18+

நிலா ஆனந்தமாக உறங்கிக்கொண்டிருந்தாள். ஜன்னலிலிருந்து வந்த நிலவொளியில் அவள் முகம் அழகாக, அமைதியாக ஜொலித்தது. தூங்கும்போதுகூட யாரும் திருடிவிட முடியாத புன்னகையை அவளது அதரங்கள் அணிந்திருந்ததைப் பார்த்த வருணுக்குக் கலவையான உணர்வுகள் ஏற்பட்டன.

இவள் எப்படி எந்தக் கவலையுமின்றி இப்படி நிம்மதியாகத் தூங்குகிறாள்? சற்று முன் நடந்த நிகழ்வை நினைத்தால் அவனுக்கு அவமானம் பிடுங்கித் தின்றது. அவள் எவ்வளவு அன்பாகவும் பரிவாகவும் அவனை அரவணைத்து நெற்றியில் முத்தமிட்டு ஆறுதல் சொன்னாலும் அவனது மனக்கொதிப்பு அடங்கவில்லை.

மறுநாள் காலை. சீட்டியடித்தபடி உற்சாகமாக அலுவலகத்துக்குக் கிளம்பிக்கொண்டிருந்தாள் நிலா. காபி கொண்டுவந்து கொடுத்த வருணைக் கட்டிப்பிடித்து முத்தமிட்டாள்.

வருணுக்கு முகமே சரியில்லை. ‘எப்படி இப்படி இருக்கிறாள். என்னைப் பற்றிக் கொஞ்சமாவது நினைத்துப் பார்த்தாளா?’

“நிலா…”

“ம்…”

“இனிமே நான் உனக்கு வேண்டாமா?”

“ஏண்டா இப்படிப் பேசுற?”

“இல்ல, நேத்திக்கு என்னால முடியல. ஆனா, நீ கொஞ்சமும் கவலைப்படாம ஜாலியா இருந்துகிட்ட. எப்படி?”

ஹேர் பிரஷ்ஷை அலட்சியமாகக் கட்டிலில் தூக்கி எறிந்து விட்டுக் கேட்டாள்.

“என்ன பிரச்னை உனக்கு?”

வருண் மௌனமாக அவள் விட்டெறிந்த பிரஷ்ஷை எடுத்து அதிலிருந்த முடிக்கற்றைகளைக் குப்பைத் தொட்டியில் போட்டான்.

“இல்ல, வர வர என்னை நீ ரொம்ப இக்னோர் பண்ற மாதிரி இருக்கு.”

“ஆரம்பிச்சிட்டியா? எனக்கு இன்னிக்கு நிறைய வேலை இருக்கு. டார்ச்சர் பண்ணாதே” என்று அவசரமாகக் கிளம்பத் தொடங்கினாள். சிரித்துக்கொண்டிருந்த முகத்தில் லேசான எரிச்சல்.

வருணுக்கு அழுகை வந்தது. தன் உணர்வுகளை மதிக்கவே மாட்டேன் என்கிறாளே. இவளுக்காகப் பார்த்துப் பார்த்து எல்லாம் செய்தும் அலட்சியப்படுத்துகிறாளே.

கொஞ்ச நாளாகவே தம்பதியருக்கிடையே லேசான விலகல் இருந்தது. முன்பு போல் அலுவலகத்துக்குப் புறப்படும் முன் வருணை அணைத்து முத்தமிட்டுவிட்டுக் கிளம்புவதில்லை. கன்னத்தில் தட்டிவிட்டுச் சென்று விடுகிறாள். வேலை அதிகம், ஏதாவது முக்கிய கவலை இருக்கும் என்று கொஞ்ச நாள் பொறுத்துதான் பார்த்தான் வருண். ஆனால், நேற்று படுக்கையறையில் நடந்த நிகழ்வு அவனை வெகுவாகக் கலவரப்படுத்தி விட்டது.

எப்படியாவது அவளை மகிழ்வித்துவிட வேண்டும் என்ற மன அழுத்தம் இருந்ததால் வருணால் சரிவரச் செயல்பட முடியவில்லை. அவள் அதற்காக ஏமாற்றமடைந்திருந்தால் கூட அவன் வருந்தி இருக்க மாட்டான். அவளோ கலகலவெனச் சிரித்தாள். “பரவாயில்லடா” என்று அவனை நெற்றியில் முத்தமிட்டுச் சமாதானப்படுத்தினாள். பின்பு தனது அலமாரிக்குச் சென்று அதனை எடுத்து வந்தாள்.

“என்ன பார்க்குற? அன்னிக்குப் பேசிட்டு இருந்தோம்ல. ஆன்லைன்ல வாங்கிட்டேன். இனிமே நம்ம செக்ஸ் லைஃப் வேற லெவல்ல இருக்கப் போகுது. சண்டே நீ உங்க அப்பா வீட்டுக்குப் போயிருந்தேல்ல அப்பதான் முதல்ல ட்ரை பண்ணேன். இட்ஸ் ரியல்லி குட்!”

“நிலா…”

“டோண்ட் வொர்ரி. நீ நிம்மதியாகத் தூங்கு. நான் என்னைப் பார்த்துக்குறேன்.”

தன்னைத் தானே பரவசப்படுத்திக்கொள்ளும் அந்தக் கருவியை அவள் அநாயாசமாகப் பயன்படுத்தியதைப் பார்த்தும் பார்க்க முடியாமல் திரும்பிப் படுத்துக்கொண்டான் வருண்.

நல்லபடியாக எல்லாம் முடிந்த பின்பு வந்து அவனைக் கட்டியணைத்துக்கொண்டாள் நிலா.

“என்ன அதிர்ச்சியாகிட்டியா? இது ஒண்ணும் தப்பான விஷயம் இல்லடா. எப்போதுமே இதைப் பயன்படுத்தணும்னு இல்ல. உறவுல ஒரு தொய்வு வராம இதை வெச்சி நாம ரெண்டு பேருமே விளையாட முடியும். Let’s explore!”

அவள் என்ன சொன்னாலும் அவன் மனம் அமைதியடையவில்லை. நிலாவுக்கு, தான் இனி தேவையில்லையோ என்று மறுகத் தொடங்கினான்.

அதன் தொடர்ச்சியாகத்தான் காலையில் இந்த உரையாடல். இதோ எரிச்சலுடன் கிளம்பிவிட்டாள்.

வருணுக்குப் பாதுகாப்பின்மை அதிகமானது. என்னென்னவோ யோசித்துக் குழம்பிப் போனான்.

மாலையில் மீண்டும் பேச்சை எடுத்தான். சற்றுக் கோபமாகவே.

“அப்போ, உனக்கு செக்ஸ் இருந்தா போதும். இல்ல? நான் கட்டிப்பிடிக்கிறது முத்தம் குடுக்கறதெல்லாம் வேண்டாமா?”

“என்னடா லூசு மாதிரி பேசுற?”

“பின்னே? சுயநலமா அதை எதுக்கு வாங்கி வெச்சிருக்கே?”

“எப்படி எப்படி? சுயநலமாவா? எனக்குப் பீரியட்ஸ் இருக்கும் போது, அல்லது முடியாத போதெல்லாம் உன்னை மட்டும் திருப்திப் படுத்துவேன், அல்லது நீயே பண்ணிப்பியே, அதெல்லாம் என்ன நலமாம்?”

வருணிடம் பதிலில்லை.

“பதில் சொல்ல முடியலல்ல? அதே மாதிரிதான் இதுவும். மனசைப் போட்டுக் குழப்பிக்காதே. ரிலாக்ஸா இரு. சரி, நான் மொட்டை மாடிக்குப் போறேன். டீ போட்டிருக்கியா?”

முகம் கழுவித் துடைத்து விட்டு டவலைப் பெட்டின் மேல் எறிந்தாள்.

அனிச்சையாக அதை எடுத்துக் காயப் போட்டான் வருண். “இன்னும் இல்ல. நான் போட்டு எடுத்துட்டு வரேன், நீ போ.”

அவன் பதிலுக்குக் காத்திராமல் போனில் யாருடனோ பேசியபடியே நிலா மொட்டை மாடிக்குப் போய்விட்டாள்.

வருண் டீ போட்டுக்கொண்டே யோசித்தான். நிலாவிடம் சண்டை போட்டுப் பயனில்லை. அவள் இன்னும் தன்னிடமிருந்து விலகித்தான் போவாள். மேலும் மன அழுத்தத்தில் அதிகமாகக் குடிக்கவும் தொடங்கிவிடுவாள்.

அதற்கும் வருண் தான் காரணம் என்று எல்லாரும் பேசுவார்கள்.

எவ்வளவோ சொல்லிச் சொல்லி இப்போதுதான் சிகரெட் பிடிப்பதைக் குறைத்திருக்கிறாள்.

பொறுமையாக இருந்து அவளது அன்பை வெல்ல வேண்டும் என்று முடிவெடுத்தான். மனதில் புத்துணர்வு பிறந்தது. தன் அன்பு மனைவிக்குப் பிடித்த வெங்காய பஜ்ஜியைச் சடுதியில் தயார் செய்து சூடான டீயுடன் மொட்டை மாடிக்கு எடுத்துச் சென்றான் வருண்.

(ஆண்கள் நலம் தொடரும்)

Ref:

https://www.healthline.com/health/healthy-sex/mutual-masturbation
https://www.womenshealthmag.com/sex-and-love/a20730536/health-benefits-of-masturbation/
https://www.healthline.com/health/healthy-sex/how-to-use-a-dildo

படைப்பாளர்:

ஜெ.தீபலட்சுமி

பெண்ணிய செயற்பாட்டாளரும் எழுத்தாளருமான ஜெ.தீபலட்சுமி தொடர்ச்சியாக பெண்ணுரிமைக் குரலை எழுப்பி வருபவர். ‘இப்போதும் வசந்தி பேக்கரியில் பெண்கள் காணப்படுவதில்லை’ என்ற நூலை எழுதி இருக்கிறார். ஊடகங்களில் பெண்ணியக் கட்டுரைகள் எழுதிவருகிறார். ஆங்கிலம், தமிழ் என இரு மொழிகளிலும் சரளமாக எழுதியும், பேசியும் வருகிறார். எழுத்தாளர் ஜெயகாந்தனின் சிறுகதைகள் சிலவற்றைத் தொகுத்து ‘The Heroine and other stories’ என்ற நூலாக மொழிபெயர்த்திருக்கிறார்.