“வெண்பா எங்கே போற?”

“வெளிய போயிட்டு வரேன்பா.”

“டிபன் சாப்பிட்டுப் போ…”

“வேண்டாம்பா, பிரெண்ட்ஸ் வெயிட் பண்ணுவாங்க” என்று

சொல்லிவிட்டு ஒரே பாய்ச்சலில் வாசலைக் கடந்தாள் வெண்பா.

“ஐயோ ஒரு நிமிஷம். டேய் வேந்தா… வேந்தா…”

உள்ளறையில் படித்துக் கொண்டிருந்த வேந்தன் ஓடி வந்தான்.

“இந்தா, தங்கச்சிக்கு இந்தப் பாலைக் கொண்டு போய்க் கொடு. சாப்பிடாமலே போறா பாரு.”

வேந்தன் அதை வாங்கிக் கொண்டு ஓடினான். வெண்பா பைக்கில் அமர்ந்தபடி குடித்து முடித்து, அண்ணனின் தோளில் கிடந்த துண்டினால் வாயைத் துடைத்துக் கொண்டு, டம்ளரைத் தரும் வரையில் அருகிலேயே நின்று காலி டம்ளரை வாங்கிக் கொண்டு போனான்.

“என்ன, குடுத்தியா?”

”ம்.”

“இந்தா, என்ன அப்டியே போற? டம்ளரைக் கழுவி வெச்சிட்டுப் போ. நல்ல பழக்கம் படிச்சிருக்கே” என்று வருண் மகனைக் கரித்துக் கொட்டினான்.

“அப்பா…”

“ம்ம்”

“என் பிரெண்ட்ஸ் எல்லாம் நாளைக்கு ஷாப்பிங் போறாங்கப்பா. ஒரு டூ அவர்ஸ்தாம்பா. ப்ளீஸ் நானும் போயிட்டு வரேன்.”

“எங்கேடா போறாங்க?”

“பாரீஸ் கார்னர்பா.”

“அவ்ளோ தூரம்லாம் உன்னைத் தனியா அனுப்ப முடியாது. அம்மா என் தோலை உரிச்சிடுவாங்க.”

“அப்பா, அப்பா ப்ளீஸ்பா. அம்மா கிட்ட நீதான் பர்மிஷன் வாங்கித் தரணும்.”

“அப்பாவும்கூட வரட்டா?” ஆசையுடன் கேட்டான் வருண்.

“நான் போகவே இல்ல. ச்சை.”

கோபத்துடன் மீண்டும் அறைக்குள் முடங்கினான் வேந்தன்.

“ஏய், வேந்தன். இங்கே வா!”

அப்பா அழைத்தவுடன் மீண்டும் வந்து முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு நின்றான்.

“என்னடா சொன்னே இப்போ? இனிமே அப்படிப் பேசுவியா?” வருணின் குரல் கடுமையாக ஒலித்தது. முகம் விகாரமானது. வேந்தன் பயந்து நடுங்கினான்.

“இல்லப்பா… இல்லப்பா… இனிமே அப்படிப் பேச மாட்டேன்பா…” வேந்தன் கெஞ்சக் கெஞ்ச மத்துக்கட்டையால் வேந்தனின் காலில் அடித்தான் வருண்.

“ஆம்பளப் பிள்ளையா அடக்கமா பேசிப் பழகு. இப்படி வாய் பேசுனா என்ன புள்ள வளர்த்துருக்கேன்னு ஊரே என்னைத்தான் காறித் துப்பும்.”

வேந்தன் வெகு நேரம் அழுது கொண்டே இருந்தான். அதற்கும் அதட்டல் விழுந்தது. பின்பு படித்துக் கொண்டே இருக்கும் போது அப்பா கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்து தேங்காய் துருவிக் கொடுத்தான், மாடியில் காயப் போட்ட துணிகளை எடுத்து வந்து மடித்து வைத்தான். செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றினான். மளிகை சாமான்களை அப்பா சொன்னபடி டப்பாக்களில் கொட்டி வைத்தான். அப்பாவுக்குப் பிடித்த சீரியலை உடன் அமர்ந்து பார்த்தான்.

மாலை ஆறானது. வெண்பா திரும்பி வரவில்லை. மதியம் சாப்பிடவும் வரவில்லை.

“உன் செல்லப் பொண்ணு எங்கே இன்னும் காணோம்?” நிலா வருண் கொடுத்த டீயை வாங்கிக் கொண்டே கேட்டாள்.

“ம்ம்… பிரெண்ட்ஸோட டென்னிஸ் விளையாடிட்டு வரேன்னு காலைலியே போனா…” என்று இழுத்தான் வருண்.

“மதியானம் சாப்பிட வந்தாளா?” நிலா காலையில் வெளியே போய்விட்டு அப்போதுதான் திரும்பி இருந்தாள்.

“ம்ம்… இல்லைங்க” என்று சன்னமாக ஒலித்தது வருணின் குரல். ஒழுக்கத்துக்கும் கண்டிப்புக்கும் பேர் போன நிலா வெகுண்டெழுந்தாள்.

“எத்தனை தடவை சொல்லி இருக்கேன், எங்கே போனாலும் மதியானம் சாப்பிட வீட்டுக்கு வந்துடணும்னு. என்னத்த கவனிக்கிற நீ? எல்லாம் நீ குடுக்குற செல்லம்தான், அவ இப்படிக் கெட்டுக் குட்டிச் சுவரா போயிட்டு இருக்கா. ஒரே பொண்ணு, என் பேரக் காப்பாத்துவான்னு நான் நெனச்சிட்டு இருக்கேன். பிள்ளைய ஒழுங்கா வளர்க்கத் தெரியல, நீயெல்லாம் என்ன அப்பன்?”

சற்று அதிர்ந்து பேசினாலே வருணுக்குக் கண்களில் நீர் கோத்துக் கொள்ளும். நிலா இப்படிப் பாய்ந்து கத்தினால் சப்த நாடியும் ஒடுங்கிவிடுவான்.

வேந்தன் ஓடி வந்து வருணின் அருகில் ஒடுங்கிக் கொண்டான். “அப்பா, அழாதீங்கப்பா” என்று கண்ணீரைத் துடைத்தான்.

எட்டு மணிக்கு மேல் ஆரவாரமாக வந்தாள் வெண்பா. அவள் வரும்போது நிலா மொட்டை மாடியில் தோழிகளுடன் அரட்டை பிளஸ் தண்ணீர் கச்சேரியில் மும்முரமாகி விட்டாள். அதைத் தெரிந்துகொண்டு அந்த நேரமாகப் பார்த்து வருவதுதான் வெண்பாவின் வழக்கம்.

வந்தவுடன் அப்பனையும் அண்ணனையும் கட்டிப் பிடித்துக் கலகலப்பாக அன்றைய நாளில் அவள் செய்த சாகசங்களை எல்லாம் விவரித்துச் சிரிக்க வைத்து விட்டாள். அவள் வந்தது இருவருக்குமே அவ்வளவு ஆறுதலாக இருந்தது. உபசாரமும் பலமாக நடந்தது.

“தங்கச்சி மதியானமே சாப்பிடல. இந்தா, இந்த முட்டை தோசையக் கொண்டு போய்க் குடுடா.” வேந்தனுக்கு உத்தரவு பறந்தது.

ஏழு தோசைகளை உள்ளே தள்ளிய பின்பு, “அப்பா… என் துணி எல்லாம் எடுத்து வெச்சிட்டியா?” என்று கேட்டாள்.

“ஏன்மா?”

“நாளைக்குக் காலைல பிரெண்ட்ஸ் கூடப் பாண்டிச்சேரி போறேன். ராதா அண்ணனுக்குக் கல்யாணம். அன்னிக்கே சொன்னேன்ல? மறந்துட்டியா?” சிடுசிடுத்தாள் வெண்பா.

“அட, இல்லம்மா அயர்ன் மட்டும் பண்ணணும்… வேந்தன்…”

“என்னப்பா?”

“தங்கச்சி ட்ரெஸ்ஸெல்லாம் அங்கே எடுத்து வெச்சிருக்கேன் பாரு. கொஞ்சம் அயர்ன் பண்ணி சூட்கேஸ்ல வெச்சிடுறியாப்பா? அப்பாவுக்குக் கொஞ்சம் முதுகு வலிக்குது” என்று குரல் குழைந்தது வருணுக்கு.

“சரிப்பா” என்று ஸ்விட்ச் போட்டது போலச் சொன்னான் வேந்தன்.

“போடா, போய் ஒழுங்கா அயர்ன் பண்ணு” என்று அண்ணனைச் சீண்டினாள் வெண்பா.

வேந்தன் போகும் போது வேண்டுமென்றே காலை நீட்டி அவனை விழ வைத்தாள்.

ரோஷம் பொத்துக் கொண்டு வர எழுந்து அவளை அடிக்கப் போனான் வேந்தன். அதைப் பார்த்து விட்ட வருண் வந்து வேந்தனின் முதுகில் ஒன்று வைத்தான்.

“ஒரு ஆம்பளப் பிள்ளைக்கு இவ்ளோ கோபம் ஆகாது.” தொடர்ந்த லெக்சரில் வேந்தன் அடங்கி அமுங்கிப் போனான்.

வெண்பா காலை நீட்டி அமர்ந்து டிவி பார்த்தாள். பிறகு,

“சரி, நான் செம்ம டயர்ட். போய்த் தூங்கப் போறேன், குட்நைட்.”

அப்பனிடமும் அண்ணனிடமும் விடை பெற்றுக்கொண்டு உறங்கச் சென்றுவிட்டாள் வெண்பா.

அடுக்களையில் வேலையெல்லாம் முடித்து விட்டாலும் இன்னும் நிலா சாப்பிடாததால் கண்களைச் சுழட்டிய தூக்கத்தை விரட்டியபடி அமர்ந்திருந்தான் வருண்.

“அப்பா, நீங்களும் போய்த் தூங்குங்கப்பா. அம்மா வந்தா நான் தோசை சுட்டுக் கொடுத்துக்குக்றேன்” என்ற வேந்தனின் உச்சியை மோந்த வருணின் கண்ணில் கண்ணீர்.

“வேணாங்கண்ணு. இந்த வீட்ல இருக்குற வரைக்கும்தான் நீ கொஞ்சமாச்சும் நிம்மதியா இருக்கலாம். நீ போய்த் தூங்கு” என்று மகனை முத்தமிட்டு அனுப்பி விட்டுப் பெருமூச்சு விட்டான் வருண்.

அப்பாவைப் பச்சாதாபத்துடன் பார்த்துக் கொண்டே உறங்கச் சென்றான் வேந்தன், வருங்கால வருண்.

(ஆண்கள் நலம் தொடரும்)

படைப்பாளர்

ஜெ.தீபலட்சுமி

பெண்ணிய செயற்பாட்டாளரும் எழுத்தாளருமான ஜெ.தீபலட்சுமி தொடர்ச்சியாக பெண்ணுரிமைக் குரலை எழுப்பி வருபவர். ‘இப்போதும் வசந்தி பேக்கரியில் பெண்கள் காணப்படுவதில்லை’ என்ற நூலை எழுதி இருக்கிறார். ஊடகங்களில் இவர் எழுதிய பெண்ணியக் கட்டுரைகள், ’குத்தமா சொல்லல, குணமாதான் சொல்றோம்’ என்கிற நூலாக ஹெர்ஸ்டோரீஸ் பதிப்பகத்தில் வெளிவந்திருக்கிறது. ஆங்கிலம், தமிழ் என இரு மொழிகளிலும் சரளமாக எழுதியும், பேசியும் வருகிறார். எழுத்தாளர் ஜெயகாந்தனின் சிறுகதைகள் சிலவற்றைத் தொகுத்து ‘The Heroine and other stories’ என்ற நூலாக மொழிபெயர்த்திருக்கிறார்.