ஏரலில் கணிசமான அளவு முஸ்லிம்கள் வாழ்கின்றனர். ஏரல் பஜாரில் முஸ்லிம் வணிகர்களும் அன்றிலிருந்து இன்றுவரை வெற்றிகரமாகத் தொழில் புரிந்து வருகின்றனர்.
சுற்றியுள்ள ஊர்களிலிருந்து ஜவுளிக்கும் பாத்திரத்துக்கும் நகைக்கும் ஏரலுக்கு வந்து செல்லும் மக்களும், அவர்கள் வந்து செல்வதற்கான போக்குவரத்து வசதிகளும் இன்று அதிகரித்துள்ளதும் வணிக வெற்றிக்கு ஒரு காரணம்தான் என்றாலும் இத்தனைப் போக்குவரத்து இல்லாத அந்தக் காலத்திலிருந்தே உள்ளூர் மக்கள் அனைவரின் ஆதரவோடும் ஊரில் முஸ்லிம்களின் தொழில் நீடித்தே வந்துள்ளது. கிட்டத்தட்ட நூறாண்டுகள் முன்பு ஏரல் பஜாரில் ஒரு சிறு கடையாகத் தொடங்கப்பட்டு, இன்று ஏரலிலும் சுற்று வட்டாரத்திலும் தனக்கென ஒரு பெயரை ஏற்படுத்தியுள்ள சுல்தானியா ஹோட்டலில் காலை பதினொரு மணிக்குச் சுடச்சுட தயாரிக்கப்படும் சமோசாவுக்கும் பக்கோடாவுக்கும் அல்வாவுக்கும் என்றே ரசிகர்கள் உண்டு ஏரலில்.
“நமக்கு தெனமும் காலையில இப்டி பத்தரை மணிக்கு சுல்தானியா ஹோட்டல் டீ ஒண்ணு சாப்ட்ரணும்டே” என்பார் ஏரலின் மருத்துவர்களுள் ஒருவரான டாக்டர் மார்டின் தாமஸ், தன் சிகிச்சைகளுக்கு இடையில் திடமான மணமான சுல்தானியா தேநீரை உற்சாகமாக உறிஞ்சிக் கொண்டே… எவரெஸ்ட் ஹோட்டல், பீர்ஃபாத் எஸன்ஸ், ஹனிஃபா ஸ்டோர்ஸ், மரைக்காயர் ஜுவல்லரி, அலியார் சைக்கிள் கடை, காதர் பழக்கடை, இன்னும் கயிறுகடை, பெட்டிக் கடை என அப்போதிலிருந்தே இருப்பவையும் அரசன் மருந்துக்கடை, ஹாஜா ஃபேன்ஸி ஸ்டோர், A1 ஹோட்டல், ஹாஜா சப்பல் ஸ்டோர், பிஸ்மி தேநீர்க்கடை என பின்னர் தொடங்கி நடத்தப்படுபவையுமாகக் குறிப்பிடத் தகுந்த அளவில் ஊரின் பொருளாதாரத்தில் முஸ்லிம்களின் பங்களிப்பு உண்டு. போனா ராவன்னா அண்ணாச்சிக் கடை பலசரக்கும் சுல்தானியா ஹோட்டல் பக்கோடாவும் தாமஸ் பர்னாந்து சாச்சா கடையின் மீனும் கலந்து மணப்பதாகவே உள்ளது ஏரல் பஜார் அன்றும் இன்றும்.
எங்கள் தெருவின் இருபுறத்து வீடுகளின் வளவுகளுக்குப் பின்பாக சகோதர சமூகத்துத் தெருக்கள் உண்டு. எங்கள் இரு சமூகத்துத் தெருக்களுக்குமே பொதுவான புழங்கு வெளி இருந்தது. நாங்கள் எங்கள் வீடுகளில் பால் வாங்கியது சண்முகக்கனி அக்கா, ரதி அக்கா, பேபி அக்கா, அட்டாட்சரம் அக்கா, கோமதி அக்கா வீடுகளிலிருந்துதான். பால் தேவைக்காக ஒன்று இங்குள்ள சிறுவர்கள் அங்கு போவார்கள். அல்லது அவர்கள் இங்கு வந்து தருவார்கள்.
வீடுகளின் வளவில் கழனிப்பானை எனப்படும் கழுநீர்ப்பானை ஒன்று தவறாமல் இருக்கும். வீடுகளுக்குப் பால் தருகிறவர்கள் தினமும் மாலையில் வந்து கழனியை எடுத்துச் செல்வார்கள் (அரிசி பருப்பு களைந்த நீரையோ காய்கறிகள் பழங்களின் தோலையோ கை தவறுதலாகக் கீழே கொட்டவோ குப்பையில் எறியவோ செய்து விட்டால், அப்படிப் பதறுவார்கள் வீட்டுப் பெரியவர்கள். அதிலும் குறிப்பாக வாழைப்பழத் தோல் கண்டிப்பாக கழனிப்பானைக்குத்தான் சென்றாக வேண்டும்). ஆக இங்குமங்குமான போக்குவரத்துக்குக் குறைவே கிடையாது.
அப்போது ஊரில் அரிசி மாவில் செய்த புட்டு, ரொட்டி, இடியாப்பம், கொழுக்கட்டை போன்ற உணவு வகைகளே அதிகமும் காலை உணவாக இருந்தன. இட்லி அவிப்பது என்பது நினைத்துப் பார்த்து ஒருநாளைக்கென்று செய்வதாகவே இருந்தது.
எண்பதுகளின் தொடக்கத்தில் மாவு அரைக்க கிரைண்டர் புழக்கத்துக்கு வந்தபோது, இங்கெல்லாம் இட்லி, தோசை எப்போதாவது செய்யும் உணவானதால், கிரைண்டர் வாங்க வேண்டிய தேவை உருவாகவில்லை. அதனால் ஊறவைத்த அரிசியையும் உளுந்தையும் அங்கு கொடுத்து விட்டால், அக்காக்கள் அரைத்து மாவாக்கி வீட்டில் கொண்டு தந்துவிடுவார்கள். அப்படித் தர வரும்போது வந்தேன், தந்தேன், வாங்கி வைத்தேன் என்றில்லாமல், “பிள்ளைய ஊருக்கு வந்துருக்காவளோ?”, “கோயமுத்தூர்ல பேபி நல்லாயிருக்காளாமா? கடிதம் போட்டாளா?” என்று நின்று அளவளாவலோடுதான் செல்வார்கள். அதன் தொடர்ச்சியாகத் தீபாவளி அதிரசமும் கார்த்திகை ஓலைக் கொழுக்கட்டையும் பொங்கச் சோறும் சர்க்கரைப் பொங்கலும் எங்கள் வீடுகளிலும் வந்து நிறைந்திருக்கும். அதே போல ‘தூக்குவாளிய ஆட்டாம கொண்டுபோ கறியாணம் அலம்பிராம’ என்ற கட்டளை பெற்ற ஆணத் தூக்குவாளியும் மறுகையின் நெய்ச்சோற்றுத் தூக்குவாளியும், ஆடாமல் அசையாமல் அங்கு சென்று சேரும் ஜம்மென.
வெறுமனே பாலுக்கும் மாவுக்குமான தேவைகளுக்கு மட்டும் பழகும் உறவாக நின்றுவிடாமல், ஒத்த வயதுள்ளவர்களிடையே உரிமையோடு பெயர் சொல்லி அழைக்கும் தோழமையும் வளர்ந்தது. எங்கள் வாப்புமா பக்குவமாக அடுப்பிலிட்டுச் சுட்டெடுத்து மேல் ஓட்டை அகற்றி, உள்ளே பொன்னிறத்தில் தகதகக்கும் பனம்பழத்தை எங்களுக்குப் பகிர்ந்து தர, தொண்டையில் இனித்திறங்கும் பனம்பழச் சாறின் சுவை வாப்புமாவுக்கும் வள்ளியக்காவின் பாட்டிக்குமிருந்த நட்பின் விளைவே. எங்கள் இபுறாஹிமா மாமியும் பின் தெருவில் வசித்த சரோஜா அத்தையும் தோழிகள். அவர்களிருவருக்கும் திருமணமாகி விட்ட பின் ஒரு நாள , அப்போது எனக்கு ஆறேழு வயது இருக்கும், மாமி தன் குடும்பத்துடன் தோழி வீட்டுக்குத் தூத்துக்குடிக்குப் போகையில் என்னையும் உடன் அழைத்துப் போயிருந்தார்கள்.
” எடே என்னத் தேடி வந்துட்டியாடே?”
“நீ எப்டிடே இருக்கா?”
” இப்டி பாக்க முடியாம கெடக்கமே…”
என்று மாறிமாறி மாமியும் அத்தையும் பரிமாறிக்கொண்ட பிரியமும், அப்போது அந்த அத்தை தந்த மொழுமொழுவென்ற கேசரியின் இனிமை போலவே தங்கியிருக்கிறது நெஞ்சில்.
இது ஒரு புறம் எனில், ஊரின் பள்ளிக் கூடங்களில் உடன் பயில்பவர்கள் ஜெயா, ஆனந்தி, சண்முக விஜயா, ரோஸ்லின், ரெக்ஸ்லின், ஹெலனா, ஆஷா, மும்தாஜ், நசீமா, சம்ரோஸ், யசோதா, பெனிட்டோ, ராணி, ஃபாத்திமா என்று இருக்க நேரும்போது அவரவர் தெரு தாண்டியும் நட்பு வளரும்தானே! எங்க லாத்தாவின் தோழி சுயம்பு அக்கா பெரியவளானதற்கு எங்கள் வாப்புமா என்னையும் லாத்தாவையும் அழைத்துக்கொண்டு சென்று, “ஏழு நாளைக்கும் ரெண்டு காலையும் நீட்டித்தான் உட்காரணும். சம்மணம் போட்ரக் கூடாது கேட்டியா” என்று அறிவுரை சொல்லிக் கொண்டே, அன்று அந்த அக்காவுடன் பல்லாங்குழி ஆடியபோது, கண்ட சோழிகளின் வெண்மையும் அங்கு குடித்த கலர் சோடாவின் ஆரஞ்சு வண்ணமும் தூரிகையின் தீற்றலாகப் பளிச்சென்று எழும்புகின்றன கண்முன்.
பிள்ளைகள் பள்ளிக்கூடப் பாடங்களைப் பயில்வதற்கு இன்றைய தாய்மார்கள் உதவுவதுபோல் அன்றுள்ளவர்களுக்கு இயன்றதில்லை. ஆனால் பிள்ளைகளின் கல்வியில் அக்கறையற்று இருந்தனர் என்பதுமில்லை. எங்கள் தெரு வழியாகத்தான் நாங்கள் பயின்ற தூய தெரசாள் நடுநிலைப் பள்ளியின் சில ஆசிரியைகளும் அருள்சகோதரிகளும் பள்ளிக்குச் சென்றனர். அதனால் தெருப் பிள்ளைகளின் ம்மாவும் மூமாவும் வாப்புமாவும் அந்த ஆசிரியர்களுக்கு நன்கு தெரிந்தவர்களாயிருந்தனர். இதனால் இன்று பெற்றோர் ஆசிரியர் சந்திப்பிற்கென நாள் ஒதுக்கி நடைபெறுவது எங்களுக்கு நினைத்த நேரமெல்லாம் நடந்தது . ‘டீச்சர் கொஞ்சம் என்னான்னு கேளுங்கொ’ என்று புகார் படிக்க மிக வசதியாகப் போயிற்று எங்கள் ம்மாக்களுக்கு. தூய தெரசாள் நடுநிலைப் பள்ளியைப் பற்றிச் சொல்லும்போது அங்கு நெடுங்காலம் தலைமை ஆசிரியராகப் பணிபுரிந்த நல்லாசிரியர் திரு.வில்சன் வெள்ளையா சாரைச் சொல்லாமல் தவிர்க்க இயலாது. அவர் பாடம் நடத்தும் வகுப்பில் மாணவனாக இல்லாவிட்டாலும், இவன் இன்னாரின் மகன்/ பேரன் இப்படி இப்படி சேட்டை பண்ணுபவன் பள்ளிக்கூடத்துக்குச் சாக்கு சொல்பவன் என்ற முக்கியமான விஷயங்கள் பெத்தாக்களின் மூலமாக அவர் கவனத்துக்குச் சென்றிருக்கும். மாணவர்களிடம் கொண்டிருந்த அக்கறையினாலும் அவர்களின் ஒழுக்கத்தில் காட்டிய கண்டிப்பினாலும், வெள்ளையா சார் ஊரின் ம்மா வாப்புமா மூமாக்கள் மத்தியில் பெரும் மதிப்பைப் பெற்றவராக விளங்கினார். பிள்ளைகளின் படிப்பை ஆசிரியர்கள் கவனித்துக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை இவர்களிடமும் பிள்ளைகளுக்குக் கற்பித்து விட வேண்டும் என்ற பொறுப்பு அவர்களிடமும் இருந்தது. பள்ளியில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளானாலும் ஆண்டு விழாவானாலும் மாணவர்களின் ம்மாக்களும் மாமியும் சாச்சியும் வாப்புமாவும் மூமாவும் ஆர்வமான பார்வையாளராக இருந்தனர்.
ஊரிலிருந்த சூசையப்பர் கோவில் திருவிழாவின்போது கோவிலின் முன் திரைகட்டி காட்டப்பட்ட புனித அந்தோனியார், ஞானசௌந்தரி போன்ற திரைப்படங்களைத் தவற விடாமல் பார்க்கப் போயிருக்கிறோம். எங்கள் தெருவிலிருந்தும் கோயிலுக்கு அருகிலுள்ள இன்னொரு முஸ்லிம் தெருவான தெற்குத் தெருவிலிருந்தும்கூட. இதைச் சொல்லும்போது ஏரலின் தெற்குத் தெரு பள்ளிவாசலும் சூசையப்பர் கோயிலும் சவுக்கை முத்தாரம்மன் கோயிலும் அருகருகே சில நூறடிகளுக்குள்ளே ஆண்டாண்டுகளாக அமைதியாக அமைந்திருப்பதைக் குறிப்பிட்டே ஆக வேண்டும்.
சவுக்கையம்மன் கோயிலைச் சொல்லும்போது ஏரலின் சேர்மன் அருணாசலசுவாமி கோயிலையும், அங்கு தை மாதம் நடைபெறும் திருவிழாவில் தங்கச் சப்பரம் பச்சை சார்த்தி வெள்ளை சார்த்தி என வித விதமான அலங்காரங்களில் சப்பரத்தில் அமர்ந்து கோலாகலமாக பவனி வரும் சுவாமி எங்கள் தெரு முனைக்கு வரும்போது (முஸ்லிம் தெருக்களுக்குள் சாமிச் சப்பரமோ ஊர்வலமோ வருவதில்லை) நாங்களும் சென்று கூட்டத்தோடு கூட்டமாக நின்று கண்டு ரசித்ததையும் சொல்லாமல் ஆகாது. கோயில் திருவிழாவில் கும்பம் என்று நாங்கள் சொல்லும் கரகாட்டமும் நடக்கும். கோயிலிலிருந்து தொடங்கி வழியில் அங்கங்கே நின்று ஆடிய பிறகு எங்கள் தெருவின் அருகில் வருவதற்கு இரவு பதினோரு பன்னிரண்டு மணிகூட ஆகிவிடும். “இன்னா கொட்டுச் சத்தம் கேக்குதே கும்பம் வந்தாச்சி போல… வாங்க பிள்ளைலுவோ பாத்துட்டு வருவோம்” எனத் தூக்கத்திலிருந்து எழுப்பி எங்கள் சின்ன வாப்புமா எங்களைக் கூட்டிப் போவார்.
கும்பம் பார்க்கும் ஆவலோடு எங்கள் தெருவிலிருந்து வரும் இன்னும் பலரோடும் நாங்கள் போய்ப் பார்ப்போம். ஜிகினாக்கள் மின்னும் இறுக்கமான உடையில் முகத்தில் தூக்கலாகப் பூசியிருக்கும் ரோஸ் நிறப் பவுடரும் அதில் மினுங்கும் வேர்வைத் துளிகளும் பெட்ரோமாக்ஸ் விளக்கின் வெளிச்சத்தில் துல்லியமாகத் தெரிய தலையில் வைத்திருக்கும் கும்பம் கீழே விழாமல், கரகரவெனச் சுழன்றாடும் பெண்களை அந்த நள்ளிரவில் சுற்றிச் சூழ நின்று பார்த்துக் கொண்டிருந்த அந்தக் காலத்தை நினைத்து வியந்துதான் போகிறேன் இன்று.
ஆம் அது ஒரு காலம்தான். வியாழன் பின்னேரம் வெள்ளிக்கிழமை ராத்திரியில் காதர் ஜெய்லானி அப்பா பள்ளியில் எரியும் அகலிலிருந்து எண்ணெயைத் தொட்டு கழுத்தில் வைத்துக் கொள்வதும் ஒத்தாசைமாதா சொரூபத்தினடியில் எரியும் உருகிய மெழுகை விரல் நுனியில் தொட்டுக் கொள்வதும் எந்த விகற்பமமுன்றி நடந்தது. பொங்கலுக்கு மறுநாள் வகுப்புத் தோழி ஆனந்தியின் வீட்டினரோடு தாமிரபரணி ஆற்றங்கரைக்குச் சென்று ஆட்டம் போட ஜமிலாவையும் ஜம்ரூத்தையும் மறுத்ததேயில்லை வீட்டில். சிவராத்திரிக்கு , சங்கரியும் காந்திமதியும் வள்ளியும் காசிக்கனியும் கும்மி, அரட்டை, கபடி என விடியவிடிய விழித்திருந்தபோது, அவர்களுடன் கூடவே நஜுமாவும் ஜாஹிதாவும் கொட்டமடித்த காலம் அது. “சவுக்கம்மன் சாமி கையில சவுக்கய எடுத்துக்கிட்டு கால்ல சதங்கை போட்டுக்கிட்டு ராத்திரி எல்லாரும் ஒறங்குன பொறவு தெருத் தெருவா சுத்தி வந்து கண்காணிக்குமாம். அப்பொம் ஒத்தரும் அதக் கண்முழிஞ்சிப் பாக்குறதோ பேச்சுக் குடுக்கலாமான்னு நெனக்கிறதோ கூடாதாம். ஒரு ராத்திரி அப்டிதான் ஒரு அப்பா இங்கன திண்ணயில கெடந்தவரு சட்டுனு முழிப்பு வந்து அம்மன் வர்றதப் பாத்துட்டாராம். உடனே அம்மன் தன் கைய நீட்டி ‘கத்தாப் வாயைப் பொத்து’ ன்னு சொல்லிக்கிட்டே தெரு தாண்டிப் போயிருச்சாம். உமர்கத்தாப் அப்பாக்கு அந்த ராத்திரியோட போன பேச்சுத்தான். அப்பொறம் ஊமையாத்தான் இருந்தாராம்”, போன்ற கதைகளைச் சொன்ன பெத்தாக்களின் காலமும் கூட.
சென்ற வருடத்தில் ஒருநாள் வாப்பாவைப் பார்த்துவர ஏரலுக்குச் சென்றிருந்தேன். எங்கள் எதிர்வீடு, எங்கள் வாப்புமாவின் தோழியான ஜெய்னும்பு மூமா வீடு. நான் எங்கள் வீட்டு வாசலில் ஏறும்போது எதிர்வீட்டிலிருந்து ஜெய்னும்பு மூமாவின் பேத்தி பர்வீன் வெளியே வந்தாள். சற்று பரபரப்பாகக் காணப்பட்டவள் என்னைக் கண்டு நலம் விசாரித்து விட்டு, “நம்மொ டீச்சர் மொவனுக்கு இன்னக்கி நிச்சயம் பண்றாங்கொ மச்சி. கொஞ்சம் வேல கெடக்கு அதான் நிண்டு பேச முடியல. நா வாரேன்” எனச் சொல்லிக்கொண்டே உள்ளே சென்று விட்டாள். நான் வீட்டிற்குச் சென்ற சிறிது நேரத்தில் என் மாமி என்னைப் பார்க்க வந்திருந்தார். பேசிக் கொண்டிருந்துவிட்டு விடைபெற்றுப் புறப்பட்டவரை சாப்பிடச் சொல்லி உபசரித்தபோது மறுத்துவிட்டு அவர்களை டீச்சர் வீட்டில் நிச்சயத்துக்கு அழைத்திருப்பதாகவும் மருமகள் பேத்தியுடன் அங்குதான் போகப்போவதாகவும் கூறிச் சென்றுவிட்டார்.
“உங்களுக்கு அழைப்பில்லையா வாப்பா?” என நான் வாப்பாவிடம் கேட்க, தன்னையும் விரும்பி அழைத்ததாகவும் எங்கள் வருகையால் தான் வர இயலாதெனச் சொல்லிவிட்டதாகவும் வாப்பா சொன்னார்கள்.
பிறகு நாங்கள் எல்லோரும் சாப்பிட்டு முடித்து பேசிக் கொண்டிருந்தபோது எதிர் வீட்டிலிருந்து ஜெய்னும்பு மூமாவின் மருமகள் ஃபிர்தௌஸ் மாமி வந்தார், கையில் ஒரு தூக்குவாளியில் பிரியாணி, உள்ளே கிண்ணத்தில் பொரித்த கோழி, தக்காளி ஜாம் எல்லாவற்றோடும். “நம்ம வூட்டு வளவுல வச்சிதாம்மா சமயல். அடுத்தாப்ல நம்ம மனையிலயே சேரப் போட்டு பந்தியும் வச்சாச்சி. எங்க வூடு காணாது. கொஞ்சம் ஒங்க வூட்ல வச்சி செஞ்சிக்கலாமான்னு டீச்சர் கேட்டுச்சி. தட்ட முடியுமாம்மா? அதான் நானும் பர்வீனும் கூடமாட நின்னு செஞ்சிட்டு, இப்பொ சாமானுவள ஒதுக்கிக்கிட்ருக்கோம். அதோட நம்ம வாப்பாக்கு வரமுடியிலியே அவுங்க வாயிலயும் படுமேன்னு ரெண்டு மூணு சோறப் போட்டு எடுத்துட்டு வந்தேன்” என்றபடியே கையில் இருந்தவற்றை மேசையில் வைத்தார்.
அதற்குள் தூக்குவாளியிலிருந்து பிரியாணியின் மணம் வீட்டில் பரவிவிட்டது. பிரியாணி மாஸ்டர் யார் என வாப்பா விசாரிக்கவும் , மாமி “வேற யாரு நம்ம சம்சுதான். அவன் முன்ன நெய்ச்சோறு மட்டுந்தான் ஆக்கிட்டிருந்தான் இப்பொம் சூப்பரா பிரியாணியும் போடுறானே” என்றார்.
பிறகு என் பக்கம் திரும்பி, “ஜமி ஒனக்கு டீச்சரைத் தெரியுந்தான. நம்மொ ஜனுபா லாத்தா செட்டுல ஜோசஃபின் டீச்சர்னு இருந்தாங்க பாரு அவுங்க தங்கச்சிதான் லூயிஸா டீச்சர். அவுங்க மொவுனுக்குத்தான் இன்னக்கி விசேஷம்”, என்று கடகடவெனச் சொல்லிவிட்டு, “சரி வேல கெடக்குதும்மா வாரேன்…” என என் பதிலுக்கு நிற்காமலே விரைந்து விட்டார். ‘ஏந்தெரியாது மாமி. ம்மா இருக்கும்போது மெனக்கெட்டு வீட்டுக்கு வந்து கிறிஸ்மசுக்கு கேக் தந்துட்டுப் போவாங்களே. நல்லாத் தெரியுமே?’ என மனதிற்குள்ளேயே சொல்லிக் கொண்டேன் நான்.
என்னுடைய ம்மா இருந்த நாளில் ஓரிரு மாதங்களுக்கொரு முறை ஏதாவது ஒரு காரணத்தைப் பிடித்துக்கொண்டு ஊருக்குச் சென்றுவரும் வழமைபோல அப்போதும் வீட்டிற்குச் சென்றிருக்கிறேன். நாங்கள் வருவதை எதிர் நோக்கித் திண்ணையில் நாற்காலியில் அமர்ந்திருந்த ம்மாவிடமிருந்து நெற்றியில் பெற்ற முத்தத்தை நெஞ்சில் ஏந்தியபடியே உள் நுழைகிறேன்.
ஹாலில் ம்மாவின் சேலையால் கட்டப்பட்டிருந்த தொட்டிலும் எப்போதோ உள்ள பழைய பொம்மைகள் ஒன்றிரண்டும் தொட்டியடிச் சாக்கும் ஒரு கைப்பிள்ளையை வீட்டிற்குள் கொண்டு வந்திருக்கின்றன. ஊரில் உறவுகளில் யாருக்கும் கைக்குழந்தை இல்லையே என்பதால் ம்மாவைப் பார்க்கிறேன் கேள்வியோடு.
“நம்மொ முத்துமாரி பிள்ளமா. அவொ பூசிக் கழுவிட்டு வேலய முடிச்சிட்டு வரங்காட்டியும் இப்டி இங்கன கெடக்கும்”, என்ற ம்மாவின் பதிலோடு இணைந்து கொள்கிறது அவர் முகத்துச் சிரிப்பாணி, அன்று எங்கள் குழந்தைகளோடு விளையாடும்போதும் நான் கண்டிருந்த அதே சிரிப்பாணி.
‘ஆதியருள் கனிந்திலங்கி அமரர் ஜிப்ரீல் வழியாக
நீதி நபி மாமணிக்கு நிறைவளித்த குர்ஆனாம்’
‘அழகென்ற சொல்லுக்கு முருகா உந்தன் அருளன்றி உலகிலே பொருளேது முருகா’
‘தேனினிமையிலும் ஏசுவின் நாமம் திவ்ய மதுரமாமே’
அருளும் அழகும் இனிமையும் ஊரில் எல்லாருடைய மனதிலும் பேதமின்றி படும்படிதான் ஒலிபெருக்கிகள் ஒலித்துக் கொண்டிருக்கின்றன எப்போதுமே.
படைப்பாளர்
ஜமீலா
54 வயதாகும் ஜமீலா, தூத்துக்குடி மாவட்டம் ஏரலைச் சேர்ந்தவர். சுற்றி நடக்கும் வாழ்வைக் கவனிப்பதில் ஆர்வம் கொண்டவர். கவனித்தவற்றையும் மனதில் படிந்தவற்றையும் அவ்வப்போது எழுதியும் பார்ப்பவர். ஹீனா பாத்திமாவின் முக்கிய கட்டுரை ஒன்றை அருஞ்சொல் இணைய இதழுக்காக மொழிபெயர்ப்பு செய்துள்ளார். தீக்கதிர் இதழிலும் இவருடைய மொழிபெயர்ப்பு கட்டுரைகள் சில வெளியாகியுள்ளன.
உங்களுடன் கைப்பிடித்து நின்று கும்பம் பார்த்த உணர்வைத் தருகிறது உங்கள் எழுத்து