வரமுடியாது. பலநாள்கள் வெளிச்சத்தையே பார்த்திருக்க மாட்டேன். அப்போதெல்லாம் வெளிச்சம் இப்படித்தான் இருக்குமென நான் கற்பனை செய்வேன். ஆனால் அதெல்லாம் வெளிச்சம் ஆகாது தானே? பிரபா, இனிமேல் இப்படி நடக்காது, நம் வாழ்க்கை வேறு மாதிரி இருக்கும்” என்று. அப்படியே பிரபாவின் புறங்கையில் முத்தமிடுகிறார். அப்பிடியே அடுத்தடுத்த முத்தங்கள் இட்டுக்கொண்டே சொல்கிறார்.

இப்போது பிரபா, அவரின் கணவர் இருவரும் திரையில் இல்லாத ஒரு நிலை வருகிறது. அதில் பிரபாவின் குரல் சொல்கிறது,

“நிறுத்துங்கள், இனி எப்போதும் நான் உங்களைப் பார்க்க விரும்பவில்லை” என்று.

பிரபாவின் கணவர் கூறிய காரணங்கள், ஏற்கனவே பிரபா அனுவிடம், அவர் இப்படிப்பட்ட சூழலில் இருப்பதாக நினைத்து ஆறுதல் கொள்வேன் என்று பிரபா முதல் பகுதியில் கூறி இருப்பதையும் மனதில் கொண்டால், கரை ஒதுங்கியவன் பிரபாவின் கணவராக இருக்கலாம் அல்லது, நினைவு தப்பிய ஒருவன் மூலம், பிரபாவே கற்பனையாக ஒரு காட்சியை நிகழ்த்தி இருக்கலாம் என்று தோன்றுகிறது.

ஆனால், பிரபா அவரிடம் சொன்ன வார்த்தை, அதை சொல்ல பிரபா சேர்த்த வலிமை முழுவதும், முதல் பாதியில் சொல்லப்பட்டதாகவே இருக்கிறது.

வெளிச்சம் இப்படித்தான் இருக்குமென நாம் கற்பனை செய்யலாம். ஆனால் அதெல்லாம் வெளிச்சம் ஆகாது தானே!

பிரிந்து போய் என்னவென்றே நான்கு வருடங்களாக வராத கணவன் வந்தால்தான் மகிழ்ச்சியை நுகர்வேன் என்று பிரபா இறுக்கமாக இருக்கலாம். ஆனால், 4 வருட பாராமுகத்திற்கு பின், அவர் வந்து, நுகர்வது மகிழ்ச்சியாக இருக்குமா?

பார்வதி தனக்கான வெளிச்சம், தன் மும்பை வீட்டிலேயே வாழ்வதுதான் என நினைக்கிறாள். பின் ஊருக்கு வந்து தன் வெளிச்சத்தை அங்கே தேடுகிறாள்.

அனு தன் பெற்றோர் ஏற்றுக்கொள்ள முடியாத பையனைக் காதலித்தாலும், அந்த அழகான, இயல்பான காதலே தன் வெளிச்சம் என்று இறுதியில் ஏற்றுக்கொள்கிறார். பிரபா, அனுவின் காதலையும் ஏற்று தங்கள் உறவில் இருந்த சுவரை உடைக்கிறாள்.

“நிறுத்துங்கள், இனி எப்போதும் நான் உங்களைப் பார்க்க விரும்பவில்லை”

இந்த வாக்கியம் கூறப்பட்டபின், பிரபாவின் முகத்தில் இறுக்கம் காணோம். புன்னகை மட்டுமே இருந்தது.

வேர்பிடித்து இதுதான் வெளிச்சம் என்று கற்பனை செய்து, அங்கேயே தேங்கி உயிர்விடுவதைவிட மிதக்கும் வேர்களால், உண்மையான வெளிச்சத்தை நோக்கி நம்மால் பயணம் செய்ய முடிந்தால், வேர்ப் பிடிப்புகளால் ஆவதென்ன?

படைப்பாளர்

காளி

இதே பெயரில் Twitter-ல் @The_69_Percent என்று இயங்கி வருகிறார். முச்சந்துமன்றம் என்ற பெயரில் உள்ள புத்தக வாசிப்பு குழுவின் உறுப்பினர்களில் ஒருவர்.