தென் பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள ஒரு தீவு நாடு ‘வனுவாட்டு’. மூன்று லட்சத்திற்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட ஒரு நாட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட பழங்குடி மொழிகள் பேசப்பட்டு, உலகிலேயே மிகவும் மொழியியல் பன்முகத்தன்மை கொண்ட நாடாக விளங்குகிறது வனுவாட்டு. ஆனால், ஒரு மொழி அங்குள்ள அனைத்துக் கலாச்சாரங்களையும் ஒன்றிணைக்கிறது. அது ஒரு தண்ணீர் பறை இசையின் மொழி (Water drummers of Vanautu islands). வனுவாட்டுவின் பழங்குடி இனத்தைச் சேர்ந்த பெண்களின் குரல்களுடன் சேர்ந்து, ஒரு தாள அமைப்பில் ஒன்றாக நகர்த்தப்படுகிறது இந்தத் தண்ணீர் பறை இசை.
உலகில் வேறெங்குமில்லாத வனுவாட்டுவின் தண்ணீர் பறை இசை, மனதை மயக்கும் ஒலி மற்றும் காட்சி அனுபவம். பாடல்கள் நீரின் மேற்பரப்புக்கு ஏற்ப கைகளால் நிகழ்த்தப்படுகின்ற பல்வேறு இயக்கங்களின் தொகுப்பு. நீரைத் தெறித்தல், அறைதல், சுழற்றுதல், கடைதல் என்று பல உத்திகளைக் கையாண்டு இசையை எழுப்புகிறார்கள்.
அவர்களின் சிரித்த முகங்களில் உள்ள மகிழ்ச்சியான வெளிப்பாடைப் பார்க்கும் போது அவர்களின் ஈடுபாடும் ரசனையும் ஒரு விதமான சுதந்திர உணர்வும் வெளிப்படுகிறது.
வனுவாட்டுவின் தொலைதூர வடக்கில் டோர்பா மாகாணத்தில் பேங்க்ஸ் தீவுகள் உள்ளன. யுனெஸ்கோ அறிக்கையின்படி, டோர்பா தீவுகள், சாலமன் தீவுகளின் பெண்கள் பல நூற்றாண்டுகளாகத் தண்ணீரை இசை நோக்கங்களுக்காகப் பயன்படுத்தியுள்ளனர். பாட்டியிலிருந்து தாயுக்கு, பின்பு தாயிடமிருந்து மகளுக்கு என்று இந்தத் தண்ணீர் பறை இசை ஒரு பாரம்பரியமாகவே மாறியுள்ளது. பெண்கள் பொழுதுபோக்கிற்கும் ஒரு விளையாட்டாகவும் ஆரம்பித்த இந்தக் கலை பல நூற்றாண்டுகள் வரை சிறப்பு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. 1983ஆம் ஆண்டில், மேற்கு குவாவைச் சேர்ந்த மதௌலி ரோவோன் என்ற பெண், ஆற்றில் சலவை செய்யும் போது தண்ணீர் பறை இசையை மீண்டும் கண்டுபிடித்தார் என்று கூறப்படுகிறது.
அமைதி, மரியாதையின் அடிப்படையில் இந்தக் கூட்டு வெளிப்பாடு வனுவாட்டு பெண்களுக்கும் கடலுக்கும் இடையிலான இணைபிரியா உறவை எடுத்துக்காட்டுகிறது. இந்தச் செயல்முறையின் மையத்தில் தாளங்களின் இசை மிகுந்த சக்தி வாய்ந்ததாக இருக்கிறது.
“எங்கள் வாழ்நாளில், பசிபிக் மற்றும் உலகின் பிற பகுதிகளிலும் எங்கள் வாழ்வாதாரத்தின் அடித்தளத்தை அச்சுறுத்தும் வகையில் தாக்கங்கள் ஏற்பட்டுள்ளது” என்கிறார் நீர் நடனக் கலைஞர்.
இந்தச் சடங்கு நிலத்திற்கும் மக்களுக்கும் இடையிலான இணைபிரியா உறவைக் காட்டுகிறது. காலநிலை மாற்றம் பல வழிகளில் அந்தச் சமநிலையைச் சீர்குலைக்கும் சக்தி வாய்ந்தது. அதே வேளையில், இயற்கையைப் புனிதமாகப் பார்ப்பது வாழ்க்கையின் பார்வை மட்டுமல்ல, வாழ்க்கை முறையாகவும் உள்ளது.
பசிபிக் தீவு நாடுகளுக்குக் கடலைக் காட்டிலும் மக்களின் வாழ்க்கையோடு நெருக்கமாகப் பிணைந்த நீரோடை வேறு எதுவும் இல்லை.
ஆண் ஆதிக்கம் நிறைந்த சமூகத்தில், தண்ணீர் பறை அடிப்பது ஒரு பெண்ணின் கதையைச் சொல்லும் சிறந்த வழியாக இருக்கிறது.
தீவுகளின் பொருளாதாரம் மீன்பிடித்தலை அடிப்படையாகக் கொண்டது. மீன்பிடி தொழில் பெண்களுக்குத் தடை செய்யப்பட்டுள்ளது. தண்ணீர் பறை இசைக் குழு நிகழ்ச்சிகளிலிருந்து பணம் ஈட்டப்படுவதால் , சமூக மற்றும் பொருளாதாரத் துறைகளில் பெண்களை மேம்படுத்துவதற்கு ஒரு சிறந்த வழியாக அமைகிறது.
“நாங்கள் உருவாக்கியுள்ள எங்கள் சாம்ராஜ்யத்தில் குழுவினருடன் தொடர்புகொள்வதற்குப் பயனுள்ள, சமநிலையான ஒரு பாதையை நாங்கள் கண்டுபிடித்துள்ளோம்” என்கிறார் லெவெட்டன் இசைக் குழுவின் நிறுவனர் ஹில்டா ரோசல் வேவல்ஸ்.
இந்தக் கலாச்சாரப் பாரம்பரியத்தைப் பயன்படுத்தி, மெர்லவா தீவுகளில் இருக்கும் பெண்களுக்குத் தொழில் முனைவோர் வாய்ப்புகளை உருவாக்க உழைத்துள்ளார் ஹில்டா.
லெவெட்டன் குழு இப்போது வனுவாட்டுவில் மிகவும் பிரபலமாக உள்ளது. உலகின் பிற பகுதிகளில் திருவிழாக்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளில் இசை நிகழ்ச்சிகளை நடத்துகிறது .
உலக வரைபடத்தில் இருக்கும் வனவாட்டு தீவு என்ற ஒரு சிறிய புள்ளியைச் சுற்றியும் தண்ணீர் உள்ளது. அதைத் தங்கள் வீடாக மாற்றிக் கொண்ட இந்தப் பெண்களுக்கு, வாழ்க்கையின் ஒவ்வொரு படியிலும் தண்ணீர் ஒரு மாபெரும் சக்தியாக அமைந்துள்ளது.
பெண்களாகிய நாம் நம் கதைகளைச் சொல்லும் செயல்பாட்டில் ஆண்கள் ஆதிக்கம் செலுத்தியதாலோ என்னவோ நம்முடைய வீரமும் விவேகமும் அமைதி மற்றும் மரியாதையின் கூறுகளுக்குள் பல நூற்றாண்டுகளாக அடங்கிப் போய் இருந்திருக்கிறது. இப்போது பெண்கள் எழுந்து நின்று பாடுகிறார்கள், நடனமாடுகிறார்கள், இதுவரை ஆண்களால் மறைக்கப்பட்ட தங்கள் உண்மையான கதைகளைச் சொல்கிறார்கள், நீர் தாயின் பேராதரவுடன் !
பெண்கள் தங்கள் கதைகளை வேறு எப்படியெல்லாம் சொல்ல வேண்டியிருக்கிறது என்பதை அடுத்த கட்டுரையில் பார்க்கலாம்.
(தொடரும்)
படைப்பாளர்:
சித்ரா ரங்கராஜன்
கட்டிடக் கலை மற்றும் உட்புற வடிவமைப்பாளராக சென்னையில் தன் கணவருடன் நிறுவனத்தை நடத்திவருகிறார். ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதுவதை ஆர்வமாகக் கொண்டுள்ளவர். புத்தகங்களுக்குப் படங்கள் வரைவதிலும் நாட்டம் கொண்டவர். பெண்ணியச் சிந்தனையில் மிகுந்த ஆர்வமுள்ளவர். ஒருவரின் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவதில் ஓர் எழுத்தாளருக்கு முக்கியப் பங்குண்டு என்பது இவருடைய வலுவான கருத்து.