ஆப்கான்- அமெரிக்க எழுத்தாளர் எழுதிய நாவல். 400 பக்கங்களில்  அரை நூற்றாண்டு கதையை விவரிப்பது எளிதல்ல. ஆனால், தவறவிடக் கூடாத நாவலில் ஒன்று.

khaledhosseini.com

இரு வேறு நிலைகளில் வாழ்ந்த இரு வேறு வயது  பெண்கள் போர், அரசியல் சூழ்நிலைகளால் ஒற்றைப் புள்ளியில் இணைந்து, வாழ்வை எதிர்கொள்ளும் ஒரு அற்புதமான கதை. 

மரியம் ஆப்கானின் சிறிய கிராமத்தில் பிறந்து வளர்கிறாள்.  ஆப்கான் என்றாலே பாலைவன மணல், புழுதி, வறண்ட  சிதிலமான பூமி என்ற நமக்கு முன் தீட்டப்பட்ட   சித்திரத்தை மாற்றி பசுமையான வளமையான ஆப்கானை முன் நிறுத்துகிறது நாவல்.

தூரத்திலிருந்து வார இறுதியில் வரும் தந்தை  ஜலீல் மற்றும் அவ்வூரில் வசிக்கும்  மத போதகர் ஆகிய இருவர் மட்டுமே மரியமின் வெளியுலக தொடர்புகள். 

அந்தச் சிறுமிக்கு எப்போதோ வரும் தந்தை மிக அன்பானவராகவும் அவளது தாயோ சிடு சிடுத்தவளாக தந்தை மீது அன்பற்றவளாகவும் தெரிகிறது.  மேலும் இத்தனை அன்பானவர் மீது ஏன் தாய் இத்தனை கோபத்துடன் இருக்கிறாள் என்பதும் குழப்பமாக உள்ளது.   உன் தந்தையை ஒரு போதும் நம்பாதே என்கிறாள் தாய்.  தாயின் மறைவுக்குப் பின் அந்த மத போதகர் சொல்லியும் கேளாமல் நகரத்தில் வசிக்கும் தந்தையைக் காணச் செல்கிறாள். தந்தையின் உண்மை முகம் தெரிகிறது. செல்வச் செழிப்பு மிக்க தந்தை அவளை மகளாகவே ஏற்றுக்கொள்ளவில்லை. தனது தாய் அவர் வீட்டில் வேலை பார்த்தவள் என்பதும் தானும் அவ்விதமே என்பதும் புரிந்து உடைந்து போகிறாள். 

13 வயதில் காபூலில் இருக்கும் 35 வயது ரஷீதுக்கு  திருமணம் செய்து அனுப்பிவைக்கப்படுகிறாள். ரஷீத் காட்டும் அன்பு, அரவணைப்பு அவளது குழந்தை மனதிற்கு ஆறுதலாக இருந்தாலும் அவனுடன் கழியும் இரவுகள் ஒரு துர் சொப்பனமாக இருக்கிறது. வாழப் பழகிக் கொள்கிறாள்.

அவளது வீட்டருகே வசிக்கும் சிறுமி லைலா. படித்த முற்போக்கான தந்தையின் மகளாக அதே எண்ணங்களுடனும் சுதந்திரத்துடனும் வளர்கிறாள். தாரிக் அவளது பள்ளி தோழன். இருவரின் நட்பும் அற்புதமான ஒன்று. பதின்ம வயதில் லைலா தாரிக் இருவருக்கும் காதல் மலர்கிறது. இடையில் தாலிபனுக்கு எதிரான போரில் தப்பி தாரிக் பாகிஸ்தான் செல்கிறான். 

ரஷ்ய – தாலிபன் போரில் நிலை குலைந்த காபூல் நகரில் லைலா தன் குடும்பத்தினரை இழக்கிறாள். காயமுற்ற லைலாவை மரியமின் கணவன் ரஷீத்  வீட்டிற்கு அழைத்து வருகிறான். அவளைத் திருமணம் செய்ய நினைக்கிறான். தாரிக்கை காணும் முயற்சியில் தோல்வியுறும் லைலா தன் வயிற்றில் வளரும் குழந்தைக்காக ரஷிதைத் திருமணம் செய்யச் சம்மதிக்கிறாள். முதல் குழந்தை பெண்ணாக இருப்பதால் அவளை ஏற்க மறுக்கும் ரஷீத் மற்றொரு ஆண் குழந்தைக்காக லைலாவை பலவந்தப் படுத்துகிறான். லைலா மற்றும் லைலாவின் பெண் குழந்தை ஆசிஸ் இருவரையும் அன்போடு பாதுகாக்கிறாள் மரியம். தாரிக் லைலாவை தேடி வந்ததை அறிந்த ரஷீத் லைலாவைக் கொல்ல முயற்சிக்கிறான். அவளை காப்பாற்ற மரியம் ரஷிதைக் கொல்கிறாள். அனைவரும் மரியமின் கிராமத்திற்குச் செல்கிறார்கள். லைலா, தாரிக், குழந்தைகளை வற்புறுத்தி பாகிஸ்தானுக்கு அனுப்பிவைக்கிறாள் மரியம். 

இதில் மகளின் வயதில் இருக்கும் லைலாவைத் திருமணம் செய்ய எதிர்க்கும் மரியம் லைலாவின் சம்மதத்தை அறிந்து அதிர்ந்து பின் லைலாவின் காரணம் அறிந்து அரவணைக்கும் விதமும் முதல் இரவில் ரஷீத் சந்தேகப்பட்டு விடக்கூடாது என்று அவன் உறங்கியதும் தனது கைகளை கீறி அந்த ரத்தத்தை விரிப்பில் படரவைப்பதும் அதிர்ச்சியையும் ஆயாசத்தையும் ஏற்படுத்துகிறது என்றால் தாரிக்கின் வரவை அறிந்து சந்தோஷிக்கும் லைலா ரஷிதை அலட்சியப்படுத்தி அவனுடன் முன்னறையில் அமர்ந்து பேசுவது லைலாவின் தைரியம், நேர்மை, சுதந்திரம் மற்றும் நம்பிக்கையுடன் வளர்க்கப்படும் பெண் குழந்தைகளுக்கான முன் மாதிரி.  

வீட்டை விட்டு ஓடிவந்தவள் என்ற முறையில் தாலிபன்களால் மரியம் சிறைபிடிக்கப்பட்டு மரணதண்டனை விதிக்கப்படுகிறாள். 

கொலைக்களத்திற்குச் செல்லும் மரியமின் முன் அவள் வாழ்க்கை ஒரு ட்ரைலர் போல் ஓடுகிறது. 

‘திசை காட்டும் முள் எப்போதும் வடக்கு நோக்கி இருப்பது போல் ஆண்களின் விரல் தவறுகளுக்கு எப்போதும் பெண்களை நோக்கியே சுட்டும் நினைவில் கொள்’ என்ற தாயின் வார்த்தைகள் காதில் ஒலிக்கின்றன. அவள் தனக்குள்ளே சொல்லிக்கொள்கிறாள், 

‘ஒரு முறையற்ற தொடக்கத்தின் முறையான முடிவு.’

காபூலில் நிலைமை சீரான பிறகு லைலா, தாரிக் குழந்தைகளுடன் திரும்பி வருகின்றனர்.  வழியில் லைலா மரியம் இருக்கும் ஊருக்கு அவளைத் தேடி வருகிறாள் . அவள் இல்லை. அவள் வாழ்ந்த வீடு மட்டுமே இருக்கிறது. லைலாவின் முன் மரியா செய்த பொம்மைகள் கிடக்கின்றன. வாழ்க்கையில் மிகச் சிறிய எதிர்பார்ப்புகளுடன், மற்றவர்களுக்குச் சுமையாய் இல்லாத, தனது ஏமாற்றம், வலிகள், உதாசீனம் செய்யப்பட்ட கனவுகள், ரஷீதாலும் தாலிபன்களாலும் உடைக்க முடியாத மனவலிமை. ஆதரவற்ற லைலாவின் அடைக்கலம். மரியாவின் பொம்மையை வைத்து விட்டு, மரியாவின் தந்தை ஜலீல் எழுதிய மன்னிப்பு கடிதத்துடன் திரும்புகிறாள். 

லைலாவும் தாரிக்கும் ஆதரவற்றோர் விடுதியை நிர்வகிக்கிறார்கள் லைலாவின் மகன் தாரிக்கைக் கொண்டு சுவரில் எழுதுகிறான். 

‘அழிவுகள் மீண்டும் ஏற்பட்டாலும் மீண்டு வருவோம்! துக்கம் இல்லை. மனிதர்கள் உண்டு மீட்டெடுக்க!’

கட்டுரையாளர்:

ரமா கவிதா

தீவிர வாசிப்பாளர். கவிதைகள், கட்டுரைகள் எழுதியிருக்கிறார். ஓவியத்திலும் நாட்டம் உண்டு. எதையும் ஆழ்ந்து சிந்திக்கக் கூடியவர்.