1999இன் இறுதிகளில் திருவொற்றியூரில் இருந்த வாடகை வீட்டிலிருந்து மாதவரம் அருகே சொந்த வீடு வாங்கி குடிபெயர்ந்தனர் பாத்துமாவின் காக்கா (அண்ணன்) ஜெய்லான். பாத்துமாவுக்குக்கூடப் பிறந்தவர்கள், பாத்தும்மாவோடு சேர்த்து 5 பேர். மூன்று காக்கா (அண்ணன்), ஒரு லாத்தா (அக்கா). ஜெய்லான் தான் மூத்த அண்ணன். பாத்துமா திருமணமாகி நான்கு வருடங்களில் கணவன் கைவிட, நான்கு பிள்ளைகளோடு மூத்த அண்ணன் வீட்டில் அடைக்கலமானாள்.

ஒரு சமையல் அறை, ஹால், ஒரு படுக்கை அறை கொண்ட வாடகை வீடு. பாத்தும்மாவின் வாப்பா, உம்மா, அவளின் மூத்த அண்ணன், மச்சி (அண்ணன் மனைவி) அவங்க பசங்க இரண்டு பேர் (ஒரு ஆண், பெண்), அவர்களோடு சேர்ந்து பாத்துமாவின் நான்கு பசங்க, பாத்துமா என எண்ணிக்கை அதிகமாக, அக்கம்பக்கத்தினரின் சச்சரவுகளும் அதிகமானது. இதனாலேயே பெரிய வீடாக பாக்கலானான் காக்கா ஜெய்லான்.

காலையில் பிள்ளைகளை ஸ்கூலுக்கு அனுப்பி வைத்துவிட்டு வீட்டு வேலைகளைப் பார்த்துகொண்டிருந்தாள் பாத்தும்மா.

ஸ்கூல் முடிந்து வீடு வந்து சேர்ந்த செய்யதின் முகம் வாடி இருந்தது. மகளின் தொங்கிய முகத்தை பார்த்ததும்

“என்னலா ஆச்சு, செய்யது ஏன் ஒரு மாதிரி இருக்கா?”

“எனக்கு எப்படிமா தெரியும்?” என்று பதில் சொன்னாள் அயிஷா.

“நீங்க ரெண்டு பேரும் ஒண்ணாதான படிக்கிறீங்க?”

“மா… கிளாஸ் ஒண்ணுனாலும் அவ வேற செக்ஷன் நா வேற செக்ஷன்.”

செய்யதை நோக்கி, “என்னலா ஆச்சி, டீச்சர்கிட்ட அடி எதாவது வாங்குனியா?” என்று கேட்டார் பாத்துமா.

“இல்லம்மா…”

“கூடப் படிக்கிற பசங்கக்கூட ஏதாவது சண்டையா?”

“இல்ல…”

“அப்போ என்னதா ஆச்சு?”

“சொல்லுலா… யாகூப் எங்க? பள்ளிகொடம் வேற வேறனாலும் வீட்டுக்கு வரும்போது செய்யது, ஆயிஷா, யாகூப் எல்லாம் ஒண்ணாதா வருவாங்க.?”

பாத்துமா கேட்பது காதில் விழுந்தும், பதில் கூற விருப்பம் இல்லாதது போல் உடுப்பு மாற்ற போனாள் செய்யத்.

“யாகூப் எங்க போனா?” என மறுபடியும் கிரைண்டர் சத்தத்தை மிஞ்சும் அளவுக்கு ஓங்கிய குரலில் கேட்டார் பாத்துமா.

“அவன் பிரதீப் அண்ணாகூட விளையாடிட்டு அப்படியே டியூஷன் வந்துறனு சொன்னான் என அறையில் இருந்தபடி சொன்னாள் செய்யத்.”

சாப்பிடக் கூப்பிடுவதற்குள், புத்தகப்பையை எடுத்துக்கொண்டு நான்கு தெரு தள்ளி இருக்குற டியூஷன் நோக்கி செய்யதும் அயிஷாவும் நடக்க ஆரம்பித்தனர்.

“என்ன? இந்தப் பொண்ணு சாப்பிடவும் இல்ல, எதுவும் சொல்லாம இப்படிப் போகுதே” என்று சொல்லிவிட்டு, கிரைண்டரில் அரைத்திருந்த மாவைச் சட்டியில் வழிக்கத் தொடங்கினார் பாத்துமா.

டியூஷனுக்குச் சென்றிருந்தவர்கள் இஷா (இரவு) தொழுகைக்கு வாங்கு ஒலிப்பதற்கு முன்பே வீட்டை அடைந்தனர்.

“ஸ்கூல் முடிச்சிட்டு வந்துதா சாப்பிடல, இப்பவாவது சாப்பிட வா” என்று தட்டில் சாப்பாடு போட்டு, கூப்பிட்டுக்கொண்டிருந்தார் பாத்துமா.

சாப்பாட்டுத் தட்டைப் பார்த்ததும், “நம்ம வீட்ல இன்னைக்குக் கறியா?” என்று கேட்டாள் அயிஷா.

“ஆமா…”

“என்ன கறிம்மா?”

“பெரிசு (மாட்டுக் கறி)”

“நம்ம வீட்ல இன்னைக்கு மாட்டுக் கறி, சாப்பிட வா” என்று செய்யதை சத்தமாகக் கூப்பிட்டாள் ஆயிஷா.

“இப்படிச் சத்தம் போட்டு ஊரையே கூப்பிடாத, அக்கம்பக்கத்துல இருக்குறவங்கலாம் இந்துக்கள். தப்பா நினைப்பாங்க” என்றார் பாத்துமா.

எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் சாப்பிட்டுக்கொண்டிருந்த செய்யது பக்கத்தில் போய் நின்று என்ன ஆனது என்று விசாரிக்க ஆரம்பிக்கும் போது, பாத்துமாவின் காக்கா வீட்டிற்குள் நுழைந்தார்.

“என்ன… என்ன… பேசிட்டு இருக்கீங்க அம்மாவும் பொண்ணும்?”

அண்ணங்காரன் உள்ளே வந்ததைப் பார்த்ததும், “உங்க மாமா வந்துட்டாரு, அவுரு கேப்பாரு சொல்லு” என்றார் பாத்துமா.

பாத்துமா காக்காவையும் சாப்பிட வருமாறு அழைத்தார்.

தண்ணீர் வற்றாத குறையாக அம்மா கேட்டபோது எல்லாம் பேசாத செய்யத், மாமா என்னவென்று கேட்டவுடனே பேசத் தொடங்கினாள்.

“ஸ்கூல்ல டீச்சர் என்ன கூப்டாங்க. நா போய் நின்னேன். டீச்சரு என் பேர கேட்டாங்க. நா செய்யது அலி பாத்திமானு சொன்னேன். உடனே, ‘அவங்களா நீங்க?’னு கேட்டாங்க. அப்டினா என்னங்குற மாதிரி அமைதியா முழிச்சிட்டு நின்னேன். ‘அலி’னா என்னனு தெரியுமானு கேட்டாங்க. நா தெரியாதுனு சொன்னேன். என்னைய அனுப்பிட்டு பக்கத்துல இருக்கற டீச்சர்கிட்ட ஏதோ சொல்லி சிரிச்சாங்க. ஏன் மாமா அப்டி பண்ணாங்க…”

“அது ஒண்ணுமில்ல நம்ம முஸ்லிம்க பேரு சட்டுனு அவங்க வாய்ல நுழையாதுல அதனாலதான். மத்தபடி ஒண்ணுமில்ல” என்று சொல்லி அனுப்பிவிட்டார் மாமா.

அடுத்த நாள் எப்போதும் போல பள்ளியில் பெண்களோடு விளையாடிக்கொண்டு இருந்தாள் செய்யது. அப்போது ஒரு பெண், “நீங்க முஸ்லிமா?” என்று செய்யதைப் பார்த்துக் கேட்க, அவளும் ஆமாம் என்றாள்.

“பாத்தா அப்படித் தெரியலே.”

“ஏன்?”

“முஸ்லிம்கனா வெள்ளையா இருப்பாங்களே?”

செய்யது எதுவும் பேசாமல் அமைதியாக ஆட்டத்தைப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

“இந்தி பேசுவீங்களா?”

“இல்ல.”

“உருது?”

“இல்ல தெரியாது. நா தமிழ்தான். எங்க வீட்லயும் தமிழ்தான் பேசுவோம்.”

“முஸ்லிம்க இந்திதானே பேசுவாங்க, உனக்கு ஏன் தெரியல?”

“இல்ல, எனக்குத் தமிழ்தான் தெரியும்”

இருவரும் விளையாட்டைத் தொடர்ந்தனர்.

பாத்துமாவின் மூத்த மகன் யாகூப் படிக்கிறதிலும் விளையாட்டிலும் கெட்டிகாரன்.

காலையில் நல்லபடியாகப் பள்ளிக்குப் போன யாகூப், பரட்டைத் தலையோடு கலைந்த சட்டையோடு மஹ்ரிப்புல (மாலையில்) வீட்டுக்கு வந்தான்.

யாகூப் அலங்கோலமாக வந்ததைப் பார்த்த பாத்துமா பதறிப் போய், “என்னடா ஆச்சி?” என்று கேட்டார்.

“மோவ்… நம்மல்துல மட்டும் ஏம்மா சுன்னத் பண்றாங்க?”

“மூஸ்லிம்னா பண்ணிதான் ஆகணும். அது நம்மளோட கடம.”

“எங்கூட படிக்குறவங்களும் என்ன மாதிரி பசங்கதான. அவங்க பண்ணல, நா மட்டும் ஏன் பண்ணணும்? அந்தப் பசங்க உங்களுக்கு குஞ்ச பாதி கட் பண்ணிருவாங்களாமே… உனக்கு எப்படி இருக்கு காட்டுனு இம்ச பண்ணிட்டாங்கமா… அதனால அவங்களோட சண்ட போட்டேன். அப்போ பிரதீப் வந்துதா எனக்கு சப்போர்ட் பண்ணி அவனுங்கள விரட்டிவிட்டாம்மா…”

“அப்டியா… நாளைக்கு உங்க டீச்சர்கிட்ட பேசுறேன்.”

“வேண்டாம்மா… அப்புறம் டீச்சர் எல்லார் முன்னாடியும் என்ன நிக்கவெச்சி என்ன நடந்துச்சினு கேப்பாங்க. வேண்டாம்மா” என்று சொல்லிவிட்டு விளையாடக் கிளம்பினான்.

பாத்துமா குடும்பம் வசிக்கிறது சென்னை. அதிலும் இவர்கள் இருக்கிறது முஸ்லிம்கள் அதிகம் இல்லாத இடம். அதனால் பக்கத்து வீட்டில் இருக்கறவர்கள் எல்லாரும் நல்ல பழக்கம். எந்த இந்துப் பண்டிகை வந்தாலும் பலகாரத் தட்டு வீடு தேடி வரும். கூட்டுக் குடும்பம் என்பதால் தட்டை நிறைத்துவிடுவார்கள். அது மாதிரி ரம்ஜான், பக்ரீத் என்றால் எல்லார் வீட்டுக்கும் பிரியாணி போய்ச் சேந்துவிடும். பக்கத்தில் இருக்குற ஐயர் வீட்டைத் தவிர.

எப்போது கிரிக்கெட் மேட்ச் நடந்தாலும் யாகூப், பிரதீப் வீட்டில்தான் பாப்பான். அவன் அதிகமா இருக்கறது பிரதீப் வீட்டில்தான். ஒவ்வொரு சிக்ஸுக்கும் ஒரே அமர்க்களம்தான். யாகூப் யார் நல்லா விளையாடினாலும் கைதட்டி சந்தோஷமாக இருப்பான். கிரிக்கெட் என்றால் அவ்வளவு பிடிக்கும் அவனுக்கு. கிரிக்கெட்டும் நல்லா விளையாடுவான்.

ஆனால் இந்தியா – பாகிஸ்தான் மேட்ச் வந்தால் மட்டும் அமைதியாகிவிடுவான். ‘எங்க பாகிஸ்தான்காரன் சிக்ஸ் அடிச்சி, அதுக்கு நம்ம கைதட்ட, நீங்க அவங்க ஆளுங்கதானே அதான் சப்போர்ட் பண்றன்’ என்று யாராவது சொல்லிவிடுவார்கள் என்கிற பயம் அவனுக்கு.

சென்னையே பரபரப்பாக இருந்தது. எல்லார் வீட்டு டீவியிலும் ‘கோவையில் குண்டுவெடிப்பு’ என்று நியூஸ் சேனல்தான் ஓடியது.

வீட்டு வாசலில் கணேசன் மாமாவும் ஜெய்லான் மாமாவும் பேசிக்கொண்டிருந்தனர்.

“எங்கேயோ எதுக்கோ குண்டுவெடிச்சா ஏன் எல்லா முஸ்லிம்களையும் சந்தேகப் பார்வையோட பாக்குறாங்க? பஸ்டாண்டுல, ரயில்வே ஸ்டேஷன்ல அதிகமா முஸ்லிம்களதான் செக் பண்ணி அனுப்புறாங்க. முஸ்லிம் இல்லாதவங்க யாரும் குண்டு வைக்கமாட்டானா? முஸ்லிம் யாராவது போய் வீடு கேட்டால், வீடு கிடையாது என்று சொல்றாங்க. இது எங்க நாடுதானே, இந்த நாட்டு மேல எங்களுக்கும் அக்கற, பற்றில்லையா? இந்தியா விடுதலையயானப்போ அதிகமா முஸ்லிமும் அதுல பங்கெடுத்துகிட்டாங்கதானே? ஆனா, ஏன் முஸ்லிம வேத்து நாட்டுகாரன மாதிரி பாக்குறாங்க?”

“பாய், நீ சொல்றது கரக்டுதா. எதாவது பெரிய பிரச்சன வந்தா நம்பள மாதிரி ஒண்ணுயில்லாத அப்பாவி ஆளுங்களதா பிடிப்பானுங்க இந்த போலிஸ்காரங்க. தப்பு செஞ்சது யாருனும் அவங்களுக்குத் தெரியும். தெரிஞ்சிதா அப்டி பண்றாங்க. இந்தியாவுல முஸ்லிமா இருக்குறவனுக்கு தேசபக்தி இருக்குதான்னு பாக்குறதுதா இவனுங்க வேல. போ பாய், நீ போய் வேலையப் பாரு” என்று போலிஸ்காரர்கள் சொன்னார்கள்.

“முஸ்லிம்கிறதால நாங்க தேச விரோதி ஆய்டுவோமா?” என்று தனது ஆதங்கத்தை வெளிபடுத்திவிட்டு, தனது வேலையைப் பார்க்கக் கிளம்பினார் ஜெய்லான்.

படைப்பாளர்:

மை. மாபூபீ, சென்னைப் பல்கலைக்கழகம் இதழியல் மற்றும் தொடர்பில் துறையில் முனைவர்பட்ட மாணவி. அரசியல், சமூகம் பெண்ணியம் சார்ந்த கட்டுரைகளை எழுதிவருகிறார். தீக்கதிர் நாளிதழ், கீற்று, Thenewslite போன்ற இணையதளங்களில் கட்டுரைகள் வெளிவந்திருக்கின்றன.