கன்னடத்தில் வெளிவந்த மிக முக்கியமான நாவல். ‘ஸ்நேகா’ பதிப்பகத்தின் அனுமதியோடு ஒவ்வொரு புதன் கிழமை அன்றும் வெளிவருகிறது.

தமிழில்: சி.சு. சதாசிவம்

1

சந்திரகிரி ஆறு மேற்குத் தொடர்ச்சி மலையில் பிறந்து மேற்குத் திசையிலேயே ஓடி அரபிக்கடலை அடைகிறது. அது கடலில் கலப்பதற்கு முன்பு, ஒரு பக்கம் தன் போக்கை மாற்றிக்கொண்டு வடக்கிலிருந்து தெற்காகச் சற்றுத் தொலைவு ஓடிப்பார்த்து விட்டு மீண்டும் மேற்குப் புறமாக ஓரிரண்டு மைல்கள் மெல்ல நடந்து கடலை அடையும். இப்படி வடக்கு தெற்காக அது ஓடும் பகுதியில் அதன் கிழக்கில் இருக்கும் சிற்றூர் கிளியூர். மேற்குப் பக்கத்தில்
பாகோடு.


மஹமத்கானின் வீடு இருப்பது சந்திரகிரி ஆற்றின் கிழக்கிலிருக்கும் கிளியூர் கிராமத்தில். ஆற்றங்கரையிலிருக்கும் ஓர் ஏக்கர் தென்னந்தோப்பும் அதன் நடுவில் அமைந்திருக்கும் வீடும்தான் மஹமத்கானுக்கு இருக்கும் ஒரே
சொத்து. இரண்டு மூன்று பசுக்கள், நான்கைந்து ஆடுகள் அவற்றின் குட்டிகள், சில கோழிகள் இவையெல்லாம் மஹமத்கானின் மனைவி ஃபாத்திமாவின் அசையும் சொத்துகள். தேங்காய்களை விற்பது, தென்னங்கீற்றுகளைக் கணவன் மனைவி இருவரும் முடைந்து விற்பது, பசு-ஆடு ஆகியவற்றின் பாலை விற்பது, கோழிகளையும் முட்டை களையும் விற்பது போன்றவை இவர்களின் வியாபாரம். இந்த வரும்படிகளிலிருந்து வீட்டுச் செலவையும் சில்லறைச் செலவுகளையும் ஈடுகட்டி வந்தனர்.

மஹமத்கான் சற்று முரட்டுக் குணம் கொண்டவர், முன்கோபி. தான் சொல்வதே நடக்க வேண்டும் என்னும் பிடிவாதம் உள்ளவர். உடலை வளைத்து எந்த வேலையையும் செய்ய மாட்டார். ஃபாத்திமா இரவு பகல் பாராமல் பாடுபட்டு உழைப்பதால் எப்படியோ குடும்பம் நடந்துகொண்டிருந்தது. இப்போது இளைய மகள் ஜமீலா பீடி சுற்றக் கற்றுக்கொண்டிருந்தாள். பீடிக்கு வேண்டிய பொருட்களைக் கடையிலிருந்து கொண்டுவருவது, கட்டி முடித்த பீடிகளைக் கடைக்குக் கொண்டுபோவது, அதற்கான பணத்தை வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வேண்டியவற்றை வாங்கிக்கொண்டு வருவது போன்றவைதான் மஹமத்கானின் வேலை.


மஹமத்கானின் மூத்தமகள் நாதிரா திருமணம் முடிந்து கணவன் வீட்டிலிருந்தாள். ஒரு குழந்தையும் இருந்தது. அவளது கணவன் வீடு இருப்பது ஆற்றுக்கு மேற்குப் பக்கத்தில். கிளியூர் படகுத் துறையில் தோணியில் அமர்ந்து ஆற்றைக் கடந்தால் மறுகரை பாகோடு கிராமம். அங்கிருந்து வடக்காக ஓரிரண்டு மைல்கள் நடந்தால் மணிப்புரா நகரை அடையலாம். இந்த நகரத்தில் நாதிராவின் கணவன் ரஷீத் சிறியதாக ஒரு கடை வைத்து வியாபாரம் செய்து கொண்டிருந்தான். நகரத்திலிருந்து அவனது வீட்டுக்குச் சுமார் மூன்று மைல் நடந்து போகவேண்டும்.

எப்போதோ வரும் பஸ்ஸிலும் போகலாம். அவன் வீடு இருந்த கிராமத்தின் பெயர் காவள்ளி. அங்கே, ஓர் அரை ஏக்கர் தென்னந்தோப்பு, ஏதோ சில வாழை மரங்கள், பாக்கு மரங்களின் நடுவில் இவனது சிறிய வீடு. வீட்டில் அவன் தாய், மனைவியைத் தவிர வேறு யாரும் இல்லை. இப்போது ஓர் அழகான ஆண் குழந்தை. தோட்டத்திலிருந்து வரும் வருமானம், வியாபாரத்தில் கிடைக்கும் சிறிது லாபம் இவற்றைக் கொண்டு அதிகத் தொல்லையேதும் இல்லாமல் குடும்ப வாழ்க்கை ஓடிக்கொண்டிருந்தது.

ரஷீத் நாதிராவைத் திருமணம் முடித்தபோது, அவளுக்குப் பதினான்கு வயதுகூட நிறைந்திருக்கவில்லை. அவனுக்கு இருபத்து மூன்று வயது முடிந்திருந்தது. வீட்டில் தனியாக இருந்த தாயின் வற்புறுத்தலுக்குக் கட்டுப்பட்டு அவன் திருமணத்திற்குத் தலையாட்டினான். மஹமத்கான் மகளின் திருமணத்தைத் தம்மாலானவரை ஆடம்பரமாகவே செய்து தந்திருந்தார். பெண்ணுக்குப் பத்துப் பவுன் தங்க நகைகளும் இரண்டாயிரம் ரூபாய் வரதட்சிணையும் கொடுத்துத் திருமணத்தையும் ஊரெல்லாம் பாராட்டும்படி நடத்தியிருந்தார். நூறு ரூபாய்க்கு ஒரு பவுன் தங்கம் கிடைத்துக் கொண்டிருந்த காலமாக இருந்ததால் பத்துப் பவுன் நகை செய்ய அவருக்கு அப்படியொன்றும் சிரமமாக இல்லை.


ரஷீத் தனக்கு வந்த வரதட்சிணைப் பணத்தில் புது மணப் பெண்ணுக்கு ஒன்றிரண்டு நகை செய்து போட்டான். எஞ்சிய பணத்தில் அவளுக்குத் தேவையான துணிமணிகளை வாங்கிக் கொடுத்தான். அது அந்த ஊராரின் நடைமுறை. மணப்பெண்ணுக்கு நகைகள், துணிமணிகள் போன்றவற்றைக் கணவனின் வீட்டிலிருந்து அவரவர் தகுதிக்குக் தகுந்தாற்போல் கொடுக்க வேண்டும். இந்த வரதட்சிணைப் பணத்தை மணமகனின் வீட்டார் இந்த வகையில் தான் செலவு செய்வார்கள். ரஷீதும் அவன் தாயும்கூட இந்த வழக்கத்திற்கு மாறாகப் போகவிரும்பவில்லை.

நாதிராவைத் திருமணத்திற்கு முன்பு ரஷீத் பார்த்ததில்லை. அவன் அம்மா ஆமினா மட்டும் போய்ப் பார்த்தாள். முஸ்லீம்களில் பெண்ணின் முகத்தைத் திருமணத்திற்கு முன்பே மணமகனாகப் போகும் பையன் பார்க்கும் பழக்கம் இல்லையல்லவா! பெண்ணைப் பார்த்துவிட்டு வந்து தாய் சொன்னது ரஷீதின் நினைவில் இப்போதும்கூடப் பசுமையாக இருக்கிறது.

” பாரு ரஷீது, பொண்ணு இன்னும் சின்னவளாயிருந்தாலும் பாக்கறதுக்கு ரொம்ப நல்லாயிருக்கிறா. பெரிசு பெரிசா கண்ணுங்க… ஒடம்பு தாளம்பூ நெறம்… எல்லாம் இருக்கு. குர்ஆன் நல்லா படிச்சி தெரிஞ்சி இருக்கிறா. அஞ்சு வேளையும் தப்பாம தொழுகை பண்றா. கல்யாணம் ஆகவேண்டிய பொண்ணுங்க எப்பிடியிருக்கணுமோ அப்பிடியிருக்கிறா. பதினஞ்சு பதினாறு வயசுக்கெல்லாம் அவ பாக்க ரொம்ப அழகா இருப்பா.”

” அவ்வளவு சின்னப் பொண்ணு எனக்கு வேண்டாம்மா” என்று அவன் சொன்னதற்கு அவன் தாய் சொன்னாள்:

” இன்னும் என்னா, அவ பாட்டிய கல்யாணம் கட்டிக்கிறயா? என்னெ உங்க வாப்பா நிகா பண்ணிக்கிட்டப்போ எனக்குப் பத்து வயசு…”

தாய் எவ்வளவு தான் சொன்னபோதும் மணப்பெண் மிகவும் சிறியவள் என்பது அவன் மனதை இன்னும் அரித்துக்கொண்டே இருந்தது. ஆனால், தாய் பேச்சுக்கு மறு பேச்சுப் பேச முடியாமல் அவன் திருமணத்திற்குச் சம்மதம் தந்தான்.

அவன் முதன்முறையாக அவளைப் பார்த்தது மணம் முடிந்த அன்று இரவு தான். நடுத்தர வயதுப்பெண்கள் சிலர் சேர்ந்து கிராமியப் பாடல்களைப் பாடிக்கொண்டு மணப் பெண்ணை வலுக்கட்டாயமாகப் பிடித்துவந்து அறைக்குள் தள்ளி, கதவைச் சாத்தி வெளியே தாழ்ப்பாள் போட்டுக் கொண்டபோது, அவள் தன் இரு கைகளாலும் முகத்தை மூடிக்கொண்டு விக்கிவிக்கி அழத்தொடங்கினாள். உடல் முழுக்கத் தங்க நகைகளைப் பூட்டிக்கொண்டு, சரிகை நிறைந்த பனாரஸ் பட்டுப் புடவையுடுத்தி, அதன் தலைப்பை தலை முழுக்கப் போர்த்திக் கொண்டு, சுவரைப் பார்த்தவாறு நின்று, முகத்தை மூடிக்கொண்டு அழுதுகொண்டிருக்கும் இந்தச் சின்னஞ்சிறுமியை எப்படிச் சமாதானப்படுத்துவதென்று தெரியாமல் ரஷீத் விழித்துக்கொண்டிருந்தான். கட்டிலில் உட்கார்ந்திருந்த அவன், சில விநாடி அவளையே பார்த்துக்கொண்டிருந்தான். பிறகு மெதுவாக எழுந்து அவளருகில் வந்தான். தன் பின்னால் காலடி ஓசை கேட்டதாலோ என்னவோ அவளது அழுகை மேலும் வலுத்தது.

” நாதிரா” மிகவும் மெல்லிய குரலில் ரஷீத் அவள் பெயரைச் சொல்லி அழைத்தான். தன்னுடையவளான இச்சிறுமியின் முகம் எப்படியிருக்கும் என்று பார்க்கும் ஆர்வத்தோடு அவனிருந்தான்.

இதோ ஆயிற்று, தன் உடம்பின் மீது புலியோ கரடியோ விழுந்து தன்னைப் பிய்த்துத் தின்னப் போகிறது என்று பயத்தால் நடுங்கிக்கொண்டிருந்தவளுக்கு, மிகவும் மெல்லிய இனிமைபொழியும் இந்தக் குரல் காதில் விழுந்ததும் இதைச் சற்றும் எதிர்பார்த்திராத அவள் என்ன செய்வதென்று தெரியாமல் தடுமாறிப் போனாள். தேம்பல் நின்றுபோயிற்று. இருந்தாலும் அவள் முகத்தை மூடியிருந்த கைகளை எடுக்கவேயில்லை. தலைமீது போர்த்தியிருந்த முக்காடும் விலகவில்லை.

” என்னைப் பார்த்தா உனக்குப் பயமா? நான் என்ன புலியா?” என்று ரஷீத் அதே மெல்லிய குரலில் கேட்டபோதும் அவள் அப்படியே சிலைபோல முகத்தை மூடிக்கொண்டு நின்றாள். அவன் மெதுவாகத் தான் கொண்டுவந்திருந்த பெட்டியைத் திறந்து அதனுள்ளிருந்தவற்றை ஒவ்வொன்றாக எடுத்து அருகிலிருந்த மேஜையின்மீது வைக்கத் தொடங்கினான்.

”பாரு… உனக்காக என்னவெல்லாம் கொண்டுவந்திருக்கிறேன்?. நீ மொகத்தை மூடிக்கிட்டா இதையெல்லாம் எப்படிப் பார்ப்பே?”
அவள் விரல்களின் சந்துவழியாக மெதுவாகப் பார்த்தாள். உடல் முழுக்கச் சரிகைப் பூக்கள் நிறைந்த சிவப்பு நிறச் சேலை கண்ணைக் கவர்ந்தது. அதை ஒருமுறை கையால் தொட்டுப் பார்க்க வேண்டும்போல் இருந்தது. ஆனால், அங்கேயே அவன் நின்றுகொண்டிருந்தான். நறுமண எண்ணெய், பவுடர், செண்ட், ரிப்பன், இன்னும் என்னென்னவோ பொருட்கள் அந்தப் பெட்டியிலிருந்தன. ஒரு நொடி நாதிரா தன்னை மறந்துவிட்டாள். கை முகத்திலிருந்து விலகி அந்தச் சேலையைத் தொட்டது.

மெதுவாக அவன் அந்தக் கையின் மீது தன் கையை வைத்து விரல்களை வருடினான். கண்ணீரில் நனைந்த கன்னங்களும் கண்ணிமைகளும் அவனது முதல் பார்வைக்கு எதிர்பட்டன. ஓரக் கண்ணால் அவனைப் பார்த்தபோது அவன் மலர்ந்த புன்னகையோடு தன்னையே பார்த்துக்கொண்டிருந்தது தெரிந்தது. கணவன் என்றால் தலையில் பெரிய தலைப்பாகை கட்டிக்கொண்டு பெரிய வயிறோடும் வெளுத்த மீசையோடும் தன் அப்பாவைப்போல இருக்கும் (எதிர் வீட்டு பானுவிற்கு அந்த மாதிரியான கணவன் தானே வந்திருந்தான்!) ஒருவனாகத்தானிருக்கும் என்று எண்ணிக்கொண்டிருந்தவளுக்குத் தன் கணவனின் இந்த உருவம் அவள் எதிர்பாராத ஒன்றாக இருந்தது. அழகான முகம், அரும்பு மீசை, வாரிவிட்ட தலைமுடி, எல்லாவற்றையும்விட அந்தப் புன்னகை, அந்த முதல் பார்வையிலேயே இருவரின் இதயப் பறவைகளும் சிறகு விரித்துக் கூத்தாடின… கூடிக்களித்தன.

இப்போது ரஷீதுக்குத் துணிவு வந்தது. மெதுவாக அவளது கையைத் தன்கையில் எடுத்துக்கொண்டு தன் கைக்குட்டையால் அவளது கன்னங்களைத் துடைத்தான்.

” நான் என்ன உன்னை அடிக்கப் போறனா? எதுக்கு அழுவுறே?”

ஊஹும்… பதிலே இல்லை. பேசாமல் தலைகுனிந்து நின்றுவிட்டாள்.

” என்ன உனக்குப் பிடிக்கலையா? அப்படின்னா நான் எங்க வீட்டுக்குப் போகட்டுமா?” என்று ரஷீத் ஓர் அம்பை எய்தான்.

இவர் எவ்வளவு நல்லவர்! தனக்காக என்னவெல்லாம் கொண்டுவந்திருக்கிறார்! அப்படிப்பட்டவரோடு தான் சரியாகப் பேசாமல் போனால் அவர்தான் என்ன எண்ணிக்கொள்வார்?

” நான் போகட்டுமா?” அவன் இன்னொரு முறை கேட்டான்.

” ஊஹும்.” ஓரக்கண்ணால் அவனைப் பார்த்தவாறே அவள் வேண்டாம் என்பதைப் போல் தலையசைத்தாள்.

” எங்கே… அப்படீன்னா எனக்கொருமுறை சரியா மொகத்தக் காட்டு.” மெதுவாக நெருங்கிவந்து அவள் காதில் முணுமுணுத்தபொழுது ஓர் இனந்தெரியாத இன்பத்தை அவள் உணர்ந்தாள். அவள் தலை முக்காடு தானாகவே சரிந்தது. மெதுவாக அவனது கைகள் அவளை அணைத்தபோது அவளுக்குப் பயமேதும் ஏற்படவில்லை.’ அந்த உதடுகள் கன்னத்தின்மீது ஒட்டி உரசியபோது, அரும்புமீசை கன்னக்கதுப்பைத் தொட்டும் தொடாமலும் குத்தியபோது அவள் தன்னை மறந்தாள். இன்னும் சற்று நேரம் அந்த மார்பின் மீது அப்படியே சாய்ந்துகிடக்க வேண்டும் என்று தோன்றியது.

” நாதிரா, என்னெப் பார்த்தா இப்பவும் பயமா இருக்குதா?” என்று தன் கைகளுக்குள் அவளை அணைத்துக்கொண்டு அவன் கேட்டபோது, ‘ இல்ல… எனக்கு இனி எப்போதும் பயமே வராது’ என்று சொல்லவேண்டும் போலிருந்தது. ஆனால், வெட்கத்தினால் நாவெழாமல், வார்த்தைகள் தொண்டைக்குள்ளேயே அடங்கிப்போய்விட் டன.

” என் வீட்டுக்கு எப்போ வரப்போறே?” என்று அவன் கேட்டதும் அவள் உடனே, ”நீங்க எப்போ கூட்டிகிட்டுப் போறீங்களோ அப்பவே ” என்று சொல்லிட்டு அவனது மார்பில் முகம் புதைத்துக்கொண்டாள்.

ஒருநொடிக்கு முன்பு முகத்தை மூடிக்கொண்டு அழுதுகொண்டிருந்தவள் இவளா என்று அவன் வியந்து போய் நின்றுவிட்டான்.

(தொடரும்)

படைப்பாளர்

சாரா அபுபக்கர்

கன்னட எழுத்தாளர். நாவல்கள், சிறுகதைகள் ஏராளமாக எழுதியிருக்கிறார். ‘சந்திரகிரி ஆற்றங்கரையில்…’ மிகவும் புகழ்பெற்ற நாவல். சமூகத்தை நோக்கிக் கேள்விகளை அள்ளிவீசிய நாவல். மொழிபெயர்ப்பாளர். 85 வயதிலும் இயங்கிக்கொண்டிருக்கிறார்.