மதுமிதா

வெளிர் நீல வண்ண வானத்தில் பஞ்சுப் பொதிகளைப் போல மேகங்கள் மெள்ள நகர்ந்து கொண்டு இருந்தன. 

எங்கோ அதல பாதாளத்தில், கீழே, நீலம் கலந்த பச்சை வண்ணப் பின்னணியில், ஒரு நீண்டு வளைந்த வெண்ணிற கோடு கிழித்தது போல பொதிகை மலையில் குற்றால அருவி பொழிவது தெரிந்தது. அந்த வளைவுப்பகுதி பொங்குமாங்கடலில் அருவி விழுந்து எழும் இடமாக இருக்கலாம்.

விமானம் மேலே மேலே சென்றது.

பறவைகள் எதுவும் இந்த உயரத்துக்கு வரவில்லை. வந்ததாகவும் தெரியவில்லை.

சட்டென நிறம் மாறி கருமேகங்கள் சூழத் தொடங்கியதும்,  மழை வந்துவிடுமென்று, மேகங்களுக்கு மேலே விமானத்தைச் செலுத்தினாள் சுரேகா.

இப்போது விமானத்துக்குக் கீழே மேகக் கூட்டங்கள்.

விமானத்தை ஓட்டிக்கொண்டிருந்த சுரேகாவுக்கு லேசாக தலை வலிப்பது போலிருந்தது. இன்னும் ஒரு மணி நேரத்தில் மெட்ராஸுக்குப் போய்விடுவோம் என்று சின்னதாக மனதுக்குள் பாடலை ஓட விட்டாள். 

‘அம்மா
வானிலே மண்ணிலே நீரிலே பூவிலே
எல்லாம் நீ தானம்மா செல்வம் நீ தானம்மா
உன் மார்பிலே என்னைத் தாலாட்டம்மா
உன் மடியிலே என்னை சீராட்டம்மா’
என்று மெல்ல வாயைத் திறந்து பாடவும் ஆரம்பித்தாள். அம்மா என்று முடிப்பதற்குள்…

கிராபிக்ஸ்: பிரபு

சட்டென்று தொடையில் ஒரு அடி விழுந்தும் திடுக்கிட்டு விழித்தாள் சுரேகா. மெல்ல எழுந்து உட்கார்ந்தாள். இரு கையாலும் கண்களை கசக்கிக்கொண்டு கண்களைத் திறந்து பார்த்தாள். 

நீல வானம் இல்லை. மேகக்கூட்டங்கள் இல்லை. விமானம் இல்லை. தலையணையிலிருந்து நழுவி கீழே கால் வேறு தலை வேறாக படுத்திருந்ததால், போர்த்தியிருந்த பெட்ஷீட் எங்கோ போய்க்கிடந்தது.

 “எழுந்திரு சுரேகா. ஆறு மணி ஆச்சு”, பாட்டி தான் அவளை எழுப்பினார்.

‘அச்சச்சோ’ என்று அவசரமாக எழுந்த சுரேகா, பாட்டியுடன் கிளம்பிப் போகத் தயாராக வீட்டின் பின்பக்கம் ஓடினாள்.

ராத்திரியே ராமம்மாள் பாட்டி சொல்லி இருந்தார்.  “நாளைக்கு கார் டிரைவர் வரல. அதனால நாம குற்றாலத்துக்கு பஸ்சில் போகணும். சீக்கிரம் எழுந்துக்கோ. குளிச்சிட்டு வந்து சாப்பிட்டுட்டு, ஸ்கூலுக்கு வேற போகணும்”

“சரி பாட்டி” என்றவள் மறந்தே போய்விட்டாள். 

தாத்தா ஊரில் இல்லை. கூப்புக்குப் போயிருந்தார். ராமசாமி தாத்தா இங்கே இருந்திருந்தால் காலையில் சீக்கிரம் எழுந்திருந்திருப்பாள்.

தாத்தா அதிகாலை நான்கு மணிக்கு எழுந்து கையில் பாடல் புத்தகத்தை எடுத்து வைத்துக்கொண்டு, முருகன் மீதான பக்திப் பாடல்களைப் பாட ஆரம்பிப்பார். பின்னர் ரெகார்ட் ப்ளேயரில் சூலமங்கலம் சகோதரிகளின் கந்தர் சஷ்டி கவசம், அதரம் மதுரம் எனப் பாடல்கள் தொடரும். பாடல்களைக் கேட்டுக்கொண்டே தூங்கினாலும் மனப்பாடமாய் வாய் முணுமுணுக்கும். 

தென்காசியில்தான் பாட்டி வீட்டில் இருந்து எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தாள் சுரேகா.  சிறுவயது வாழ்க்கை விளையாட்டும் படிப்புமாக ஓடிய வாழ்க்கை. வீட்டுக்குப் பின்புறம் இருக்கும் பள்ளிக்கு, மணிச்சத்தம் கேட்டதும் பின்புற வாசல் வழியாக இரண்டு நிமிடத்தில் ஓடியே போய் விடலாம். 

பாட்டி சுரேகாவின் கையைப் பிடித்துக்கொண்டு வேகமாக பஸ் ஸ்டாண்டுக்குப் போனார். குற்றாலத்துக்குப் போக பஸ்சில் ஏறியதும் மறுபடியும் உறக்கம் வந்துவிட்டது சுரேகாவுக்கு. கனவில் மறுபடியும் விமானத்தில் பறந்து கொண்டிருந்தாள்.

வீட்டின் பின்னால் இருந்த மஞ்சம்மாள் பள்ளியில் தான் ஆறாம் வகுப்பு முதல் படிக்கிறாள். பள்ளி மைதானத்தில் ஒருமுறை சர்க்கஸ் வித்தையை நாடோடிகள் சிலர் நடத்திக் காட்டினார்கள். அதைப் பார்த்ததிலிருந்து சுரேகா சாகசம் செய்யும் சர்க்கஸில் சேர்வேன் என்று சொல்லிக்கொண்டாள். 

பள்ளியில் சர்க்கஸ் காட்டிய சிறுமி ஒரு நான்கு கால் ஸ்டூலில் ஏறி நின்று பின்புறமாக வில்லாக வளைந்து ஸ்டூலைத் தொட்டாள். பிறகு ஸ்டூல் மேல் மூன்று பாட்டில்கள் வைக்கப்பட்டன. அதன் மேல் முக்காலி நிறுத்தி வைத்து, அதன் மேல் ஏறி நின்று வில்லாக வளைந்தாள். மாணவிகள் எல்லோரும் கை தட்டினார்கள். 

பிறகு ஒருவாரம் பள்ளிக்கு அரை மணிநேரம் முன்னாலேயே வந்து இந்த ப்ராக்டிஸ்தான். சுவர் அருகே நின்றுகொண்டு கையை பின்னால் கொண்டு சென்று சுவரில் ஊன்றி கொஞ்சம் கொஞ்சமாக வளையப் பழகி 15-ம் நாள், வளைந்து தரையைத் தொட்டவுடன் ஏற்பட்ட மகிழ்ச்சி. திறமை இல்லை என்றாலும் முயற்சி கற்றுக் கொடுக்கும் என்பதை முதன்முதலாக கற்றுக் கொண்டநாள் அது. 

பிறகு வாழ்க்கையில் விளைந்த எல்லாமே கடின முயற்சியை விளையாட்டாகச் செய்யப் பழகியதால் ஏற்பட்ட விளைவே. 

பள்ளியின் ஊஞ்சல் தொங்கும் கம்பியில் ஒரு பக்கமாக தொத்தி ஏறி,  நடுகம்பி பாரில் ஒரு கைவிட்டு ஒரு கையால் பிடித்து நகர்ந்தபடி அடுத்த கம்பியின் வழியாக இறங்கி வரும் சாகஸக்காட்சிகள் வீட்டில் புகார்காட்சிகள் ஆக்கப்பட்ட பிறகு சர்க்கஸ் ஆசை தொடரவில்லை.

வீட்டு வாசலில் இரு புறமும் சின்ன தூண் போல கம்புகள் ஊன்றப்பட்டு இருக்கும். ஒரு தூணில் ஏறி சன்ஷேடுக்கு நீட்டப்பட்டிருக்கும் பக்கச்சுவரில் கை மாற்றி கை மாற்றி வைத்து நகர்ந்து போய் இன்னொரு தூணில் இறங்குவாள்.

குரங்கு வித்தை செய்வதைப் பார்ப்பதைப் போல சித்திகளும் மாமாக்களும் சுரேகாவைப் ஆச்சரியமாகப் பார்த்துச் சிரிப்பார்கள். கை காலை உடைத்துக்கொள்ளக் கூடாது என்று தடுத்து விட்டார்கள். அம்மாவுடன் பிறந்தவர்கள் இரண்டு அண்ணன், ஒரு தம்பி என்று மூன்று சகோதர்களும், மூன்று சகோதரிகளும். அம்மா மூத்த மகள்.

வீட்டிலிருந்து நான்கு கடைகள் தள்ளி பாக்கியலட்சுமி தியேட்டர். கடையின் உள்புறத்து காம்பவுண்ட் சுவரும் தியேட்டர் காம்பவுண்ட் சுவரும் ஒன்று என்பதால் கடையின் பின்புறம் அந்த சுவரின் அருகில் நின்றால் போதும். எல்லா வசனங்களும் பாடல்களும் கேட்கும்.

தென்காசி சுரேகாவுடைய அம்மா பாக்கியலட்சுமியின் அம்மா ஊர் என்பதால் அவள் அங்கே பிறந்தாள். 

விபரம் தெரிந்த நாளிலிருந்து எட்டாம் வகுப்பு படிக்கும் வரையில் தென்காசி பாக்கியலட்சுமி தியேட்டரில் வெளிவந்த அத்தனை படங்களையும் ஒரு படம் விடாமல் குழந்தைகள் பார்த்து விடுவார்கள். அதுவும் பாடல் வரும் நேரம் பார்த்து ஓடிப்போய் பாட்டை மட்டும் கேட்டுவிட்டும் வீட்டுக்கு ஓடி வந்துவிடுவிடுவார்கள். தினமும் இது நடக்கும். இப்பிடி எப்போது வேண்டுமானாலும் போய் பார்த்து வருவதற்கு ராமசாமி தாத்தா வீட்டுக் குழந்தைகளுக்கு ஸ்பெஷல் பெர்மிஷன் உண்டு. அதனால் அந்தக்காலத்தில் வெளிவந்த எல்லா சினிமா பாடல்களும் சுரேகாவுக்கு மனப்பாடம்.

தென்காசி பாக்கியலட்சுமி தியேட்டரில் ஆப்பரேட்டர் ரூமுக்கு சர்வ சுதந்திரமாக குழந்தைகள் போகலாம். படம் ஆரம்பிப்பதற்கு முன்பு நியூஸ் ரீல் போடுவார்கள். அப்போது ஒரு பெண்மணி பைலட் ஆகி விமானம் ஓட்டியதைக் காட்டியதிலிருந்து சுரேகாவுக்கு விமானம் ஓட்டுவேன் என்னும் நினைவே லட்சியமானது. இடைவேளைகளில் ஸ்லைட் போடுவார்கள். சுரேகா சென்று ஸ்லைட் மாற்றிப்போட்டிருக்கிறாள். அவளுடைய பைலட் ஆகும் ஆசை ஸ்லைட் போட்டதோடு நின்று விட்டது. அதுதான் கனவாக வந்திருக்க வேண்டும்.

குற்றாலத்தில் குளித்து விட்டு வீட்டுக்குத் திரும்பியதும், பள்ளிக்குப் போய் விட்டாள்.

சாயந்திரம் வீட்டுக்கு வரும்போது, வீட்டில் சிறுவர்கள் சிறுமிகள் விளையாடும் சத்தம் குதூகலமாகக் கேட்டது. 

பாட்டியின் அண்ணன் மகள்களின் குழந்தைகள் வந்திருந்தனர்.

பெரிய தாய்மாமன் சுப்பிரமணியன் மாமாவுக்கு தேனியிலிருந்து பெண் எடுத்திருந்தார்கள். ஜான்ஸி அத்தை பாட்டியின் அண்ணா மகள்தான். சுரேகாவிடம் ரொம்பவும் பிரியமாக இருப்பார். அவர்களின் குழந்தைகள் சுஜா, லதாவோடு படிக்க விளையாட சுரேகாவுக்கு மிகவும் பிடிக்கும். பனையூரிலிருந்தும், தேனியிலிருந்தும் ஜான்ஸி அத்தையின் சகோதரிகளின் குழந்தைகளும் வந்திருந்தனர்.

சந்தோஷமாக உள்ளே ஓடி வந்த சுரேகாவை நிறுத்தி பத்மாக்கா இங்கே வா என்றார். பக்கத்தில் இருந்த ராதாக்காவும் சேர்ந்து இருவரும் ஒன்று போல கேட்டனர்.

சுரேகா என்ன காதுல வளையத்தைக் காணோம்?

காதைத் தொட்டுப் பார்த்த சுரேகாவுக்கு திக்கென்று இருந்தது. ஆமாம் வளையத்தைக் காணோம். பள்ளிக்கூடத்திலும் யாரும் சொல்லலியே. இன்னிக்கும் குற்றாலத்தில் வளையத்தை தொலைத்து விட்டோமா. போச்சு. நாளைக்கு புளியங்குடியில் இருந்து அப்பாவும் அம்மாவும் வந்தால் அவ்வளவுதான். முதலில் இதைத்தான் சொல்வார்கள். சுரேகாவுக்கு முகம் வாடிப்போனது. 

முதல்ல சாப்பிடு. பிறகு இவங்களோடு விளையாடலாம் என்று பத்மாக்கா உள்ளே போகச் சொன்னார். சித்திகளை அக்கா என்று சொல்லியே பழக்கமாகி விட்டது. 

அடுக்களைக்குள் போனதும், நெல்லையப்பன், ‘என்னம்மா வடை சாப்பிடறயா?’ என்றார். கண்களில் அழுகை முட்டிக்கொண்டு வந்த சுரேகாவைப் பார்த்து, என்ன சுரேகா? என்றதும்,

 “நெல்லையப்பா.., காதுல ஒரு வளையத்தைக் காணும். இன்னிக்கும் குற்றாலத்தில் தொலைச்சுட்டேனா? நாளைக்கு அம்மா வந்தால் திட்டுவாங்களா?” என்றவளைப் பார்த்து, சிரித்தபடி, சரி சுரேகா இப்போ நீ சாப்பிட்டு விளையாடப்போ, அப்புறம் பார்த்துக்கலாம். யாரும் ஒண்ணும் சொல்ல மாட்டாங்க என்றார். 

அப்படியா என்று கண்களைத்துடைத்து விட்டு கை கழுவிவிட்டு வந்தவள் என்ன வடை என்று கேட்டாள்

உனக்குப் பிடிச்ச ஆமை வடை தான், எல்லாரும் சாப்பிட்டாச்சு நீ மட்டும் தான் சாப்பிடல. ஏன் லேட்டு என்றார் நெல்லையப்பர். 

இன்னிக்கு கேம்ஸ் பீரியட் ப்ராக்டிஸ் இருந்தது என்ற சுரேகா 

வேகமாக ஒரு வடை மட்டும் சாப்பிட்டுவிட்டு குழந்தைகளுடன் விளையாடப் போனாள்.

அதற்குள் பாட்டி வந்து,  “எல்லா குழந்தைகளும் மாடிக்குப் போயிருக்கிறாங்க. யாரும் கீழே வர வேணாம்னு சொல்லி இருக்கிறேன். நீயும் அவங்ககூட இரு. நாங்க சொன்ன பிறகு கீழே வந்தால் போதும். சத்தம் போடாம படிங்க. இல்லைன்னா உக்காந்து விளையாடுங்க” என்றார்.

சுஜா, லதாவுடன், விஷ்ணு, கீதா, கேசவா, சுரேஷ், வெங்கடேஷ், சரவணா என்ரு எல்லோரும் மாடி அறையில் குழுமி இருந்தனர். மொட்டை மாடியில் எல்லோருடனும் சேர்ந்து விளையாடலாம் என்று போனவள் திகைத்து நின்றாள். 

நடுவில் விஷ்ணு உட்கார்ந்திருக்க. எல்லா குழந்தைகளும் அவனுக்கு எதிரில் அவனைச் சுற்றி ரகசியம் பேசுவது போல உட்கார்ந்திருந்தனர். அவன் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தனர். 

சுரேகாவும் மெல்ல அவர்களுடன் சேர்ந்து உட்காரப் போனாள். அதற்குள் கேசவன் அய்யோ பேய் என்று கத்த, எல்லா குழந்தைகளும் பேய் பேய் என்று கத்த ஆரம்பித்தனர். சுரேகாவுக்கு ஒன்றும் புரியவில்லை. 

கீழே இருந்து, “என்ன அங்கே சத்தம்.  அமைதியா இருங்க. மாடிக் கதவை மூடுங்க. கீழ வரைக்கும் சத்தம் கேட்குது” என்று பாட்டி சொன்னது கேட்டது.

சுஜா மாடியிலிருந்து கீழே போகும் கதவை மூடினாள். 

இப்போது விஷ்ணு மொட்டை மாடிக்குப் போகும் கதவை மூடச் சொன்னதும், கேசவன் அந்தக் கதவை மூடினான். எல்லோரும் விஷ்ணுக்கு அருகில் போய் உட்கார்ந்தனர். 

விஷ்ணு மெதுவாக, வாயில் கையை வைத்து அமைதியாக இருக்கும்படி ஜாடை காட்டிவிட்டு, திறந்திருந்த ஜன்னலைக் காட்டினான். கொஞ்சம் கொஞ்சமாக ஒளி மறைந்து இருட்டிக்கொண்டு வந்திருந்தது. அந்த இருட்டில் ஜன்னல் வழியாக ஒரு தலை தெரிவது போலிருந்தது. 

கதவைத் திற கதவைத் திற என்ற குரல் கேட்டதும், எல்லா குழந்தைகளும் ஒரே குரலில் அய்யோ பேய் என்று கத்தினர்.

(தொடர்வோம்…)

படைப்பாளர்

மதுமிதா

மதுமிதா

மதுமிதா என்னும் பெயரில் எழுதிவரும் கவிதாயினி மதுமிதா ராஜபாளையத்தில் வசிக்கிறார். சுதந்திரப் போராட்ட தியாகி, காந்தி அரங்கசாமிராஜா அவர்களின் பேத்தி.

எம்.ஏ ஆங்கில இலக்கியம், டிப்ளமோ இன் போர்ட்போலியோ மேனேஜ்மெண்ட் ஆகியவை கற்றவர். தமிழில் பல நூல்கள் படைத்துள்ள இவரின் தாய்மொழி, தெலுங்கு. ஹிந்தி பிரவீன்உத்தரார்த் வரையும், சமஸ்கிருதத்தில் பட்டயப்படிப்பும் படித்துள்ளார். முப்பதுக்கும் அதிக நூல்களை உருவாக்கியுள்ளார். இருபதுக்கும் அதிக விருதுகளை வென்றிருக்கிறார்.

ரத்த தானம் செய்தல், பார்வையற்றோருக்குவாசித்தல், பரீட்சை எழுதுதல், குடும்பப் பிரச்னைகளுக்கு கவுன்சிலிங் எனசேவைப்பணிகளில் இயங்கி வருகிறார்.

தமிழ்நாடு அரசு இராஜபாளையம் பெண்கள்குழந்தைகள் நூலகம் அமைய காரணியாகஇருந்தவர். 1991-ல் இருந்து இந்த நூலகத்துக்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறார். துளி அமைப்பில் இருந்து சேவைப்பணிகள் ஆற்றி வருகிறார்.

600 க்கும் மேற்பட்ட நேர்காணல்களைச் செய்துள்ளார். மதுமிதாவின் காற்றுவெளி என்னும் பெயரில் இப்போது யூட்யூப் சேனல் ஆரம்பித்துள்ளார்.