டீக்கடையில் பைக்கை நிறுத்தி விட்டு ஸ்டைலாக இறங்கினாள் நிலா. 

“வா நிலா, மால்பரோ கோல்ட் தானே?” கடைக்காரர் கலா கேட்டார்.

“ஆமாக்கா. அப்டியே ஸ்ட்ராங்கா ஒரு இஞ்சி டீ போடுங்க.”

“வீட்டுக்குப் போனா வருண் சூடா போட்டுக் குடுப்பானே.” குறும்பாகச் சிரித்தார் கலா.

“ஐயோ, அவன் பேச்சை எடுக்காதீங்க. சரியான டார்ச்சர். கொஞ்ச நேரம் நிம்மதியா இங்க இருந்துட்டு வீட்டுக்குப் போறேன்.”

“ஹா… ஹா… வேலை எல்லாம் எப்படிப் போகுது?”

“அதை ஏன் கேட்குறீங்க? டீமில் புதுசா ஒரு பையனை வேலைக்கு எடுத்தேன். அதுலேருந்து பெரிய தொல்லை. வீட்ல மாமியாருக்கு உடம்பு சரியில்ல, புள்ளை ஸ்கூலுக்குப் போகணும்னு அடிக்கடி லீவு, லேட்டு. இதுல அவ சிரிக்கிறா, கேலி பண்றான்னு யார் மேலயாச்சும் புகார் வேற. இன்னிக்கு என்னடான்னா சாப்டாம வேலைக்கு வந்துருப்பான் போல, மயங்கியே விழுந்துட்டான். ஆனா ஒண்ணு, வேலைல அக்கறை இருக்கோ இல்லியோ, சும்மா பொழுதைப் போக்கணும்னு வந்துடுறாங்க. சே இனிமே டீம்ல பையனுங்களையே வேலைக்கு எடுக்கக் கூடாது!”

அந்தப் பையனுக்கு அவசர உதவி, மருத்துவமனையில் அனுமதி, பெற்றோருக்குத் தகவல் என்று மன அழுத்தம் மட்டுமல்லாது அரை நாள் தனது வேலையும் கெட்டுப் போன எரிச்சலைக் கொட்டித் தீர்த்தாள் நிலா.

“அட, ஆமாம். நான்கூடக் கடையைக் கூட்டிப் பெருக்க, பாத்திரம் கழுவ ஒரு பையனை வெச்சிருந்தேன். அப்புறம் நாலு பொண்ணுங்க போற வர இடம். கடைக்குள்ளேயே இருந்தாலும் அவ பார்த்தா இவ பார்த்தான்னு பேச்சு வரும். கழுதையை வீட்டுக்கு அனுப்பிட்டேன்.”

ஆமோதித்த நிலா ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்தபடி அமுதம் வார இதழை வாங்கிப் புரட்டினாள்.

நடுப்பக்கத்தில் அவளது கனவுக் கண்ணன் ராகவனின் முழு உருவப் படம், சிக்ஸ் பேக்குடன் கவர்ச்சியாக வெளியாகி இருந்தது. அவன் கண்களில் இருந்த போதை நிலாவுக்கு சிகரெட் புகையைவிட அதிக உற்சாகமளித்தது. ”செம்மயா இருக்கான்ல? ஹும் எவளுக்குக் குடுத்து வெச்சிருக்கோ!”

“ஹ்ம்… இவனை எல்லாம் இப்டி நடுப்பக்கத்துலதான் பார்க்க முடியும். கட்டிக்கிட்டுக் குப்பை கொட்ட முடியாது.”

நிலா மேலும் பக்கங்களைப் புரட்டினாள்.

மனைவியைக் கைப்பிடிக்குள்ளேயே வைத்திருப்பது எப்படி? பிரபல உளவியல் நிபுணர் நரேந்திரன் பேட்டி.

அவள் வருவாளா?” சிபி எழுதும் புத்தம்புதிய ரொமாண்டிக் தொடர் இந்த வாரம் ஆரம்பம். ஆண்களுக்கான அழகுக் குறிப்புகள் அழகுக்கலை நிபுணர் அண்ணாமலை.

பிரபலங்கள் வீட்டில் என்ன விரும்பிச் சாப்பிடுவார்கள்? – நீச்சல் வீரர் நஸீரா பானுவின் சமையல்காரர் சுப்புராம சேஷாத்ரியின் பேட்டி.

மேடத்துக்குப் பிடித்த பீஃப் வறுவல் எப்படிச் செய்வது என்று செய்முறை விளக்கம் கொடுத்திருந்தார்.

இப்படி வருணுக்குப் பிடித்த பகுதிகள் நிறைய இருந்ததால் இதழை வாங்கிக்கொண்டாள்.

இதற்குள் தோழிகள் சிலர் வரவே அரட்டை கச்சேரி தொடங்கியது.

கோயிலுக்குப் போய்க்கொண்டிருந்த சுந்தர் மீது ராணிக்கு ஒரு கண். அவன் கடந்து போகும்போது ராணியின் பெயரை உரக்கக் கத்தினாள் நிலா. சுந்தர் பயந்து முகம் சிவந்து ஓட்டமும் நடையுமாக டீக்கடையைக் கடந்தான். ஓ என்ற சிரிப்பு தொடர்ந்தது.

“எப்படி உன் லவ்வைச் சொல்லப் போற? பையனுக்கும் உன் மேல ஒரு கண்ணு இருக்கும் போல!”

“ஹேய், என்ன அதுக்குள்ள கெளம்புற?” இது சுதா.

“ஏய், அவ போகட்டும். பாவம் புருசன் எவ்ளோ நேரமா வீட்ல வெய்ட் பண்ணிட்டிருப்பானோ?” – இது கலா.

“ஹும்.. உனக்கென்னம்மா, ஒண்டிக்கட்டை. ஜாலியா இருக்கலாம். இங்கே அதுக்குள்ள எட்டு மிஸ்டு கால் வந்துடுச்சு. போய் ‘ஹிட்லரை’ச் சமாதானம் வேற பண்ணணும். வரேன்.”

இவ்வாறாக, அலுவலகம்விட்டு வந்த பின்பும் சுமார் மூன்று மணி நேரம் அரட்டைக் கச்சேரி, நாலு சிகரெட், மேலும் இரண்டு டீயும் அடித்த பிறகு மனசே இல்லாமல் வீட்டுக்குக் கிளம்பினாள் நிலா.

அஜால் குஜால் டிவியில் ஆண்கள் தினச் சிறப்பு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தன.

“வீட்லயே இருக்க மாட்டேங்குறாங்க” செல்லமாக அலுத்துக் கொள்கிறார் பிரபல திரைப்பட இயக்குனர் வெண்பாவின் ஹோம் மினிஸ்டர் திரு.  திரு. குறள் வெண்பா. புதுமணத் தம்பதியருடன் ஒரு ஜாலி சந்திப்பு. 

”சொல்லுங்க மிஸ்டர் வெண்பா. திருமண வாழ்க்கை எப்படிப் போகுது?”

“நீங்க சொல்லுங்க.” ஆசை மனைவியின் முகம் பார்க்கிறார் திரு. குறள் வெண்பா.

“நீயே சொல்லு, உன்னைத் தானே கேட்குறாங்க.” பரிவுடன் கணவனைப் பேசத் தூண்டுகிறார் பிரபல திரைப்பட இயக்குனர் வெண்பா. 

குறள் தயங்கவும் வெண்பாவே பேசத் தொடங்குகிறார். 

”எனக்கு சினிமா தான் உயிர் மூச்சு எல்லாமே. வீட்ல கல்யாணத்துக்குப் பையன் பார்க்கும் போதே தெளிவா சொல்லிட்டேன். என்னையும் என் வேலையையும் நல்லாப் புரிஞ்சிக்கிட்டு அனுசரிச்சுப் போகுற மாதிரி பையனாப் பாருங்கன்னு. அதே மாதிரி குறள் கிடைச்சது என் அதிர்ஷ்டம் தான். “

”நீங்க சொல்லுங்க குறள். எங்களுக்கெல்லாம் வெண்பாவும் அவரோட திரைப்படங்களும் பெரிய ஆதர்சம். வீட்ல எப்படி நடந்துக்குவாங்க. உங்க கிட்ட வெண்பாவுக்கு என்ன ரொம்பப் பிடிக்கும்?”

குறள் வெட்கத்துடன் சிரித்தான். “ம்ம்ம் என் மீசையும் தாடியும் ரொம்பப் பிடிக்கும். பிடிச்சு இழுத்துட்டே இருப்பாங்க… அப்புறம் என் சமையல் ரொம்பப் பிடிக்கும்.” வெட்கத்துடன் வெள்ளந்தியாய்க் குறள் சிரிக்க, பேட்டி எடுப்பவரும் வெண்பாவும் உரக்கச் சிரித்தனர். 

(ஆண்கள் நலம் தொடரும்)

படைப்பாளர்:

ஜெ.தீபலட்சுமி

பெண்ணிய செயற்பாட்டாளரும் எழுத்தாளருமான ஜெ.தீபலட்சுமி தொடர்ச்சியாக பெண்ணுரிமைக் குரலை எழுப்பி வருபவர். ‘இப்போதும் வசந்தி பேக்கரியில் பெண்கள் காணப்படுவதில்லை’ என்ற நூலை எழுதி இருக்கிறார். ஊடகங்களில் பெண்ணியக் கட்டுரைகள் எழுதிவருகிறார். ஆங்கிலம், தமிழ் என இரு மொழிகளிலும் சரளமாக எழுதியும், பேசியும் வருகிறார். எழுத்தாளர் ஜெயகாந்தனின் சிறுகதைகள் சிலவற்றைத் தொகுத்து ‘The Heroine and other stories’ என்ற நூலாக மொழிபெயர்த்திருக்கிறார்.