மாவட்டத்திலேயே புகழ்பெற்ற தனியார் பொறியியல் கல்லூரி அது. கல்வி நிலைய துறைத் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் பணி மும்முரமாக நடந்து கொண்டிருந்தது. தகுதியான ஆசிரியர் ஒருவரைத் தேர்ந்தெடுக்க தேர்வுக் குழுவினர், பல்வேறு கோணங்களில் ஆராய்ந்து கொண்டிருந்தனர்.

பெரும்பாலான மாணவர்களுக்கும், உடன் பணியாற்றும் ஆசிரியர்களுக்கும் குறிப்பிட்ட ஒரு ஆசிரியர்தான் அப்பதவிக்கு வர வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. அதற்கான காரணங்களை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக சொல்லிக் கொண்டிருந்தனர்.  ‘அவர் ஒரு சிறந்த மேதை, மாணவர்கள் நலனில் மிகுந்த அக்கறை கொண்டவர், எளிமையானவர். அதுமட்டுமல்லாமல் எல்லோரிடமும் இனிமையாக நடந்து கொள்பவர்’ என்று மாணவர்கள் தங்களுக்கு ஏற்ற பாணியில் சொல்லிக் கொண்டனர். ஆசிரியர்களோ, ‘அவர் தன் துறையில் எவ்வளவு பெரிய சாதனைகளை எல்லாம் செய்திருக்கிறார்; அனுபவம் வாய்ந்தவர்; எந்தவிதமான பிரச்னைகளையும் திறமையாக கையாள்பவர்; எனவே அவரே தலைமை பொறுப்புக்கு மிகச் சிறந்தவர்’ என பேசிக்கொண்டனர்.

பேராசிரியர் முனைவர் வேதா மேடம் வந்து கொண்டிருந்தார். அனைவர் மனதிலும், முகத்திலும் புன்னகை. எல்லோருடைய வாழ்த்துகளுக்கும் நன்றி உரைத்தவாறு பதில் கூறி வந்தார். ஆம், எல்லோரின் எண்ணப்படி, கல்வி நிலைய துறைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் வேதா மேடம்தான்.

அப்படி என்ன இவரிடம் சிறப்பு? மாணவர்களுக்கு இவ்வளவு பிடிக்கும் அளவிற்கு என்ன செய்தார்? வாருங்கள் கதைப்போம்.

திறமையானவர், அறிவில் சிறந்தவர். பொறியியல் துறையில் பட்டம் பெற்று ஆசிரியர் பணி மீது கொண்ட அதீத ஆர்வத்தால் ஒரு பேராசிரியராக தன் பயணத்தை தொடங்கியவர்தான் வேதா.

படிப்பு, நல்ல பணி, அடுத்து இந்த சமூகம் ‘பெண் முழுமையடையும் இடம்’ என கொண்டு நிறுத்துவது திருமணத்தில்தான். வேதாவுக்கும் அப்படியே சடங்குகளும், சம்பிரதாயங்களும் நடந்தன.

திருமணத்துக்குப் பிறகு சில காலம் நன்றாகத்தான் சென்றது. இது வரை வேதாவிடம் படிப்பைப் பற்றியும், பணியை பற்றியும் கேட்ட சமூகம் இப்போது, “இன்னும் குழந்தை இல்லையா?” என்பதை மட்டுமே கேட்டது.

ஒவ்வொரு முறை வீட்டைவிட்டு வெளியில் செல்லும்போதும், இந்த கேள்விக் கணைகளுக்கான பதிலையும் அவர் சுமந்து செல்ல வேண்டி இருந்தது. ஆனால் வேதா மறித்த கணைகளைவிட அவரது மனதைத் தைத்த கணைகள்தான் அதிகம்.

சரி வீட்டிலாவது சற்று நிம்மதியாக இருந்த வேதாவுக்கு, கடந்த சில நாள்களாக அங்கும் இதே பிரச்னைதான். ஒரு வித குற்ற உணர்வோடு நின்றார் வேதா.

ஆணாதிக்க சமூகத்தில் குழந்தை இல்லை என்றால், பிரச்னை யாரிடம் இருந்தாலும் எல்லோருடைய கரிசனமும் பெண்ணின் மீதுதான் செல்கிறது. சித்த மருத்துவம், அல்லோபதி, ஹோமியோபதி என அந்தப் பெண்ணைக் குடைந்து எடுத்து விடுகிறார்கள். படிப்பையும் பட்டத்தையும் போராடிப் பெற்றவளுக்கு மலடி பட்டம் மட்டும் எளிதில் கிடைக்கிறது. ஆனால் மலடன் என்ற சொல்லே இங்கு பயன்பாட்டில் இல்லை.

இப்படிப்பட்ட மனிதர்களிடம் இருந்து தன் மனதை திசை திருப்ப வேதா மேல்படிப்பிலும், பணியிலும் கவனத்தைச் செலுத்தினார். முனைவர் பட்டம் பெற்றார். கல்லூரியில் துறைத் தலைவராகப் பொறுப்பேற்றார். மாணவர்களைப் படிப்பு சம்பந்தமாக வழிநடத்துவது மட்டுமல்லாமல், மனதளவில் அவர்களுடைய பிரச்னைகளுக்கும் துணையாக நின்று தீர்வைக் காட்டினார். எல்லா மாணவர்களும் இவருடன் இணக்கமாக‌ இருந்தனர்.

கல்லூரியில் இவருக்கு முக்கியமான கூடுதல் பொறுப்புகளும் பணி உயர்வும் தரப்பட்டன. இதனால் கல்லூரி நேரம் முடிந்தும் அலைபேசியில் பலரோடு கலந்து ஆலோசிக்க வேண்டி இருந்தது.

“எவனோட இவ்வளோ நேரம் பேசறே?” கணவரிடம் இருந்து கேள்வி வந்தது. இதை சற்றும் எதிர்பார்க்காத வேதா எவ்வளவு சொல்லியும், கணவர் கேட்பதாக இல்லை.தொடந்து காயப்படுத்திக்கொண்டே இருந்தார். ஒருமுறை “என்னது நீ அடிக்கடி மோட்டிவேஷனல் வகுப்பு எடுப்பதற்கு கல்லூரி கல்லூரியாக போகின்றாயாமே? இனிமேல் மைக்கை  தொட்டால் உன் கையை உடைத்து விடுவேன்” என்று மிக ஆவேசமாகப் பேசியது மட்டுமல்லாமல், தன் கையில் கிடைத்த தயிர் பாத்திரத்தை தூக்கி ஓங்கி வேதாவை அடித்தார். அந்த சில்வர் பாத்திரம் வேதாவின் முகத்தைப் பதம் பார்த்தது.

இதேபோல் ஒரு முறை பிசினஸ் நிமிர்த்தமாக வெளியூர் சென்று அன்று நடு இரவு மது அருந்துவிட்டு வீட்டுக்கு முழு போதையில் வந்தார். நல்ல உறக்கத்தில் இருந்த வேதா விழித்து, கதவைத் திறப்பதற்கு இரண்டு நிமிடங்கள் தாமதமானதால், வன்முறையைக் கையில் எடுத்து, வேதாவை தலைகீழாகத் தள்ளி, தான் அணிந்திருந்த ஷூ காலால் அடிவயிற்றில் ஓங்கி உதைத்தார். வலி பொறுக்காமல் அன்று இரவு முழுவதும் தூக்கம் வராமல் அடுத்த நாள் காலையில் மருத்துவமனைக்கு வேதா செல்ல, அப்பொழுதும் வேதாவைப் பார்த்து, “ஓவரா ஆக்டிங் பண்ணாத” என்றார்.

பேச்சில் மட்டுமே சண்டையிட்டது போய்,  இப்போது வேதாவை அடிக்கடி அடித்து உதைக்கவும் தொடங்கிவிட்டார்  கணவர். தன்னுடைய அத்தனை கோபத்தையும், கவலையையும் நேர்மறையாக மாற்றினார் வேதா. பல நூற்றுக்கணக்கில் சிறப்பான ஆய்வுக்கட்டுரைகளை வெளியிட்டார். அதுமட்டுமல்லாமல் எண்ணற்ற ஆய்வுத் திட்டங்களையும்  அரசுக்கு வகுத்துக் கொடுத்தார். மிகச்சிறந்த ஆய்வாளராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். இதனால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் தலைசிறந்தவராகவும், திறமையானவராகவும் பாராட்டப் பெற்றார்.

ஆனால் குடும்ப நிலையோ முன்பை விட மோசமாக சென்று கொண்டிருந்தது. வீட்டினுள் இருப்பது ஒரு நரகத்தில் இருப்பதுபோலத் தோன்றியது. கணவரின் அத்துமீறலோ நாளுக்கு நாள் அதிகரித்தது.

ஒருநாள் இவர் வீட்டில் இருக்கும்போது, பின்னால் இருந்து வந்து ஏதோ ஒன்றை  எடுத்து இவரை அடிப்பதுபோல பயமுறுத்தினார் கணவர். அன்றிலிருந்து வேதா வீட்டில் இருக்கும்போது எப்போதும் தன்னை தற்காத்துக் கொள்ளவேண்டும் என்பதிலேயே முனைப்பாக இருந்தார். அதனால் கையில் எப்போதும் ஏதேனும் ஒரு பொருளை ஆயுதம்போல கருவியாக வைத்திருப்பார். திடீரென கணவரால் ஏதேனும் பிரச்சனை ஏற்படும்போது அதனை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றிருப்பார்.

வேதாவின் கணவர் ஒரு சைக்கோ போல நடந்து கொண்டார். உடல் ரீதியாக வேதாவை மிகவும் அடித்து துன்புறுத்தினார். இதனால் அடிக்கடி வேதாவின் உடல் நலத்தில் குறைபாடு ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவார். இது தொடர்ந்து நடந்துகொண்டே இருந்தது.

அத்தனை துயரங்களையும் கடந்து உடல் நலம் பெற்று அவர் கல்லூரிக்கு மீண்டும் செல்லும்போது மாணவர்கள் அவர் நலன் மீது மிகுந்த அக்கறை கொள்வர். அன்று மாணவர்கள் வேதாவிடம் பேசும்போது, “நீங்கள் ஒரு ஆசிரியர் என்பதை தாண்டி எங்களை உங்கள் குழந்தைகள் போல வழிநடத்துகிறீர்கள். எங்கள் பெற்றோரிடம் நாங்கள் பகிர்ந்து கொள்ள முடியாததையும் உங்களிடம் எளிதாகச் சொல்ல முடிகிறது. உங்களைப் போன்றவர்கள் முதலில் அம்மாவாகத்தான் தெரிகிறீர்கள். பின்புதான் ஆசிரியர் என்ற உணர்வு வருகிறது” என்றார்கள்.

வேதா வீட்டுக்குச் செல்லும்வரை வழியில் எல்லாம் இந்த வார்த்தைகள் மீண்டும் மீண்டும் அவர் காதில் ஒலித்துக் கொண்டே இருக்கின்றன. வீட்டுக்குள் நுழைந்ததும் முதலில் கணவர் இருக்கிறாரா என்று பார்க்கிறார். இல்லை என்றதும் மனதில் ஒரு அமைதி. ஒரு குவளை தேநீரோடு அமருகிறார். இன்று மாணவர்களின் வார்த்தைகள் அவரை என்னவோ செய்தது.

தேநீர் அருந்தியவாறு வேதா ஒரு நிமிடம் தன்னைப் பற்றி யோசித்தார். ‘யாரையும் எந்த விதத்திலும் காயப்படுத்தியதில்லை. என்னால் இயன்ற அளவு நான் கற்ற கல்விக்கும், என்னுடைய மாணவர்களுக்கும் நல்லதையே செய்து வருகிறேன். எனக்குக் குழந்தை இல்லை என்பது ஒரு குறையா? இல்லையே! கடவுள் எனக்கென குழந்தையை கொடுத்திருந்தால், ஒரு குழந்தையோ அல்லது இரு குழந்தைகளையோ மட்டுமே கொடுத்திருக்க முடியும். ஆனால் இன்று பல ஆயிரம் குழந்தைகளை வளர்த்து வந்திருக்கிறேன் ஒரு ஆசிரியரின்  நிலையிலிருந்து, ஆனால் அம்மாவாக. இத்தனைக் குழந்தைகளுக்கு அம்மாவாக நான் இருக்கிறேன் என்றால் அது எனக்கு அதிர்ஷ்டம் தானே? இன்னும் நான் ஏன் குற்ற உணர்வோடு இருக்க வேண்டும்? எனக்கான பாதை மிகவும் தெளிவாக உள்ளது. இப்படி ஒரு சைக்கோவிடம் மாட்டிக்கொண்டு இவனைப் போலவே ஒரு பிள்ளையை பெற்றிருந்தால்  அதுவல்லவா கொடுமை. அது நிகழக் கூடாது என்பதற்காகத்தான் இறைவன் எனக்கு இத்தனை பிள்ளைகளை கொடுத்திருக்கிறான்’  என முதன்முதலாக வேதா உணர்கிறார்.

உணர்ந்த மாத்திரத்தில் வேதா ஒரு முடிவு எடுக்கிறார். கணவரிடமிருந்து சட்ட ரீதியாக விடுதலை பெற்றுவிட வேண்டும். சட்டரீதியாக விடுதலை பெற்ற பின்பு வேதாவுக்கு எந்த ஒரு தடையும் இல்லை, தன் பாதையில் முன்னேறிச் செல்ல. இதோ தற்போது கல்வி நிலைய துறைத் தலைவராகவும் பொறுப்பேற்று இருக்கிறார். இவரைப் போன்றவர்கள் உயர் பதவியில் இருக்கும் போது பலரது வாழ்க்கைக்கு அது நன்மை பயப்பதாக இருக்கும்.

இந்த உலகத்தைப் பொருத்தமட்டில் ஒரு பெண் விவாகரத்து பெற்றுவிட்டால், ‘ஐயோ விவாகரத்தா? பாவம் அந்த பெண்’ எனத்தான் தோன்றும். ஆனால் வேதாவை போன்ற பெண்ணைப் பொறுத்தமட்டில்  இது, ‘ஐயோ விவாகரத்து’ அல்ல, ‘ஐ விவாகரத்து!’

படைப்பாளர்கள் :

ஏ. மாலதி

கோவை, அரசு கலைக் கல்லூரி (தன்னாட்சி) யில் , இணை பேராசிரியராகப் பணி புரிபவர். அரசு கலைக் கல்லூரிகள் மற்றும் அரசு பள்ளிகளில் உள்ள பதின் பருவ மாணவர்களுக்கு போதைப் பொருள் ஒழிப்பு , மென் திறன் மேம்பாடு, கல்வியின் முக்கியத்துவம், சைபர் கிரைம் மற்றும் வாழ்க்கை திறன் மேம்பாடு உள்ளிட்ட பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை இலவசமாக நடத்தி வருகிறார். சமூக செயற்பாட்டாளர், பெண்ணிய சிந்தனையாளர். சீர்திருத்தச் சிந்தனைகள் கொண்டவர்.

பி. பாலதிவ்யா

பெரியார் பல்கலைக்கழகத்தின் கீழ் கணினி அறிவியல் துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றவர். தற்போது செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தில் தமிழ் மொழிக்கான Chat bot பயிற்சியாளராக உள்ளார். வாசிப்பதில் தீவிர ஆர்வம் உடையவர்.