வளர் இளம் பருவம்

மனிதனின் வாழ்க்கை குழந்தைப் பருவம், வளர் இளம் பருவம், இளைஞர் பருவம், முதுமைப் பருவம் எனப் பல்வேறு பருவங்களைக் கொண்டது. அதில் மிக முக்கியமானது வளர் இளம் பருவம்.

வளர் இளம்பருவத்தினர் என்போர் 10வயது முதல் 19வயதிற்குள் உள்ள வயதினரைக் குறிக்கும் பருவம். வளர் இளம் பருவம் என்பது பாலின வேறுபாடுகளைக் கடந்து அனைத்துப் பாலினத்தவருக்கும் பொதுவானது. மனிதன் குழந்தையில் இருந்து இளைஞனாக மாறுவதற்கு இடைப்பட்ட பருவம் வளர் இளம் பருவம். இப்பருவத்தில்தான் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் பாலியல் ரீதியாகவும் முக்கிய மாற்றங்கள் நிகழ்கின்றன. அவர்களுக்குள் ஏற்படும் பல்வேறு மாற்றங்களும் அந்த வயதில் அவர்களுக்கு நாம் செய்யும் சேவைகளும் பிற்காலத்தில் அவர்கள் சிறந்த மனிதர்களாக உருவாக முக்கியக் காரணிகள். தனிமனித எதிர்காலத்தை மட்டுமல்ல, நாட்டின் எதிர்காலத்தையும் தீர்மானிக்கும் பருவம் இது. இந்திய மக்கள் தொகையில் ஐந்தில் ஒருபங்கு (1/5) வளர்இளம் பருவத்தினர். அதாவது மொத்த மக்கள் தொகையில் 21.4% வளர்இளம் பருவத்தினர் உள்ளனர்.

தேசியக் குடும்பநல கணக்கெடுப்பின்படி (NFHS3) 47% பெண்கள் பதினெட்டு வயது பூர்த்தியாகும் முன்பே திருமணம் செய்துகொள்கின்றனர். இதற்கு முக்கியக் காரணம் பெண் குழந்தைகளின் பள்ளிப் படிப்பு இடையிலேயே நிறுத்தப்படுதல். இதற்கு இந்தச் சமூகமே முக்கியக் காரணம். கலாச்சாரம், குடும்ப மரபு, பெண் குழந்தைகளுக்குப் பாதுகாப்பின்மை, ஏழ்மை போன்ற காரணங்களால் பெண் குழந்தைகளின் கல்வி பாதியிலேயே நிறுத்தப்படுகிறது. இது முற்றிலும் தவறான செயல். ஆணும் பெண்ணும் சரிநிகர் எனப் பெற்றோர் கருத வேண்டும். பெண் குழந்தைகளின் கல்வி குடும்ப நலனுக்கும் தேச நலனுக்கும் முக்கியமானது.

வளர் இளம் பருவத்தினரைக் கையாள்வது என்பது இருமுனை கத்தியைக் கையாள்வதைப் போல மிக முக்கியமானது. ஏனெனில் இப்பருவத்தில் ஏற்படும் பிரச்னைகள் பல்வேறு வடிவங்களையும் தன்மையையும் உடையது. ஆனால், இந்தப் பிரச்னைகளைச் சமாளிக்க ஒருங்கிணைந்த செயல்திறன் அவசியம்.

பெற்றோருக்கும் வளர் இளம் பருவத்தினருக்கும் இடையே உள்ள இடைவெளி நாகரிகம் வளர வளர அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இது குடும்பநலனுக்கு மட்டுமல்ல சமூக நலனுக்கும் நல்லதல்ல. இந்த வயதினருக்குச் சரியான வழிகாட்டுதல் இல்லையெனில் தீயப் பழக்க வழக்கங்களுக்கு இவ்வயதினர் அடிமையாகும் நிலை உருவாகிவிடும்.

வளர் இளம் பருவத்தை நான்கு உட்பருவங்களாகப் பிரிக்கலாம்.

1) வளர் இளம் பருவத்திற்கு முந்தைய நிலை (10-12வயது)

2) வளர் இளம் பருவத்தின் ஆரம்ப நிலை (13-14வயது)

3) வளர் இளம் பருவத்தின் மைய நிலை (15-16வயது)

4) வளர் இளம் பருவத்தின் இறுதி நிலை(17-19வயது).

வளர் இளம் பருவத்திற்கு முந்தைய நிலையில் (10-12வயது) உடல் ரீதியான மாற்றங்கள் ஏற்படத் தொடங்குகிறது. பாலினம் சம்பந்தப்பட்ட நடவடிக்கைகள் தொடங்குகிறது. வளர் இளம் பருவத்தின் ஆரம்ப நிலையில் (13-14) இந்தச் சமூகத்தை உற்று கவனிப்பார்கள் இந்த வயதினர். அதிகம் நண்பர்களைத் தன்வசப்படுத்த நினைப்பதும் இந்த வயதில்தான். வளர் இளம் பருவத்தின் மைய நிலையில் (15-16வயது) தனது பாலியல் அடையாளத்தை முழுமையாக ஏற்றுக்கொள்வார்கள். இந்த வயதில் சற்று ஆழமான சிந்திக்கும் திறன் இருப்பினும் சுதந்திரமாகச் செயல்பட விரும்புவார்கள். வளர்இளம் பருவத்தின் இறுதிநிலையில் (17-19வயது) தனது எதிர்காலம் குறித்த சிந்தனைகள் அதிகம் காணப்படும். இவ்வயதில் அவர்களை எப்படிக் கையாள்கிறோம் என்பதை வைத்துதான் வளர்இளம் பருவத்தினரின் எதிர்காலம் அமையும்.

பெண் குழந்தைகளுக்கு ஏற்படும் முதல் உடல்சார்ந்த மாற்றம் மார்பு வளர்ச்சி. இது 9.5முதல் 13வயதிற்கு இடைப்பட்ட காலத்தில் எப்போது வேண்டுமானாலும் தோன்றலாம். இதே பருவத்தில்தான் பெண் பிறப்பு உறுப்பைச் சுற்றி லேசான முடிகள் வளரத் தொடங்கும். ஆரம்பக் காலங்களில் மிருதுவாக இருக்கும் முடிகள் வயது ஆக ஆக தடிமனாகவும் சுருள்தன்மை கொண்டதாகவும் மாறும். சராசரியாக 12-14 வயதில் முதல் மாத சுழற்சி உதிரப்போக்கு தோன்றும். மாத சுழற்சி உதிரப்போக்கு என்பது வளர்இளம் பருவத்தின் முக்கியமான அறிகுறி.

மாத சுழற்சி உதிரப்போக்கு வந்தவுடன் பெண் குழந்தைகள் குழந்தை பிறக்கும் தகுதியைப் பெற்றுவிட்டதாக எண்ணி திருமணம் செய்து வைத்தல் தவறு. இது சட்டப்படி குற்றம். உடல்ரீதியாக இத்தகைய மாற்றங்களைப் பெற்று இருந்தாலும் மனரீதியாக அவள் இன்னும் குழந்தையே! உடல் ரீதியாகவும் அவள் முழுமை பெறவில்லை. சட்டரீதியாகப் பதினெட்டு வயது பெண்ணிற்குப் பூர்த்தியடைய வேண்டும் திருமணத்திற்கு. ஆனால், உடல்ரீதியாகப் பார்த்தோமேயானால் இருபத்தி ஒன்று வயதிற்குப் பிறகு திருமணம் செய்து வைப்பதே பெண்களுக்கு நல்லது. அதுவரை பெண்குழந்தைகளும் கல்வி கற்றல் அவசியம்.

வளர் இளம் பருவத்தில் திருமணம் செய்து வைத்தால் தாய்க்கும் சேய்க்கும் பின்வரும் பல்வேறு வகையான பிரச்னைகள் ஏற்படுகின்றன.

வளர் இளம் பருவத்தில் கருவுற்ற காலத்தில் வரும் பிரச்னைகள்:-

1) உயர் ரத்த அழுத்தம்

2) ரத்த சோகை

3) தொற்று நோய்கள்

4) பிரசவத்திற்கு முந்தைய உதிரப்போக்கு

வளர் இளம் பருவத்தினருக்குப் பிரசவத்தின்போது வரும் பிரச்னைகள்:-

1) குறை மாத பிரசவம்

2) தடைப்பட்ட பிரசவம்

3) வளர்ச்சிகுறை பிரசவம்

4) உதிரப்போக்கு அதிகரித்தல்

வளர் இளம் பருவத்தினரின் பிரசவத்திற்கு பிறகு வரும் பிரச்னைகள்:-

1) கர்ப்பப்பை சுருங்காமல் தளர்ச்சியடைதல்

2) அதிகமான உதிரப்போக்கு

3) ரத்த சோகை

4) மன அழுத்தம்

வளர் இளம் பருவ பிரசவத்தில் பிறந்த குழந்தைக்கு ஏற்படும் பிரச்னைகள்:-

1) எடை குறைவு

2) தாய்ப்பால் குறைவு/இல்லாமை

3) வளர்ச்சி குறை குழந்தைகள்

4) சிசு மரணம் அதிகரித்தல் (மேலே உள்ள அனைத்து காரணங்களாலும்).

இத்தகைய விஷயங்களைப் பெற்றோர் கவனித்தில் கொண்டு பெண் குழந்தைகளுக்குச் சிறுவயதில் திருமணம் செய்துவைத்தல் கூடாது.

பால்ய விவாகம் தவிர்ப்போம்!

வளர் இளம் பருவம் காப்போம்!

(தொடரும்)

படைப்பாளர்:

மருத்துவர் அனுரத்னா. இவர் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அரசு மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவராகப் பணியாற்றுகிறார். ஓய்வு நேரங்களில் விளிம்புநிலை மக்களை அவர்கள் இருப்பிடத்துக்கே தேடிச்சென்று மருத்துவ உதவி வழங்குகிறார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மூலமாக சமூகத்தில் அறிவியல் சிந்தனைகளை பரப்பிவருகிறார். பெண்கள் மற்றும் இதர ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வியல் போராட்டங்களில் பங்குகொள்கிறார். மனிதி அமைப்பின் உறுப்பினராக உள்ளார். கட்டுரைகள் மற்றும் கவிதைகள் எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். 2012ம் ஆண்டு வெளிவந்த “மனிதநேய மாமுனிவர்” என்ற நூலின் ஆசிரியர்.