சமீபத்தில் என்னுடைய உறவுக்காரப் பெண்ணிடம் பேசிக்கொண்டிருந்த போது, கல்லூரி இளங்கலை படிக்கும் அவரது மகள் மேற்படிப்பைத் தொடரப் போகிறாரா அல்லது பணிக்குச் செல்லப் போகிறாரா என்று கேட்டதற்கு, அந்தப் பெண், “அதெல்லாம் இல்லை… கல்யாணப் பத்திரிகையில் பேருக்குப் பின்னால போட ஒரு டிகிரி வேணும்னுதான் காலேஜுக்கு அனுப்புறோம். இந்த டிகிரி முடிச்சதும் கல்யாணம் தான்” என்றார். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. அவரது மகளிடம், “என்னம்மா இப்படி சொல்றாங்க அம்மா? உன் லட்சியம் என்ன?” என்றேன். “லட்சியம்லாம் ஒண்ணும் இல்லை ஆன்ட்டி” என்றாள் புன்னகையுடன். என்னால் அந்தப் பதிலை ஜீரணிக்க முடியவில்லை.
அந்த இளம்பெண் மட்டும் தான் என்றில்லை. இன்றைய இளைய தலைமுறையினர் தனக்கென்று ஓர் இலக்கை நிர்ணயித்து அதை நோக்கிச் செல்வதெல்லாம் இல்லை. ‘ஏதோ ஸ்கூல் முடிச்சோம்.. அடுத்து காலேஜ் போகணும். என்ஜாய் பண்ணனும்.’ அவ்வளவுதான் குறிக்கோள். நாம் கேட்டால் ஏதோ ஏலியனைப் பார்ப்பது மாதிரி நம்மை விநோதமாகப் பார்ப்பார்கள். இதற்கு என்ன காரணம் என்றால், “இந்த நாட்டில் படிச்ச படிப்புக்கு ஏத்த வேலை கிடைக்குதா?” என்று கேட்கிறார்கள். படித்த படிப்புக்கு வேலை கிடைக்கவில்லை என்றால் என்ன காரணம்? நம் நாட்டில் இருக்கும் வேலைகளுக்குத் தகுந்த படிப்பு இதில்லை என்பது தானே உண்மை! இப்போது தவறு எங்கிருக்கிறது என்று புரிகிறதா?
மனித சமுதாயம் தோன்றி மெதுவாக முன்னேறி வரும்போது அதாவது முதலில் உணவு, உடை, உறைவிடம் என்ற அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொண்ட பிறகு தனது எண்ணங்களையும் செயல்களையும் பிறருக்குத் தெரிவிக்கவும், உணர்த்தவும், ஒலிகளுக்கு வரி வடிவம் கொடுக்கவும் கண்டறியப்பட்டதே எழுதும் முறை. அதை மேலும் மேலும் செம்மைப்படுத்தி ஒரு பொதுவான விஷயத்தைத் தெரியாதவர்களுக்குக் கற்றுத் தருவதற்கு உருவானதே கல்வி முறை.
பண்டைய இந்தியாவில் பொறியியல், வானவியல், கணித சாஸ்திரம், மருத்துவம், இலக்கியம், இலக்கணம், இசை, நடனம், வேதம், மதம், அரசியல், சோதிடம், ஆயுர்வேதம், சட்டம் என்று சகல துறைகளையும் பயிற்றுவிக்கும் பல்கலைக்கழகங்கள் இருந்தன. அப்போதைய பொறியியல் வல்லுநர்கள் கட்டிய கோயில்களும் அரண்மனைகளும் அணைக்கட்டுகளும் பிற கட்டிடங்களும் இன்றும் அவர்களது திறமையைப் பறைசாற்றி வருகின்றன.
குருகுலம் என்னும் முறையில் அன்றைய கல்விக் கூடங்கள் செயல்பட்டன. மாணாக்கர் அவரவர் திறனுக்கேற்ற வகையில் பயின்றனர். அதில் ஒழுக்கம் சார்ந்த விஷயங்கள் அதிகம் போதிக்கப்பட்டன. நாளந்தா, தக்சசீலா, விக்கிரமசீலா என்று பல பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் வெற்றிகரமாகச் செயல்பட்டு வந்தன.
ஒரு மாணவரின் கற்றல் திறனுக்கும் வேகத்திற்கும் ஏற்ப பாடங்கள் கற்பிக்கும் வருடங்கள் நீண்டன. தேர்வு முறை, மதிப்பெண் என்ற அபத்தங்கள் எல்லாம் இல்லை. குருவுக்கு எப்போது கற்றல் திறனில் முழுத் திருப்தி ஏற்படுகிறதோ அப்போது கற்றல் முடிவடைந்ததாகக் கருதப்பட்டது. ஆரோக்கியமான விவாதங்கள் மூலம் கற்றல் திறன் ஊக்குவிக்கப்பட்டது. உலகின் முதல் பல்கலைக்கழகத்தை உருவாக்கிய நமது இந்தியா தான் இன்று சர்வதேசக் கல்வித் தரத்தில் முதல் இருநூறு இடங்களுக்குள்கூட இல்லை என்பது வேதனையான இல்லை வெட்கக்கேடான விஷயம்.
அதன் பின்னான ஆங்கில வழிக்கல்வி வெறும் குமாஸ்தாக்களை மட்டுமே உற்பத்தி செய்வதாக அமைந்தது. ஆங்கிலேயர் தமக்குக் கீழ் வேலை செய்ய ஏற்படுத்திய ‘அடிமை முறை’ கல்வியே இப்போதைய ஆங்கிலேய முறைக் கல்வியாகும். குளிர் நாடுகளில் அவர்கள் அணிந்த சீருடைகளையும் ஷூக்களையும் டை யையும் நம் வெப்ப நாட்டில் பொருந்தாமல் அணிய வைத்தனர்.
அதில் இந்தியர்களைக் கவர அவர்கள் படித்து முடித்ததற்குச் சான்றிதழும், உடனே ஒரு வேலை வாய்ப்பும் தரப்பட்டதால் நிறைய இந்தியர்கள் அதன்பால் கவரப்பட்டனர். நமது மக்கள் ‘கால்குலேட்டரை’ எடுக்காமல் கணக்கிடும் திறன் படைத்தவர்கள். கூட்டல், பெருக்கல், வகுத்தல், கழித்தல் போன்றவற்றை மனக்கணக்காகவே போடும் திறமை வாய்ந்தவர்கள். ஆனால், இன்று சாதாரண சின்னக் கணக்குக்கே பேப்பரையோ கால்குலேட்டரையோ தேடும் அளவுக்கு மூளையை மந்தப்படுத்தி விட்டது இந்த மெக்காலே கல்வி முறை.
உடலாலும் நிறத்தாலும் இந்தியரான ஒருவர் சிந்தனைத் திறனிலும் யோசிக்கும் தன்மையிலும் ஆங்கிலேயராக நடந்துகொள்வதையே ஆங்கிலக் கல்வி கற்றுத் தருகிறது. இயற்கையோடு இணைந்து கற்றுக்கொள்ளும் நமது பண்டைய குருகுலக் கல்வி முறையில் அவரவர் சிந்தனைக்கேற்ப ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ளும் வகையில் கற்பித்தல் இருந்தது. அதன் மூலம் சிந்தனை வளம் பெருகியது. ஆனால், இந்த ஆங்கில முறைக் கல்வியில் யாரோ ஒருவரது சிந்தனை, அது சரியோ தவறோ அல்லது காலத்திற்கேற்ப மாறுதல் அடையுமா என்றெல்லாம் இல்லாது அதை மட்டுமே தனது மூளைக்குள் புகுத்திக் கொண்டு அதை பேப்பரில் அப்படியே நகல் எடுத்தால் எப்படிச் சிந்திக்கும் திறன் கிடைக்கும்? ஆட்டுமூளை சமுதாயத்தையல்லவா இந்தக் கல்வி உருவாக்கியிருக்கிறது.
இன்றைய கல்வி முறை கோழைகளை மட்டுமே உருவாக்கியிருக்கிறது. வெறும் மதிப்பெண்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு ஒரு மாணவரின் அறிவுத்திறன் தீர்மானிக்கப்படுகிறது. படித்து முதல் மதிப்பெண் பெற்று இருக்கும் எந்த ஒரு மாணவரும் பிற்காலத்தில் பெரிய அளவில் ஜொலிப்பதில்லை. அதே நேரம் படிக்காமல் இருக்கும் ஒரு சாதாரண மாணவர் தொழில் அதிபராகும் வாய்ப்புகளும் இங்கேதான் உருவாகியிருக்கின்றன. இதையும் மறுப்பதற்கில்லை. மதிப்பெண் குவிக்கும் இயந்திரமாக மட்டுமே மாணவர் சமுதாயம் பார்க்கப்படுகிறது. அவர்கள் வாங்கும் மதிப்பெண்கள் பிற்காலத்தில் எந்த அளவிற்குப் பயன்படுகின்றன என்பதையும் அறுதியிட்டுக் கூற முடிவதில்லை. சரியான கல்விமுறை என்பது அதிக அளவில் செய்முறை சார்ந்தும், குறைந்த அளவு எழுத்து சார்ந்தும் இருக்க வேண்டும். ஆனால், இங்கு எல்லாமே நேரெதிராக அல்லவா இருக்கிறது?
பண்டைய இந்தியக் கல்வி முறையில் அதிக அளவில் செய்முறை விளக்கங்கள் மூலமாகவே பாடங்கள் கற்பிக்கப்பட்டன. ஆனால், இன்றைய கல்வியில் செய்முறை என்பது வெறும் கண்துடைப்புக்காக மட்டுமே நடத்தப்படுகிறது. அதுவும் மாணவர்களுக்கு முழுமையாக கற்றுத்தரும் எண்ணத்தில் இல்லாமல் வெறும் ‘கணக்குக்காக’ மட்டுமே வைக்கப்படுகிறது. கேள்வி கேட்டு விவாதித்து, கற்கும் முறை அப்போது இருந்தது. ஆனால், இன்றைய கல்வி முறையில் எதிர்க் கேள்விக்கே இடமில்லாமல் ஆசிரியர்கள் சொல்வதை மட்டுமே கேட்டு எழுதும் தலையாட்டி பொம்மைகளாகவே மாணவ சமுதாயம் மாறியிருக்கிறது.
ஒரு மாணவரின் அறிவுத்திறன் இன்னொருவரால் மதிப்பிடப்படும் ஒன்றாக மாறி இருப்பது மிகவும் வேதனைக்குரியதாகும். அறிவுத்திறன் என்பதற்கான அளவுகோல் தான் என்ன? ஒருவருக்கு மிகுந்த அறிவுடையதாகக் காணப்படும் ஒரு செயல் இன்னொருவருக்கு அடி முட்டாள் தனமாகத்தான் தோன்றும். அது அவரவரது எண்ண ஓட்டத்தையும் சிந்தனைத் திறனையும் பொறுத்து அமைவதாகும்.
இன்றைய கல்லூரிகளில் இருக்கும் பெரும்பாலான பாடப்பிரிவுகள் எதையும் படித்து முடித்தபின் அதற்கேற்ப வேலை வாய்ப்பு வாங்கித் தருவதாக அமைவதில்லை. அப்படியெனில் அத்தகைய உதவாத படிப்புகளை இன்னும் கட்டிக்கொண்டு அழுவதற்கான காரணமென்ன என்பதை இன்றைய கல்வியாளர்கள் யோசித்துப் பார்ப்பது இல்லை.
ஒருமுறை சில கல்லூரி மாணவர்கள் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்க நேரிட்டது. அவர்கள் பேசியதில் முக்கால்வாசி வார்த்தைகள் அச்சில் ஏற்ற முடியாத கெட்ட வார்த்தைகளாகவே இருந்தன. இத்தகைய பிற்போக்கான மனநிலையைத் தான் இன்றைய கல்விமுறை கற்றுத் தருகிறதா?
சுழியம் எனப்படும் பூஜ்ஜியத்தைக் கண்டறிந்தவர்கள் இந்தியர்கள் என்ற பெருமை நமக்கு உண்டு. ஒன்றுமில்லை என்பதே பூஜ்ஜியம். அதேபோல் மூளையில் அடிப்படை அறிவு என்பது இல்லாத ஒரு சுழியர் கூட்டம் இப்போது உருவாகியிருக்கிறது.
பெயருக்கு ஒரு பட்டம் இருந்தால் போதும், அதற்கு ஏற்ற வேலை கிடைக்கவில்லை என்று சொல்லிக்கொண்டு சமூக வலைத்தளங்களில் நேரத்தைச் செலவிடவே இன்றைய இளைய தலைமுறை விரும்புகிறது. பொறுப்புகள், கடமைகள், ஒழுக்கம், கண்ணியம் போன்ற வார்த்தைகள் எல்லாம் இப்போது கெட்ட வார்த்தைகள் பட்டியலில் சேர்ந்துவிட்டது.
போதாகுறைக்கு கொரோனா என்னும் பெருந் தொற்றுக் காலம் இணைய வழிக் கல்வியை நமக்கு அறிமுகப்படுத்தியது. நேரில் சென்று கற்றுக் கொண்டாலே எதுவும் புரிந்து விடாத பாடத்திட்டத்தில் வெறும் ‘கடமைக்காக’ வகுப்பெடுக்கும் ஆசிரியர்களும், விருப்பம் இல்லாமல் ‘கற்றுக் கொள்வதாகப்’ பெயர் பண்ணிக் கொள்ளும் மாணவச் சமுதாயமும் எத்தகைய முன்னேற்றத்தை இந்த நாட்டிற்கு அளித்துவிடப் போகிறது என்பது மில்லியன் டாலர் கேள்வி.
தரமில்லாத, யாருக்கும் உபயோகம் இல்லாத கல்விக்கான கட்டணம் மட்டும் உயர்ந்து கொண்டே வருகிறது. ‘நீட்’ என்ற பெயரில் நிறைய இளங்குருத்துகளின் கனவுகள் முளையிலேயே வெந்நீர் ஊற்றிப் பொசுக்கப்பட்டு விடுகின்றன. பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்ற குழந்தைகள்கூட ‘நீட்’டில் தோல்வியுற்று தற்கொலை என்ற முடிவைத் தேர்ந்தெடுக்கிறார்கள். ஒரே ஒரு படிப்புதான் சாஸ்வதம் என்றெல்லாம் இல்லைதானே? ஒரு தோல்வியைக்கூடத் தாங்கிக் கொள்ள முடியாத பூஞ்சை மனதுக்காரர்களைத்தான் இன்றைய கல்வி முறை உருவாக்கியிருக்கிறது. இது வருந்தக்கூடிய விஷயம்.
உடல் உழைப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்து வந்த நம் நாட்டில் தான் மூளை உழைப்பு என்று மாற்றம் கொண்டு வந்து, நாற்காலிகளைத் தேய்க்கும் தலைமுறைகளை உருவாக்கி, விளையாட்டுத் துறையில் மிகவும் பின்தங்கி இருக்கிறோம். வாழ்க்கைக்கு எவ்விதத்திலும் உதவாத கணித சூத்திரங்களை மனனம் செய்ய விளையாட்டு வகுப்புகளை மாணவர்கள் தியாகம் செய்ததன் விளைவு, நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் ஒலிம்பிக் போட்டிகளில் எதிரொலிக்கிறது.
வாழ்க்கைக்குத் தேவையான விஷயங்களைக் கல்வி கற்றுத் தருவதில்லை. பட்டப்படிப்பு முடித்த ஓர் ஆணோ, பெண்ணோ வங்கியில் ஒரு காசோலையை நிரப்புவதற்குக்கூடத் திணறும் நிலைதான் உள்ளது. அடிப்படை விஷய ஞானம்கூட இல்லாத இளையோர்தான் இன்று பெருகியிருக்கிறார்கள். செம்மறியாட்டு மந்தை போல ஒரு முறையையே கட்டிக் கொண்டு அழாமல் இந்த கொரோனா காலத்தை முன்னிறுத்தி கல்வி முறையில் அவசியமான மாற்றங்களை அவசரமாகக் கொண்டு வரும் நிலையில் நமது கல்வித் துறை இருக்கிறது.
பின்லாந்து நாட்டின் கல்வி முறை பெரிதளவில் சிலாகிக்கப்படுகிறது. வாழ்க்கை குறித்து அவநம்பிக்கையை விதைக்காமல், வாழ்தல் குறித்த நம்பிக்கையையும், சக மனிதர்கள் மீது பாசத்தையும் ஏற்படுத்துவதாக அந்தக் கல்வி முறை இருக்கிறது. அங்கு கல்வி என்பது ‘டே கேர்’ என்று ஒரு வயதிலேயே தொடங்கி விடுகிறது. நடைப்பயிற்சி, நீச்சல், சாலை விதிகளை மதிப்பது, தனித்துவத்தை இழக்காமல் சமூகத்துடன் கலந்திருப்பது ஆகியவற்றைக் கட்டாயமாக இல்லாமல் இயல்பாகக் கற்றுத் தருகிறார்கள். கற்றலில் தரம் பிரிக்கும் தரங்கெட்ட முறை அங்கு முற்றிலும் இல்லை. மதிப்பெண்களை அடுத்த மாணவருடன் போட்டியிட்டு அதிகரிக்க வேண்டிய கட்டாயமும் மன உளைச்சலும் இல்லை.
ஒரு குழந்தையின் மூளை விஷயங்களைக் கிரகித்துக் கொள்ளும் அந்த வயதில் அடிப்படை வாழ்க்கைக்குத் தேவையான விஷயங்களைக் கற்றுத் தரத் தொடங்கி விடுகின்றனர். நம் ஊர் அங்கன்வாடிகளை நினைக்கும்போது ரத்தக் கண்ணீர் வருகிறது. குழந்தைகளைத் தூங்க வைக்கவும், சத்துணவு என்ற பெயரில் சுமாரான உணவை அளிப்பதிலும் அங்கன்வாடிகள் பெயர் போனவை. இந்த நிலையை மாற்ற கல்வி அமைச்சர் முயற்சிக்க வேண்டும். எது எதற்கோ எல்லாம் மேல்நாட்டை உதாரணமாகப் பின்பற்றும் நாம் இந்த விஷயத்தில் தாராளமாகப் பின்பற்றலாம்.
கல்வியைக் கடவுளாக மதிக்கும் இந்தத் தேசத்தில் தான் அது நன்றாக ‘கல்லா கட்டும்’ வியாபாரமாகிக் கொழித்துக் கொண்டிருக்கிறது. அனைவருக்கும் கல்வி என்பது தாரக மந்திரமாக இருந்தால் மட்டும் போதாது. அது தரமான கல்வியாகவும் இருக்க வேண்டும். அதற்கு கல்வித் துறையைத் தனியார் வசம் ஒப்படைத்து நாசமாக்காமல் அரசே முன்வந்து சீரிய கல்விக் கொள்கையை அமைத்து, அனைவருக்கும் கல்வி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.
படைப்பாளர்:
கனலி என்ற சுப்பு
‘தேஜஸ்’ என்ற பெயரில் பிரதிலிபியில் தளத்தில் கதைகள் எழுதி வருகிறார். சர்ச்சைக்குரிய கருத்துக்களை எழுதவே கனலி என்ற புதிய புனைபெயரில் எழுதத் தொடங்கியிருக்கிறார்.