தங்களின் உடல், அது எவ்வாறு வேலை செய்கிறது, தங்களை எவ்வாறு பராமரித்துக்கொள்வது என்பன பற்றிப் பெரும்பாலான பெண்கள் மிகக் குறைவாகவே அறிந்து வைத்திருக்கிறார்கள் என்பதுதான் யதார்த்தம். பெருமளவு பாகுபாடுகள் நிறைந்ததும், நமது உடல், பாலியல் பற்றி அவமானமாகக் கருதுவதுமான சூழலே உலகம் முழுவதும் உள்ளது. உலகம் முழுவதும் பல்வேறு துறை சார்ந்த வளர்ச்சிகள் அடைந்திருந்தாலும், பாலியல் இனப்பெருக்கம், ஆரோக்கியமான உடலுறவு, பெண்களின் பிறப்புறுப்பு மற்றும் கருப்பையின் ஆரோக்கியம் குறித்தவற்றை நாம் வெளிப்படையாகப் பேசுவதில் ஒருவிதத் தயக்கம் இருக்கத்தான் செய்கிறது. நம்மில் பெரும்பாலானோர் நம்மைப் பற்றியும் நமது உடலைப் பற்றியும் அனைத்தும் தெரியும் என்று எண்ணுவதுண்டு. ஆனால், சிலவற்றை உறுதியாகக் கேட்டுத் தெரிந்துகொள்வதற்கு வெட்கப்பட்டுக் கொண்டே கேட்டுத் தெரிந்துகொள்வதில்லை. இந்த மனப்பான்மையே நாம் அதிகம் அறிந்துகொள்வதைக் கட்டுப்படுத்துவதோடு உடல்ரீதியான பிரச்னைகளுக்குத் தக்க நேரத்தில் சரியான சிகிச்சை பெறாமல் ஆபத்தில் முடிகிறது. இனப்பெருக்க ஆரோக்கியம் ஆண், பெண் இருவருக்கும் முக்கியமானது. 10 முதல் 19 வயது வரை வளர் இளம் பருவம் ஏற்படக் கூடிய இந்தக் காலகட்டத்தில் ஹார்மோன்களின் தூண்டுதலால் பல்வேறு மாற்றங்கள் உடலில் ஏற்படும். எதிரெதிர் பாலினத்தவர் மீது ஈர்ப்பு ஏற்படக்கூடியது தொடங்கி உடலில் ஏற்படும் மாற்றங்கள் பல்வேறு குழப்பங்களுக்கு ஆளாக்கும். அதனைக் கையாள்வது மிக முக்கியமானது.

ஒரு பெண் பருவமெய்யும் பருவத்தில் இருந்து அவளது பாலியல் சார்ந்த தகவல்களை அறிந்து வைத்திருக்க வேண்டும். பருவமெய்தலுக்கு முன் உடலில் ஏற்படும் ஹார்மோன், உடல் மாற்றங்கள், பருவமெய்தலுக்குப் பிறகு ஏற்படும் ஹார்மோன், உடல் மாற்றங்கள் இரண்டையும் அறிந்திருக்க வேண்டும். மாதவிடாய் காலங்களில் இன்னும் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். நாப்கின்களுக்கு பதிலாக பழைய துணிகளை பயன்படுத்தும் பழக்கம் இன்றும் பெண்களிடம் உள்ளது. நாப்கின் பயன்படுத்துகிறவர்கள் குறைந்தது 3 மணி நேரத்திற்கு ஒரு முறை நாப்கினை மாற்ற வேண்டும். அதிக வேதிப்பொருள்கள், பிளாஸ்டிக்கைக் கொண்டு உருவாக்கப்படும் சானிட்டரி நாப்கின்கள் சுற்றுசூழலுக்கும் பெண்களின் ஆரோக்கியத்துக்கும் கேடு விளைவிக்கின்றன என்கிறார்கள் மருத்துவ வல்லுநர்கள். பருவமெய்யும் காலம் முதல் மெனோபாஸ் காலம் வரை நாப்கின் பயன்படுத்தும் பெண்களுக்கு அரிப்பு, சருமம் கருப்படைதல், அலர்ஜி போன்றவை ஆரம்பகாலத்திலயே அறிந்துகொள்வது அவசியம். சில பெண்களுக்கு அதிகப்படியாக கர்ப்பப்பைவாய் புற்றுநோயும் உண்டாகலாம் என்றும் எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள். கூடவே தனது மாதவிடாய் தேதிகளைச் சரியாகக் குறித்து வைத்திருக்கவும் பெண்கள் பழக வேண்டும்.

குழந்தைப்பேறு வேண்டும் என எண்ணக்கூடிய பெண்கள் மாதவிடாய் நாள்களை வைத்து தகுந்த காலத்தில் உடலுறவு கொள்ளும்போது கருத்தரித்தல் எளிதாக நடைபெறும். உடலுறவு என்பது பெரும்பாலும் ஆண்களுக்கானது என்பதுதான் சமூகத்தின் கட்டமைப்பாக உள்ளது. கல்வியில் முன்னேறிய தம்பதியர் தொடங்கி, பின்தங்கிய தம்பதியர் வரை உடலுறவு, இனப்பெருக்கம் குறித்துத் தம்பதியரிடையே பரஸ்பரம் பேசுவதில்கூடத் தயக்கம் உள்ளது. கருக்கலைப்பு, கருத்தடை சாதனங்கள் குறித்த விழிப்புணர்வு அனைத்தும் ஆண், பெண் இருவரும் அறிந்திருப்பது அவசியம். இனப்பெருக்க ஆரோக்கியம் அடிப்படை உரிமைகளுள் ஒன்று என்பதே சிலருக்குத் தெரியாது.

கருத்தரித்த பிறகோ அல்லது அத்தகைய அறிகுறிகள் தென்பட்ட பிறகோ மருத்துவரை அணுகுவதைவிட ஆரம்ப காலத்தில் அணுகி ஆண், பெண் இருவரும் தங்கள் உடலைப் பரிசோதித்து குழந்தைப் பெற்றுக்கொள்வதற்கான முழு உடற்தகுதியோடு இருவரும் இருக்கிறார்களா எனத் தெரிந்துகொள்வது அவசியம். பெண்களின் கருப்பையைச் சோதனை செய்துகொள்வது சிறந்தது. இனப்பெருக்கம் குறித்த விழிப்புணர்வு மிக முக்கியமானது. பெரும்பாலான பெண்கள் இனப்பெருக்க ஆரோக்கியத்தின் புரிதல் இல்லாமலே கருவுற்றுவிடுகிறார்கள். திருமணமாகக்கூடிய பெண்ணுக்கு உடல் ரீதியாக இனப்பெருக்கம் குறித்த விழிப்புணர்வை எல்லாம் எந்தக் குடும்பமும் ஏற்படுத்தவோ அதற்கான தகவல்களை மருத்துவர்களிடம் அழைத்துச் சென்று தெரிந்துகொள்ளவோ முன்வருவதில்லை. வளரிளம் பெண்கள் தங்களின் பிறப்புறுப்பு அதன் ஆரோக்கியம் , பிறப்புறுப்பில் ஏற்படும் தொற்றுகள், பாலியல் சார்ந்த நோய்கள், உடலுறவு, கருவுற்றல், கருக்கலைப்பு, கருத்தடை, குடும்பக் கட்டுபாடு குறித்துத் திருமணத்திற்கு முன்பு அறிந்துகொள்ள வேண்டியது மிக அவசியம். சரியான உணவு, உறக்கம், உடற்பயிற்சி இவை மூன்றும் இனப்பெருக்க ஆரோக்கியத்துக்கு மிக முக்கியமானவை.

பொதுவாக 11 வயது முதல் பெண்கள் பருவம் அடைவது வழக்கம். ஆனால், சமீபக் காலத்தில் பெண்களின் பருவம் அடையும் வயது குறைந்துகொண்டே வருகிறது. பெண்களுக்கு மாதவிலக்கு முறையான கால அளவில் நடைபெறாமல் முறையற்ற மாதவிலக்கு இருக்கிறது. உடல் எடை அதிகரிப்பும் கருவக நீர்க்கட்டிகளும் அதற்கு காரணமாகின்றன. இதையெல்லாம் தவிர்க்க பெண்கள் உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியமான உணவு பழக்க, வழக்கங்களைக் கடைப்பிடிக்க வேண்டும்.

பாதுகாப்பற்ற உடலுறவில் ஈடுபடும்போது பாலியல் தொடர்பான நோய்கள், பாலியல் நோய்த் தொற்றுகள், HIV போன்ற நோய்கள் எளிதில் தாக்குகின்றன. பொருளாதாரம் மற்றும் கல்வி, வேலைவாய்ப்பில் பின்தங்கிய நாடுகளில் பெண்கள் பாலியல் ரீதியாகச் சுரண்டப்படுகிறார்கள். பாலியல் வல்லுறவுக்கு ஆளாகிறார்கள். பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்ட குழந்தை மற்றும் பெண்களுக்கு உடல், உளச் சிகிச்சை வழங்குதல் அவசியம்.

ஆப்பிரிக்கா, நைஜீரியா போன்ற நாடுகளில் 15 வயதிலிருந்து 19 வயதிற்குள் மட்டும் கருக்கலைப்பு செய்பவர்களின் எண்ணிக்கை 74 % பேர் என்கிறது ஐ.நாவின் ஆய்வு.

குழந்தைத் திருமணம் என்பது இன்றும் நம் நாட்டில் ஒழிக்க முடியாத ஒன்றாக உள்ளது. தற்போதைய நிலையே நீடித்தால் 2030ஆம் ஆண்டில் குழந்தைத் திருமணங்களின் எண்ணிக்கை 1.51 கோடியாக இருக்கும் என்கிறது ஐ.நாவின் புள்ளி விபரம். குழந்தைத் திருமணங்களால் உடல் ரீதியாகப் பாதிக்கப்படுவது பெண்களே. குழந்தைகளே குழந்தைகளைச் சுமக்கும் அவலம் குழந்தைத் திருமணங்களால்தான் அரங்கேறுகிறது.

இளவயது திருமணம், இள வயது கர்ப்பங்கள், கர்ப்பக்காலச் சிக்கல்கள், கருச்சிதைவு ஏற்படுதல், எடைகுறைந்த குழந்தை பிறத்தல், தாய் சேய் மரணங்கள், ஊட்டச்சத்துக் குறைபாடு காரணமாக இளம் பெண்கள் உயிருக்கு ஆபத்தாகிறது.

ஒரு பெண்ணுக்கு மகப்பேறுக்குப் பின்பான மனச்சோர்வு அறிகுறிகள் (Postpartum Depression) குறித்த அனுபவங்கள் மிக மோசமானதாக இருக்கும். கடந்த காலங்களில் 10 பிள்ளை பெற்ற பெண்களுக்கும் இதெல்லாம் இருந்திருக்கும் தானே… அவர்களெல்லாம் எப்படிக் கடந்தார்கள் எனக் கேட்பது சரியானதல்ல. இத்தகையவற்றில் எல்லாம் பெண்கள் அவர்கள் உடல் குறித்த அக்கறை காட்ட வேண்டும் என்பது தான் இன்றைக்கு அறிவியல் வளர்ச்சியில் நாம் அறிய வேண்டிய செய்தி. கடந்த காலத்தில் மகப்பேறு மரணங்கள் எல்லாம் அதிகளவில் இருந்தன. இன்று அறிவியலின் வளர்ச்சியில் அவை குறைக்கப்பட்டுள்ளன. கடந்த காலத்தில் பெண்களும் இத்தகைய மனச்சோர்வை அடைந்திருப்பார்கள். ஆனால், அவர்களுக்கு அது குறித்த விழிப்புணர்வு இல்லாமலே கடந்திருப்பார்கள். மகப்பேறுக்குப் பிறகான மனச்சோர்வு ஒவ்வொரு பெண்ணிற்கும் வேறுபடும்.

சோகமான மனநிலை, கவலை, எரிச்சல், சோர்வு, குற்ற உணர்ச்சி, நம்பகத்தன்மையில்லாமல் இருப்பது, தலைவலி அல்லது வயிற்று வலி போன்ற வலி, பசியின்மை, கவனச் சிதறல், எதன்மீதும் ஆர்வமின்மை, குழந்தையுடனான பிணைப்பில் சிக்கல், குழந்தையைப் பராமரிக்க முடியாது போதல், அழ வேண்டும் போன்ற மனநிலை, குடும்பம் மற்றும் நண்பர்களிடம் இருந்து விலகி இருத்தல், உடல் எடை குறைதல், தூக்கமின்மை அறிகுறிகளை மகப்பேறுக்குப் பின்பான மனச்சோர்வு அறிகுறிகளாகப் பெண்கள் எதிர்கொள்கின்றன. இத்தகைய சோர்வு ஆண்களுக்கும் வருவதுண்டு. ஆனால், ஒப்பீட்டளவில் உடல் ரீதியாக, மன ரீதியாகப் பெண்களுக்கே பாதிப்பு அதிகம். அதற்குப் பாலின சமத்துவமின்மையும் ஒரு காரணமாக இருக்கிறது.

திருமணத்தைத் தள்ளிப் போடுதல், இள வயது கர்ப்பத்தைத் தவிர்த்தல், தேவையற்ற மற்றும் திட்டமிடாத கர்ப்பத்தைத் தடுக்க உதவுதல்.

கர்ப்பக் காலப் பராமரிப்பு, ரத்தசோகையைத் தவிர்த்தல், ஆரோக்கிய உணவிற்கான அறிவுரைகள், பால்வினை நோய்களுக்கான சிகிச்சைகள், மாதவிடாய் கோளாறுகளுக்குச் சிகிச்சை அளித்தல், மாதவிடாய் காலத்தில் சுகாதாரம் பேணல், உடலுறவு குறித்த சந்தேகங்களையும் அச்சங்களையும் அகற்றுதல் உள்ளிட்டவை அடங்கிய பாலியல் கல்வியை இளைஞர்களுக்கு வழங்குதல் அவசியம் தேவை.

எச்ஐவி மற்றும் பிற பால்வினை நோய்கள், திட்டமிடாத கர்ப்பம் போன்றவற்றைத் தவிர்ப்பதற்குத் தேவையான கருத்தடை சாதனங்களை இளம் பருவத்தினருக்கு வழங்க வேண்டியது அவசியம். இந்தச் சேவைகள் எளிதில் கிடைக்கக் கூடியதாகவும் ஏற்றுக்கொள்ளத் தக்கதாகவும் சரியான முழுமையான பாதுகாப்பான சிகிச்சையாகவும் பயன்தரத் தக்க வகையிலும் வழங்கப்பட வேண்டும்.

தேசிய வளர் இளம் பருவத்தினர் நலத்திட்டம்

ஊட்டச்சத்து, இனப்பெருக்க ஆரோக்கியம், மனநலம் மற்றும் பதின்ம பருவத்தினர் தொடர்பான பிற பிரச்னைகளுக்குத் தீர்வு காண, மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம், ராஷ்டிரிய கிஷோர் ஸ்வஸ்திய காரியக்ரம் Rashtriya Kishor Swasthya Karyakram (RKSK) அல்லது தேசிய பதின்ம பருவத்தினருக்கான சுகாதார திட்டத்தை 2014 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தியது. சமூக சுகாதார நிலையங்கள், மாவட்ட மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரிகளில் அமைந்துள்ள பதின்ம பருவ நட்பு சுகாதார நிலையங்களில் (Adolescent Friendly Health Clinics) பயிற்சி பெற்ற சேவை வழங்குநர்கள் மூலம் பதின்ம பருவத்தினரின் சுகாதாரப் பிரச்னைகள் குறித்த மருத்துவம் மற்றும் ஆலோசனை சேவைகளை வழங்குவதற்காக அமைக்கப்பட்டன.

இங்கு சத்துணவு, வாரந்திர இரும்புச்சத்து மாத்திரை பாலியல் மற்றும் இனப்பெருக்கம் சுகாதாரக் கல்வி, தொற்றா நோய்கள், போதைப் பொருள் உபயோகப்படுத்துவதால் ஏற்படும் தீமைகள், பாலியல் சார்ந்த தொந்தரவுகள், இளம் பருவத்தினருக்கான மருத்துவ சேவை மற்றும் மாதவிடாய் கால ஆலோசனை வழங்கப்படும். எனினும் இந்த திட்டங்கள் போதுமான அளவில் செயல்படவில்லை.

இந்த கிளினிக்குகள் எளிதில் செல்லக்கூடிய வகையில் பள்ளி, கல்லூரி வகுப்புகள் பாதிக்காத வண்ணம் அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையம் முதல் தாலுகா, வட்டார, மாவட்ட, மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வரை வளர் இளம் பருவத்தினருக்கான கிளினிக் திறக்கப்பட வேண்டும். மருத்துவர்கள் உள்ளிட்ட அனைவரும் வளர் இளம் பருவத்தினருக்கான சிறப்பான தேவைகளைப் புரிந்துகொண்டு அன்பான, ஆதரவான முறையில் அணுகி சிகிச்சை அளிக்க வேண்டும். அதற்குத் தேவையான பயிற்சிகளையும் வசதிகளையும் ஏற்படுத்தித் தர வேண்டும். இனப்பெருக்க ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு மூலமே ஆரோக்கியமான அடுத்த தலைமுறையை உருவாக்க முடியும்.

சாந்தி ரவிந்திரநாத்

இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்கத்தின் செயலாளர் டாக்டர் சாந்தி ரவிந்திரநாத் மூலம் பெறப்பட்டு, எழுதப்பட்டவை.

படைப்பாளர்

சுகிதா சாரங்கராஜ்

15 ஆண்டுகளுக்கு மேலாக ஊடகவியலாளராகப் பணியாற்றி வருகிறார். தற்போது நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியின் துணை ஆசிரியராகவும் அதன் டிஜிட்டல் பிரிவின் தலைமை அதிகாரியாகவும் பணியாற்றி வருகிறார். அரசியல், சமூகம் சார்ந்த விவாத நிகழ்ச்சியை நெறியாள்கை செய்து வருகிறார். இவர் எழுதிய பாலின சமத்துவம் தொடர்பான பல்வேறு கட்டுரைகளுக்கு 4 முறை laadli விருதினை தேசிய அளவில் பெற்றுள்ளார். இவர் பங்கேற்று ஒளிபரப்பான 33 % என்ற பெண்களின் அரசியல் அதிகாரப் பகிர்வு நிகழ்ச்சிக்காகவும் laadli விருதினைப் பெற்றுள்ளார். குழந்தைகள் உரிமை தொடர்பாக இவர் எழுதிய கட்டுரைகளுக்காக Unicef fellowshipக்குத் தேர்வு செய்யப்பட்டார். இவரின் பாலின சமத்துவம் தொடர்பான கட்டுரைகளுக்காக 2022 ஆம் ஆண்டுக்கான laadli media fellowship க்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.