கேளடா மானிடவா -8
மண்ணில் தூவப்பட்ட விதைகள் செடிகளாகின்றன; பாறையில் விழுந்தவைகளுக்கு அந்த வாய்ப்பில்லை. போலவே, எந்த ஒரு குழந்தையும் பிறக்கும்போது நல்ல குழந்தையாகவே மண்ணில் பிறக்கிறது; அதற்கு கிடைத்த – கிடைக்காத வாய்ப்புகள், தானாக யோசிக்கவும் வாய்ப்பற்ற தன்மைகள்; வளர வளர அதன் சூழல் – சமூக நிர்ப்பந்தங்கள், வழிவழியாகத் தவறாகவே வழிநடத்தப்பட்டு அதுவே சரியென்று நினைக்கிற தன்மை ; தானாக மாறினால் ஏற்படும் வசதிக் குறைவுகளுக்காக ஏற்படும் அச்சம் ஆகியவை காரணமாகவே, தன் சகவுயிரை தன்னுயிர் போல மதிக்கும் – நடத்தும் தன்மை ஏற்படவும் ஏற்படாமலிருக்கவும் நேர்கிறது.
எங்களது தொடக்கப் பள்ளி ஆசிரியை ஒருவர், வாரா வாரம் ‘மாரல் சைன்ஸ்’ வகுப்பில், சுய சிந்தனையைத் தூண்டும்படியான, ஆளுமை பயிற்சித் திறன் குறித்த கேள்விகளைக் கேட்பார். எங்கள் எத்தனையோ பேரின் சிந்தனையை தகவமைத்த பெருமை அவரைச் சாரும். ஒருமுறை அவர் வகுப்பில், ‘உங்களுக்கு தவளைக் கறி பிடிக்குமா’ என்று கேட்டார். பிள்ளைகள் அய்யே, உவ்வேக் என்று முகம் சுளித்தனர். அடுத்த கேள்வி, ‘நீங்கள் தவளைக் கறி சாப்பிட்டிருக்கிறீர்களா’ என்றார்.
இப்படித்தான், சில கேள்விகளைக் கேட்பதால், ஏன் ஒரு கேள்வியை மாற்றிப் போட்டுக் கேட்பதிலேயே கூட சிந்தனையைத் தூண்டி, மிகப் பெரிய வாழ்வியல் மாற்றத்தை ஏற்படுத்திவிட முடியும்.
அதற்காகவே இந்த கேள்விகள்.
ஆண்களுக்கு, நீங்களே உங்களைக் கேட்டுக் கொள்ள 60 கேள்விகள். விருப்பமிருந்தால், பதில்களை எங்களுக்கு keladamanidava@gmail.com அனுப்பலாம்.
- பெயர், அலைபேசி/தொலைபேசி எண் (விரும்பினால் சொல்லலாம்)
- வயது (பிறந்த தேதி/மாதம்/ஆண்டு)
- என்ன செய்கிறீர்கள்? படிப்பு? வேலை? வசிப்பது? திருமணம் ஆகிவிட்டதா? (விரும்பினால் சொல்லலாம்)
- நீங்கள் இரு பாலர் பள்ளியில் (கோ-எஜுகேஷனில்) படித்தவரா?
- பெண்களிடம் பேசக் கூச்சப்படுவீர்களா?
- பெண்களிடம் பேசும்போது நேராகக் கண்களைப் பார்த்து பேசுவீர்களா?
- காதலித்திருக்கிறீர்களா?
- உங்கள் காதலை எப்படி வெளிப்படுத்துவீர்கள்?
- காதலை ஏற்கவில்லை என்றால் (அ) ஏற்றால் உங்கள் நிலை?
- கோபம் வருமா? வந்தால் எப்படி வெளிப்படுத்துவீர்கள்? எதெற்கெல்லாம் கோபப்படுவீர்கள்?
- வரிசையில் நிற்கும்போது சக ஆணையோ பெண்ணையோ இடித்துக் கொண்டு நிற்பவர்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? இது தவறா சரியா?
- நீங்கள் அப்படி இடித்துக் கொண்டு நின்றதுண்டா? ஏன்?
- சூழல்:1 பஸ்ஸில், ரயிலில், திரையரங்கில், ஏதாவது கூட்டத்தில் – திடீரென்று ஒரு பெண் மிக நெருக்கமாக உங்களருகில் உட்காருகிறாள். உங்கள் நிலை? அப்படி இதுவரை நடந்திருக்கிறதா?
- சூழல்:2 பஸ்ஸிலோ, ரயிலிலோ, ஏதாவது பொது இடத்திலோ –பகலிலோ, இரவிலோ -ஒரு பெண்ணிடம் ஒருவர் தவறாக நடந்துகொள்கிறார். நீங்கள் என்ன செய்வீர்கள்? இதற்கு முன் அப்படி நடந்தபோது என்ன செய்தீர்கள்? அவர்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
- சூழல்:3 மேலே சொன்ன அதே சூழலில் பெண்ணிற்குப் பதிலாக குழந்தை. அப்போது என்ன செய்வீர்கள்? இதற்கு முன்பு அப்படி நடந்தபோது என்ன செய்தீர்கள்?
- குழந்தைப் பருவத்தில் உங்களுக்கு பாலியல் தொல்லை இருந்திருக்கிறதா? யாரால்? எப்போது? எப்படி அதிலிருந்து வெளிவந்தீர்கள்?
- பெண்கள், குழந்தைகளுக்கு அவ்வாறான பாலியல் துன்புறுத்தல் நிகழாமல் இருக்க, ஆண்கள் என்ன செய்ய வேண்டும்? இதற்குத் தீர்வு என்ன? பெண்கள் என்ன செய்ய வேண்டும்? குழந்தைகள் என்ன செய்ய வேண்டும்?
- பாலியல் கல்வி (செக்ஸ் எஜுகேஷன்) தேவையா? ஆம் என்றாலும் இல்லை என்றாலும் அதன் பாடத்திட்டம் எப்படி இருக்க வேண்டும்?
- பாலியல் கல்வி (செக்ஸ் எஜுகேஷன்) என்றால் என்ன?
- உலக அரசியலில் இருந்து – உள்ளூர் அரசியல் வரை, உள்ளூர்க் கலவரங்களிலிருந்து – உலகநாடுகளின் போர்கள் வரை ஆண்கள் தங்கள் கோபத்தை (அ) வன்முறையை, ஏன் பெண்கள் மீதே காட்டுகிறார்கள்?
- சமைக்கத் தெரியுமா?
- வீட்டு வேலைகளில் உங்கள் பங்களிப்பு?
- குழந்தை வளர்ப்பில் உங்கள் பங்களிப்பு?
- ஆண்மை என்றால் என்ன?
- ஆண் குழந்தைகள் எப்படி வளர்த்தப்பட வேண்டும்?
- பெண்மை என்றால் என்ன?
- பெண் குழந்தைகள் எப்படி வளர்த்தப்பட வேண்டும்?
- தெருவில் சிறுநீர் கழித்திருக்கிறீர்களா? அதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
- முதன் முதலாக ஆண் பெண் கலவி ( மேட்டிங்) பற்றி எப்படி அறிந்தீர்கள்?
- முதன் முதலாக உங்கள் கலவி எப்போது நடந்தது?
- சுய இன்பம் (மாஸ்ட்ருபேஷன்) பற்றி எப்படி அறிந்தீர்கள்? முதன் முதலாக எப்போது செய்தீர்கள்?
- நீங்கள் வயதுக்கு வந்த நாள் ஞாபகமிருக்கிறதா? அப்போது எப்படி உணர்ந்தீர்கள்? யாரிடம் சொன்னீர்கள்?
- உங்களது குரல் என்று அதுநாள் வரை இருந்தது, வேறொரு குரலாக மாறியபோது எப்படி உணர்ந்தீர்கள்? அந்த மாற்றத்தை எவ்வாறு எதிர்கொண்டீர்கள்?
- பெண்கள் ‘வயதுக்கு வருவது’ என்றால் என்ன என்பதைப் பற்றி எப்படித் தெரிந்து கொண்டீர்கள்? அதைப் பற்றி அறிவியல் ரீதியாக எப்போது அறிந்தீர்கள்?
- இப்படி விசயங்களில் உங்களின் குரு யார்?
- உங்கள் அம்மா அப்பாவிடம் இப்படி விசயங்கள் பேசியிருக்கிறீர்களா?
- உங்கள் மனைவியிடம் இது பற்றி பேசி இருக்கிறீர்களா?
- உங்கள் பிள்ளைகளிடம் இது பற்றி பேசி இருக்கிறீர்களா?
- யாரையாவது அடித்திருக்கிறீர்களா? எப்போது ஏன்? மனைவியை? எப்போது ஏன்? குழந்தைகளை? எப்போது ஏன்?
- உங்கள் குழந்தைகளை என்னவாக வளர்த்த விருப்பம்?
- உங்கள் மனைவிக்கோ, குழந்தைகளுக்கோ எப்போதாவது பாலியல் துன்புறுத்தல் நடந்திருக்கிறதா? அதைப் பற்றி தெரிய வந்தபோது உங்களது நிலை?
- யார் விருப்பத்தில் உங்களது கலவி நடைபெறுகிறது?
- எப்போது எதனால் உங்களுக்கு கலவிக்கான உந்துதல் (மூட்) வரும்? அப்போது என்ன செய்வீர்கள்?
- உங்களுக்கு பெண் நண்பர்கள் இருக்கிறார்களா? அவர்களிடம் இது பற்றிப் பேசியிருக்கிறீர்களா?
- பெண்களிடம் பேசவே கூச்சப்படுகிற, தயங்குகிற விசயங்களை பெண்களின் மேல் நிகழ்த்துவது குறித்து என்ன நினைக்கிறீர்கள்?
- எப்படிப்பட்ட பெண்ணை உங்களுக்குப் பிடிக்கும்? ஏன்?
- ஆண் பெண் சமமாக நடத்தப்பட வேண்டுமா? ஆம் இல்லை ஏன்?
- ‘நீயெல்லாம் ஒரு ஆம்பிளையா’ என்று ஒரு ஆண் கேட்டால் என்ன செய்வீர்கள்?
- அதையே பெண் கேட்டால் உங்கள் எதிர்வினை?
- பெண் குழந்தைக்கு ‘ஷேம்’ என்றால், ஆண் குழந்தைக்கும் அந்த உறுப்பு ‘ஷேம்’தானே?
- புத்தகம் வாசிப்பீர்களா? பிடித்த புத்தகம்? எழுத்தாளர்?
- பிடித்த படம்? பிடித்த கதாநாயகன்? பிடித்த கதாநாயகி?
- தொலைக்காட்சி பார்ப்பீர்களா? பிடித்த தொடர் – சேனல் ஏன்?
- உங்களின் மிகப் பிடித்த உறவினர் யார்? ஏன்
- பிடிக்காத உறவினர் யார்? ஏன்?
- உங்களது அப்பா, அம்மாவை அடிப்பவரா?
- உங்களது அப்பா சமைப்பாரா? அம்மாவை சமமாக நடத்துவாரா?
- உங்களது அப்பாவை உங்களுக்குப் பிடிக்குமா? ஏன்? பிடிக்காதா, ஏன்?
- அதிகாரம் என்பது அலுவலகம் சம்பந்தப்பட்டதா? வீடு சம்பந்தப்பட்டதா?
- வீடு என்பது அன்பு கொண்டு எல்லோருக்குமானதாக இருக்க வேண்டுமா? ஒருவருக்கான அதிகாரத்தை நிலைநாட்டும் இடமாக இருக்க வேண்டுமா? ஏன்?
பொறுமையாக வாசித்து பதிலளித்தமைக்கு நன்றி.
தொடரின் முந்தைய பகுதியை வாசிக்க:
படைப்பு
பிருந்தா சேது
சே.பிருந்தா (பிருந்தா சேது), கவிஞர். எழுத்தாளர். திரைக்கதை ஆசிரியர்.