‘Dad’s Little Princess’கள் தங்களுடைய அப்பாவால் உண்மையிலேயே இளவரசிகளாக நடத்தப்பட்டிருக்கிறார்களா? தங்கள் வாழ்க்கைத் துணையின் வழியாக மகாராணிகளாக நடத்தப்பட ஆசைப்படுகிறார்களா என்ற குழப்பம் நீண்ட நாட்களாகவே இருந்து வருகிறது. சிறுவயது முதலே சரித்திரக் கதைகளின் மேல் நாட்டம் கொண்டு சரித்திர நாவல்களைப் படித்திருக்கிறேன். இளவரசிகளின் வாழ்வு ஒன்றும் இந்த நவீன இளவரசிகளின் வாழ்வு போல அவ்வளவு எளிதானது அல்லவே! ஓர் இளவரசியின் வாழ்க்கை பெரும்பாலும் தன் சுய விருப்பங்களை விட்டுக் கொடுப்பதாகவே இருந்து வருகிறது. வயதுக்கு மீறிய பொறுப்புணர்வும் கடமைகளும் தான் இளவரசிகளை ஆட்கொண்டுள்ளன. தனக்குத் துணையைத் தேர்ந்தெடுக்கும் உரிமையை அவர்கள் பெற்றிருந்தாலும்கூட அதிலும் அரசியல் சூழல் தான் முற்றிலும் கலந்திருக்கிறது. ஒரு சாதாரணப் பெண் தனக்கான ஒரு நாளை மகிழ்வாக கழிப்பது போல் ஒரு நாளும் இளவரசிகளால் வாழ முடிவதில்லை.

நிலைமை இப்படியிருக்க இளவரசிகளாய் வாழ்வது என்பது எந்தப் பொறுப்பும் இல்லாமல் ஆடை, அலங்கார வாழ்வில் லயித்துக் கிடப்பது என்கிற எண்ணம் எப்படி வந்தது என்று தெரியவில்லை. இப்போது சினிமாவில் காட்டப்படும் நவீன நாயகிகளின் நிலை பெரும்பாலும் இப்படித்தான் சித்தரிக்கப்படுகின்றது. ப்ளாக் அண்ட் வொயிட் காலத்தில் நாயகிகளின் உடைத்தேர்வு, சிகை அலங்காரம் எல்லாமே ஓவர் ரேட்டடாக இருந்தாலுமே அதில் ஒரு நம்பகத்தன்மை இருந்தது. வசந்தமாளிகை படத்தில் வாணிஸ்ரீ ஏர்ஹோஸ்ட்டஸாக வருவார். அந்த வேலைக்குத் தகுந்த உடை, தூக்கிக் கட்டிய கொண்டை என்று அசத்தலாக நடித்திருப்பார். தொண்ணூறுகளில் வந்த திரைப்படங்களில்கூட கிராமத்து சப்ஜெக்ட் படங்கள் என்றால் பெண்களின் உடையிலும் அவர்களின் மேக்கப் சார்ந்த விஷயங்களிலும் ஓரளவு நேட்டிவிட்டி இருந்தது. ஆனால், இப்போது வரும் திரைப்படங்களில் கிராமத்துப் பெண் வேடமிட்டிருந்தாலும்கூட அந்தப் பெண்ணுக்கு ஹேர் ஸ்ரெயிட்டனிங்க், ஹேர் கலரிங்க் எல்லாம் செய்து கடைசியாக ஒரு தாவணியை மட்டும் சுற்றி விட்டு விடுகிறார்கள். தாவணியோ புடவையோ கட்டிவிட்டால் அவளைக் கிராமத்துப் பெண் என்ற முடிவுக்கு எல்லாரும் வந்துவிடுவார்கள் என்கின்ற எண்ணம். நானும் கிராமத்தில் பிறந்து வளார்ந்தவள் தான். என் வாழ்நாளில் ஒரு முறைகூட பாவாடை தாவணி வாங்கி உடுத்தியதில்லை. ஒன்பது, பத்தாம் வகுப்பில் பாவாடை தாவணி தான் ஸ்கூல் யூனிஃபார்ம். அந்த இரண்டு வருடங்கள் எட்டு பின் கொண்டு தாவணியைச் சுற்றிக் கட்டியதோடு சரி.

உடை, அலங்கார விஷயங்கள் இப்படி என்றால் அடுத்தது அவர்களின் குணாதிசயங்களும் கொஞ்சமும் பொருந்தாத வண்ணம் காட்சிப்படுத்தப் படுகின்றன. இன்றைய தலைமுறைப் பெண்கள் எல்லாம் படித்தவர்கள். சுயமாகச் சிந்திக்கிறார்கள். ஆனால், வாட்சப்பில் வரும் சில ஃபார்வர்டு மெசேஜ்களைப் படித்துவிட்டு அப்படித் தான் பெண்கள் இருப்பார்கள் என்ற பொய்யான ஒரு கற்பிதத்தை வளர்த்துக் கொண்டு இன்றைய தலைமுறைப் பெண்களை ஒரு முட்டாளைப் போலவே சித்தரிக்கின்றது நவீன சினிமா. குறிப்பாக சந்தானம் மற்றும் சிவகார்த்திகேயனின் திரைப்படங்களில் காமெடி என்ற பெயரில் பெண்களை மட்டமாகவே சித்தரிப்பது வாடிக்கையாகி விட்டது.

சமீபத்தில் வெளிவந்த டிக்கிலோனா திரைப்படம் பெண்களை மகா மட்டமாகக் காட்சிப்படுத்தியிருந்தது. திருமணத்திற்குப் பிறகு தன் மனைவியால் அல்லல்படுகிறோம் என்ற மனநிலையில் இருக்கும் சந்தானம், எதிர்பாராமல் கிடைக்கும் டைம் மெஷினில் ஏறி தன் திருமணத்தை நிறுத்தி விடுவது என்று முடிவு செய்கிறார். அப்படித் திருமண வாழ்வு கசப்பதற்க்கு அவர் கொண்டு வரும் காரணங்களெல்லாம் அற்பமானதாகவே இருக்கின்றன. ஹாக்கி வீரராகச் சாதிக்க விரும்புபவரை அவர் மனைவி அவமானப்படுத்துவது போலவும், கூடவே அவரின் மாமனார், மாமியாரும் சேர்ந்து அவரைக் கொடுமைப்படுத்துவது போலவும் காட்சி அமைப்புகள். எல்லாவற்றுக்கும் சுருதி சேர்க்கும் விதமாக அவ்வப்பொழுது சொல்லப்படும் ‘dad’s little princess’ போன்ற வாட்சப் ஃபார்வர்டு வசனங்கள். அந்தத் திருமணத்தில் இருந்து விடுபட்டு வேறு ஒரு பெண்ணை நாடிச் சென்று அவரும் பொழுதுபோக்கு, டிக்டாக் வீடியோக்கள், பெஸ்ட்டி என்று சுற்றி வருவதால் மனமுடைந்த நாயகன் மீண்டும் டைம் மிஷினில் சென்று ‘அவளுக்கு இவளே பரவாயில்லை’ என்று மனம் திருந்தி பழைய காதலியையே கரம் பிடிப்பது போன்ற கிளைமேக்ஸ் காட்சிகள்.

ஆனால், இதே போன்ற ஒரு கதைக்களத்தைக் கொண்டு எடுக்கப்பட்ட ’ஓ மை கடவுளே!’ திரைப்படம் வேறு மாதிரியான ஒரு புரிதலைக் கொடுத்தது. நாம் அனைவருக்குமே ஏதாவதொரு கட்டத்தில் ‘திருமணம் செய்து கொள்ளாமல் இருந்திருக்கலாமோ’ என்ற எண்ணம் தோன்றாமல் இருந்திருக்காது. அதற்காக வேறு ஒருவருடன் வாழ்ந்து பார்த்துவிட்டு, இதற்கு அந்த முந்தையை வாழ்வே பரவாயில்லை என்று கம்பேர் பண்ணிப் பார்ப்பதெல்லாம் எதார்த்த வாழ்வில் பல சிக்கல்களை உருவாக்கிவிடும். ‘அட! அது சினிமா தானே. கனவிலாவது அப்படிக் கற்பனை பண்ணக் கூடாதா?’ என்று கேட்பீர்களானால், ஏன் ஆண்கள் மட்டுமே திருமண வாழ்வில் சோதனைகளைக் கடப்பது போன்ற பொதுப்புத்தியை வைக்கிறீர்கள்? சில சூழ்நிலைகளைப் பொறுத்து நாம் மேற்கொள்ளும் தீர்மானங்கள் அனைத்திலும் சம்பந்தப்பட்ட ஆண் , பெண் இருவரின் மேலுமே தவறு இருக்கலாம். நாம் எடுத்த முடிவுகள் காலப்போக்கில் மாறலாம் அல்லது தவறாகலாம். அதற்காக நாம் அன்று எடுத்த தீர்மானங்கள் தவறு, வாய்ப்பிருந்தால் அதை மீண்டும் சரி செய்துவிடலாம் என்பது போன்ற பிற்போக்குத்தனங்களைச் சமூகத்தில் உலவ விடுவது தவறான கற்பிதங்களைப் புகுத்திவிடும். இதில் பெண்ணை மட்டுமே குற்றவாளியாகக் காட்டும் பொதுப்புத்தியைக் களைய வேண்டும்.

ஒரு வேளை திரைப்படங்களில் காட்டப்படுவது போல் நவீன இளவரசிகள் இப்படி சுகவாழ்வு வாழத்தான் ஆசைப்படுகிறார்களோ என்ற கோணத்திலும் அதைச் சிறிது அலசிப் பார்த்தேன். ஒரு வகையில் அது உண்மை போலத் தோன்றினாலும் அதற்குப் பெற்றோர்களே முக்கியக் காரணமாக இருக்கிறார்கள். தன் மகள் கஷ்டமே படக்கூடாது என்ற அதிகபட்ச பேராசை தான் எல்லாவற்றுக்கும் காரணம். நல்ல படிப்பைக் கொடுத்துவிட்டு, ஊர் மெச்சும் விதமாகத் திருமணம் செய்துவிட்டு, ஏதாவது பிரச்னை என்று வந்துவிட்டால் ‘என் மகளை எப்படி வளர்த்தேன் தெரியுமா?’ என்று ‘ஓவர் செல்லங்கள்’ கொடுக்கப்படும் குழந்தைகள் தான் ‘dads little princess’ கேட்டகிரிக்குள் அடைபட்டுக் கொண்டு அல்லல்படுகின்றனர்.

நவீன தமிழ் சினிமாவிற்கென்று எழுதப்படாத விதி ஒன்று உள்ளது. எப்பொழுதுமே பெண்களை, குறிப்பாக கதாநாயகிகளை அடிமுட்டாளாகக் காட்டுவது. அதைத் திரைப்பட வசனங்களில் நேரடியாகவே சொல்லிவிட்டு, அதுதான் ஹியூமர்சென்ஸ் என்று மடைமாற்றம் செய்து விடுவது வழக்கமாகி விட்டது. சந்தோஷ் சுப்ரமணியம் படத்தில் வந்த ஹாசினி (ஜெனிலியா) கேரக்டர் எல்லாப் பைத்தியக்காரத்தனங்களையும் செய்துவிட்டு, கிளைமேக்ஸ் காட்சியில் நெக்குருக காதல் டயலாக் பேசும். சமீபத்தில் வெளியான டாக்டர் படத்தில் எல்லாக் கதாபாத்திரங்களும் நகைச்சுவையாகப் பேசினாலும் நாயகி காதாபாத்திரம் மட்டும் முட்டாளாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. நாயகி பேசும் ஒவ்வொரு வசனத்தின் முடிவிலும் நாயகன் ‘நீ தான் லூசாச்சே’ என்ற பட்டத்தை ரெடியாகத் தூக்கிக் கொண்டு வருகிறார். ஆனால், கிளைமேக்ஸ் காட்சியில் அவளுக்குத் தன் வாழ்வையே ஒப்புவிக்கிறான். ‘இதெல்லாம் காமெடி படங்கள், இதிலெல்லாம் இவ்வளவு லாஜிக் பார்க்க வேண்டிய அவசியமில்லை’ என்று பாடம் எடுக்காதீர்கள். காமெடி என்று வரும்போது கூட ஓர் ஆண் கதாபாத்திரத்தை அறிவாளியாக் காட்டி நகைச்சுவையைக் கொடுப்பதற்கும், பெண் கதாபாத்திரத்தை அடிமுட்டாள் என்று சொல்வதாலேயே அந்தப் பாத்திரம் நகைச்சுவை செய்கிறது என்பதற்கும் பெருமளவு வேறுபாடு உள்ளது. மனோரமா, சச்சு, கோவை சரளா, ஊர்வசி இவர்கள் திரையில் செய்தது தான் நகைச்சுவை. அதில் அவர்கள் பேசும் வசனங்களும் காட்சிகளும் முகபாவனைகளும் தான் நமக்குச் சிரிப்பைத் தந்திருக்கின்றன. காதலிக்க நேரமில்லை முதல் மைக்கேல் மதன காமராஜன் வரை ஆள் மாறாட்டம் செய்து காதலியிடம் அடி வாங்கும் வகை படங்கள் தமிழில் ஏராளம் உண்டு. ஆனாலும் ரெமோ படத்தில் ரெமோவாக ஏமாற்றும் சிவகார்த்திகேயன் முன் கீர்த்தி சுரேஷ் சிந்திக்கவே தெரியாத முட்டாளாகவே காட்டியிருப்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

அந்த வகையில் சிறிது ஆறுதல் அளித்த திரைப்படங்கள் என்று சொன்னால், தன் விந்தணுவைத் தானமாகக் கொடுக்கும் நாயகன் சந்திக்கும் பிரச்னைகளை மையமாக வைத்து வெளிவந்த ‘தாராளப் பிரபு’. காதலியுடன் நடக்கும் சில சண்டைகளை ஹியூமரோடு சொன்ன ‘ப்யார் ப்ரேமா காதல்’. ஓர் அழகான காதல், அதைத் தொடந்து வந்த ஊடல், பிரிவு என்று இன்றைய இளம் தலைமுறைப் பெண்ணின் அசலாக வந்த ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’.

ஒரு நாள் கூத்து திரைப்படத்தில் நாயகிக்கு சாஃப்ட்வேர் கம்பெனியில் வேலை பார்க்கும் ஒருவருடன் காதல் வந்ததும், திருமணப் பேச்சின் போது தான் தங்களின் முரணான வாழ்க்கை முறையை இருவரும் உணர ஆரம்பிக்கிறார்கள். தன் தந்தையிடம் காதலனை அறிமுகப்படுத்துவதும், அவர் அவனை வர்க்கரீதியாக அவமானப்படுத்துவதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் அந்தக் காதலியையே விட்டுப் பிரிவதும் இன்றைய தலைமுறை எதார்த்த காதல். எதார்த்தங்களே சினிமா அல்ல என்பது எனக்கும் புரிகிறது. கற்பனைக் கதை எடுங்கள், நகைச்சுவையை ஆறாகக் கடக்க விடுங்கள், ஃபிக்ஷன் படங்கள் எடுத்து அறிவியலைப் புகுத்துங்கள், ஆனால், எல்லாவற்றிலும் பெண்ணை முட்டாளாக் காட்டாமல் மாற்றிச் சிந்திக்கலாமே.

அவள் ஒரு ‘Dads little princess’ தான். அந்த கம்ஃபர்ட் ஜோனை விட்டு வெளியே வர முடியாத அளவுக்கு அவளுக்கான சங்கிலி இருக்கிறது. ஆனால், இதற்கு முந்தைய தலைமுறையில் அப்படி இருக்கவில்லை. படிப்பு, வேலை, திருமணம் என்ற அனைத்துமே அவளுக்குப் போராட்டமாய் இருந்ததால் அவளால் தன் சிறைகளை உடைக்க முடிந்தது. ஆனால், இன்றைய லிட்டில் பிரின்ச்ஸுகளுக்குக் கல்வி, வேலை, ஆடை, அலங்காரம், சுகவாழ்வு என்ற சில விஷயங்களில் போலி அடையாளங்களைக் காட்டி, அதை விட முக்கியமான துணை தேடும் அரிய வாய்ப்பையும், அவர்களின் சுயத்தையும் அடியோடு பறித்து விட்டனர் முந்தைய தலைமுறைப் பெற்றோர்கள். ஆம், அவர்கள் சுயத்தை இழந்த இளவரசிகள்!

படைப்பாளர்:

சாந்தி சண்முகம்

கோவையைச் சேர்ந்த சாந்தி தற்போது துபாயில் வசித்து வருகிறார். கல்லூரியில் துணை விரிவுரையாளராகப் பணியாற்றியுள்ளார். பயணங்களிலும், எழுதுவதிலும் ஈடுபாடு கொண்டவர்.