விதிகள் என்பதே ஆண்களின் கண்ணோட்டத்தில் அவர்களுக்குச் சாதகமாக ஒன்றைப் பெண்கள் பின்பற்றியே ஆகவேண்டும் என்று நேரடியாகவும், மறைமுகமாகவும் வலிந்து ஏற்படுத்தியவைகள் தாம். அவற்றை எந்த சந்தர்ப்பத்திலும் மீறி விடக்கூடாது என்றுதான் தாய்மை, மென்மை, தெய்வம், புனிதம், தியாகம் என்று பலவிதக் கற்பிதங்களை ஏற்படுத்தி பெண்ணை ஒரு தெய்வீக நிலைக்கு உயர்த்தி, ஆனால் உண்மையில் பலிபீடத்தில் அமர்த்தி, ஆராதிப்பதாய்க் காட்டிக் கொண்டு பெண்களின் உழைப்பை சுரண்டிக் கொண்டிருக்கிறார்கள்.
பெண்கள் இதைத்தான் செய்ய வேண்டும் என்று அவர்கள் வரைந்த மாயக்கோட்டைத் தாண்டாமல் இதுகாறும் கடமையாற்றியவர்கள் புனிதமாக்கப்பட்டார்கள். மீறியவர்களும், தாண்ட எண்ணியவர்களும் இழிசொற்களால் வசை பாடப்படுகிறார்கள். அதுவும் யாரால்? இதர புனிதப் பெண்டிரால்தான். அவர்களைச் சொல்லிக் குற்றமில்லை. இதுநாள் வரையிலும் ஆண்களின் கண்ணோட்டத்தில் சிந்திக்கத்தானே கற்றுக் கொடுக்கப்பட்டிருக்கிறார்கள். பிறகென்ன செய்வது?..
பெண்களுக்கு என்று நிறைய விதிகள் நமது சமூகத்தில் இறைந்து கிடக்கிறது. அவற்றை மீறாமல் வாழத்தான் பெண்கள் எப்போதுமே பழக்கப்படுகிறார்கள். இப்போதுள்ள பெண்கள் இவற்றை மீறவேண்டும் என்று சிந்திக்கத் தான் தொடங்கியிருக்கிறார்கள். அந்தச் சிந்தனையின் சூட்டைக் கூடத் தாளமுடியாமல் ஆண்களும், அவர்களின் சிந்தனையைத் தங்களது மூளையில் ஏற்றிக் கொண்டுள்ள பெண்களும் கதறத் துவங்கியுள்ளார்கள். பெண்கள் இன்னும் முழுமையாக மாறிவிடவில்லை. சமுதாயத்திற்கும், தனது குடும்பத்திற்கும் அஞ்சி தனது சுய மரியாதையையும், தன்னம்பிக்கையையும் தொலைத்து நிற்கும் பெண்களே இங்கு அதிகம்.
என்னுடைய தோழியின் வீட்டில் அவளுடைய தந்தை இருக்கும்போது யாரும் சிரிக்கக் கூடாது. ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளக் கூடாது என்றெல்லாம் கட்டுப்பாடுகள் உண்டு. ஒருமுறை அவள் வீட்டுக்கு வீட்டுப் பாடம் எழுதச் சென்று அந்த இறுக்கமான சூழலில் பொருந்த இயலாமல் விரைவாகக் கிளம்பி வெளியே வந்த பின்னர் தான் சுவாசமே இலகுவானது.
இன்னொரு தோழி மணமான புதிதில் கணவரின் பிறந்த ஊருக்கு விருந்துக்குச் சென்றார். கணவரின் தாய்மாமா வரும்போது எழுந்து நின்று மரியாதை செய்திருக்கிறார். அங்கே இரண்டு நாட்கள் தங்கியிருந்திருக்கிறார். ஒவ்வொரு முறை தாய்மாமாவை எதிர்கொள்ளும் போதும் எழுந்து நின்று பணிவைக் காட்டச் சொல்லியிருக்கிறார் மாமியார். அது மட்டுமின்றி அவர் நாற்காலியில் அமர்ந்திருக்கும் போது தோழியைக் கீழே அமரச் சொல்லியிருக்கிறார். தோழி ஆட்சேபித்து மறுத்ததற்கு இன்று வரை மாமியார் வீட்டில் அடங்காப்பிடாரி என்ற பட்டத்தைச் சுமக்கிறார். இதெல்லாம் என்ன வகையில் சேர்த்தி?..
வீட்டுவேலையைப் பெண்கள் மட்டுமே செய்ய வேண்டும் என்ற போக்கு இன்றும் நிறைய ஆண்களின் மனதில் படிந்திருக்கிறது. என் நெருங்கிய உறவினர் மகன் ஒருமுறை வீட்டுக் கூடத்தைப் பெருக்கச் சொன்னதற்கு, “அதெல்லாம் பொண்ணுங்க தானே செய்யணும்?” என்றான். கடுப்பான நான் அரைமணி நேரம் வகுப்பெடுத்தேன். அவன் மண்டையில் ஏறியிருக்குமா என்பதுதான் ஐயமாக இருக்கிறது. வீட்டின் அங்கத்தினர் என்ற முறையில் ஒவ்வொருவரும் வேலையைப் பகிர்ந்து கொள்ள இனியாவது பழக்க வேண்டும்.
அதேபோல் எனக்கு ஆற்றாமையான இன்னொரு விஷயம் உள்ளூர்த் தேநீர்க் கடையில் அமர்ந்து தேநீர் அருந்த முடியாதது தான். அதென்னவோ பெரிய கொலைக் குற்றம் போலப் பார்க்கிறார்கள். வெளியூர் செல்லும் போது சிலசமயங்களில் கிராமப்புற பகுதிகளில் கடைக்குள் அமர்ந்து தேநீர் அருந்துவோம். அப்போது அங்கு வரும் ஆண்கள் விசித்திரமான ஏலியனைப் பார்ப்பது போல நோக்குவார்கள். இயல்பாக இருக்க முடிவதில்லை. டீக்கடை என்றாலே ஆண்கள் ஏரியா என்பதை எப்போது உடைப்போமென்று தெரியவில்லை.
உட்காருவதில் கட்டுப்பாடு, துப்பட்டா போடச் சொல்லி பிடிவாதம், ஆண்கள் பேசும் பொழுது குறுக்கிட்டால் கழுவிலேற்றும் தண்டனை என்று பெண்களை இன்னும் அடக்கியே வைத்திருக்கத்தான் இந்த ஆணாதிக்க சமூகம் விரும்புகிறது. ஆனால் அடக்கி வைக்கப்படும் ஒன்று மேலெழும்பி வரும்போது அதிகப்படியான வேகத்தில் தான் வரும். அடக்கி வைத்தவர்களைத்தான் அது முதலில் தாக்கும் என்பதை ஆண்கள் சமுதாயம் மறந்து விடக்கூடாது. இது எச்சரிக்கை இல்லை. (லைட்டா எச்சரிக்கை தான்..) இதை ஆண்களுக்கு முதலில் உணர்த்த வேண்டும்.
ஆண்கள் என்ன சொன்னாலும் அதைக் கேள்வி எதுவும் எழுப்பாமல் கண்மூடித்தனமாகப் பின்பற்றத்தான் இந்தச் சமுதாயம் பெண்களுக்குச் சொல்லித் தருகிறது. லேசாகப் புருவம் உயர்த்துபவர்களின் நடத்தை கேள்விக்குறியாக்கப் படுகிறது.
இன்னும் அரசியல் துறையில் முப்பத்தி மூன்று சதவிகிதம் இட ஒதுக்கீடு கேட்கும் நிலையில் தான் இருக்கிறோம். சரிக்குச் சமமாகவோ அல்லது ஆண்களை விட அதிகமாக அரசியலில் ஈடுபடவோ வாய்ப்புகள் எதுவும் கிடையாது. அப்படியே அரசியலில் நுழைந்தாலும் நிழலாக தந்தையோ, சகோதரனோ, அல்லது கணவனோ பின்புலத்தில் இயங்கிக் கொண்டு தான் இருக்கிறார்கள். இந்நிலையை மாற்றி நிர்வாகத் திறன் பெண்களிடமும் அதிகம் இருக்கிறது என்று நிரூபிக்க வேண்டும். பெண் ஒன்றும் இரண்டாம் பாலினம் இல்லை. சமமான பாலினம் தான் என்பதை இன்னும் உரக்கக் கூவி இவர்களின் புத்தியில் திணிக்க வேண்டும்.
இரண்டாம் பட்சமாக தம்மை நினைப்பதையும், வெளிப்படுத்திக் கொள்வதையும் முதலில் பெண்கள் தகர்த்தெறிய முன்வர வேண்டும். வீட்டில் சாதாரண உணவு விஷயத்தில் கூட பெண்கள் விட்டுக் கொடுத்து தியாகி(?) ஆகிறேன் பேர்வழி என்று தன்னுடைய உடல்நலனைக் கெடுத்துக் கொள்ளாமல் தனக்குரிய உரிமைக்கு அவ்வப்போது குரல் கொடுக்க வேண்டும்.
அதேபோல் தனது பாலியல் தேவையை வெளிப்படுத்தும் பெண்கள் மோசமானவர்களாகவே கருதப்படுகிறார்கள். அப்படியான பெண்களை அருவெறுப்பாகப் பார்ப்பது ஆண்கள் மட்டுமல்ல சில பெண்களும் தான். இன்னும் நமது இந்தியச் சமூகத்தில் ஆண்தான் பாலியல் தேவைக்கு அழைக்க வேண்டும். விருப்பம் இருக்கிறதோ இல்லையோ பெண் ஒத்துழைக்க வேண்டும் என்றுதான் பயிற்றுவித்திருக்கிறார்கள். பெண்ணாகத் தனது பாலியல் தேவையை, விருப்பத்தைத் தெரிவிப்பது என்னவோ தவறான செயல் என்பது போலவே பதறிப் போகிறார்கள்.
பெண் என்றாலே போகப் பொருளாகக் கருதும் பிற்போக்குத்தனம் இன்னும் அதிகரித்துத் தான் உள்ளது. அவள் எப்போதும் தன்னை அலங்கரித்துக் கொண்டு, அழகாகக் காட்டிக் கொண்டு இருக்க வேண்டும். இல்லையென்றால் புருஷன் அடுத்தவளைத் தேடிப் போய்விடுவான்.
அவள் அழுக்கு நைட்டியில் சமையலறை வாசனையுடன் இருக்கக் கூடாது. அழகாக மங்களகரமாக முக்கியமாக ஒல்லியாக இருக்க வேண்டும். கணவன் மட்டும் கிழிந்த டிரவுசர் அல்லது சாயம் போன லுங்கியுடன் தொப்பையைத் தடவிக் கொண்டு இன்னொருத்தியுடன் மனைவியை ஒப்பிட்டுக் கொண்டிருப்பான். அப்படியாவது அவர்களைத் தக்க வைத்துக் கொள்ள நினைப்பதை விட வேறு வேலை இருந்தால் பார்க்கலாம்.
அதன் புனிதம் ஒருபோதும் கெடக்கூடாது. விதவைகள் மறுமணமா?.. கூடாது.. பிடிக்காத திருமண பந்தத்திலிருந்து விடுதலையா?.. மூச்.. குடும்ப கௌரவம் போய் விடும். கற்பழிக்கப்பட்டாலும் பெண்ணுக்குத் தான் கற்பு(?) அழியும். ஆணுக்கெல்லாம் கற்பு என்பது இல்லை. குற்றவாளியைத் தூண்டியதாக அவள்மீது தான் பழி வரும். இந்த ஆணாதிக்கச் சமூகத்தின் ஆகப் பெரிய விதி இதுதான்.
காலங்காலமாய்ப் பெண்களுக்கு என்று ஆண்கள் வகுத்துள்ள விதிகளை இனியேனும் உடைப்போம். அதற்கான உளி பெண்களின் கையில்தான் இருக்கிறது. இப்போதிலிருந்து உடைக்கத் தொடங்குவோம். போக வேண்டிய தொலைவு இன்னும் அதிகமாக இருக்கிறது.
கட்டுரையாளரின் மற்ற படைப்பு:
படைப்பு:
கனலி என்ற சுப்பு
‘தேஜஸ்’ என்ற பெயரில் பிரதிலிபியில் தளத்தில் கதைகள் எழுதி வருகிறார். சர்ச்சைக்குரிய கருத்துக்களை எழுதவே கனலி என்ற புதிய புனைபெயரில் எழுதத் தொடங்கியிருக்கிறார்.